2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆளுநர் ஆட்சியை நோக்கித் தமிழகம் நகருகிறதா?

எம். காசிநாதன்   / 2017 நவம்பர் 20 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் தமிழகத்தில் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.   

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கோவை மாநகரிலும் திருப்பூரிலும் திடீரென்று ஆய்வு செய்தார். அரசாங்க அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்தினார். அதில் அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றனர்.   

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கோட்டையில் இருக்கும் போது, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநர், ராஜ்பவனிலிருந்து ஆட்சி நிர்வாகத்தைக் கவனிக்கிறார் என்ற தோற்றம் மட்டுமல்ல, பகிரங்கக் குற்றச்சாட்டும் தொடங்கியிருக்கிறது.   

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், “மாநில சுயாட்சிக்கு விரோதமான ஆய்வு இது” என்று எதிர்த்துள்ளார்கள். மற்ற எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்து இருக்கின்றன.   

ஆனால், வழக்கத்துக்கு மாறாக, எதிர்க்க வேண்டிய ஆளும் அ.தி.மு.கவின் அமைச்சர்கள், “ஆளுநர் ஆய்வு செய்ததில் தவறில்லை” என்று ஒவ்வொருவராகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.  

மூத்த அமைச்சர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன், “டேக் இட் ஈசி” என்றே பேட்டியளித்துள்ளார்.  

இது போன்ற ஆய்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்கள் உள்ள மாநிலமாக, தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்குகிறது.   

மாநில சுயாட்சிக்காக, முதன் முதலில் குரல் கொடுத்து, ‘ராஜமன்னார் குழு’ அமைத்து, மத்திய - மாநில அரசாங்கங்களின் உறவுகள் குறித்து, விரிவான அறிக்கையைத் தயார் செய்த கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம்.   

அதன் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, சுதந்திர தினத்தன்று, மாநிலத்தில் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றார். இன்றைக்கும் அனைத்து முதலமைச்சர்களும், தங்களது மாநிலத்தில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றுகிறார்கள் என்றால், அதற்கு தி.மு.கவின் மாநில உரிமைக் கோரிக்கைதான் காரணம்.  

‘ஆட்டுக்குத் தாடி போல், நாட்டுக்கு ஆளுநர் தேவையா?’ என்பதுதான் தி.மு.கவின் முழக்கம். அந்த அடிப்படையில்தான் அரசியல் சட்டம் 356 ஆவது பிரிவில் இருக்கும், மாநில அரசாங்கங்களைக் கலைக்கும், மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை தி.மு.க கடுமையாக எதிர்த்து வருகிறது.  

மாநில சுயாட்சிக் கொள்கையை எம்.ஜி.ஆர், அ.தி.மு.கவைத் தோற்றுவித்த பிறகும், அவர் ஆட்சியிலிருந்த போதும்கூட, விட்டுக் கொடுக்கவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், மாநில உரிமைகளுக்காக, மத்திய அரசாங்கத்துடன் பெரும் போர்க்களத்தையே நடத்திக் காட்டியிருக்கிறார்.   

“ஆளுநர் நியமனத்தில் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மாநில அரசாங்கத்தின் உரிமையைப் பாதிக்கும் என்று கருதி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டம் போன்றவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்தார்.   

ஏன், ஆளுநர் நியமன விவகாரத்தில் தன்னைக் கலந்தாலோசிக்கவில்லை என்பதை நிரூபிக்க, ஒருமுறை மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீலுக்கும், தனக்கும் இடையிலான உரையாடலையே வெளியிட்டார்.   

இன்னும் ஒரு கட்டத்தில், தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, மாநில நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று கூறி, “ஆளுநரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினார்.   

அதுமட்டுமின்றி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற, இது போன்ற ஆளுநரின் ஆய்வைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை வலுவாகவே எதிர்த்து வந்தார்கள். இதனாலேயே மத்திய அரசாங்கங்களுடன் மூன்று பேருக்குமே வெவ்வேறு காலகட்டங்களில் மோதல் போக்கு ஏற்பட்டது.   

கருணாநிதி இருமுறையும், எம்.ஜி.ஆர் ஒரு முறையும் அதற்காகத் தங்கள் ஆட்சியை இழக்க வேண்டியநிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது இருக்கின்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தமிழக ஆளுநரின் ஆய்வு பற்றி வாய் திறக்கவில்லை.   

இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில், மௌனமாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார் போலவே தெரிகிறது.  

அதேநேரத்தில், மாநில பா.ஜ.க சார்பில், ஆளுநர் ஆய்வுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது போன்ற வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “மக்களின் நலன் கருதி, ஆளுநர் செய்யும் ஆய்வை, அமைச்சர்களே ஆதரிக்கும் போது, எதிர்கட்சிகள் ஏன் இதில் அரசியல் செய்ய வேண்டும்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.   

இந்தக் கேள்வியில் உள்ள ஆழம் என்னவென்றால், ஆளும் அ.தி.மு.க அரசாங்கம், இதுபோன்ற ஆளுநரின் ஆய்வுகளை மனதார ஒப்புக் கொள்கிறது; அல்லது இதையெல்லாம் எதிர்க்கும் ஓர் அரசாங்கமாக, மாநில அரசாங்கம் இல்லை என்ற கருத்துகள்தான் தமிழிசையின் கேள்வியில் எதிரொலிக்கின்றன. ஆகவே, ஆளுநர் ஆய்வு விடயத்தில், ஆளும் அ.தி.மு.க அமைச்சர்களும் பா.ஜ.கவும் ஒரே பக்கத்தில் இருக்கின்றன.  

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், இந்தியாவில் ஆளுநர் பதவி என்பது ஒரு நியமன பதவிதான்.   

ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, நடைபெற்ற விவாதத்தில், ஜவஹர்லால் நேரு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள், “ஆளுநரை தேர்ந்தெடுக்கத் தேவையில்லை; நியமித்தால் போதும்” என்றே முடிவு செய்தார்கள்.   

அதற்கு முதல் காரணம், ஆளுநருக்கு எந்த விதத்திலும் மாநில நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதும், ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுத்தால், ஏற்கெனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் தேவையில்லாத மோதல் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதும் இன்னொரு காரணமாகும்.   

ஆகவேதான், மாநில ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரங்கள், தெளிவாக அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், அவருக்கு உள்ள விருப்ப அதிகாரங்கள் எது என்பது கூட விளக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, பதவியிருக்கும் போது, மாவட்ட அளவில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது சரியானதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  

பொதுவாக இது போன்ற சர்ச்சைகள், மத்தியில் ஆளும் கட்சியும் மாநிலத்தில் ஆளும் கட்சியும் வெவ்வேறாக இருந்தால்தான் வரும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், அந்த மாநிலங்களில் தனியாக அதிகாரிகளை அழைத்து, மாவட்ட அளவில் ஆய்வு செய்வதாக எந்தச் செய்தியும் இல்லை.   

ஆகவே, தமிழகத்தில் நடைபெறும் ஆளுநரின் ஆய்வு, சற்று வித்தியாசமானதாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான், மாநில சுயாட்சிக் கொள்கை பற்றிய நினைப்பு மீண்டும் 50 வருடங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.   

தமிழகம் கண்ட ஆளுநர்களில் கே.கே.ஷா, சென்னா ரெட்டி ஆகியோர் மட்டுமே, இதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சியுடன் மல்லுக்கு நின்றார்கள். அதன்பிறகு இப்போதுதான், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்று தொடங்கி, இங்குள்ள ஆளும் கட்சிக்குப் போட்டியாகக் களத்தில் குதித்திருக்கிறார்.  

கே.கே.ஷா மற்றும் சென்னா ரெட்டி ஆகியோர் ஆளுநர்களாகப் பதவி வகித்தபோது, அப்போது முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்த்தார்கள். இன்று முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆய்வை எதிர்க்கவில்லை.  

ஆனால், ஆளுநர் ஆய்வு இத்துடன் நிற்கப் போவதில்லை. இப்போது ஆளுநரின் செயலாளராக இருப்பவர் மாற்றப்பட்டு, முன்னாள் உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால், தமிழக ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  

இந்த நடவடிக்கை, தமிழக அரசாங்கத்தின் நிர்வாகத்தில் முழுக் கவனம் செலுத்த ஒரு செயலாளர் தேவை என்று ஆளுநர் கருதுகிறார் என்றே தெரிகிறது.   

சட்டமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக தொடங்கியிருக்கின்ற நிலையில், ஆளுநர் ஆய்வு, புதிய செயலாளர் என்று ஆளுநர் மாளிகையாக இருக்கும் ‘ராஜ்பவன்’ புதிய உத்வேகம் பெறுகிறது.   

ஏற்கெனவே மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான நல்லக்கண்ணு போன்றோர், “தமிழகத்தில் ஏற்கெனவே பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது” என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கும் வகையில், இப்போது ராஜ்பவனும் பலம் பெற்று வருவது, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

தற்போதுள்ள அரசாங்கம், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால், இதே ஆட்சி தொடருமா அல்லது ஆளுநர் ஆட்சியை நோக்கித் தமிழகம் நகருகிறதா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் ஏற்பட்டு இருக்கிறது.   

அவற்றுக்கு எல்லாம், இப்போது, முதல் சுற்றில் நிகழ்ந்துள்ள ஆளுநர் ஆய்வு உரம் சேர்த்திருக்கிறது என்பதே தற்போதுள்ள நிலைமை. ஆனால், ‘முதல்வர் - ஆளுநர் மோதல்’ எதுவும் இல்லாமல் தமிழகத்தில் இந்த மாற்றம் உருவாகியிருப்பது, இந்திய மாநிலங்களில் முதல் உதாரணம் மட்டுமல்ல; முத்தாய்ப்பான சிறப்பம்சமாகவும் இருக்கிறது.  

இதில் விலை போனது, 50 வருடங்களுக்கும் மேலாகத் தமிழகத்தில் எழுப்பப்பட்டு வரும் ‘மாநில சுயாட்சி’க் குரல்தான்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .