2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஆப்கானிஸ்தான்: தென்னாசியாவின் புதிய மையப்புள்ளி

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நெருக்கடிகள், புதிய தேவைகளை உருவாக்குகின்றன; புதிய தேவைகள், புதிய பங்காளிகளை உருவாக்குகின்றன; புதிய பங்காளிகள், புதிய திட்டங்களை உருவாக்குகிறார்கள்; புதிய திட்டங்கள், புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றன; மொத்தத்தில், நெருக்கடிகள் பிரச்சினைகளையும் பிரச்சினைகள் நெருக்கடிகளையும் தோற்றுவிக்கின்றன.   

இவ்வாறு, தோற்றுவிக்கப்படுபவைகளில் பெரும்பாலானவை, தேவையின் அடிப்படையில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கடிகள் சில தவிர்க்கவியலாத நடவடிக்கைகளுக்கு வித்திடுகின்றன. அவை வினையை அறுவடை செய்கின்றன.   

கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் போர் குறித்த, தனது புதிய கொள்கைகளை வெளியிட்டார்.  

இராணுவ வீரர்களை, ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறுவதற்கு எந்த காலக்கெடுவும் இன்றி, அமெரிக்கப்படைகள் அந்நாட்டில் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் எனவும், மேலும் 4,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.   

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை, அவசரமாகத் திரும்பப் பெற்றால், அங்கு ஏற்படும் வெற்றிடத்தைப் பயங்கரவாதிகள் நிரப்ப நேரிடும். எனவே, படைகளைத் திருப்பிப் பெறுவது புத்திசாலித்தனமல்ல என டிரம்ப் வாதிட்டார்.   

ஈராக்கில் செய்தது போன்ற தவறைத் தவிர்க்க, ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து படைகளை நீடிக்கச் செய்து, ‘வெற்றிக்குப் போராட’ முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.   

இதேவேளை, இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், “ஆப்கானிஸ்தானின் போர்க்களத்தில், தங்களால் வெற்றி பெற முடியாது என்பதை தலிபான்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சண்டையில் எங்களால் வெற்றி பெற முடியாமல் போகலாம், ஆனால், உங்களாலும் வெற்றி பெற முடியாது. பேச்சுவார்த்தை மூலமே, இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியும்” என்றார். இக்கூற்று இரண்டு விடயங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.   

முதலாவது, தலிபான்களுடன் பேசுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதை, முதன்முறையாக, வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2008 ஆம் ஆண்டுமுதல், அமெரிக்கா மறைமுமாகத் தலிபான்களுடன் பேசிவந்துள்ள போதும், அதை எப்போதும் வெளிப்படையாகச் சொன்னது கிடையாது. அவ்வகையில் இது முக்கியமானது.   

இரண்டாவது, அமெரிக்கா இப்போது ஏற்றுக் கொண்டுள்ள, ‘வெல்ல முடியாத’ ஒரு போரில், மேலதிக படைகளை அனுப்பி, ‘வெற்றிக்குப் போராட’ ட்ரம்ப் ஏன் முயற்சிக்கிறார் என்ற வினா இயல்பானது. இம்முரணை, தென்னாசியா என்ற பரந்த தளத்தில் நோக்க வேண்டும்.   

ட்ரம்ப் முன்மொழிந்துள்ள, ஆப்கான் மீதான கொள்கைகள், ‘தென்னாசியாவில் அமெரிக்க அணுகுமுறைக்கான, ஒருங்கிணைந்த மூலோபாயம்’ என்ற திட்டத்தின் பகுதியாகும்.   
ஊடகங்களில், ‘அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானுக்கான திட்டம்’ என அறியப்பட்ட போதும், இது உண்மையில் மொத்த தென்னாசியாவுக்கான அமெரிக்காவின் திட்டமாகும்.   
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், இத்திட்டத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக அமெரிக்கா, ஆப்கானில் போரிடுகிறது. இன்றுவரை, அப்போரை முடித்துக் கொண்டு வெளியேற முடியவில்லை. இதற்கான காரணங்கள் நோக்கப்பட வேண்டியவை.   

2001இல் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல்களை அடுத்து, தொடங்கப்பட்ட ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம், இன்று 16 ஆண்டுகளின் பின்னரும் தொடர்கிறது.   

இதுவரை, கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கான் யுத்தத்தில், அமெரிக்கா 2,400க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை இழந்துள்ளது. ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல், அமெரிக்கா செலவிட்டுள்ளது.   

இவ்யுத்தத்தில், அதன் அண்டை நாடான, பாகிஸ்தானின் மீது நிகழ்த்தப்பட்ட ‘பயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் படலத்தின்’ பயனாக, ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.    

குறிப்பாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில், முன்னெடுக்கப்பட்ட ஆளில்லா சிறிய விமானங்கள் (ட்ரோன்கள்) மூலமான தாக்குதலில் ஏராளனமானோர் மாண்டுள்ளனர்.   

இருந்தபோதும், ஆப்கானில் தலிபான்கள், முன்பை விட வலிமையாக இருக்கிறார்கள். அதனாலேயே பேச்சு மூலம் தீர்வு என அமெரிக்கா வலியுறுத்துகிறது.   

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆப்கானையும் மத்திய ஆசியாவையும் கொலனியாக்குவதற்கு, சோவியத் ஒன்றியமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் நடத்திய மோதலை, ‘மாபெரும் ஆட்டம்’ (The Great Game) என வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.   

இந்த ஆட்டத்தின், இரண்டாவது கட்டம் ஆப்கான் மீதான, அமெரிக்காவின் போருடன் தொடங்கியது. இதை வெறுமனே ஒரு யுத்தமாகக் கொள்ளவியலாது. இது, அமெரிக்கா முன்னெடுக்கும் இன்றைய மறு கொலனியக்க விரிவாக்கத்தின் ஒருபகுதி.   

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கில் துர்க்மேனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான், தாஜிகிஸ்தான், வடகிழக்கில் சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றால் சூழப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்.   

2001இல் ஆப்கானில் பின்லாடனைத் தேடி, அமெரிக்க இராணுவம் படையெடுப்பதற்கு முன்னரே, மத்திய ஆசிய நாடுகளின் இயற்கை வளங்களை - குறிப்பாக எண்ணெய், எரிவாயுவைத் தேடி அமெரிக்க நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.  

வளைகுடாவுக்கும் மேற்கு சைபீரியாவுக்கும் அடுத்தபடியாக மிக அதிகமான எண்ணெய் இருப்பு, கஜாக்ஸ்தானிலும், துருக்மேனிஸ்தானிலும், அஜர்பைஜானிலும் உள்ளன.   
இந்த மத்திய ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் (66 இலட்சம் கோடி) கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது. இதை ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ கொண்டு செல்வதாயின் அதற்கான எரிவாயுக் குழாய்கள் ரஷ்யாவினூடாகவோ அல்லது ஈரானினுடாகவோ தான் செல்ல முடியும்.   

ஈரானைத் தனிமைப்படுத்துவது சவூதி அரேபியா மற்றும் இஸ் ரேலின் கோரிக்கை. இதையே அமெரிக்கா செய்கிறது. எனவே, ஈரானின் ஊடாக எரிவாய்க் குழாய்கள் சாத்தியமில்லை. சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிந்தைய ரஷ்யா உறுதியற்ற அரசியல் சூழ்நிலையைக் கொண்டுள்ளது. பிரிந்த ஏனைய முன்னாள் சோவியத் நாடுகளின் நிலையும் அதுதான். எனவே மாற்றாக வழியொன்று தேவைப்பட்டது.   

இவ்வாறு, சிக்கலுக்குரிய பல நாடுகளுக்கும் காஸ்பியன் கடலுக்கும் குறுக்கே எண்ணெய்க் குழாய் அமைப்பதை விட, தூரம் குறைந்த, பாதிச் செலவு மட்டுமே ஆகக்கூடிய பாதை ஆப்கான் - பாகிஸ்தான் - அரேபியக்கடல் எனும் குழாய்ப் பாதை முன்மொழியப்பட்டது.   

இப்பாதை மூலம், அரேபியக் கடலிலிருந்து இந்தியாவையும் பிற ஆசிய நாடுகளையும், வளைகுடாவையும் ஐரோப்பாவையும் எளிதாகச் சென்றடைய முடியும். மேலும், பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் கணிசமான அளவு எரிவாயு இருப்பதாக நம்பப்பட்டது. இது அப்பாதையின் தேவையையும் முக்கியத்துவத்தையும் மேலும் அதிகரித்தது.   

இக்குழாய்ப் பாதையை அமைக்கும் திட்டத்தை முன்வைத்தது அமெரிக்காவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ‘யூனோகால்’. இதற்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட அந்நிறுவனம் தயாராக இருந்தது.   

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியமளித்த ‘யூனோகால்’ நிறுவனம்,“ஆப்கானில் அமைதியை நிலைநாட்டாமல் குழாய் பதிக்கும் வேலையை நாங்கள், தொடங்க முடியாது” என்று வலியுறுத்துகிறது.   

ஐரோப்பாவைக் காட்டிலும், ஆசியாவின் எண்ணெய் எரிவாயுச் சந்தைதான், வேகமாக வளர்கிறதென்றும், 2010 ஆம் ஆண்டுக்குள் சந்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறி, அமெரிக்க அரசாங்கத்துக்கு ஆப்கானின் மீதான கட்டுப்பாடு அவசரமானதும் அவசியமானதும் என வலியுறுத்தியது.   

இதேவேளை, இதே ‘யூனோகால்’ நிறுவனம்தான, 1997இல் தலிபான்களை அமெரிக்காவுக்கு அழைத்து, அவர்களுக்கும் அமெரிக்க நிர்வாக உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளையும் ஏற்பாடு செய்திருந்தது.   

ஆப்கான் ஊடாக, எண்ணெய்க் குழாய்களை அமைப்பதற்கான உடன்படிக்கைகள் கிட்டத்தட்ட முடிவாகின. இக்காலப்பகுதியில், ஆப்கான் அரசாங்கத்தின் விருந்தினராகத் தங்கியிருந்த ஒசாமா பின்லாடன், அமெரிக்காவுக்கு எதிரான ஜிகாத்தை அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

தலிபான்கள் காலப்போக்கில், இந்த எண்ணெய்க்குழாய் திட்டத்துடன் உடன்படாதது, தலிபான்களை அகற்றும் போராக மாற்றம் கண்டது. 2001இல் அமெரிக்க ஆக்கிரமிப்பு தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. புதிய ஆட்சியின் பிரதமரான ஹர்மீட் கர்சாய், ‘யூனோகால்’ நிறுவனத்தின் ஆலோசகராவார்.   

இத்தனையையும் செய்து முடித்த அமெரிக்காவால், இறுதிவரை ஆப்கான் - பாகிஸ்தான் - அரேபியக்கடல் குழாய்ப் பாதையை உருவாக்க முடியவில்லை.   

இன்று ட்ரம்ப் முன்மொழிகின்ற ஆப்கானுக்கான அமெரிக்க மூலோபாயம், இந்தக் குழாய்ப் பாதையால் முன்தள்ளப்படுவதல்ல. இப்போது, தேவைகள் மாறிவிட்டன; நெருக்கடிகளும் மாறிவிட்டன.   

ஆப்கானில் உள்ள இயற்கை வளங்களும் அங்குள்ள பல மில்லியன் டொலர் பெறுமதியான ஓப்பியம் சந்தையும் அமெரிக்காவுக்குத் தேவையானவை. அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏயிற்கும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அக்கதை பல பக்கங்கள் நீளக்கூடியது. இவ்விடத்தில் ஆப்கான் தொடர்பான சில தகவல்களை மட்டும் பார்க்கலாம்.   

உலகின் மொத்த ஓப்பியம் உற்பத்தியில் 93 சதவீதம் ஆப்கானில் இருந்தே பெறப்படுகிறது. ஆனால், இன்று அமெரிக்க ஆக்கிரமிப்பில் உள்ள ஆப்கானில் இதை உற்பத்தி செய்வது யார்? இதை வாங்குவது யார்? இதை ஹெரோயின் என்ற போதைப் பொருளாக மாற்றுவது யார்? இதன் ஏற்றுமதிப் பாதைகளைக் கட்டுப்படுத்துவது யார்? இதை விற்பனை செய்வது யார்? இதில் எதிலும் தலிபான்களுக்குப் பங்கில்லை. இப்போது இதைச் செய்வது யார் என்ற வினாவுக்கான விடை துலக்கமானது.   

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகலத்தின் அண்மைய தகவல்களின்படி, ஆப்கானில் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2016 ஆம் ஆண்டு ஓப்பியம் உற்பத்தி, 43 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.    

பயிர்ச்செய்கை நிலப்பரப்பு 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆப்கானின் இன்றைய ஓப்பிய உற்பத்தி அளவுகள், 2001இல் அமெரிக்கா, போர்தொடுத்த காலப்பகுதியின் அளவுகளோடு ஒப்பிடும் போது 25 மடங்கு அதிகரித்துள்ளன.   

இவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஆப்கான் உள்ளபோதே நிகழ்ந்துள்ளன. ஆப்கானில் அமெரிக்காவின் புதிய ஓப்பியப் போர் குறித்த தகவல்களை இத்தாலிய ஊடகவியலாளர் என்ரீக்கோ பியோவெசானா, தனது புதிய புத்தகத்தில் புட்டுப்புட்டுப் வைக்கிறார்.   

ஆப்கானில், ஏராளமான இரும்பு, செப்பு, கோபோல்ட், தங்கம், லித்தியம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பெருமளவில் உள்ளன. அதேவேளை, பல பில்லியன் மதிப்புடைய அமெரிக்காவின் சட்டரீதியற்ற ஹெரோயின் சந்தைக்கு ஆப்கானில் உற்பத்தியாகும் ஓப்பியம் பிரதானமானது.   

இதனாலேயே ட்ரம்ப், தனது புதிய அணுகுமுறை, கருத்தியலாக இருப்பதை விட, நடைமுறைக்கு ஏற்றவிதத்தில் இருக்கும் என்றும் தனது அணுகுமுறை, நாட்டைக் கட்டமைப்பதை விட ‘தீவிரவாதிகளைக் கொல்வது’ குறித்தே, முக்கியத்துவம் செலுத்தும் என்கிறார்.  

இது, வெளிப்படையாக அமெரிக்கா இதுநாள்வரை சொல்லி வந்த ஆப்கானைக் கட்டியெழுப்புவது என்பதிலிருந்து முழுமையாக மாறுபடுகிறது.   

இதுகுறித்து, விளக்கமளித்த ட்ரம்ப், “அமெரிக்கா இனிமேல், ஆயுதப் படைகளின் உதவியோடு தொலைவிலுள்ள நாடுகளில் ஜனநாயகத்தை உருவாக்க முயற்சிக்காது. 

அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவிலிருந்து தொலைவில் உள்ள நாடுகளில், ஜனநாயகத்தை கட்டமைப்பதன் ஊடு, அமெரிக்க பிம்பத்தை நிறுவிய காலம் முடிவுக்கு வந்துள்ளது. இனி, நாம் எமது கூட்டாளிகளின் உதவியுடன் எமது நலன்களைப் பாதுகாப்போம்” என்றார்.   

ட்ரம்ப் முன்மொழிந்திருக்கும் தென்னாசியாவில் அமெரிக்க அணுகுமுறைக்கான ஒருங்கிணைந்த மூலோபாயம் இரண்டு விடயங்களைச் செய்ய விளைகிறது. முதலாவது, ஆப்கானில் உள்ள வளங்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை உறுதி செய்வது. 2007 ஆம் ஆண்டு, பெண்டகன் அறிக்கையானது, ஆப்கான் ‘லித்தியத்துக்கான சவூதி அரேபியா’ ஆவதற்கான முழுத்தகுதியையும் கொண்டது எனக் குறிக்கிறது.   

அமெரிக்கா இப்போது, இவ்வியற்கை வளங்களைக் குறிவைக்கிறது. ஆனால், இன்று ஆப்கானில் இயற்கை வள அகழ்வு, சுரங்க அகழ்வு, எண்ணெய், எண்ணெய் குழாய்த் திட்டங்கள், போக்குவரத்துப் பாதைகள் எனப் பல அபிவிருத்தித் திட்டங்களை, சீனா ஏற்கெனவே முன்னெடுத்துள்ளது.   

ஆப்கானின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டுப் பங்காளிகளாக உள்ளவை சீனா, ரஷ்யா மற்றும் ஈரான். இது, அமெரிக்காவின் விருப்பத்துக்குரியதல்ல. சீனாவைப் பொறுத்தவரை, வரலாற்று ரீதியான ‘வக்ஹான்’ பாதையினூடான தெருப்போக்குவரத்தை உறுதிசெய்வது முக்கியமானது.   

இது, ஆப்கானையும் சீனாவின் சிங்ஜியாங்கின் உய்கூர் சுயாட்சிப் பிரதேசத்தையும் நேரடியாக இணைக்கும். சீன நிறுவனங்கள் ஆப்கானின் செப்பு மற்றும் நிலக்கரிச் சுரங்க அகழ்வுக்கான அனுமதியைப் பெற்றுள்ளன.   

அதேவேளை, சில தசாப்தங்களுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானின் எண்ணெய் அகழ்வுக்கான அனுமதியைப் பெற்ற முதலாவது அந்நிய நாட்டு நிறுவனமாக சீனத் தேசியப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளங்குகிறது.  

 இதேவேளை, ஆப்கானின் உட்கட்டமைப்பு வசதிகளில் சீனா முதலிட்டுள்ளது. சீனா குறிப்பாக நீர்மின்நிலையங்கள், விவசாயம் மற்றும் கட்டடத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையிலான 76 கிலோமீற்றர் நீளமான நேரடிப் பாதை உருவாக்கப்பட்டு, நிறைவுறும் தறுவாயில் உள்ளது.   

இவ்வளவு காலமும் அமெரிக்க இராணுவம் ஆப்கானின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. ஆப்கானின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடையாத நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் ஆப்கானில் முதலிட விரும்பவில்லை.   

இதனாலேயே கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா மறைமுகமாகத் தலிபான்களுடன் பேசுவதன் மூலம், அமெரிக்க நிறுவனங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைந்தது. ஆனால், அது இன்றுவரை பலனளிக்கவில்லை; இப்போது அமெரிக்காவின் நிலை இலவுகாத்த கிளியின் கதை.  

இதனாலேயே இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்து, வன்முறைகளை அதிகரித்து, ஆப்கானில் அமைதியின்மையை ஏற்படுத்துவன் மூலம், சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க, அமெரிக்கா விரும்புகிறது. அதேவேளை, சீனாவை இராணுவ ரீதியாகச் சுற்றிவளைக்கும் தந்திரோபாயத்துக்கு ஆப்கான் பயனுள்ள களமாகும்.   

தென்னாசியாவில், அமெரிக்க அணுகுமுறைக்கான ஒருங்கிணைந்த மூலோபாயம் செய்ய விளைகிற இரண்டாவது விடயம், தென்னாசியாவின் மீதான பூரண கட்டுப்பாட்டை, இந்தியாவின் உதவியுடன் நிறுவுவது.   

அதன் மூலம், சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் குறைப்பது. இதனாலேயே ட்ரம்ப், தனது உரையில், பாகிஸ்தானைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். இதற்கு முன்பு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பலமுறை அவர் கருத்துகளை வெளியிட்டிருந்த போதும், அவை அவரது தனிப்பட்ட கருத்துகள் என ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

“பாகிஸ்தானுக்குப் பல மில்லியன், அமெரிக்க டொலர்களை நாங்கள் அளித்து வரும் நிலையில், நாங்கள் எதிர்த்துப் போராடி வரும் ஆயுதப் போராளிக் குழுக்களுக்கு, அந்த நாடு புகலிடம் அளித்து வருகிறது. நாகரிகம், ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவற்றை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டிய நேரம் இது” என அவர் தெரிவித்திருந்தார்.  

 இதன் மூலம் மீண்டுமொருமுறை, ‘நாகரீகங்களுக்கிடையிலான மோதல்’ என்ற கருத்தோட்டத்தை முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.   

ஆப்கானின் நிலைவரம் தொடர்பில் பாகிஸ்தானைத் தாக்கிப் பேசிய அதேநேரம், இந்தியா, ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய பாத்திரம் வகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்தியா, அமெரிக்காவின் கூட்டாளியாக, ஆப்கானில் வகிக்க வேண்டிய முக்கிய பாகம் குறித்த ஊக்குவிப்பை வழங்கினார்.   

அதற்காக அவர், காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு சார்பான நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்பதாக அறிவித்து, இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தினார்.   

இவ்வளவு காலமும் எவ்வித கட்டுப்பாடுமின்றி, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தனது மண்ணில் அனுமதித்து வந்த பாகிஸ்தானுக்கு, ட்ரம்பின் இவ்வுரை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.   

இதனால், பாகிஸ்தான் உலக அலுவல்களில் சீனாவின் உதவியை நாடுகிறது. சீனாவின் ‘ஒரு வார் ஒரு வழி’ திட்டத்தின் கீழ், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதைத் திட்டம் உட்படப் பல திட்டங்களில் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலாக சீனா பாகிஸ்தானில் முதலீடு செய்துள்ளது.  

இப்போது சீனாவுக்கு எதிர்பலமாக, இந்தியாவைக் கட்டமைக்கும் நோக்கில் செயற்படுகிறது என்பதை ட்ரம்ப் நேரடியாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, இந்தியாவுக்கு மூலோபாய உதவிகளை வகைதொகையின்றி அளித்து வந்துள்ளது.   

குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டுகால பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி) அரசாங்கத்தின் கீழ், இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டணி பண்பு ரீதியிலான ஒரு மாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது.   

தென் சீனக் கடல் மற்றும் வட கொரிய பிரச்சினைகளில் இந்தியா மீண்டும் மீண்டும் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடுகளைஆதரித்து வந்துள்ளது.   

அமெரிக்காவின் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான், அவுஸ்திரேலியா உடன் அதன் இராணுவ-மூலோபாய கூட்டுறவை விரைவுபடுத்தி, அமெரிக்கப் போர்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள் இந்தியத் துறைமுகங்கள் மற்றும் விமானத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு திறந்துவிட்டுள்ளது.  

இவ்விரண்டின் அடிப்படையிலேயே தென்னாசியாவில் அமெரிக்க அணுகுமுறைக்கான ஒருங்கிணைந்த மூலோபாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாகவே ஏனைய தென்னாசிய நாடுகளின் மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் கட்டமைக்கப்படும்.   

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், தென்னாசியாவின் சிறிய நாடுகளின் மீதான இந்தியாவின் கட்டுப்பாட்டை அமெரிக்கா விரும்பியதில்லை. உதாரணமாக, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றின் மீதான அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மோதல் போக்குடையனவாக இருந்து வந்துள்ளன. இனியும் இந்நிலை மாற்றமடையாது. இவையனைத்தையும் கருத்தில் கொண்டே தென்னாசியாவில் அமெரிக்க அணுகுமுறைக்கான ஒருங்கிணைந்த மூலோபாயம் ஆப்கானிஸ்தானை மையப்புள்ளியாகக் கொண்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X