2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆட்சியாளர்களுக்கு இனக் கலவரங்கள் பிரச்சினை அல்ல...

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 மார்ச் 22 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 27 ஆம் திகதி அம்பாறையிலும், இம்மாதம் நான்காம் திகதி முதல் பல நாட்களாக, கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்கள் விடயத்தில், பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக் கொள்வதைப் பார்க்கும் போது, இன முறுகல்கள் தொடர்பாக, அந்த இரு கட்சிகளும், பாரதூரமாகச் சிந்திப்பதில்லை என்பது தெளிவாகிறது.  

அவர்கள் அவற்றைத் தீர்த்து வைப்பதைப் பற்றி, எவ்வித அக்கறையையும் காட்டுவதில்லை. எதிலும் அரசியல் இலாபம் தேடும் அக்கட்சிகள், இந்த விடயத்திலும் அரசியல் இலாபத்தையே தேடுகின்றன.  

நாட்டில், ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் குறிப்பாக, ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் அம்பாறையிலும் கண்டி மாவட்டத்தின் பல இடங்களிலும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 500 வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட இந்த வன்செயல்கள், திட்டமிடப்பட்டவை எனக் கூறுகின்றன.   

வன்செயல்கள் பரவிய வேகம், பெற்றோல் குண்டுகள் தயார் நிலையில் இருந்தமை மற்றும் கைக்குண்டுகள் பாவிக்கப்பட்டமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, அவ்வாறு கூறுவது நியாயமாகவே தெரிகிறது.   

ஆனால், திட்டமிட்டவர்கள் யார்?  

சகல அரசியல் கட்சிகளும் தத்தமது அரசியல் கோட்பாடுகளையும் திட்டங்களையும் நியாயப்படுத்த, இந்தச் சம்பவங்களைப் பாவிக்கும் நிலையில், அது மிகவும் கடினமான கேள்வியாக இருக்கிறது.   

 மஹிந்தவின் ஆட்சி வராமல் தடுக்கும் தமது நோக்கத்துக்காக, இந்தச் சம்பவங்களை ஐ.தே.க பாவிக்கிறது. ஐ.தே.க ஆட்சியைக் கவிழ்க்கும், தமது நோக்கத்துக்காக பொதுஜன பெரமுன அவற்றைப் பாவிக்கிறது.   

மக்கள் விடுதலை முன்னணி, சோஷலிஸத்தின் கீழ் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறாது என்பதைக் காட்டுவதற்கு அவற்றைப் பாவிக்கிறது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தை, முஸ்லிம்களுக்கு உணர்த்த, அச்சம்பவங்களை உபயோகிக்கின்றனர்.   

உண்மை எதுவானாலும், சில அரசியல் கட்சிகள், தமது இந்த வாதங்களை, மிகச் சிறப்பான முறையில் முன்வைக்கிறார்கள். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதும், முஸ்லிம்கள், ஐ.தே.கவுக்கே வாக்ளித்து இருந்தனர்.   

இந்த நிலையில், தேர்தல் நடைபெற்ற 340 சபைகளில், 232 சபைகளில் முதலிடத்துக்கு வந்த பொதுஜன பெரமுன, செல்லுபடியான வாக்குகளில் 45 சதவீதத்தை மட்டுமே பெற்றுக் கொண்டது.   

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெற பொதுஜன பெரமுனவால் முடியாது என்றே தெரிகிறது.   

இந்த நிலையில், முஸ்லிம் வாக்காளர்களை ஐ.தே.கவிலிருந்து கழற்றி எடுத்தால், பெரமுன, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை மனதில் வைத்து, முஸ்லிம்கள் மனதில் அரசாங்கத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த, பொதுஜன பெரமுனயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டுள்ளது என ஐ.தே.க வாதிடுகிறது.   

அதாவது, சிங்களக் குண்டர்கள், முஸ்லிம்களைத் தாக்கும் போது, அதை அடக்க முற்பட்டால், தமது சிங்கள வாக்கு வங்கி, பாதிக்கப்படுமே என நினைத்து, அரசாங்கம் வன்செயல்களைக் கட்டுப்படுத்தத் தயங்கும்.  

 மறுபுறத்தில், அரசாங்கத்தின் தயக்கத்தை காணும் முஸ்லிம்கள், அரசாங்கத்தின் பிரதான கட்சியான, ஐ.தே.கவின் மீது கோபம் கொள்வர். அதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அவர்கள் ஐ.தே.கவுக்கு வாக்களிக்கத் தயங்குவார்கள் எனப் பொதுஜன பெரமுன கணக்குப் போட்டுள்ளது என்பதே ஐ.தே.கவின் வாதமாகும்.   

