2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆண்டாள் சர்ச்சை: ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு களம் அமைக்குமா?

எம். காசிநாதன்   / 2018 ஜனவரி 22 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீவில்லிப்புத்தூர் ‘ஆண்டாள்’ சர்ச்சை, சென்னை சென். ஜோர்ஜ் கோட்டைக்கும், டெல்லி செங்கோட்டைக்கும் நடைபெறப் போகும் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யுமா? இதுதான் இன்றைக்கு தமிழகத்தில் அனைவர் மனதிலும் எழும் கேள்வி.  

‘ஆண்டாள்’ பற்றி, கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு கொலை மிரட்டல் வரை சென்று விட்டது. அ.தி.மு.கவிலிருந்து பா.ஜ.கவில் இணைந்தவரும், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், “வைரமுத்துவின் நாக்கை வெட்டுவோருக்குப் பத்து இலட்சம்” என்றும், “இந்து மதத்தைக் குறை கூறுவோரைக் கொலை செய்ய வேண்டும்” என்றும் கூறியது, வெறுப்புப் பேச்சின் உச்சத்துக்கு ஆண்டாள் சர்ச்சையைக் கொண்டு சென்றிருக்கிறது.   

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, “கவிஞர் வைரமுத்துவுக்கு இப்படியெல்லாம் மிரட்டல் விடுத்து, எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்” என்று பேச, ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கான களம் தயார் செய்யப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.  

தமிழகத் தேர்தல்களை, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விவகாரம் முடிவு செய்திருக்கிறது. 1960களில் ‘அவுன்ஸ் அரிசி’, ‘தமிழ், தமிழர்’ என்ற விவகாரம் அரசியல் களத்தை முடிவு செய்தது.   

1970களில் ‘மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி’, ‘ஊழல்’ போன்ற பிரசாரங்கள் தேர்தல் களத்தைத் தெரிவு செய்தன.  

 1980களில் ‘இந்திரா காந்தி மரணம்’, ‘எம்.ஜி.ஆர் உடல்நலம்’ போன்றவை தேர்தல் களத்தை ஆட்டிப்படைத்தன.   

1990களில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, ராஜீவ் கொலை போன்றவை தமிழக அரசியல் களத்தில் விளையாடின.  

 1998களில் மத்தியில் நிலையான ஆட்சி என்ற முழக்கமும், கோவைக் குண்டுவெடிப்புச் சம்பவங்களும் தமிழக நடாளுமன்றக் களத்தை முடிவு செய்தன.  

2000த்துக்கு மேல் ‘கூட்டணிகள்’ முழுமையாகத் தேர்தல் களத்தை முடிவு செய்தாலும், 2014 - 2016 ஆகிய தேர்தல்களில் ‘திராவிடக் கட்சிகள்’ வேண்டாம் என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டு, அந்தத் தேர்தல்க் களம் பிரசாரக் காட்சிகளைக் கண்டது.  

இப்போது, திராவிடக் கட்சிகளை வழிநடத்திய ஜெயலலிதா இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதியோ உடல் நலக்குறைவால் செயற்பாடின்றி இருக்கிறார்.   

ஆகவே, இப்போது தமிழகத்தில், அரசியல்வாதிகள் மாற்றாகப் புறப்படும் அத்தியாயம் முடிந்து, திரைப்பட நடிகர்கள், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புறப்படும் அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.   

குறிப்பாக, ‘ஆன்மிக அரசியலை’ முன் வைத்து, சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏற்கெனவே அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து விட்டார்.  

 ‘பகுத்தறிவு அரசியலை’ முன்னிறுத்தி, நடிகர் கமல்ஹாசன், அரசியல் கட்சியை அப்துல்கலாம் பிறந்த மண்ணில் இருந்து தொடங்குகிறார்.  

‘மாற்றம் தேவை’ என்று நடிகர் விஷால், இப்போதைக்குக் களத்துக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால், நடிகர் பிரகாஷ் ராஜ், “மூன்று நடிகர்களுமே ஒன்று சேர வேண்டும். ஏனென்றால், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” என்று அறிவித்திருக்கிறார்.  

திரைப்பட நடிகர்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலில் சாதித்து விடப் போகிறார் என்ற செய்திப் பிரசாரம் கடுமையாகச் செய்யப்படுகிறது. ‘ஆன்மிக அரசியல்’ தவிர வேறு எதையும் அவர் இன்னும் அறிவிக்கவில்லை.  

கட்சி நிர்வாகிகள் யார் என்று தெரியவில்லை; கட்சியின் முழுக் கொள்கை என்ன என்பதும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அதற்குள் ரஜினியை முன்னிறுத்தி, கருத்துக்கணிப்புகள் வெளிவரத் தொடங்கி விட்டன.   

ஆகவே, ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு, ஒரு களம் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில், ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய அப்பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி, “பா.ஜ.கவும் ரஜினியும் சேர்ந்து, ‘மோடி ரஜினி’ படம் வெளிவரத் தொடங்கினால், தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.   

அதாவது, ரஜினி - பா.ஜ.க கூட்டணி அமைய வேண்டும் என்று, பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி, அழுத்தம் திருத்தமாகப் பேசிக் கொண்டிருக்கின்ற நேரத்தில்தான், ஆண்டாள் சர்ச்சை பற்றி கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும், அதை வெளியிட்ட ‘தினமணி’ நாளிதழ் வருத்தம் தெரிவித்த பிறகும் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது.   

இப்போது ஆரோக்கியமாகத் தொடங்கிய, ஆண்டாள் பற்றிய கட்டுரைக்கான சர்ச்சையை, பாரதீய ஜனதா கட்சியும், இந்து அமைப்புகளும் அரசியல் சர்ச்சையாக மாற்றி விட்டன என்ற குற்றச்சாட்டு கிளம்பி விட்டது.   
அதனால்தான் பா.ஜ.க மாநில துணைத் தலைவரின் “வைரமுத்து நாக்கை வெட்டினால் பத்து இலட்சம்’ என்ற பேச்சும், பாரதிராஜாவின் “எங்களை ஆயுதம் ஏந்த வைக்காதீர்கள்” என்ற பேச்சும் தீவிரமடைந்திருக்கிறது.   

இதற்கிடையில் சென்னையில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, “தெய்வ நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும்” என்று பேசி விட்டுச் சென்றிருக்கிறார். 

“ஆண்டாள் சர்ச்சையும் அதன் பிறகு நடைபெறும் தொடர் நிகழ்வுகளும் தமிழகத்தில், திராவிடக் கட்சிகளுக்கும் மற்றக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியை, இந்துக்களுக்கும், மற்றவர்களுக்குமான போட்டியாக மாற்றுவதற்கு, வியூகம் வகுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

 ரஜினியின் ஆன்மிக அரசியல் என்ற அறிவிப்புக்குப் பிறகு, நடைபெறும் இந்த வார்த்தைப் போர், வெறுப்புப் பேச்சுகள், தொடர் போராட்டங்கள் எல்லாம் தமிழக அரசியல் களத்தில், இந்துத்துவாவுக்கும் அதற்கு எதிரானவர்களுக்குமான போட்டியாக, ஏற்படுத்தும் வியூகமாகவே தெரிகிறது.   

1970களில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, சேலத்தில் இராமர் சிலைக்கு நேர்ந்த அவமதிப்பை முன் வைத்து, இப்படியொரு முயற்சி நடைபெற்றது.   

அதன்பிறகு, 1998இல் கோவைக் குண்டு வெடிப்பை வைத்து, முயற்சி நடைபெற்றது. அதே மாதிரியொரு முயற்சி, ஆன்மிக வடிவில் இப்போது களத்துக்கு வருகிறது. தன் திரைப்படங்களுக்கு கவி அமைத்துக் கொடுத்த வைரமுத்துவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி, ரஜினி இதுவரை வாய் திறக்காதது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.  

திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக அரசியல் செய்து, தமிழகத்தில் தேர்தல் முடிவுகளில் வெற்றி காண முடியவில்லை என்பதை, மறைந்த மூப்பனார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், கப்டன் விஜயகாந்த் அனைவரும், கடந்த காலத்தில் உணர்ந்து கொண்டார்கள்.  

 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடியே அப்படியொரு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியும் நாடாளுமன்றத் தேர்தல், திராவிடக் கட்சிகளான அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் இடையிலான போட்டியாகவே மாறியது.  

ஏன், 2016இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் களத்தில், பல அணிகள் நின்றாலும், போட்டி என்பது திராவிடக் கட்சிகளுக்கு இடையில் மட்டுமே என்ற நிலை உறுதியானது. அதனால்தான் இப்போது, திராவிடக் கட்சிகள் என்ற வார்த்தையைத் தவிர்த்து விட்டு, ‘மாற்றம் வேண்டும்’, ‘ஆன்மிக அரசியல்’ போன்றவற்றை முன்வைத்து, பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ‘மாற்றம் வேண்டும்’ என்பதும் ‘ஆன்மீக அரசியலும்’ களத்துக்கு வந்த பிறகும் வெளிவரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்னும், களத்தில் போட்டியில் இருக்கும் திராவிடக் கட்சிகளான தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் இருப்பதையே வெளிப்படுத்தி வருகின்றன.   

சமீபத்தில் வெளிவந்த ‘இந்தியா டுடே - கோர்வி’ கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூட, இப்போது தேர்தல் வந்தால் தி.மு.க 130 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க 68 இடங்களில் வெற்றி பெறும் என்றும்தான் கூறப்பட்டுள்ளது.   

ஆன்மிக அரசியலை அறிமுகம் செய்ய விரும்பும் ரஜினிக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது இடம்தான் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ‘ஆண்டாள்’ சர்ச்சை மேலும் பரபரப்பான தொலைக்காட்சி விவாதங்களாகவும் பத்திரிகைச் செய்திகளாகவும் போராட்டங்களாகவும் வெடித்திருக்கிறது.  

 ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் கவிஞர் வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்து, உண்ணவிரதத்தைத் தொடங்கிய ஜீயர், தற்போதைக்கு அதை ஒத்திவைத்து இருந்தாலும், பெப்ரவரி மூன்றாம் திகதிக்குள் வைரமுத்து, ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.   

பெப்ரவரி மூன்றாம் திகதி, கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால், ‘ஆண்டாள்’ சர்ச்சை தொடர்பான போராட்டத்தை, ஜீயர் மீண்டும் தொடரும் வாய்ப்பு இருக்கிறது.   

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஆங்காங்கே கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராகப் போடப்பட்டுள்ள இது தொடர்பான வழக்குகளில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சிலர் நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டலாம். 

அப்படியொரு சூழ்நிலை ஏற்படும் நிலையில், ‘ஆண்டாள்’ சர்ச்சை மேலும் தொடருவதற்கே சாத்தியக்கூறுகள் உள்ளன.ஆனால், இதன் பின்னணி, கிடைத்த சர்ச்சையை வைத்துக் கொண்டு, தமிழகத் தேர்தல் களத்தை, ஆன்மிக அரசியலுக்குத்’ தயார் செய்வதுதான் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X