2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4

கே. சஞ்சயன்   / 2019 நவம்பர் 11 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (21/4), கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் களத்தில், முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன.   

இந்தக் குண்டுத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என்று, உரிமை கோரி வீடியோவை வெளியிட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பத்தாதி, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க கொமாண்டோக்களால் சில நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சம்பவமும், தேர்தல் காலத்தில் பரபரப்பைத் தோற்றுவித்தது.   

21/4 தாக்குதல்கள் தான், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, வேறொரு தளத்தை நோக்கித் திருப்பியது எனலாம்.   

அதற்கு முன்னதாக, இந்தத் தேர்தல் எதிர்கொள்ளப்படக் கூடியதாக இருந்த சூழலுக்கும், இப்போது அது எதிர்கொள்ளப்படும் சூழலுக்கும் இடையில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தியது,  இந்த 21/4 தாக்குதல்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.   

21/4 தாக்குதல்களுக்கு முன்னதாக, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தலே முக்கியமான விடயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், 2018 ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்பு சார்ந்த, அரசமைப்பு மீறல்களுக்குப் பிறகு, அதுவே பிரதான பேசுபொருளாக இருந்தது.   

அப்போது, ஐ.தே.க தரப்பில் சஜித் பிரேமதாஸவை விட, சபாநாயகர் கரு ஜெயசூரியவே வேட்பாளராகக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகத் தென்பட்டன.   

அதுபோல, கோட்டாபய ராஜபக்‌ஷவை விட, சமல் ராஜபக்‌ஷவுக்கு மொட்டு வேட்பாளராகும் வாய்ப்பு அதிகம் என்றும் கருதப்பட்டது.   

21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு என்ற விடயம் திடீரென முன்னுரிமைப்படுத்தப்பட்டது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, கேள்விக்குள்ளாகி இருப்பதாகப் பிரசாரப்படுத்தப்பட்டது.   

இப்போது, தன்னால் மட்டுமே, தேசிய பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும் என்று, கோட்டாபய துணிச்சலுடன் கூறுகிறார் என்றால், அதற்கான ஒரே காரணி, 21/4 தாக்குதல்கள் தான்.  அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னுக்குக் கொண்டு வந்ததும், அவருக்குச் சமதையான போட்டியாளராகச் சஜித் பிரேமதாஸவைக் களமிறங்கச் செய்ததும், இந்தத் தேர்தலில், தேசியப் பாதுகாப்பு என்பதையே பிரதான பேசுபொருளாக, பிரச்சினையாக, பிரசாரமாக மாற்றியதும் 21/4 தாக்குதல்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.  

 இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு, தாமதமாகவே உரிமை கோரியது. எனினும், இது ஐ.எஸ் அமைப்பின் நேரடியான வேலை அல்ல; அதன் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட உள்ளூர் அமைப்புகளின் வேலை என்றே, இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.   
இருந்தாலும், இலங்கையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களுக்கு, வெறுமனே பழிவாங்கும், இரத்தவெறியைத் தீர்க்கும் எண்ணம் மாத்திரம் தான் காரணமா, அதற்கும் அப்பால் அரசியல் நோக்கங்களும் இருந்தனவா என்பது, ஆராயப்பட வேண்டிய விடயம்.   

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில், இரண்டு முக்கியமான தரப்புகளில் இருந்தும் சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்க்கின்ற போது, 21/4 தாக்குதல்களுக்கும், இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கும் முக்கிய தொடர்புகள் இருக்கும் போலவே தென்படுகிறது.   

21/4 தாக்குதல்களுக்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று, சஜித் பிரேமதாஸவுக்காகப் பிரசாரங்களைச் செய்யும் தம்பர அமில தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.  

 அதுபோலவே, அசாத் சாலி போன்றவர்களும் கூட, ராஜபக்‌ஷவினர் மீண்டும் ஆட்சியமைப்பதற்காக, சஹ்ரான் காசிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதே, 21/4 தாக்குதல் என்று கூறுகிறார்கள்.   

தேர்தல் பிரசாரம் ஒன்றில், உண்மைகளும் பொய்களும் தாராளமாக உலாவ விடப்படுவது வழக்கம். அதுபோலவே, உண்மையின் சாயலில் உள்ள பொய்களும் பொய் போலத் தோன்றும் உண்மைகளும் கூட, பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.   கோட்டாபயவை எதிர்ப்பவர்கள் மாத்திரம் தான் இவ்வாறு கூறுகிறார்கள் என்றில்லை.   

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு அளிக்கின்ற, தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவும் கூட, 21/4 தாக்குதல்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கின்ற கருத்துகள், பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பத் தோன்றுகிறது.   

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், சீனாவுக்கு நீண்டகாலக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், 21/4 தாக்குதல் நடந்திருக்காது என்பதே, அவரது வாதம் ஆகும்.  “ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுத்து, பல நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டோம். இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளும் ஓர் அணியாகி, இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டன. இலங்கைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவும் இதுவே காரணம்” என்று அவர் கூறியிருப்பது, கவனிக்கத்தக்க விடயம் ஆகும்.  ஆனால், அதற்காக அவர் முன்வைக்கின்ற வாதம், தர்க்க ரீதியாக முரண்பாடானது.   

“அனைத்து இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளையும் உருவாக்கியது அமெரிக்கா தான். அவர்களை, அமெரிக்கா இயக்கியமைக்கு அமையவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதே உண்மை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

விஜேதாஸ ராஜபக்‌ஷவைப் போல, வேறும் பலர், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில், அமெரிக்காவே இருந்தது என்று, ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்திருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள், சற்றுத் தீவிரமாகப் பரவிய போது, அதனை அமெரிக்கா நிராகரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

21/4 தாக்குதல்களுக்குப் பின்னால், அமெரிக்காவோ, அதன் ஆதரவு பெற்றவர்களோ தான் இருந்ததாகக் குற்றம்சாட்டுபவர்கள், ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், இலங்கையின் அரசியல் களத்தில், மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலான, இத்தகைய தாக்குதல்களை அமெரிக்கா திட்டமிட்டிருக்குமா என்ற கேள்விக்கு, தர்க்கரீதியான விளக்கங்களை அளிக்கத் தயாராக இல்லை.

ஏனென்றால், இந்தத் தாக்குதல்களின் மூலம், உடனடிப் பலன் பெற்றவர்களும் பலம் பெற்றவர்களும் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தான். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிலேயே, இதனை அறுவடை செய்வதற்கான அரசியல் ஆட்டம், ராஜபக்‌ஷவினரால் தொடங்கப்பட்டு விட்டது.   

2015 தேர்தலில், சிறுபான்மை இன, மத மக்களால் தான், தோற்கடிக்கப்பட்டிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. ஆனால், 21/4 தாக்குதல்கள், சிங்கள, தமிழ் கிறிஸ்தவ வாக்குகளை ராஜபக்‌ஷவினரின் பக்கம் திரும்ப வைத்திருக்கின்றன.

 ராஜபக்‌ஷவினரின் மூலமே, தேசியப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்ற ஒரு மாயை, உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் தான், 21/4 தாக்குதல்கள், கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக ஆக்குகின்ற திட்டத்தை, நிறைவேற்றுவதற்கான முதற்கட்டம் என்று பலரும் கூறுகின்றார்கள்.   

விஜேதாஸ ராஜபக்‌ஷ போன்றவர்கள் கூறுவது போல, அமெரிக்காவின் பின்புலத்தில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றது உண்மையாக இருந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதை, அமெரிக்கா விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.   

தெற்கில் உள்ள, கொள்கைப் பிடிப்புள்ள சில இடதுசாரிகள், கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்கும் திட்டத்துக்குப் பின்னால், அமெரிக்காவே இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறார்கள். 

“கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையை துறந்த ஒருவர். அவரது மனைவி, இன்னமும் அமெரிக்கக் குடியுரிமையையே கொண்டிருக்கிறார். அவரது பிள்ளைகளும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.

கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்திலேயே, ‘அக்சா’ உடன்பாட்டை, நாடாளுமன்றத்துக்கோ நாட்டுக்கோ தெரிவிக்காமல் கையெழுத்திடப்பட்டது.  அமெரிக்கா தனது நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, அங்குள்ள சட்டரீதியான தடைகளில் இருந்து கோட்டாபய ராஜபக்‌ஷவைக் காப்பாற்றி, போட்டியில் நிற்க வைத்துள்ளது.  கோட்டாபய ராஜபக்‌ஷவை வெற்றிபெற வைப்பதற்காகவே, 21/4 தாக்குதல் நடத்தப்பட்டது” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.   

ஆனால், விஜேதாஸ ராஜபக்‌ஷ போன்ற கோட்டாபய ராஜபக்‌ஷ ஆதரவாளர்களோ, தம்பர அமில தேரர் போன்ற சஜித் பிரேமதாஸ ஆதரவாளர்களோ, அமெரிக்காவின் பின்னணியில் தான் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்கியிருக்கிறார் என்பதை, வெளிப்படுத்தத் தயாராக இல்லை.   கோட்டாபயவை அமெரிக்கா களமிறக்கியிருந்தால், அவர் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.   

அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் கொடுக்கப்பட்டதன் எதிரொலியாக, 21/4 தாக்குதல் இடம்பெற்றன என்று, விஜேதாஸ ராஜபக்‌ஷவின் வாதம் சரியானால், இதன் எதிரொலியாகவே கோட்டாபயவின் எழுச்சி உருவானது என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.   

ஹம்பாந்தோட்டையின் எதிரொலியாக, 21/4 தாக்குதல் நடந்தது என்றால், இது ராஜபக்‌ஷவினரைப் பலப்படுத்தும் என்பதைக் கூட அறியாமல், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காது.

இதனை, இலங்கையிலேயே சட்டத்துறையில் மூன்று கலாநிதிப் பட்டங்களை பெற்ற ஒரே ஒருவரான விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கும் சரி, அவரை ஒத்த கருத்துடையவர்களுக்கும் சரி நிராகரிக்க முடியாது.  இவ்வாறு பார்த்தால், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக, 21/4 தாக்குதல்கள் நடத்தப்பட்டதா என்ற சந்தேகமே வலுக்கும். ஆனால், யார் அதனை நடத்தியது என்ற கேள்விக்கான விடை தான் இங்கு முக்கியமானது.   

அதற்கான பதில் கிடைக்காத சூழ்நிலையில், சிங்களப் பௌத்த இனவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளதுடன், சிறுபான்மையினங்கள் மத்தியில், அச்சத்தையும் ஏற்படுத்தி, ஜனாதிபதித் தேர்தல் களத்தையும் சூடாக்கி விட்டிருக்கிறது இந்த 21/4 தாக்குதல்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X