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணி எனப்படும் நாடாளுமன்றத்தில், மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் குழுவினர் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவினர், கலவரங்களின் பின்னணியை வேறு விதமாக விவரிக்கின்றனர்.   

ஐ.தே.க தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, எதிராக ஒன்றிணைந்த  எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை தயாரித்துக் கொண்டு இருக்கும் போதே, முஸ்லிம் விரோதக் கலவரங்கள் இடம்பெற்றன.   

அதேவேளை, அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்தும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றங்களை அடுத்தும், ஐ.தே.கவின் சில பிரதி அமைச்சர்களும் எம்பிக்களும் பகிரங்கமாகவே கட்சித் தலைமைக்கு எதிராகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  

 ஐ.தே.கவைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார, ஒன்றிணைந்த எதிரணிக்கு முன்னரே, பிரதமருக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பதாகக் கூறியிருந்தார்.  

இந்த நிலையில், நாட்டின் கவனத்தைத் திசை திருப்ப, ஐ.தே.க தலைமைக்கே அவசியமாக இருந்தது என்றும், அதன் விளைவே அம்பாறை மற்றும் கண்டிக் கலவரங்கள் என்றும் மஹிந்த ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.   

உண்மையிலேயே கண்டிக் கலவரங்களை அடுத்து, அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் பெரிதாக பேசப்படுவதில்லை. எனவே, ஒன்றிணைந்த எதிரணியினரின் வாதம் சரியெனவும் சிலர் ஏற்றுக் கொள்ளலாம்.  

ஆனால், கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஐ.தே.க அரசாங்கம், கலவரங்களை அடக்குவதில் காட்டிய மெத்தனத்தைப் பற்றிக் குறைகூறிய போதிலும், ஐ.தே.கவின் வாதத்தையே நம்புவதாகத் தெரிகிறது.   

கலவரங்களுக்கு முன்னர், அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த உடன், கண்டி மாவட்டத்தில் உகுரெஸ்ஸபிட்டிய மற்றும் களுத்துறை மாவட்டத்தில் வியங்கல்ல ஆகிய இடங்களில், பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், தமது கட்சியை ஆதரிக்காததற்கு, முஸ்லிம்களை இம்சித்து இருந்தனர். இது தொடர்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் முறையிட்டு இருந்தது.   

அவர், அது தொடர்பாக விசாரிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும், பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனக் கூறியிருந்தனர். முஸ்லிம் கவுன்சில், இந்த இரண்டு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களைப் பகிரங்கப்படுத்தவில்லை. எனவே, அவ்வமைப்பு, பொதுஜன பெரமுனவின் மீது வீண் பழி சுமத்துவதாகக் கூற முடியாது.   

ஆனால், பீரிஸும் காரியவசமும் தமது மறுப்பைப் பகிரங்கமாகவே தெரிவித்தனர். இந்த நிலையில், கண்டிக் கலவரங்கள் இடம்பெற்ற போது, அவற்றையும் பொதுஜன பெரமுனவே திட்டமிட்டது என்ற ஐ.தே.கவின் வாதத்தை, முஸ்லிம்கள் ஏற்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.  

ஆனால், கலவரங்களின் போது, அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைப் பற்றி, முஸ்லிம்கள் வெறுப்படைந்துள்ளனர். அவசரகால நிலைப் பிரகடனம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே, பல மணித்தியாலங்கள் அல்ல, பல நாட்களாகக் குண்டர்கள் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், பாரிய அழிவை ஏற்படுத்தினர்.   

அந்தத் தாக்குதல்களின் போது, பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டும், அத்தாக்குதல்களில் தாமும் பங்கு கொண்டும் இருந்தமை, தற்போது, சிங்கள ஊடகங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே, மஹிந்தவின் ஆட்சியைப் போல், ஐ.தே.க ஆட்சியொன்றின் கீழ், தாம் தாக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கை இப்போது முஸ்லிம்களிடம் இல்லை.  

தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாலுள்ள காரணங்களால், இச்சம்பவங்கள் இடம்பெற்றதாக அல்லது பரவியதாகக் கூறுவதைப் போல், பொலிஸாரின் குறையினாலேயே நிலைமை மோசமாகியது எனப் பிரதமர் உள்ளிட்ட ஐ.தே.க தலைவர்கள் கூறுகின்றனர்.   

ஆனால், தமது கடைமையை நிறைவேற்றத் தவறிய பொலிஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க, அரசாங்கம் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. எனவே, அரசாங்கத்தைப் பற்றிய சந்தேகத்தை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.   

பாதுகாப்புத் துறையினரின் நடவடிக்கைகள், வன்முறைகள் பரவுவதற்குக் காரணமாகினவா, என்ற சந்தேகம் உள்ளிட்ட, கலவரங்களின் பின்னணியை ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.   

ஆனால், அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் அதிருப்தி குறையவில்லை. அந்த ஆணைக்குழுவும், முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்தவும், மேலும் இனவாதத்தைக் கக்கவும், இனவாதக் கும்பல்களுக்கு மேடையாகிவிட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.  

பொலிஸாரின் மெத்தனப் போக்கே, கலவரங்கள் பரவுவதற்குக் காரணம் என்பதை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம், லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.   

பொலிஸாரும் பொலிஸ் அதிரடிப் படையினரும் களத்தில் இருக்கும் போதே, தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் சில இடங்களில் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கிவிட்டே வந்துள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவும் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.  

பொலிஸாரின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போதும், பொலிஸ் ஆணைக்குழுவோ பொலிஸ் திணைக்களமோ அது தொடர்பாக விசாரணை செய்ய நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.   

எனவேதான், பொலிஸாரின் இந்த மெத்தனப் போக்கைப் பற்றி விசாரிக்குமாறு ‘கபே’ என்றழைக்கப்படும் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன், பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரியிருக்கிறார்.   

இது இவ்வாறு இருக்கையில், அரசாங்கம் ‘பேஸ்புக்’ மற்றும் ‘வட்ஸ்அப்’ போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் வெறுப்பூட்டும் தகவல்களை, வடித்து ஒதுக்கிவிட ‘பேஸ்புக்’ நிறுவனத்துடன் கூட்டாக நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது.   

இது எவ்வளவு வெற்றியளிக்கும் என்பது கேள்விக் குறியே. ஏனெனில், கண்டிக் கலவரம் இடம்பெற்றுக் கொண்டு இருக்கும் போது, அரசாங்கம் இந்த வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது. ஆனால், அவற்றைப் பாவிப்போர், அவற்றை அடைய, மாற்று வழிகளை அறிந்திருந்தனர்.   

அதேவேளை, 2012 ஆம் ஆண்டு முதல், இந்த வலைத்தளங்களில் நாட்டை எரித்து அழித்துவிடும் அளவுக்கு சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துகள் பதிவேற்றப்பட்டுள்ளன.   

தற்போதைய நிலைமையைப் பற்றி, பொய்யான தகவல்களை மட்டுமே தடையால் நிறுத்த முடிந்தது. அரசாங்கம், இதற்கு முன்னர் ஊடகங்களில் வெறுப்பைப் பரப்பும் கருத்துகளை வெளியிடுவதைத் தடுப்பதற்காகச் சட்டம் கொண்டு வர முயன்றது.  

 ஆனால், அது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்ததை அடுத்து, அரசாங்கம் அந்தச் சட்டமூலத்தைக் கைவிட்டது. ஆனால், அப்போதாவது அரசாங்கம் சமூக வலைத்தளங்களின் தகவல்களை வடித்தெடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. எல்லாம் ஏதோ அந்தந்த நேரத்தைச் சமாளிக்கவே செய்யப்படுகின்றன.  

வன்செயல்களை அடக்க, உரிய நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், பொலிஸாரின் மெத்தனப் போக்கைப் பற்றிய குற்றச்சாட்டுகளையும் உதாசீனம் செய்வதனால், அட்டூழியங்களைப் புரிந்தோர் தைரியமடைந்து, தமது செயல்களை நியாயப்படுத்தவும் முன்வருகிறார்கள்.   

அவர்கள், அதற்காகச் சம்பந்தமே இல்லாத முஸ்லிம் பெண்களின் ‘அபாயா’ உடையையும் முஸ்லிம்களின் தாடியையும் முன்னிறுத்தி, முஸ்லிம் தீவிரவாதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர்.   

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கனேசன் மற்றும் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் கண்டிக் கலவரங்களோடு, முஸ்லிம் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசியமை, அவர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும்.  

‘அபாயா’ அணியும் பெண்களில் பெரும்பாலானவர்கள், அன்றாடம் நாட்டில் நடப்பவற்றையாவது அறியாத அப்பாவிகள். அவ்வாறு இருக்க, ‘அபாயா’வைக் காட்டி, முஸ்லிம் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசியதனால், அமைச்சர் மனோ கணேசனுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே, இந்நாட்களில் ஊடகங்களினூடாக ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது.   

அது ஒருபுறமிருக்க, வன்செயல்கள் இனிமேலும் நடைபெறாதிருக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் இல்லை. அவ்வாறானதொரு திட்டத்தைத் தயாரிக்கும் அவசியத்தை, அரசாங்கம் உணர்ந்திருப்பதாகவும் தெரியவில்லை. அதற்குத் தேவையான அரசியல் உறுதியும் அரசாங்கத்தின் தலைவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .