2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அராஜகத்தின் விளிம்பில் நாடு

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் - சிங்களப் புத்தாண்டு நிகழ்ச்சிகளும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டுக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயமும், இலங்கை அரசியலில் நிலவும் சிக்கல் நிறைந்த நிலைமையை, சில நாட்களுக்கு வெகுவாக மூடி மறைத்து விட்டன.  

ஆனால், புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கைது செய்யப்பட்டதுடன் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முறுகல் நிலை, மீண்டும் களத்துக்கு வந்து விட்டது.  

புத்தாண்டு விடுமுறைக்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரை ஒத்தி வைத்ததன் மூலம், நாட்டின் அரசியல் நெருக்கடியை உச்சக் கட்டத்துக்குக் கொண்டு வந்து இருந்தார். அத்தோடு அவர், பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.   

இவ்வாரம் அமைச்சரவையை மாற்றப் போவதாக ஜனாதிபதி அறிவித்து இருக்கிறார். அதனோடு அல்லது ஜனாதிபதி அதைச் செய்யாமல் இருப்பதோடு, நெருக்கடியின் அடுத்த கட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.  

சாதாரண நிலைமைகளிலும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதுண்டு. அதன்பின்னர் ஜனாதிபதி, அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டத்தை வெளியிட்டு, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பார்.   

ஆனால், சில சந்தர்ப்பங்களில் தமது கட்சி அல்லது தமது அரசாங்கம், பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிய வேளைகளில், ஜனாதிபதிகள் அல்லது பிரதமர்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, ஒத்தி வைத்த சந்தர்ப்பங்களும் உள்ளன.   

தற்போதும் அவ்வாறானதொரு நெருக்கடியின் காரணமாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைத்துள்ளார்.  

இது, இதற்கு முன்னர் இடம்பெற்ற இதுபோன்ற சில சம்பவங்களை நினைவூட்டுகிறது. 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக, அவரது சகாக்களாக அதுவரை காலம் இருந்த லங்கா சம சமாஜக் கட்சியினர், நம்பிக்கையில்லாப் பிரேணையொன்றைக் கொண்டு வந்தனர். 

அதை எதிர்கொள்வது கடினமாகும் என நினைத்த சிறிமா, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, அதே ஆண்டு மே மாதம் வரை ஒத்திவைத்தார்.   

அதன்பின்னர், நிலைமையைச் சமாளிக்க முடியுமா என அவர் பல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்தார். ‘முடியாது’ என்று தெரியவே, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டாமலேயே, அதைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தார்.   

1991 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக, அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்றோர், குற்றப் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளித்தனர். 

அதில் போதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இருக்கவில்லை. ஆனால், அதை ஜனாதிபதி பிரேமதாஸ அறிந்திருக்கவில்லை.   

சபாநாயகராகவிருந்த காலஞ்சென்ற எம்.எச். முஹம்மதுவும் அவரது கட்சியைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், அப்போது அவரோடு நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை. எனவே, போதியளவு கையொப்பங்கள் இல்லை என்பதை அறிந்து கொள்ள, பிரேமதாஸவுக்கு எந்த வழியும் இருக்கவில்லை.  

குற்றப் பிரேரணையை எதிர்கொள்ள முடியுமா என்ற சந்தேகம், பிரேமதாஸவுக்கு இருந்தது. எனவே அவர், தாம் தயாராகும் வரை, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார். 

அதன்பின்னர், பிரேமதாஸவின் கழுகுக் கண்களுக்குப் பயந்து, எவரும் புதிதாகப் பிரேரணையில் கையொப்பமிட முயற்சிக்கவில்லை. 

இறுதியில், மீண்டும் நாடாளுமன்றம் கூடியபோது, பிரேரணையில் போதிய கையொப்பங்கள் இல்லை என்பதை சபாநாயகர் எம்.எச். முஹம்மது ஏற்றுக் கொள்ள நேர்ந்தது; பிரேமதாஸ தப்பித்துக் கொண்டார்.   

இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறார். தேசிய அரசாங்கத்தில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியிலும் பிளவு ஏற்படப் போகிறது. எல்லோரும் அவரை கைவிடப் போகிறார்கள் போலும். இந்த நிலையிலேயே அவர் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைத்துள்ளார். 

அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளான ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே பிளவு ஏற்படுவதற்கு, பாரியளவிலான ஊழல்களே காரணம் எனலாம்.   

2016 ஆம் ஆண்டு முதல், முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களின் பாரியளவிலான ஊழல்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதில்லை என ஜனாதிபதி, பிரதமரையும் அவரது கட்சியான ஐ.தே.கவையும் குறைகூறி வருகிறார்.   

முன்னாள் ஜனாதிபதியோ அல்லது அவரது சகோதரர்களோ மீண்டும் பதவிக்கு வந்தால், தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என, ஜனாதிபதி தாம் பதவிக்கு வந்த காலத்தில் பயந்து இருந்தார்.  

 “2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று, பதவிக்கு வந்திருந்தால், நான் ஆறடி நிலத்துக்குள் தான் இருந்திருப்பேன்”  என அவர் அப்போது, பகிரங்கமாகவே கூறியிருந்தார்.   

ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டு இருக்கும் தாமதத்தைப் பற்றி குறிப்பிடும் போது, மஹிந்த மீண்டும் பதவிக்கு வந்தால், ஐ.தே.க தலைவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தாமே பாதிக்கப்படுவேன் என்றும் கடந்த வருடமும் அவர், அதே ஐ.தே.க தலைவர்களிடம் கூறியிருந்தார்.  

எனவே, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவர்களைத் தண்டித்து, அவர்கள் மீண்டும் பதவிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என, ஜனாதிபதி நினைத்திருக்கிறார் போலும்.  

ஆனால், அந்த விசாரணைகள் ஆமை வேகத்திலேயே நகர்ந்தன. இந்த நிலையிலேயே, மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றிய குற்றச்சாட்டுகள் சூடு பிடித்தன. ஐ.தே.க அந்தக் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவே ஆரம்பத்திலிருந்து முயற்சித்து வந்தது.  

ஜனாதிபதி மைத்திரிபால, அவற்றை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அதன் போது வெளியாகிய சில தகவல்களின் காரணமாக, ஐ.தே.க உதவித் தலைவரான ரவி கருணாநாயக்க தமது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய நேர்ந்தது.  

 இதனால் ஐ.தே.க தலைவர்கள் ஜனாதிபதியைப் பகிரங்கமாகவே விமர்சிக்கத் தொடங்கினர். இவ்வாறு வளர்ந்த ஐ.தே.க - ஸ்ரீ ல.சு.க முறுகல் நிலை, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், உச்சக் கட்டத்தை அடைந்தது. ஒரே அரசாங்கத்தில் இருந்து கொண்டே, இருசாராரும் தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர்.   

இருசாராரினதும் தேர்தல் தோல்விக்கு, குறிப்பாக ஐ.தே.கவின் தேர்தல் தோல்விக்கு, இந்தச் சண்டையும் பிணைமுறி விவகாரமும் பெருமளவில் காரணமாகின எனலாம்.   

இந்த அரசாங்கம், கடந்த மூன்றாண்டுகளில் அபிவிருத்தி என்றோ, மக்களைக் கவரக் கூடிய வகையிலோ எதையும் செய்யவில்லை. இதுவே தோல்விக்குப் பிரதான காரணமாகும்.   

தேர்தலின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தமது அதிகாரத்தைப் பற்றி, அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையையும் கோரியிருந்தார். இதனால் இரு சாராருக்கும் இடையிலான உறவு மேலும் சீர்குலைந்தது.   

இந்த நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களான ஒன்றிணைந்த எதிரணியினர், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தனர்.  

இது ஜனாதிபதிக்குத் தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கியது. பிரேரணையின் வெற்றி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மஹிந்த அணியை, மேலும் பலப்படுத்திவிடும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், தாமே முன்வைத்த பிணைமுறிக் குற்றச்சாட்டுகளின் பேரில், தாமே வெளியேற்ற முயற்சித்த பிரதமருக்கு எதிரான, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அவர் எவ்வாறு எதிர்க்க முடியும்?  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, மஹிந்த அணியின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா பொது​ஜன பெரமுன, தேர்தல் நடைபெற்ற 340 சபைகளில், 232 சபைகளில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.   

இது மீண்டும், மஹிந்த அல்லது அவரது சகோதரர்கள் பதவிக்கு வரப் போகிறார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டியது. இதையடுத்து, மைத்திரி அணியில் உள்ளவர்களில் பலர், மஹிந்த அணியின் பக்கம் தாவ எண்ணியிருந்தால், அது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. அதுதான் இலங்கை அரசியல்.  

எனவே, அவ்வாறு மஹிந்தவுடன் மீண்டும் இணைய நினைத்த ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களுக்கு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நல்ல சந்தர்ப்பமாகியது.   

அவர்கள், பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என அடம்பிடித்தனர். ஏனைய ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்கள், தற்போதைய பதவிகளில் ஒட்டியிருக்க விரும்பினர். அவர்கள் பிரேரணையை ஆதரிக்க முடியாது என்றனர்.   
மைத்திரி, அவரவருக்குத் தமது விருப்பப் படி நடந்து கொள்ள இடமளித்துவிட்டு, பார்த்துக் கொண்டு இருந்தார். இது, தமது கட்சியில் பாரிய பிளவை ஏற்படுத்தும் என்பதை, அவர் உணரவில்லையோ தெரியாது.  
பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்ட, 16 ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களும் பதவிவிலக வேண்டும் என ஐ.தே.க வற்புறுத்தியது.   

பிரதமரைப் பதவியிலிருந்து தூக்கியெறிய வாக்களித்தவர்கள், மீண்டும் அதே பிரதமருடன் கடமையாற்றுவது எவ்வாறு என்ற கேள்வி எழுவதால், ஐ.தே.கவின் இந்த முடிவு சரியாகத் தென்பட்டாலும், இந்தக் கோரிக்கை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாரிய வெற்றியை ஈட்டிய மஹிந்த அணியை, மேலும் பலப்படுத்திவிடும் என்பதை ஐ.தே.க உணரவில்லைப் போலும்.  

இந்த 16 பேரும், பதவி விலக வேண்டும் என ஐ.தே.க கோரிய போது, விலகி வந்து தம்மோடு இணைந்து கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷ, அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.  

 தேர்தலை அடுத்து, எவ்வாறு மஹிந்த அணியுடன் இணையலாம் என ஏங்கிக் கொண்டிருந்த அந்த 16 பேரில், பலருக்கு அந்த அழைப்பு, தேனாக இனித்திருக்கும். 

அதனால்தான், அவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்கள், எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரப் போவதாகவும், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படப் போவதாகவும் ஓரிரு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.   

சிலவேளை, அவர்கள் அவ்வாறு ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்தவுடன், அது மைத்திரியுடன் தொடர்ந்தும் இருக்கும் ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களில் சிலரும் ஏதாவது காரணம் கூறிக்கொண்டு மஹிந்தவுடன் இணைக் காரணமாகலாம். 

ஏனெனில் நாளை, தமக்கு என்ன நடக்கும் என்பதைப் பொறுத்துத் தான், அரசியல்வாதிகள் முடிவுகளை எடுக்கின்றனர்.   

தற்போது நாடு நிலையற்ற தன்மையையும் கடந்து, அராஜகத் தன்மையை நோக்கி, வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. 

எந்தவொரு கட்சியாலும் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாமல் இருக்கிறது. புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், அமைச்சரவையை மாற்றி, மீதமாக உள்ள ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களுடன், ஐ.தே.க ஆட்சியைத் தொடரும் எனக் கூறப்பட்டாலும், அவ்விரு கட்சிகளுக்கிடையே நிலவி வரும் கருத்து மோதல்களும் தொடரும் போல்த்தான் தெரிகிறது.  

 நாடாளுமன்றத்தின் கட்சிகளின் தற்போதைய பலத்தைப் பார்க்கும் போது, நிலையான ஆட்சி அமைக்கக் கூடிய மற்றொரு கூட்டணியைப் பற்றிச் சிந்திக்கவும் முடியாது.  

மஹிந்த அணியும் ஐ.தே.கவும் சேரப்போவதில்லை. ஐ.தே.கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேரப் போவதில்லை. அது, இரு கட்சிகளினதும் போட்டியாளர்களின் கைகளைப் பலப்படுத்திவிடும்.

மஹிந்த அணியும் மைத்திரி அணியும் இணைந்தாலும், அரசாங்கத்தை அமைக்க முடியாது. இரு குழுக்களிடமும் 95 ஆசனங்கள் மட்டுமே இருக்கின்றன.   

தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தின் கட்சிகளின் பலத்தில் பாரிய மாற்றம் ஏற்படாது, நிலையான அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியாது. அதற்காக மக்கள் விடுதலை முன்னணி கோருவதைப் போல், புதிதாகப் பொதுத் தேர்தலொன்று நடைபெற வேண்டும். 

ஆனால், 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி, இந்த நாடாளுமன்றம் முதலாவதாகக் கூடிய நாள் முதல், நாலரை ஆண்டுகள் செல்லும் வரை, அதாவது 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை, நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.   

நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை நிறைவேற்றி, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு சபாநாயகர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தால், ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம். ஆனால், பிரதான கட்சிகள் அதை விரும்பமாட்டா.   

ஏனெனில், அக்கட்சிகளில் முதல் முறையாகத் தெரிவு செய்யப்பட்ட புதிய எம்.பிகள் இருக்கிறார்கள். ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் முன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அவர்கள் ஓய்வூதியத்தை இழப்பர்.

 நாட்டில் என்ன அராஜகம் உருவானாலும், அரசியல் கட்சிகள் தமது சகாக்கள் ஓய்வூதியத்தை இழப்பதை விரும்ப மாட்டா.   

ஜனாதிபதியும் பிரதமரும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, 2015ஆம் ஆண்டு, தேர்தல்களின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், இந்தநிலை ஏற்பட்டு இருக்காது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .