2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆப்கான் தீவிரவாதத்துடன் பேச்சுவார்த்தை

Editorial   / 2019 ஜூலை 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

வரலாற்றின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானின் புவிசார் இருப்பிடம் 1919 வரை பிரித்தானிய சாம்ராஜ்யத்துக்கும், ரஷ்யாவுக்குமிடையில் ஒரு போரியலுக்கான மற்றும் மூலோபாய களமாக இருந்ததுடன், அடுத்த தசாப்தங்களில், இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரப்போட்டி மையமாக இருந்திருந்தது. இதன் காரணமாக, தொடர்ச்சியாகவே, ஆப்கானிஸ்தான் அரசியல் கொந்தளிப்பு மற்றும் வெளிநாட்டு படையெடுப்புகள் வழியாகவே தனது பனிப்போர் அண்டிய காலத்தை கடக்கவேண்டி இருந்தது. இது ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அடிப்படை அடித்தளத்தை பலவீனப்படுத்தியது.

1979 ஆம் ஆண்டு சோவியத் படையெடுப்பு ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர், தீவிரவாதம், சட்டவிரோதம் மற்றும் வறுமை ஆகியவற்றுக்கு பாதை அமைத்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் முன்னேற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், ஐக்கிய அமெரிக்கா “முஜாஹிதீன்” என அழைக்கப்படும் பல ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளித்திருந்ததுடன், முஜாஹிதீனின் ஆயுத எதிர்ப்பு 1989இல் சோவியத் ஒன்றியத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தியது.

சோவியத் ஒன்றியத்தின் இராணுவ திரும்பப் பெறுதல் - மறுமுனையில் முழுமையாக நிறுவப்படாத ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் நிலை, குறித்த நாட்டின் கட்டமைப்பை ஆயுதக் குழுக்களால் நிரப்பவேண்டிய ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. மறுபுறம், சோவியத் ஒன்றியத்தின் விலகல் மற்றும் பனிப்போரின் வெற்றியை தொடர்ந்து அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது வெளிவிவகார கொள்கையை தளர்த்தியிருந்ததுடன், இந்நிலை, ஆப்கானிஸ்தான் அரசியலை மேலும் மோசமடைய செய்திருந்தது. இதன் விளைவாக, ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைப் பிடிக்க வெவ்வேறு ஆயுதக் குழுக்கள் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதங்களை எடுத்ததுதான், அது உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்திருந்தது.

சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தைத் திரும்ப பெற்ற பின்னரும் உள்நாட்டுப் போர் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாகவே இருந்ததுடன், இறுதியில் 1996இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைப் முழுமையாக பிடித்திருந்தனர். தலிபானின் ஆட்சி 2001 வரை நீடித்தது. 9/11 இன் அத்தியாயம் மீண்டும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கான கதவைத் திறந்துடன், ஐக்கிய அமெரிக்காவின் வருகையுடன், நேட்டோ படைகளுக்கு எதிராக ஒரு கெரில்லாப் போரைத் தொடங்க தலிபான்கள் தயாராகி இருந்தனர். நேட்டோ படைகள் மீது மட்டுமல்லாமல், மக்கள் மீதும் பயங்கரவாத தாக்குதல்களை தலிபான் தொடங்கியிருந்தது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் 9/11 ஐ தொடர்ந்து அதிகரிக்கவே, அது ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பை வெகுவாகவே பாதித்தது. மேலும், இந்நிலை பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்பெய்ன் போன்ற பயங்கரவாதத்துக்குகு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றிய நாடுகளின் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாகவே இருந்திருந்தது. கடந்த 17 ஆண்டுகளாக, நேட்டோ படைகள் தலிபான்களை அடக்க முயன்றும் அது செயலற்று போயின. மறுபுறம் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கான ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் அனைத்து இராணுவ உத்திகளும் பயனற்றவை ஆகியதுடன், மாறாக, தொடர்ச்சியாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தமது இருப்பை தக்கவைக்கின்றது.

இராணுவ நடவடிக்கைகளின் தோல்வி, தலிபானுடனான சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதானப் பேச்சுக்கள் போன்ற பிற ஆதாரங்களை வரிசைப்படுத்த அமெரிக்காவை கட்டாயப்படுத்தியது. அமெரிக்காவின் இந்த முன்முயற்சியையும் தலிபான்கள் வரவேற்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான ஒரு தலைவரை நல்லிணக்கத்தை கொண்டுவருவதற்காக தலிபான் தலைவர்களை தொடர்பு கொள்ள 2010 இல் ஒரு அரசியல் சபை நிறுவப்பட்டது.

தொடர்ச்சியாக கட்டாரில் ஐக்கிய அமெரிக்க-தலிபான் சமாதான பேச்சுவார்த்தையில் பின்வரும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று, ஆப்கானிஸ்தானில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் விலகுவது, இரண்டு, ஆப்கானிஸ்தானின் பிரதேசம் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிசெய்கிறது, மூன்று, தலிபான் விரிவான போர்நிறுத்தத்தை மேற்கொள்ளல் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தையை மேற்கொள்ளல். இதையடுத்து ஆப்கானிய அரசாங்கமும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருந்தது. ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் தலிபான் பிரதிநிதிகள் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்றது.

ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தலிபான் - அமெரிக்கா - ஆப்கான் இடையில் நடைபெற்று முடிந்து, ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை கடந்தவாரம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த பேச்சுக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்துக்கான ஐக்கிய அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சல்மே கலீல்சாத், குறித்த பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக முன்னேற்றகரமான ஒன்றாகவே இருக்கின்றது என்றும் இப்பேச்சுவார்த்தையின் பிரகாரம், ஆப்கானிஸ்தானியர்கள் தங்கள் எதிர்கால அரசாங்கத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் உதவுவர் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார். மேலும், பேச்சுக்களில், தேர்தல்கள், கைதிகள் மற்றும் தடுப்புப்பட்டியல் போன்ற பிரச்சினைகள் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் உள்ளது என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையியிலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தான் தாலிபானை நேரடியாக சந்தித்து பாகிஸ்தான் எல்லையில் ஏற்படும் தீவிரவாத ஊடுருவல் மற்றும் நீண்ட கால சமாதானத்துக்கான நகர்வுகளை மேற்கொள்ளல் பற்றி பேசுவார் என இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை, தலிபான் தொடர்பான அண்மைய இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகள், தீவிரவாதத்தை ஒழித்தல் தொடர்பான ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை காட்டுவதாய் உள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .