2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆளுமை மிக்க தலைமையைத் தேடும் அ.தி.மு.க

எம். காசிநாதன்   / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘இரத்தத்தின் இரத்தங்களே’ என்பது மறைந்த எம்.ஜி.ஆரின் ‘காந்தச் சொற்கள்’. ‘உடன்பிறப்புகளே’ என்பது கலைஞர் கருணாநிதியின் கரகரப்புக் குரல். ஆனால் உணர்ச்சி பூர்வமான இரு ‘குரல்களும்’ இப்போது தமிழக மக்களுக்குக் கேட்கவில்லை.

ஆகவே, புதிய பரிணாமத்தை நோக்கி, திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ‘அதிவிரைவு’ ரயில் போல் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அறுபது ஆண்டு சட்டமன்ற பணிகள் நிறைவு விழா; தி.மு.க ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் பொன் விழா; அ.தி.மு.க தொடங்கி 46 ஆவது ஆண்டு விழா.

இவ்வாறு 100 ஆண்டு கண்ட திராவிட இயக்கத்துக்கு, தமிழக மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டாலும் இன்றைக்கு தி.மு.கவை விட, ஆளுமை மிக்க தலைமை எங்கே என்ற தவிப்பில் இருக்கிறது அ.தி.மு.க.

முதலமைச்சர் பதவியிலிருக்கும் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து, அந்த ஆளுமை மிக்க தலைமையை, அ.தி.மு.கவுக்குக் கொடுத்து விட முயன்றாலும், அவர்களுக்குள் உள்ள பனிப்போர் அதற்கு இடம் கொடுக்கும் விதத்தில் இல்லை. 

பிரதமர் நரேந்திரமோடியைத் திடீரென்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்று சந்தித்ததில் ‘அரசியல் இல்லை’ என்று அவர் சொன்னாலும் சரி, பிரதமரே சொன்னாலும் சரி, தமிழகத்தில் யாரும் நம்பத் தயாராக இல்லை. 

ஏனென்றால், அந்த அளவுக்கு ஓ. பன்னீர்செல்வம், பிரதமருக்கு நெருக்கமானவர் என்ற கருத்துருவாக்கம், தமிழகத்தில் ஓ.பி.எஸ் அணியும் செய்து விட்டது; தமிழக பா.ஜ.க தலைவர்களும் செய்து விட்டார்கள். 

இந்த நெருக்கத்தை உடைத்து, உள்ளே நுழைவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகள், இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதே ‘எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம்’ இணைப்பில் வெளிப்பட்டது. 

ஆனால், இந்த இணைப்புக்குப்  பிறகும் இரு தரப்புக்கும் உள்ள ‘பனிப்போர்’ இன்னும் மறைந்ததாகத் தெரியவில்லை. 

இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை, தேர்தல் ஆணையகம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், திடீரென்று ஓ. பன்னீர்செல்வத்துடன் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனிசாமி, ‘அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு உறுப்பினர்கள் மத்தியில் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று தாக்கல் செய்திருக்கும் மனுவும் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட புரோகித், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய பிறகு, தமிழக துணை முதல்வராக இருக்கும் 
ஓ. பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்தித்ததும், ‘இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்’ இடையில் உள்ள தீராத பனிப்போரின் விளைவே என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

அதற்கு உதாரணமாக, கட்சி இணைப்பில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு இன்னும் மற்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை; துணை முதலமைச்சர் கலந்துகொள்ளும் பொது நிகழ்வுகள், பத்திரிக்கைச் செய்திகள் தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிடப்படுவதில்லை;  ஆளுநர் பதவியேற்பு விழாவின் போது துணை முதல்வருக்கு மேடையில் இருக்கை அளிக்கப்படவில்லை என்று பல்வேறு தொடர் பிணக்குகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

இந்தப் பிணக்குகளுக்கு எல்லாம் ‘கணக்குத் தீர்க்கவே’ துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தார் என்று டெல்லி அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களே கருதுகிறார்கள்.

அதே நேரத்தில், ‘ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று தி.மு.க சார்பிலும் டி.டி.வி தினகரன் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தங்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் இருக்கும் முக்கியத்துவத்தை மேலும் குறைத்து விடும் என்றே ஓ. பி.எஸ் அணியினர் நினைக்கிறார்கள். 

இந்த வழக்கால் ஒ.பி.எஸ்ஸின் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து வந்தாலும், நமக்கு ஒன்றும் பிரச்சினையில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார் என்று ஓ.பி.எஸ் அணி உறுதியாக நம்புகிறது. 

அதனால்தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அந்தத் தகுதி நீக்க வழக்கை, உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று திடீர் கோரிக்கையை ஓ.பி.எஸ் அணி முன்வைத்திருக்கிறது. 

பிரதமரைச் சந்தித்து விட்டு, சென்னை திரும்பிய பிறகு ஓ. பி.எஸ் அணி சார்பில் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரின் ‘பனிப்போரும்’ இப்படியிருக்க, பரோலில் வந்த சசிகலா எதிர்பார்த்தது போலவே, ஆளும் கட்சிக்கு எந்த வித பெரிய சறுக்கலையும் ஏற்படுத்த முடியாமல் பெங்களூர் சிறைக்குச் சென்றிருக்கிறார். 

அவரது கணவர் நடராஜனை, மருத்துவமனையில் சந்தித்து ஐந்து நாளும் பேசிய சசிகலா, அ.தி.மு.கவின் உட்கட்சி அரசியல் பற்றிய விவாதத்தை டி.டி.வி தினகரன் அணியுடன் நிறுத்திக் கொண்டார். 

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் யாருடனும் பேசும் சூழலை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தன் எதிர்கால பரோல் விடுதலைக்கு அது ஆபத்தாக முடிந்து விடலாம் என்பதால் பெங்களூர் சிறைத் துறை நிர்வாகம் அவருக்கு விதித்த நிபந்தனைகளை அப்படியே கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

சசிகலா ‘பரோல்’ எவ்வித பயனும் அளிக்காத நிலையில், மீண்டும் டி.டி.வி தினகரனின், ‘எடப்பாடி பழனிசாமியின் துரோக ஆட்சி’ என்று சகட்டு மேனிக்குக் கண்டனம் செய்து, வருகின்ற டிசெம்பர் மாதத்துக்குள் எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று போகிற இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். 

18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் வழக்கு நவம்பர் இரண்டாம் திகதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தினகரனின் சபதம் எப்படி நிறைவேறப் போகிறது என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கிறது.

சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, தினகரனை ஆதரித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்துக்கும், தடை விதிக்கப்பட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சட்டமன்றத்தில் சிக்கல் எழும் வாய்ப்பு ஏற்படும். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி  அளிக்கும் தீர்ப்பு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை இரு தரப்புக்குமே கொடுக்கும் என்பதால், சட்டமன்ற வாக்கெடுப்பு என்பது இப்போதைக்குச் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. 

ஆகவே, எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் தினகரன் கூறும் ‘ஸ்லீப்பர் செல்கள்’ வேலை செய்யாதவரை. இந்த ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று டி.டி.வி தினகரன் நினைப்பது, குதிரைக் கொம்பாகவே இருக்கும் என்று கருதலாம். 

ஆகவே, அ.தி.மு.கவின் 46 ஆவது வருடம் அ.தி.மு.க என்ற கட்சிக்கும், அந்தக் கட்சி தலைமை தாங்கும் ஆட்சிக்கும் சவால்கள் நிறைந்த வருடமாக இருக்கிறது. 

முன்பு 1988இல் இது போன்ற பிரச்சினை எழுந்த போது, அ.தி.மு.கவுக்கு வயது 16. அந்த இளம் பருவத்தில் இருந்த அ.தி.மு.கவை மீட்டு எடுக்க, தமிழக மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து, திரையுல பிரபல்யத்தைப் பெற்ற மறைந்த ஜெயலலிதாவால் காப்பாற்ற முடிந்தது. 

அதன் பிறகு அவரது தலைமையில், அ.தி.மு.க இருமுறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து, தமிழக அரசியலில் சரித்திரம் படைத்தது. 

ஆனால், இப்போது அ.தி.மு.கவுக்குள் ‘இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்’ அணி, ‘டி.டி.வி தினகரன் அணி’ என்று இரு அணிகள் பிளவுபட்டு நிற்கின்ற இந்த 46 ஆவது வயதில், அ.தி.மு.கவைக் காப்பாற்றி, மீட்டு எடுக்க, அன்று ஜெயலலிதாவுக்கு இருந்தது போன்ற ‘வெகுஜனப் பிரபல்யத் தலைமை’ இப்போது அ.தி.மு.கவுக்கு இல்லை.

 இதைப் பயன்படுத்தி, பாரதீய ஜனதா கட்சியை தமிழகத்தில் வளர்த்து விட முடியுமா என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழகத்தில் நடக்கும் இத்தனை அரசியல் விளையாட்டுகளையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.

 அதேநேரத்தில், சசிகலாவை எதிர்த்து முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு, ‘தர்மயுத்தம்’ நடத்தி, மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்த பிறகு, அதை இழந்து விட்டார். 

ஆகவே, இன்றைய நிலையில், வீழ்ச்சிப் பாதையிலிருந்து அ.தி.மு.கவை மீட்டு எடுக்க, இப்போது பிளவு பட்டு நிற்கின்ற எந்த அணியாலும் முடியாது என்பதே எதார்த்தமான நிலைமை. 

அதேநேரத்தில், அ.தி.மு.க தொண்டர்கள், அக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் ‘பீனிக்ஸ் பறவைகள்’ போல் என்று தமிழக அரசியல் பார்வையாளர்கள் கூறுவது உண்டு.

 ‘தலைமை’ என்றைக்குக் கிடைக்கிறதோ, அன்றைக்கு அத்தனை தொண்டர்களும் அந்தத் தலைமையின் கீழ், உருண்டோடி வந்து விடுவார்கள் என்பதே அந்தக் கணிப்பு. 

ஆகவே, 46 ஆவது தொடக்க ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் அ.தி.மு.கவுக்கு  இன்றைய உடனடித் தேவை, அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லும் ஒரு தலைமையாகும். 

அந்தத் தலைமை யார்? இக்கேள்விக்கான விடையை எதிர்நோக்கி அ.தி.மு.கவின் 46 ஆவது ஆண்டின் பயணம் அமையப் போகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .