2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அரசியல்வாதிகளின் வாரிசுகளை பயிற்றுவிக்கும் குட்டித் தேர்தல்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 நவம்பர் 15 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்கும், மீண்டும் தேர்தல்களை நடத்தக் கூடிய வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்துக்கு, கொண்டு வரப்பட்ட திருத்தம் ஒன்று, கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.   

அதையடுத்து, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதில் இருந்த சகல தடைகளும் நீக்கப்பட்டதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைச் சந்திப்பதில் இருக்கும் அச்சத்தினால், அரசாங்கம் அத்தேர்தல்களைத் தொடர்ந்தும் தாமதப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள், கடந்த சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக, குற்றஞ்சாட்டி வருகின்றன. இதில் ஓரளவுக்கு உண்மை இருந்த போதிலும், அது முற்றிலும் உண்மையல்ல.   

2012 ஆம் ஆண்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்காக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டதை அடுத்து, பல தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாகத் தேர்தல்களை ஒத்திப் போட அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.   

தேர்தல்களை நடத்துவதாக இருந்தால், கட்டாயம் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டே ஆக வேண்டும். அதேவேளை, அரசாங்கமும் தேர்தல்களை நடத்த, அவ்வளவு அவசரம் காட்டுவதாகத் தெரியவில்லை என்பதும் உண்மை.  

அரசாங்கம் தேர்தல்களை விரைவில் நடாத்த விரும்பவில்லை என்பது, அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில், பதவிக்காலம் முடிவடைந்த கிழக்கு மாகாண சபை, உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஒத்திப்போடச் செய்த தந்திரங்களால் புலனாகிறது.  

முதலில் அரசாங்கம், அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தற்போது நடைபெறுவதுபோல், மாகாண சபைத் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்தாது, ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல்களை நடத்துவதே அந்தத் திருத்தத்தின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

சகல மாகாண சபைகளுக்கும், ஒரேநாளில் தேர்தல்களை நடத்துவதாயின், சில மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திப்போட நேரிடும் என்ற கருத்தும், அந்தத் திருத்தத்தில் இருந்தது.   

இந்தத் திருத்தம், பரிசீலனைக்காக உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதும், அத்திருத்தத்தில் இருந்தவேறு சில பிரமாணங்களும் அரசமைப்புக்கு முரணானவை என்று முடிவு செய்த உயர் நீதி மன்றம், அப்பிரமாணங்களை நீக்க வேண்டும் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், மக்கள் அனுமதிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது. 

ஆனால், தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது, சட்ட விரோதம் என உயர் நீதிமன்றம் கூறவில்லை.  அவ்வாறாயின், அரசமைப்புக்கு முரணான பிரமாணங்களை நீக்கிவிட்டு, மாகாண சபைத் தேர்தல்களை ஒரேநாளில் நடத்தக் கூடிய வகையில், அந்த அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை, அரசாங்கம் மீண்டும் சமர்ப்பித்திருக்க வேண்டும்.   

ஏனெனில், அந்தத் திருத்தத்தின் நோக்கத்தை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. ஆனால், அரசாங்கம் அதைச் செய்யாது, மொத்தமாக அந்தத் திருத்தத்தையே வாபஸ் பெற்றது.   
இந்தச் சம்பவம் முடிவடைந்த சூட்டோடு, அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் வகையில், மற்றொரு தந்திரத்தைக் கையாண்டது. 

மாகாண சபைத் தேர்தல்களின்போது, அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பாளர்களில் 30 சதவீதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாகாண சபைகள் தேர்தல் சட்டத் திருத்தம் ஒன்று, ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது.  

 அது, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, அவ்விவாதத்தின் குழு நிலையின்போது, மாகாண சபைத் தேர்தல்களையும் கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடாத்துவதற்கான திருத்தம் ஒன்றை, அதில் திணிப்பதுதான் அரசாங்கத்தின் தந்திரமாகும்.  
ஒரு சட்டம் அல்லது சட்டத் திருத்தம் விவாதிக்கப்படும் போது, அதன் குழு நிலையின் போது, அந்தச் சட்டத்துக்கோ அல்லது சட்டத் திருத்தத்துக்கோ மேலும் திருத்தங்களைக் கொண்டுவர முடியும்.  

 ஆனால், அவை முதலில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு அல்லது சட்டத் திருத்தத்துக்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். பெண் வேட்பாளர்கள், வேட்பு மனுப் பத்திரங்களில் உள்ளடக்கப்படுவதற்கும் கலப்புத் தேர்தல் முறைக்கும் நேரடித் தொடர்பு இல்லை.   

இரண்டாவதாக, வழமையாகக் குழு நிலையின்போது சமர்ப்பிக்கப்படும் திருத்தமானது, விவாதத்தில் உள்ள சட்டத்தை விடவோ அல்லது சட்டத் திருத்தத்தை விடவோ பெரியதாக இருப்பதில்லை. 

ஆனால், இந்த விடயத்தில், விவாதத்தில் உள்ள சட்டத் திருத்தம் ஒரு சில பந்திகளாக இருக்கும்போது, குழு நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம் 20 பக்கங்களை விடவும் அதிகமாக இருந்தது.  

இது பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. ஏனெனில், கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதாயின் மாகாண சபைப் பிரதேசங்களிலும் தேர்தல்த் தொகுதிகளை உருவாக்க வேண்டும்.  

 அதற்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதை உடனடியாகச் செய்ய முடியாது. அதற்காக, அண்மையில் பதவிக் காலம் முடிவடைந்த, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.  

கலப்புத் தேர்தல் முறையை, மாகாண சபைகளுக்கும் அறிமுகப்படுத்துவது நல்ல விடயம். அவ்வாறாயின் அரசாங்கம், அதைத் தனியானதோர் சட்டத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.   

அரசாங்கம், அவ்வாறு அதைத் தனியானதொரு சட்டத் திருத்தமாக சமர்ப்பித்திருந்தால், அதுவும் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படும். அப்போது, மாகாண சபைகளை ஒத்திப்போட முடியாது என்ற அடிப்படையில், அந்தச் சட்டத் திருத்தமும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும். 

ஆனால், அதை விவாதிக்கப்படும் சட்டமொன்றின் குழு நிலையின்போது சமர்ப்பித்தால், அது உயர் நீதிமன்றத்துக்குப் போகாது.   

இந்தத் தந்திரத்தை கையாண்டு, அரசாங்கம் அம்மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒத்திப் போட்டுக் கொண்டது. எனவே, மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகியது என்ற எதிர்க் கட்சிகளின் வாதத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.   

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக அரசியல்வாதிகள், குறிப்பாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பெருமளவில் கூச்சலிட்டு வந்த போதிலும், அந்த விடயத்தில் இவ்வாறு அரசாங்கத்தை மட்டும், குறை கூற முடியாது.   

ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அதாவது 2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விடயத்தில், கொண்டு வரப்பட்ட திருத்தம் ஒன்றின் மூலம், அத்தேர்தல்களுக்காகக் கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதனால், அந்த முறைப்படி, தொகுதிகளை உருவாக்க வேண்டும். 

அதற்கு, ஒவ்வொரு பிரதேச சபைக்குள் உட்பட்ட பிரதேசங்களிலும், தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும். அது சிக்கலான ஒரு விடயம் என்பதால், அதற்குக் கால அவகாசம் வேண்டும்.   

அப்போதிருந்த 335 உள்ளூராட்சி மன்றங்களிலும், தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் எல்லை நிர்ணய சபையொன்று நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை, தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், 2015 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.   

ஆனால், அதில் பல குறைபாடுகள் இருப்பதாக, 1000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்ததனால், அம்முறைப்பாடுகளுக்கு தீர்வு காண, இந்த அரசாங்கம், 2015 ஆண்டு ஒக்டோபர் மாதம், அசோக பீரிஸ் தலைமையில், மற்றொரு குழுவை நியமித்தது.   

அப்பணிக்காக இக்குழுவுக்கு மூன்று மாதங்கள் வழங்கப்பட்ட போதும், அடிக்கடி காலம் நீடிக்கப்பட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் 17 ஆம் திகதியே அதன் அறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. 

இதற்கிடையில், எல்லை நிர்ணயப் பணிகளை இழுத்தடிக்குமாறு அமைச்சர், தமக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தமக்குப் போதிய மொழிபெயர்ப்பாளர்களை வழங்கவில்லை எனவும் கூறி, அசோக பீரிஸ் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.  

பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம், 2015 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் முடிவடைந்திருந்த போதிலும், இந்த எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியடையாதிருந்த காரணத்தால், அத்தேர்தல்களை நடத்தத் தேர்தல் ஆணையகத்தால் முடியாமல் போய்விட்டது.   

எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடையும் வரை, பழைய முறைப்படி தேர்தல்களை நடத்த முடியாதா எனச் சிலர் கேள்வி எழுப்பலாம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு, கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி, ஒரு சில மாதங்கள் மட்டுமே, அவ்வாறு பழைய முறைப்படி தேர்தல்களை நடத்தும் வாய்ப்பு இருந்தது.   

2013 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதலாம் திகதி, மஹிந்தவின் அரசாங்கத்தில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த ஏ.எல்.எம். அதாவுல்லா, பழைய தேர்தல் முறை இரத்தாகி விட்டதாகவும், புதிய முறையே இனி அமுலில் இருக்கும் என்றும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னரே, எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடையும் வரை, தேர்தல்களை நடத்த முடியாத நிலைமை உருவாகியது.   

எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர், புதிய தேர்தல் முறை விவரிக்கப்படும் வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டியிருந்தது.  

அதுவும் முடிவடைந்ததன் பின்னர், அந்தத் திருத்தத்துக்கு அமைவாக மாநகர சபைத் தேர்தல்கள் சட்டம், நகர சபைத் தேர்தல்கள் சட்டம் மற்றும் பிரதேச சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் திருத்தப்பட வேண்டும். அதன் பின்னர், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தினதும் உறுப்பினர் எண்ணிக்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும்.  

மேற்படி மூன்று சட்டங்களும் திருத்தப்பட்ட உடன் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் மூன்று பிரதேச சபைகள் வீதம் பிரிக்கப்பட வேண்டும் என மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.   

அதே மாவட்டத்தில் சில பிரதேச சபைகளின் கீழான சனத்தொகை 10,000 ஆக இருக்கும் போது இந்த இரண்டு பிரதேச சபைகளின் சனத்தொகை இரண்டு லட்சமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர். அந்தக் கோரிக்கை நியாயமாக இருந்தமையால் அரசாங்கத்துக்கு அதைத் தட்டிக்கழிக்க முடியாதிருந்தது.   

எனவே அந்த இரண்டு பிரதேச சபைகளும் ஆறு சபைகளாகப் பிரிக்கப்பட்டது. அதாவது நுவரெலியா மாவட்டத்தில் புதியதாக நான்கு உள்ளூராட்சி மன்றங்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கையும் உள்ளிட்ட வகையிலேயே தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.   

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக பிரதேச சபைகளை உருவாக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்தவுடன், கடந்த சிலகாலமாக அடங்கியிருந்த அம்பாறை மாவட்டத்தில், சாய்ந்தமருது பிரதேசத்துக்குத் தனியான பிரதேச சபையொன்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் தலை தூக்கியது.   

இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக் கொண்டிருந்தார். எனினும், இம்முறை அந்தக் கோரிக்கை எழுந்த போது, கல்முனை முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.   

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபை வழங்குவதாக இருந்தால், தற்போதைய கல்முனை மாநகர சபைப் பிரதேசத்தை நான்காகப் பிரித்து, 1987 ஆம் ஆண்டு இருந்ததைப் போல், நான்கு உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்க வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.   

அவ்வாறு பிரிக்க முடியும் என, அமைச்சர் பைஸர் முஸ்தபா அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறினார். அவ்வாறு கல்முனை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட்டால், அதில் எந்தவொரு மன்றத்துக்கும் மாநகர சபை அந்தஸ்து கிடைக்குமா என்பது சந்தேகமே.  

அதையடுத்து, 2013 ஆம் ஆண்டு, வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற காரணத்தால் ஒத்திவைக்கப்பட்ட கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியதாயிற்று.   

ஏனெனில், சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை, இரத்துச் செய்யச் சட்டத்தால் இடம் வழங்கப்பட்டு இருக்கவில்லை. அதற்குத்தான், கடந்த வாரம் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இவையே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதமாவதற்குக் காரணங்களாக அமைந்தன.  

கூட்டு எதிரணியினரும் மலையகத் தலைவர்களும் கிழக்கில் முஸ்லிம் மக்களும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும்போது, இச்சபைகளில் அந்தளவுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது, இச்சபைகளால் மக்களுக்கு அவ்வளவுக்கு என்ன சேவை நடைபெறுகிறது என்று கேட்கத் தோன்றுகிறது.   

1987 ஆம் ஆண்டு, மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு, உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்தப்பட்டதை அடுத்து, உள்ளூராட்சி மன்றங்களின் பல பணிகள், மாகாண சபைகளுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் வழங்கப்பட்டன.  

 உள்ளூராட்சி மன்றங்கள், தற்போது சிறு வீதிகளைப் பராமரித்தல், வீதி விளக்குகளைப் பராமரித்தல், சிறுசிறு பாலங்கள் மற்றும் மதகுகளை நிர்மாணித்தல், வீடுகளுக்கும் காணிகளுக்குமான வரிப்பணத்தைச் சேகரித்தல் மற்றும் காணி போன்ற சொத்துகள் கைமாறும் போது விதிக்கப்படும் வரியை அறவிடுதல் ஆகியவைதான் தற்போது பிரதேச சபைகளால் மேற்கொள்ளப்படும் பணிகளாக இருக்கின்றன.  

அவற்றுக்கு பாரியளவில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்கான நிதிப் பலம் இல்லை. கொழும்பு மற்றும் காலி போன்ற பாரிய மாநகர சபைகளுக்கு மட்டுமே சற்று பெரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் பொருளாதார பலமும் பொருளியளாளர்கள் போன்ற ஆளணிப் பலமும் இருக்கின்றன.  

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போதும், கடந்த வருடம், களனி கீழ்ப்பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் மீரியபெத்த போன்ற இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்ட போதும் சம்பந்தப்பட்ட பிரதேச சபைகளால் எந்தவொரு பயனும் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்தது.  

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து, அகற்றப்பட்ட குப்பைகளைக் கூட அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட பிரதேச சபைகளுக்குப் பல மாதங்கள் எடுத்தன.   

பொதுவாகக் கூறுவதாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உள்ளூராட்சி மன்றங்கள் ஞாபகத்துக்கே வரவில்லை. 

அம்மன்றங்களுக்கும் மக்களுக்காக எதையும் செய்ய முடியவில்லை. சாதாரண காலங்களிலும், உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் வாழ்வில் எந்தவொரு முக்கிய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.  

தமது பிள்ளைகளை எதிர்கால அரசியல்வாதிகளாகப் பயிற்றுவிக்கவே மாகாண மட்டத்திலும் நாடாளுமன்ற மட்டத்திலும் உள்ள அரசியல்வாதிகள் உள்ளூராட்சி மன்றங்களைப் பாவிக்கின்றார்கள்.   

பிரதேச சபைகளுக்குத் தெரிவாவோரது நோக்கமும் மக்கள் சேவையல்ல; மாகாண சபைக்கு போவதே. அதன் பின்னர் அவர்களது நோக்கம் நாடாளுமன்றத்துக்குப் போவதே. பின்னர், பிரதி அமைச்சராவதும் அமைச்சராவதுமே அரசியல்வாதிகளின் குறிக்கோள்களாக இருக்கின்றன.   

மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதிகள் என்று கூறப்பட்டாலும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலான அரசியல்வாதிகளால், மக்களுக்குக் கிடைக்கும் சேவை என்ன என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகும்.   

தற்போதைய நிலையில், அரசியல் கட்சிகளின் பலத்தைக் காட்டுவதற்குப் புறம்பாக, மூத்த அரசியல்வாதிகளின் வாரிசுகளைப் பயிற்றுவிக்கும் தளமாக மட்டுமே அவை இயங்குகின்றன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .