2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இது மோசமான காலம்

Editorial   / 2020 பெப்ரவரி 20 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன் 

தமிழ் தேசிய இனத்துக்கு மிக மிக மோசமானதொரு காலச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு, வடக்கிலும் கிழக்கிலும் புதிய புதிய அரசியல் கட்சிகள், உதயமாகிக் கொண்டிருக்கின்றன.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்த சூழ்நிலையை விட, இன்றைய சூழலில், வடக்கு வாதம், கிழக்கு வாதம், சாதி வாதம், மதவாதம், பிரதேசவாதம் போன்ற பூதங்கள் கிளம்பியுள்ளன.  

இம்முறை, கிழக்கில் தேர்தல் வியூகம், தமிழ்ப் பிரதேசங்களில் சூடுபிடித்துள்ளன. தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றப் போவதாக, ஏட்டிக்கு போட்டியாகப் பீற்றப்படுகின்றது.  

ஐக்கியம், ஒற்றுமை பற்றி பேசினாலும், அதற்கான சூழல் இதுவரை கனியவில்லை. கண்ணியமும் செயற்றிறனும் உள்ளவர்களைப் புறந்தள்ளி, பணபலமும் காடைத்தனமும் உள்ளவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தேறுகின்றன.   

அத்துடன், நாடாளுமன்ற ஆசனம் கேட்டு, கட்சிக் காரியாலயங்கள் தோறும் ஏறியிறங்கும் நபர்களின் எண்ணிக்கையும் என்றும் இல்லாதளவு அதிகரித்துள்ளது. அரசு அதிகாரிகளாகப் பணியாற்றியவர்களுக்கு, ஓய்வுக்குப் பின்னர், உழைப்பதற்கு அரசியல் இருக்கிறது என்ற எண்ணம், துளிர்விட வைக்கப்பட்டுள்ளது.   

 அரசு பதவிகளில் வலம் வரும்போது, மக்களை கவனிக்காத இவர்கள், தேர்தலில் வென்றா மக்களைக் கவனிக்கப் போகின்றார்கள்?   

அயல் வீட்டுக்காரருடன் கூடப் பேசாதவர்கள், தேர்தலில் எவ்வாறு வேட்பாளராகி, பிரசாரங்களில் ஈடுபட்டு,  மக்களை வெல்லப்போகிறார்கள். இந்தச் சிந்தனை கூட, இப்படிப்பட்டவர்களுக்கு ஆசனம் கொடுக்கும், கொடுக்கப்போகும் கட்சிகளுக்கும், போட்டியிட துடிக்கும் நபர்களுக்கும் கூட இல்லை. 

இந்த நிலைமையில், இன்றைய சூழலில், வாக்கா, பணமா என்று எடுத்துக் கொண்டால், காசுதான் முக்கியம் எனக் கட்சிகள் நினைக்கின்றன. தலைமைகள் இவ்வாறு எண்ணினால்,  தமிழர்களின் அரசியல் பலம் நிலைநிறுத்தப்படுமா என்ற வினா, பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

காசைக் கொடுத்து, கட்சியை வாங்கியவர்கள், காசைக் கொடுத்து வாக்கையும் வாங்கி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்துடன் உழல்கிறார்கள். 

அப்படியானால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ‘ஒரே உழைப்புதான்’ என்ற அரசியல் அத்தியாயம், கிழக்கில் ஆரம்பமாகி இருக்கிறது என்றுதான் கொள்ள முடியும். 

உண்மையில், தமிழர் உரிமை, தியாகம் பற்றிப் பேசுபவர்கள், தமிழர்களின் அபிலாசைகளைப் பற்றிச் சிந்திப்பவர்கள், மக்கள் ஆதரவுள்ளவர்களைத் தவிர்த்து வருவதன் மூலம், வாக்கு பலத்தை இழக்கும் ஒரு சூழலும் உருவாகிவருகிறது. 

அரசியல் நிலைமைகளில் ‘அரிவரி’கூடத் தெரியாதவர்களை, தேசிய அரசியல், சாணக்கிய அரசியலுக்குக் கொண்டு வரும் முடிவுகள் மூலம், தமிழர் அரசியல் நிலைமைகளில் கூட்டமைப்பு சாதிக்கக் கூடியது என்ன?

இத்தகைய நிலைமைகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், வாக்கு பலமும் மக்கள் ஆதரவும் அரசியல் தெளிவும் உள்ளவர்களைத் தேர்தலில் நிறுத்துவதே புத்திசாலித்தனமானது.

மேலும், கல்வியறிவு அற்றவர்களைவிடக் கல்விமான்களைத் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்ற கடப்பாடுகள் மூலம், கடந்த காலத்தில் படித்தவர்களை, கல்விமான்களைக் களமிறக்கி, கூட்டமைப்பு இதுவரை கண்ட பயன் என்ன? 

ஒருவர் கட்சி மாறினார்; மற்றொருவர் விமர்சனத்துக்கு உள்ளானார். இதே நேரத்தில், இளைஞர்கள், பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்த அழுத்தங்கள், எவ்வாறான பிரதிபலிப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்தும் என்பது தெரியாமலேயே இருக்கிறது. இவற்றையெல்லாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொருட்படுத்துமா என்பதும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். 

வெட்டுக்கும் குத்துக்கும் குறுக்கு வழிகளுக்கும் பழக்கப்பட்டவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வேட்பாளர்களாகித் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலைமையில், மாற்றம் ஏற்படுத்தப்படுவது முக்கியமாகும். 

இவ்வாறான சூழலில், தமிழர்களுக்குக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சி தேவையா என்ற வினா, மக்களிடம் எழாமல் இல்லை. தேர்தல் என்றவுடன் உரிமை, சலுகை பற்றிப் பேசுவோர், தேர்தலின் பின் உரிமையை மறந்து விடுகின்றனர். 

இதனால் மக்களுக்கு, உரிமையும் இல்லை; சலுகையும் இல்லை. எனவே, மக்களின் விரக்தி நிலை அதிகரித்துவரும் சூழலில், இன்று மக்கள் சார்பாக எத்தகைய வேலைத் திட்டங்களை இவர்கள் இம்முறை தேர்தலில் முன் வைக்கப் போகிறார்கள். 

தமிழ்த் தேசிய அரசியலில், ஜெனீவா தாக்கம் செலுத்தக்கூடிய பேசுபொருளாக இருக்கும். அதைத்தவிர, ‘வாய்க்கரிசி’ இல்லை. 

மற்றவர்களுக்கு வறுத்தெடுக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருக்கிறது. இறுதிக்கட்டத்தில், கிழக்கில் இனவாதம் கைகொடுக்க இருக்கிறது. எனவே, தேர்தல் பிரசாரம் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள, ஆழமாகச் சிந்திக்கவோ ஏதுமில்லை. 

வீடு தேடி வாக்குக் கேட்டதற்கு மக்களும் வாக்களிப்பர். ஆயினும், இம்முறை வாக்களிப்பு சதவீதம் கிழக்கில் பெரிவீச்சாக இருக்கும் என்று சொல்லமுடியாது. 

கல்முனை பிரதேச செயலக விவகாரம், யாரால் தீர்த்து வைக்கப்படுகிறதோ, அவரைத்தான் தேர்தலில் மக்கள் ஆதரிக்கப் போவதாக அடித்துச் சொல்கிறார்கள். 

தேர்தல் வெற்றியைச் சுவைக்க விரும்பும் தமிழ்ப் பிரதிநிதி யாராக இருந்தாலும், கல்முனை விவகாரத்தைத் தீர்த்தால், மக்கள் தீர்ப்பின்படி அவருக்கு ஐந்தாண்டுகள்  ராஜயோகம்தான். 

இந்தவகையில், திருகோணமலை சூழலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு ‘காய் வெட்டி’ நகர்த்தப் போகிறது. 

இம்முறை தேர்தலில், தனிச் சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், தமிழர் அரசியலின் சாபக்கேடு, குறிக்கோள் இன்றி, கொள்கை இன்றி, தட்டுத்தடுமாறித் தவிக்கிறது. இந்தச் சூழல், தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் தமிழ் மக்களின் மனங்களில், கவலையைத் தோற்றுவித்துள்ளது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பு, மாற்றுக் கட்சிகள் என, மட்டக்களப்பில் பத்துக்கு மேற்பட்ட கட்சிகள், நான்கு சுயேட்சைக் குழுக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளன. 

இருந்தபோதும், மாற்றுக் கட்சிகள் சில வேளைகளில் ஒரு கூட்டாக அல்லது மூன்று கூறுகளாகப் போட்டியிடும் சூழல் உள்ளது. 

ஒரே கூட்டாகப் போட்டியிட்டால், மட்டக்களப்பில் இம்முறை கூட்டமைப்பு, இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெறக்கூடிய சூழலுக்கு பின் தள்ளப்படும். இதன் மூலம், நான்கு  ஆசனங்களைப் பெறும் என்ற ‘கணக்காளர்’களின் கணக்குப் பிழைத்துப் போகும். 

அதேவேளை, கூட்டமைப்பின் மீதான அதிருப்தி, கிழக்கு வாதம் இவை இணைந்த மாற்று அணி, ஓரணியில் இருப்பின், ஓர் ஆசனத்தையும் முஸ்லிம் கட்சிகள் இரண்டு ஆசனங்களையும் பெறும் சூழல் உருவாகும். 

இத்தகைய சூழ்நிலைமைகளால்,  கூட்டமைப்பு பலத்த போட்டி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். 

இம்முறை, கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் திருப்திதரும் வகையில் அமைந்திருக்கவில்லை எனக்   கருத்தாளர்கள் மதிப்பிடுகின்றார்கள். 

இதன் காரணமாகத் தற்போது, களத்தில் இருக்கும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளான  சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோர், கடந்த தேர்தலை விட, வாக்கு சரிவைக் கணிசமான அளவில் அனுபவிப்பர் என்றே தெரிகிறது. 

எனவே, விழுந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த, கூட்டமைப்பு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதனை மறுவடிவில் சொன்னால், கடந்த காலங்களில் மக்கள் ஆதரவு பெற்று, அதிக வாக்குகளைப் பெற்ற நபர்களைக் களத்தில் இறக்கி விட்டால், கூட்டமைப்பு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும்.

எனவே, கூட்டமைப்பு தந்திரோபாயமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள், தமிழ்த் தேசியம் பேசிப்பேசி, கடந்த 72 ஆண்டு காலமாக, அரசியல் அநாதைகளாக இருக்கின்றனர். 

இந்த விரக்தி உணர்வும் நம்பிக்கை இழப்புகளும் எதிர்காலத்தில் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு இசைந்து போகும் சிந்தனையைத் தூண்டுவதாகவே அமையும். 

இந்த மோசமான காலச் சூழ்நிலையை, சரியான கைங்கரியத்துடன் நகர்த்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்கிற தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் கூட்டு சிந்தித்து, நடவடிக்கைகளை முன்னெடுப்பது முக்கியம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .