2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை

Editorial   / 2018 மே 15 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும்.  

இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன.  

இந்நிலையில்,  பௌதீகவள  அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே  அணுகப்பட வேண்டியுள்ளது.  

ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்லது பாதிப்புகளை, ஆத்மார்த்தமாக அணுக வேண்டிய தேவைப்பாடு, இங்கு நிறையவே உள்ளது.  

யுத்தம் நிறைவுக்கு வந்து, ஒன்பது ஆண்டுகள் அண்மித்துக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கைத் தமிழர்கள், தாம் பட்ட துன்ப துயரங்களை ஓரளவேனும் ஆத்மார்த்தமாக அனுஷ்டித்து, தமது மனங்களில் ஏற்பட்ட இன்னல்களையும் ஆதங்கங்களையும் குறைத்துக்கொள்ளும் நிலைப்பாடுகள், நல்லாட்சி அரசின் இலகுதன்மை நகர்வால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

இருந்தபோதிலும், தமிழ் அரசியலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரணான கருத்தியல் ஓட்டங்களும் பல்கலைக்கழக மாணவர்களது வாதங்களும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலைமையை உருவாக்கியிருந்தது.  

எனினும், வட மாகாண சபையின் ஏற்பாட்டில், இம்முறை நான்காவது ஆண்டாக மேற்கொள்ளப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் குறித்து, தற்போதைய நிலைமையில் ஒருமைப்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும் தமிழ் அரசியலாளர்களிடையே உள்ளூர மனக்கசப்புகள் நிறைந்தே உள்ளன.  

இந்நிலைப்பாடுகள் ஒருபுறம் இருக்கையில், தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் அரசியல் ரீதியான தீர்வு விடயத்தில், ஒரு பிறழ்வுத்தன்மை தற்போது ஏற்படத்தொடங்கியுள்ளது. தமிழ்த் தலைமைகள் சிலவற்றின் ஒப்புதலுடன் ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கத்தாலும் தமிழ் மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வை முன்வைக்க முடியாது என்பதான கருத்துகள், தற்போது தமிழ்த் தலைமைகளால் வௌிப்படுத்தப்பட்டு  வருகின்றது.  

தற்போதைய அரசாங்கம், ஆட்சி பீடமேறி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்த் தலைமைகளது கருத்துகளானது, தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் சாணக்கியம், மத்திய அரசாங்கத்தை விட, தமிழ்த் தலைமைகள் மத்தியிலேயே உள்ளது என்பதை மீண்டுமொரு முறை வௌிப்படுத்தியுள்ளது.  

யுத்தம் முடிந்ததன் பின்னர், ‘ஆசியாவின் ஆச்சரியம்’ என்ற தோரணையில், மஹிந்த சிந்தனையாகக் கொண்டு வரப்பட்ட ஒவ்வோர் அபிவிருத்திப் பணிகளும் இன்று, இலங்கைத்தீவை இரண்டு பிரிவூகளாகப் பார்வையிட வைத்துள்ள நிலையில், அதைச் சீர்செய்யும் முயற்சியில் கூட,  நல்லாட்சி அரசாங்கம் செயற்பட முன்வராத நிலையிலுள்ளது.   

தென் பகுதியில் நிகழும் அபிவிருத்திகள் வட புலத்து மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலேயே, வட பகுதியில் சில அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போது அந்த அபிவிருத்திகள் கூட எட்டாக்கனியாகியுள்ளன.

 ஆனால், தமிழ்ச் சமூகத்தின் உயிர், உள இழப்புகள் குறித்த மாறாத வலிகளும் வடுக்களும் அரசியல், பொருளாதார மேம்பாடு தொடர்பில் சிந்திக்க முடியாத இனக்குழுமமாகவே அவர்களை வைத்துள்ளது.   

யுத்தம் முடிவடைந்து, ஒன்பது ஆண்டுகளின் பின்னரும், பல குடும்பங்கள் தமது சொந்தக் காணிக்குள் மீள்குடியேற்றப்படாத நிலைமை காணப்படுகிறது. அவ்வாறெனில், நல்லாட்சி  அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்க வேண்டிய தேவை, தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி உள்ளது.  

இவ்வாறான நிலைப்பாடுகளே வடக்கு, கிழக்கு மக்கள், தம்மை இன்றைய அரசியலாளர்கள் ஓரங்கட்டுவதாகச் சிந்திக்கத் தூண்டுகின்றது. அத்தோடு, மத்திய அரசோடு மாகாண அரசையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் வழங்க மறுக்கின்றது.  

இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் மனங்களில் உள்ள காயங்கள் ஆற்றப்படாத வரையில், எந்த அபிவிருத்திகளும் மீள்குடியேறிய மக்களுக்குத் திருப்திகரமாக இருக்கப்போவதில்லை. 

இதுவே உண்மையான விடயமாக உள்ள நிலையில், வெறுமனே கட்டடங்கள் அமைப்பதாலும் வீதிகளுக்கு ‘கார்பட்’ போடுவதாலும் புகையிரதத்தை மாறி மாறி ஓடவிடுவதாலும் வடக்கு மக்கள் தமக்கு, அபிவிருத்தி கிடைத்துவிட்டதாக எண்ணி, அபிவிருத்திகளை வியந்து பார்த்து, அனுபவிக்கும் மனிதர்களாக மாறிவிட்டார்கள் என எண்ணிவிடலாகாது.  

யுத்தப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான அபிலாஷை களைத் தீர்க்க கூடியதும் இத்தனை ஆண்டுகளாகப் போராட்டக் களத்தைக் கண்ட மக்களுக்கு ஆத்ம திருப்தியான தீர்வுகள் கிடைக்காத நிலையில், இன்றைய அரசியல் செயற்பாடுகள் அர்த்தமற்றவையாகவே காணப்படுகின்றன.  

அபிவிருத்திகளுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டு, அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதன் தலைவர்களாகவும் வடக்கில், வட மாகாண முதலமைச்சரையும் இணைத்த, ஒருங்கிணைந்த தலைவர்களாகவும் கொண்ட அபிவிருத்திக் குழுக்கள் இயங்கினாலும் அவை, எந்தப் பயனும் அற்ற ஒன்றாக உள்ளதாகவே, மக்கள் தமது ஊன்றிய கவனிப்பில் கண்டறிந்துள்ளனர்.   

மீள்குடியேற்றச் செயற்பாடுகள், அமைச்சர்களின்  செல்வாக்குடன் வகைப்படுத்தப்படுவதாலும் அதைத் தமிழ்த் தலைமைகள் வெறுமனே பார்வையாளர்களாக மௌனித்துள்ளதாலும்  இது எந்தளவு தூரத்துக்கு எதிர்காலங்களில் தமிழ்த் தலைமைளுக்கான பாதிப்பாக இருக்கப்போகின்றது என்பதை உணரத் தலைப்படவேண்டிய நிலை உள்ளது.  

வட மாகாண சபையானது, எதையும் அரசாங்கம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை வெறுமனே கூறி, எவ்விதமான அபிவிருத்திகளையும் செய்யவில்லை எனவும் தமது நிர்வாகத்துக்கு உட்பட பணிகளைக்கூட, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் செயற்படுத்த வட மாகாணசபை அஞ்சுகின்றது என்ற கருத்தையும் மக்கள் முன்வைக்கத் தலைப்பட்டுள்ளனர்.  

எனவே, மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட சில சலுகைகள், மாகாண அமைச்சுகளின் ஊடாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு, தற்போது விழாக்களும் அறிக்கைகளுமே மிஞ்சியுள்ளன என்பது காலம் காட்டிநிற்கும் பாடமாகியுள்ளது.  

இடம்பெயர்வுகளைச் சந்தித்த பல குடும்பங்கள், இன்றுவரை வீட்டுத்திட்டம் இன்றியும் மின்சார வசதிகள் இன்றியும் கொட்டகைகளே வாழ்க்கையாக உள்ளதை,  அபிவிருத்திக்குழு கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கங்கள் நிறையவே உள்ளன.  

எனவே, மக்களின் மீள்குடியேற்றம் உட்படப் பல விடயங்கள், அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் ஊடாக நடந்துவிட்டதாக எவரும் ‘பறையடிக்க’ முடியாத நிலையிலேயே அக்கூட்டங்கள், மீண்டும் மீண்டும் கூடிக்குலைகின்றன.   

இவை மாத்திரமின்றி, அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள், செயலுருப் பெறுகின்றனவா அல்லது அமுல்படுத்தப்படுகின்றனவா  என்பது தொடர்பிலும் அவை செவ்வனே செய்யப்படாவிட்டால் அவை தொடர்பில் அடுத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கூட்டிக்காட்டவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தலைப்படுதல் வேண்டும்.  

இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால், வெறுமனே அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடந்தேறிக் கொண்டேயிருக்கும்; அதேபோல், மக்களின் அவலங்களும் தீராத பிரச்சினையாக, ‘அனுமான் வால்போல்’ நீண்டு கொண்டேயிருக்கும்.  

எனவே, அபிவிருத்திகள் என்பதற்கப்பால் இடம்பெறும் அவலங்களை அலசி ஆராய வேண்டிய கடப்பாடு, மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகவும் அவர்களின் கடமையாகவும் காணப்படும் நிலையில், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாது, தமது அரசியல் செயற்பாட்டுக்கும் கட்சி மேம்பாட்டுக்குமாகத் தம்மை அர்ப்பணித்திருப்பதானது ஏமாற்றம் நிறைந்ததாகவே உள்ளது.  

இந்நிலையிலேயே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கத்தை வௌிப்படுத்தி, இனப்படுகொலை இடம்பெற்றதற்கான சாட்சியமாக அனுஷ்டிக்கப்படவேண்டுமேயன்றி, அரசியல் களமாக மாற்றமடைய வைக்கக்கூடாது என்பதே யதார்த்தமும் அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.  

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதாக மார்ச் மாதத்திலும் செப்டெம்பரிலும் மாத்திரம் எவ்வாறு தமிழ் அரசியலாளர்கள் கொதித்தெழுகின்றனரோ, அதேபோன்றே ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் இறுதி யுத்தம் தொடர்பாகவும் தமிழ் தலைமைகள் உரக்கப் பேசும் கருப்பொருளாக மாறியிருக்கிறது.  

முள்ளிவாய்க்கால் மண் என்பது, அரசியலுக்கான மண் அல்ல என்பதைப் பல உணர்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், தொடர்ந்தும் அதை அரசியலாகவே பார்ப்பதானது, தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான கேள்வியை வலுப்படுத்தும்.  

பல முனைகளாகப் பிரிந்து நிற்கும் அரசியலாளர்கள், ஓரணியில் வர வேண்டும் என்கின்ற கனவை மெய்ப்பட வைக்கும் தளமாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாற்றி அமைக்கப்படுமாக இருந்தால், அது இந்தப் போராட்டத்தில் பல கனவுகளோடு மரணித்த உறவுகளுக்குச் செய்யும் அற்புதமான சாந்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.  

மண்ணின் நிம்மதியான வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த பல மனிதர்கள் புதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண், இன்று வேடிக்கை பார்க்கும் இடமாக மாறி வரும் நிலையில், மேலும் அதற்கு வலுசேர்க்கும் முகமாக, அதை வாதப்பொருளாகக் கொண்டு மேடை போடுவது, ஏற்றுக்கொள்ள முடியாத நகர்வாகும்.  

இந்நிலையில், தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும் ஏமாற்றமே நிறைந்தாக அல்லாது, ஒரு யதார்த்த பூர்வமான திட்டங்களை அரசியலாளர்கள் முன்வைத்துச் செயற்படுவார்களேயானால், அதுவே சாலச்சிறந்ததாக அமையும். 

எனவே அரசியல் தீர்வு விடயத்தில், தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்துக்கு தமிழ்த் தலைமைகள் கொடுக்கப்போகும் அழுத்தமே, இலங்கைத் தேசத்தில் தமிழ் மக்களின் வாழ்வியலுக்குப் பாதுகாப்பை கொடுக்கும் என்பதை மறுதலிக்க முடியாது. 

அத்துடன், அதற்கு முன்னேற்பாடாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தமிழ் அரசியலாளர்களின் ஒற்றுமையான தளமாகவும் மாற்றியமைக்க வேண்டும் என்பதே உண்மை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X