2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலைக்கற்றை வழக்கு: விடுதலையும் அமைக்கப்பட்டுள்ள அரசியல் களமும்

எம். காசிநாதன்   / 2017 டிசெம்பர் 25 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திகில் நிறைந்த காட்சிகள், 2ஜி அலைக்கற்றை வழக்கில் நிறைவுக்கு வந்துள்ளன. முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்திருக்கிறார் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி.  

 இந்தத் தீர்ப்பு இந்தியாவை உலுக்கிய அலைக்கற்றை வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், 1,760 மில்லியன் ஊழல் என்று மக்கள் மன்றத்தில் பரபரப்பாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, விசாரணை நீதிமன்றத்தின் முன்பு நிரூபிக்க முடியாமல் போயிருக்கிறது.   

இந்திய நீதித்துறை வரலாற்றில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கி, தனி இடம் பெற்றார் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குண்ஹா. அந்த வழக்கில் ‘கூட்டுப் பிழை’ மூலம், மறைந்த ஜெயலலிதாவுக்கு  விடுதலை அளித்து, கர்நாட உயர்நீதிமன்றத்தில் தனி இடம் பிடித்தது மட்டுமின்றி, நாடு முழுவதும் அந்தத் தீர்ப்பு, கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.   

பிறகு, மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் மைக்கேல் குண்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்து, நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டியது.  

அலைக்கற்றை ஊழல் வழக்கு, கடந்த ஆறு வருடங்களில் பல வினோதங்களைச் சந்தித்து இருக்கிறது. “எங்களுடையை 1,760 மில்லியன்  இழப்பு என்ற கணக்கு, கற்பனைக் கணக்குதான். ஆனால், இழப்பு என்பது உண்மை” என்று, இந்திய கணக்காய்வு  நிறுவனத்தின் ‘சி.ஏ.ஜி’ அமைப்பின் தலைவராக இருந்த வினோத் ராய் அறிக்கை வெளிவந்தது.   

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் முடக்கம், பிரதமரையே ராஜா கேள்வி கேட்பதா என்றெல்லாம் பல காரசாரமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா இராஜினாமாச் செய்தார். 

சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் சிறையில் இருந்தார். தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உச்சநீதிமன்றமே பிணை வழங்கிய வழக்காக இது அமைந்தது.  
 ஓர் ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு விசாரித்து, குற்றப் பத்திரிக்கையைக் கூட, நாங்களே பரிசீலிப்போம் என்று கூறும் அளவுக்கு, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பாரதூரமான வழக்காகக் கருதி விசாரித்தது. 

அது மட்டுமல்ல, ‘2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான எந்த மனுக்களையும் உச்சநீதிமன்றம்தான் விசாரிக்கும். நாட்டில் உள்ள வேறு நீதிமன்றங்கள் விசாரித்து இடைக்கால நிவாரணம் ஏதும் வழங்கக்கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்தது. சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணை அறிக்கையை ஒவ்வொரு விசாரணையின் போதும் உச்சநீதிமன்றம் பார்வையிட்டது. உச்சநீதிமன்றமே கண்காணித்த இந்த வழக்கில், சி.பி.ஐ போதிய ஆதாரத்தை அளிக்கவில்லை.   

‘வழக்கை நிரூபிக்கத் தவறி விட்டது. கடும் குளிரிலும் தினமும் நான் ஆதாரங்கள் ஏதாவது சி.பி.ஐ தாக்கல் செய்யாதா என்று காத்திருந்தேன். ஆனால், நாட்கள் கடந்ததே தவிர சி.பி.ஐ. ஆதாரங்கள் எதையும் தரவில்லை’ என்று மிகவும் வேதனையுடன் தனது தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார் நீதிபதி ஓ.பி. சைனி. உச்சநீதிமன்றமே கண்காணிக்கும் வழக்கு இது என்பது, விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு நன்கு தெரியும்.   

அதனால்தான், அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன்பு, பல முறை திகதியை அறிவித்து விட்டுத் தள்ளி வைத்தார். வழக்கின் ஆழம் அவருக்கு நன்கு தெரியும். வழக்கின் மீது எதிர்பார்ப்பும் அதைவிட நன்கு தெரியும்.   ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தன் முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, பரபரப்பான 1,760 மில்லியன் ரூபாய் வழக்கில் ஆதாரம் இல்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருக்கும் நீதிபதி சைனி, இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டியிருக்கிறார்.   

இந்த வழக்கில், வேறு சில விநோதங்களும் உண்டு. ராஜாவிடம் வருமானத்துக்கு மீறிய சொத்து இல்லை’என்று, விசாரணை நீதிமன்றத்திலேயே சி.பி.ஐ விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.    

ஆனால், இழப்புக்கோ, கலைஞர் டி.விக்கு 20 மில்லியன் ரூபாய் கோடி வழங்கியதிலோ பிடி கிடைக்காத சி.பி.ஐ, ராஜா மீது வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கையாவது போட்டு விடலாம் என்று கருதியது. அதற்காகவே சென்னையில் உள்ள சி.பி.ஐ மூலம் இரண்டாவது திடீர்சோதனை செய்து, ஆ.ராசா வருமானத்துக்கு மீறிய சொத்து இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது . அந்தக் குற்றச்சாட்டையும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை என்ற நிலை இப்போது உருவாகியிருக்கிறது.   

ஆகவே, பரபரப்பான  2ஜி அலைக்கற்றை வழக்கு இப்போது முடிவுக்கு வந்து விட்டது. தி.மு.க மீது இருந்த களங்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்று தி.மு.கவினர் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.  

ஆனால், வழக்கு முடிந்தாலும், அந்த வழக்கின் விடுதலை ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் ஓயவில்லை. இனி தி.மு.க- பா.ஜ.க கூட்டணிதான் என்ற செய்திகள் பரவத் தொடங்கி விட்டன.   

ஆனால், வழக்கில் ஆதாரமில்லை என்பதுதான் உண்மையாக விடுதலைக்குக் காரணம் என்று நீதிமன்ற நீதிபதி சைனி சொன்னாலும், அரசியல் வாதிகள் அதை ஏற்க- ஏன் அரசியல் கட்சிகள் எதுவுமே ஏற்கத் தயாராக இல்லை. 

  
ஏனென்றால், இந்த வழக்கு தி.மு.கவும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்டது. “காங்கிரஸின் இமேஜை காப்பாற்ற, தி.மு.கவைப் பலிகடா ஆக்கி விட்டார்கள்” என்று தொடக்கத்திலிருந்தே தி.மு.க முன்னணித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் குறை கூறி வந்தார்கள்.   

குறிப்பாக, நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது, தி.மு.கவினருக்குச் சந்தேகம் வலுத்தது. அதுவும், அறிவாலயத்தில் சி.பி.ஐ திடீர்பரிசோதனை செய்து கொண்டே, ப.சிதம்பரம் தலைமையிலான குழு, தி.மு.க தலைவர்களுடன் 2011 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேசியதை, தி.மு.கவின் மூத்த தலைவர்கள் யாரும் மறந்து விடவில்லை.   

ஆனால், ஆரம்பத்தில் பா.ஜ.கவுக்கும், பிரதமர் மோடிக்கும் தமிழகத்தில் இருந்த செல்வாக்கு இப்போது இல்லாததும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க ஆட்சி தொடருவதற்கு பா.ஜ.கவும் தமிழகத்துக்கு வரும் ஆளுநர்களும் உதவி வருவதும் தி.மு.கவை காங்கிரஸ் பக்கமே வைத்துக் கொண்டிருக்கிறது. 

ஆனால், காங்கிரஸ் போட்ட வழக்கில் பா.ஜ.க ஆட்சி காலத்தில் விடுதலை கிடைத்திருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸுடன் ஏன் கூ ட்டணியை தி.மு.க தொடர வேண்டும்’ என்பதை அக்கட்சி விளக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.  

இன்றைய நிலையில் தி.மு.க வைப் பொறுத்தமட்டில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் மாநிலத்தில் அப்படியொரு கூட்டணியை சட்டமன்றத் தேர்தலுக்கு வைத்தால் ‘பா.ஜ.கவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் தனி அணியாக நின்று, தி.மு.கவின் வெற்றியைத் தடுத்திட முடியும் என்ற நிலை நிலவுகிறது.   
வாக்கு சதவீத கணக்கு அடிப்படையில் பார்த்தால் இது போன்றதொரு நிலை சாத்தியமே என்பதை உணர்ந்துதான், ராகுல் காந்தி, அ.தி.மு.க ஆட்சி பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல் இருக்கிறார். கன்னியாகுமரி ஒகி புயலைக் கூட பார்வையிட வந்த ராகுல் காந்தி, அ.தி.மு.க ஆட்சி பற்றி விமர்சிக்கவில்லை.

 இத்தனைக்கும் கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸுக்கு செல்வாக்கான மாவட்டம் மட்டுமல்ல, எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்களை அளிக்கும் மாவட்டம். அ.தி.மு.கவை, ராகுல் விமர்சனம் செய்யாமல் இருப்பதைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறது தி.மு.க என்பதை சமீபத்தில் குஜராத் தேர்தலின்போது காண முடிந்தது.  

பா.ஜ.கவின் வெற்றியை குறை கூறி, காங்கிரஸின் தோல்வியைப் புகழ்ந்து, எதிர்கட்சிகள் பேசினாலும் தி.மு.க அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மாறாக ‘வெற்றி பெற்ற பா.ஜ.கவுக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு, “மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும்” என்ற அளவோடு தனது கருத்தை நிறுத்திக் கொண்டது.  

 ஆகவே, இது போன்ற நேரத்தில், 2ஜி அலைக்கற்றை வழக்கில் கிடைத்துள்ள விடுதலை- ஏன் தி.மு.கவுக்கான வெற்றி, அக்கட்சியின் அடுத்த கட்ட கூட்டணியில், நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. விரைவில் நடைபெறவிருக்கின்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகமும் சேரும் விதத்தில் ஒரு நிலையை மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சி எடுத்தால், தமிழகத்தில் இப்போதுள்ள அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாக மாறும்.  

 அதன் பின்னணியில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, தமிழகத்தில் இப்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஆட்சிக்கு வரத் திராவிட முன்னேற்றக் கழகம் வியூகம் வகுக்கலாம். 

அந்த வியூகத்துக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் ஒப்புக்கொள்ளும் சூழலில், தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் மாற்றம் வரலாம். ஆகவே, அலைக்கற்றை வழக்கில் வெளிவந்துள்ள தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் ஒரு புதிய கூட்டணிக்கான விதையை விதைக்கலாம் என்பதே தற்போதையை நிலைவரம்.   

விடுதலை சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், விடுதலை ஏற்படுத்தியிருக்கும் களம் அரசியல் பூர்வமானதாக உருவெடுத்து விட்டது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .