2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்?

Gopikrishna Kanagalingam   / 2018 நவம்பர் 01 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில் எங்குள்ளனர் என்பது தான், இப்போதிருக்கின்ற கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அதிகம் பாதிக்கப்படும் பிரிவினராக, தமிழ் மக்களே இருப்பார்கள் என்று கருதப்படும் நிலையில், தற்போதைய அரசியல் கலந்துரையாடலில், அவர்கள் 
எங்கே என்ற கேள்வி முக்கியமானது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்நெருக்கடி தொடர்பாக ஆற்றிய உரையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில், கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில், ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கையின் “மேட்டுக்குடி”யின் ஓர் அங்கம் என்ற வகையில், அவர் விமர்சித்திருந்தார். அவ்விமர்சனம் உண்மையானதோ, இல்லையோ என்பது ஒரு பக்கமாகவிருக்க, இலங்கையின் அரசியல் கலந்துரையாடலைத் தீர்மானிப்பவர்களாக, கொழும்பின் “லிபரல்கள்” தான் இருக்கிறார்கள் என்பது உண்மையானது.  

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் இயங்கிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இவ்வளவு அதிகமான சபைகளைக் கைப்பற்றுமென, கொழும்பின் அரசியல் கலந்துரையாடல்கள் எதிர்வுகூறியிருக்கவில்லை; இதே கொழும்பின் உயர்குடிப் பிரிவினரின் கலந்துரையாடல்களில், நல்லவராகக் காட்டப்பட்ட மைத்திரிபால சிறிசேன, தனது “எதிரியான” மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைவார் என்ற விடயமும், கேலியாக நிராகரிக்கப்பட்டது. இவை இரண்டுமே நடந்திருக்கின்றன.  

இப்போது, மைத்திரிபாலவும் மஹிந்தவும் இணைந்திருக்கின்ற போது, “போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவரோடு சிறிசேன இணைவதா?” என்று, கூக்குரலெழுப்புகிறார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இப்போது ஏற்பட்ட இந்த மாற்றம், பெரிதளவுக்கு ஆச்சரியம் தருவதாக அமைந்திருக்கவில்லை.  

சில விடயங்களை, கொழும்பின் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏற்பதில்லை. மஹிந்தவின் காலப்பகுதியில், போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்றால், அப்போது மஹிந்தவின் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அவரின் அமைச்சரவையில் சிரேஷ்ட அமைச்சராகவும் இருந்த மைத்திரிபாலவும், அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியவர் தான். அதிலும், அதிகளவு மக்கள் கொல்லப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், மைத்திரிபால பணியாற்றியிருந்தார். 
அதேபோல், மஹிந்தவை எதிர்க்கும் பலரும், இறுதிக்கட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பங்கைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை. “இராணுவத்துக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை” என்று, இறுதிக் கட்டத்தில் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்திருந்தாலும், மக்களுக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்ற விடயத்துக்காக, போதுமான எதிர்ப்பை வழங்கியிருக்கவில்லை. அதேபோல், இறுதிக்கட்ட யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஐ.தே.கவிலேயே இப்போது இருக்கிறார்.  

எனவே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில், மஹிந்தவை மாத்திரம் இலக்குவைப்பது, கொழும்பின் செயற்பாட்டாளர்களுக்குப் பொருத்தமானதாகத் தெரிந்தாலும், போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, பெரும்பான்மையினத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்தவோர் அரசாங்கமும், தமிழ் மக்களின் நலன்களைச் சரியாக ஆராயாத அரசாங்கம் தான்.  

இந்த விடயத்தை முதலில் கூறிவிடுதல் அவசியமானது. ஏனென்றால், இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும், கட்டமைப்பு ரீதியானதாக ஏற்பட வேண்டும். அப்படியில்லாமல், கொழும்பின் செயற்பாட்டாளர்களையும் அவர்களால் விளக்கமளிக்கப்படும் சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுகின்ற எந்தவொரு மாற்றமும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட மாற்றம் போலவே அமையும். சிறிய சிறிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்படலாம், ஆனால், உண்மையான ஜனநாயக ரீதியான மாற்றமாக அது அமையாது.  

தமிழ் மக்கள், பொலிஸாரையும் இராணுவத்தினரையும் நம்ப வேண்டுமென்று, கடந்த சில ஆண்டுகளாக, அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அரசியல் மாற்றமொன்று, அரசமைப்புக்கு முரணானதாக ஏற்படுத்தப்பட்டது என்று கூறப்படும் இச்சூழ்நிலையில், புதிதாகப் பதவியேற்ற மஹிந்தவின் பக்கம், இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்றிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பதவியேற்ற அதே இரவில், மஹிந்தவையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் சந்தித்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எந்தப் பதவியையும் கொண்டிருக்காத கோட்டாபயவைப் பார்த்து, மரியாதை செலுத்தும் புகைப்படம் வெளியாகியிருந்தது. முற்போக்கான இராணுவத் தளபதி என்று, கொழும்புத் தரப்புகளால் சொல்லப்பட்ட மகேஷ் சேனாநாயக்க, “பிரதமர்” மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்து, நினைவுப் பரிசில் வழங்குகிறார். ஏனைய தளபதிகளும், அவ்வாறே செய்திருந்தார்கள்.  

மஹிந்த பதவியேற்ற செய்தி வெளியானதும், 95 சதவீதத்துக்கும் மேல் தமிழ் மக்கள் வாழ்கின்ற யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரால், வெடி கொளுத்தி, பதவியேற்புக் கொண்டாடப்பட்டது.  
இப்படியாக, கடந்த சில ஆண்டுகளில், சிறியளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட, கட்டமைப்பு ரீதியில், இலங்கையின் ஆட்சியும் அதிகாரமும், கடும்போக்குப் பெரும்பான்மையினத் தரப்பிடம் தான் உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

எனவே தான், தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் சில, கடும்போக்கானவையாகத் தெரிந்தாலும், இலங்கையின் அரச கட்டமைப்புகளை நம்ப முடியாதவற்றால் விளைந்த கோரிக்கைகளே அவையென்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாக, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் நிறுவப்பட்டு, அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, தமிழர்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர், அவ்வலுவலகத்தை நிராகரித்திருந்தனர். அவ்வாறு நிராகரித்தவர்கள் தொடர்பில், தெற்கில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திடம் வழங்கப்பட்டுள்ள தரவுகள், எந்தளவுக்குப் பாதுகாப்பானவை என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.   

எனவே, இன்று “அரசமைப்பைப் பாதுகாப்போம்” என்று நியாயமான கோரிக்கையை ஏற்படுத்துகின்ற அனைவரும், இதே அரசமைப்பைப் பயன்படுத்தித் தான், சிறுபான்மையின மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதே அரசமைப்பில் காணப்படும் 13ஆவது திருத்தத்தில், மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில், அவ்வதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவற்றை வழங்குங்கள் என்று, போராட்டங்கள் நடைபெறுவதும் இல்லை.  

இவையெல்லாம், ஒரு விடயத்தைத் தான் தெளிவாகக் கூறுகின்றன: தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு, தமிழ் மக்களின் குரல்கள் தேவை. கொழும்பின் செயற்பாட்டாளர்களால், தமிழ் மக்களின் பிரச்சினைகள், தெளிவாக எடுத்துக்கூறப்பட வாய்ப்பே இல்லை.  

இதில் இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகள், பார்வைகள், அவர்களின் எண்ணப்பாடுகள் ஆகியன பிரதிபலிக்கப்படவில்லை என்பதற்காக, கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதத்தின் பக்கம் போவதிலும் எந்தப் பயனும் இல்லை. மஹிந்தவும் மைத்திரிபாலவும் போட்டியிடும் போது, மைத்திரிக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, தமிழ்த் தரப்புத் தள்ளப்பட்டது.

அதற்காக, மைத்திரியை முழுமையாக நம்பினார்கள் என்று அர்த்தப்படாது. மாறாக, இருக்கின்ற இரண்டு தெரிவுகளில், தமிழ் மக்களுக்கு மிகக் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவர் யார் என்று ஆராய்ந்து, அவரைத் தெரிவுசெய்ய வேண்டிய தேவை காணப்பட்டது.  

கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதிகள் கூறுவதைப் போல, கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தால், ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷவே தெரிவாகியிருப்பார். அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒரு சில நன்மைகள் கூட ஏற்பட்டிருக்காது.   

எனவே, கொழும்பின் செயற்பாட்டாளர்களின் போக்கும் இல்லாமல், கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதிகளின் போக்கும் இல்லாமல், தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய தேவை, தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது. அதைச் செய்வார்களா? 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X