2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்திய எதிர்ப்பு பயங்கரமானது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 மே 24 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அமைச்சராக இருக்கும்போது, வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்த போது, ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் இருந்து மக்கள் மத்தியில் நகைப்புக்கு ஆளானார்.   

அந்தப் ‘போராட்டம்’ முடிந்த கையோடு, ஐ.நாவின் சர்வதேச வெசாக் வைபவத்துக்காக இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டு, மற்றொரு முறை நகைப்புக்கு ஆளானார்.  

வீரவன்சவின் துரதிர்ஷ்டம் எவ்வளவு என்றால், அவரது கோரிக்கையை ஏற்க, அவரது அரசியல் அணியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவிலோ அல்லது அவரது அரசியல் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியிலோ எவருமே இருக்கவில்லை.  

 நாட்டில், எங்குமே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எவருமே கறுப்புக் கொடி காட்டவில்லை. குறைந்த பட்சம் வீரவன்சவின் வீட்டிலாவது கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்ததாகத் தெரியவில்லை.  

மறுபுறத்தில், அரசாங்கம் மிகச் சாதுரியமாக அவரது கோரிக்கைக்கு வேறு அர்த்தம் கற்பித்து, அவரைக் கஷ்டத்தில் தள்ளிவிட்டது. பௌத்தர்களின் புனித நாளான வெசாக் தினத்தில், கறுப்புக் கொடி ஏற்றுமாறு கூறி வீரவன்ச, வெசாக் தினத்தை அவமதித்ததாக அரசாங்கத்தின் தலைவர்கள் கூறினர். அதனை மறுக்க வீரவன்சவாவது முன்வரவில்லை.  
காலிமுகத் திடலில், மிகப் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்ட, பொது எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே வீரவன்ச, இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது மஹிந்த ராஜபக்ஷவும் அந்த மேடையில் இருந்துள்ளார்.  

அவரது கோரிக்கையை ஆதரித்து, அவரது அணியில் எவரும் பேசாவிட்டாலும் அந்த அணியில் சிலர் இந்தியப் பிரதமர், இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்ததை எதிர்த்து, பின்னர் கருத்து வெளியிட்டு இருந்தனர்.   

இனவாதக் கருத்துகளை வெளியிடுவதில் வீரவன்சவுடன் எப்போதும் போட்டியிடும், பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில அவர்களில் ஒருவர். இந்தியப் பிரதமர், நாட்டில் ஒரு சமூகத்தை மட்டும் விசேடமாகச் சந்தித்ததன் மூலம், அவர் இலங்கையை, இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.  

ஐ.நா மனித உரிமைப் பேரவையில், புலம்பெயர் தமிழர்களின் வாதங்களை முறியடிக்கவென, கடந்த மார்ச் மாதம், ஜெனீவா சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியும் முன்னாள் 
எம்.பியுமான சரத் வீரசேகர, வீரவன்சவின் கருத்தை ஆதரித்த மற்றொருவராவார். அவரும் மோடி, மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்ததை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு இருந்தார். 

ஆனால், அவர்களது கருத்துகள் அவர்களது தலைவரான மஹிந்த ராஜபக்ஷவின் செயலொன்றால் மூடி மறைக்கப்பட்டது. அதாவது, அவர்கள் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கும் போது, அவர்களது தலைவர், மோடியைச் சந்தித்து, 45 நிமிடங்கள் கலந்துரையாடியிருந்தார். அவரோடு அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவும் மோடியைச் சந்தித்திருந்தார்.  

மஹிந்த, மோடியைச் சந்திக்க முன்னர், மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் எனக் கூறி, நகைப்புக்குள்ளான வீரவன்சவை காப்பாற்ற முயற்சி செய்தார்.   

முன்னர், ஊடகவியலாளர்களைக் கடத்தியும் தாக்கியும் இம்சித்தும் வந்த ஆட்சியின் தலைவரான மஹிந்த, தமது தேர்தல் தோல்வியின் பின்னர், நாளாந்தம் ஊடகவியலாளர்களைச் சந்தித்து வருவது தெரிந்ததே. அவ்வாறானதோர் சந்திப்பின் போது, வீரவசன்சவின் கறுப்புக் கொடி கதையைப் பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட போது, “அவர் அவ்வாறு கூறவில்லை” என மஹிந்த கூறினார்.  

தமது சகாவைக் காப்பாற்ற, அவர் அவ்வாறு கூறினாலும், நாட்டில் இவ்வருடம் நடைபெற்ற மிகப் பெரும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும் அதற்கு சாட்சியாளர்களாக இருக்கின்றனர். 

மஹிந்த, மோடி சந்திப்பில் உள்ள மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், மஹிந்த ஆதரவாளர்கள், நோர்வூட் நகரில் வைத்து, மோடியின் வருகைக்கும் அவர் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மத்தியில் ஆற்றிய உரைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, மஹிந்த தாமாகவே கேட்டு, அதே மோடியைச் சந்தித்து இருக்கிறார் என்பதாகும். இதைக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது.  

ஆயினும், இந்தியப் பிரதமரின் நோர்வூட் விஜயத்துக்கான எதிர்ப்பு, முற்றிலும் ஆதாரமற்ற, அடிப்படையற்ற எதிர்ப்பல்ல. இந்திய வம்சாவளி, வழி வந்தவர்களாக இருந்தாலும், மலையகத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் மக்கள், ஏற்கெனவே இந்நாட்டுப் பூரண பிரஜைகளாக மாறிவிட்டனர்.   

அவ்வாறிருக்க, இந்தியப் பிரதமர், இந்திய வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைச் சந்திப்பதானது, பிரிவு மனப்பான்மையை ஊக்குவிப்பதாகும் என்பதே அவர்களது வாதமாகும்.  

1988 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்த நாட்டில் நாடற்றவர்கள் என்று ஒரு சாரார் வாழ்ந்தனர். இந்திய வம்சாவளியில் வந்து, இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ பிரஜா உரிமை பெறாதவர்களே அக்காலத்தில் நாடற்றவர்கள் என்றழைக்கப்பட்டனர்.   

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பயனாக 1986 ஆம் ஆண்டிலும் 1988 ஆம் ஆண்டிலும் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம், அவர்களுக்கு பிரஜா உரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டன. அதன் மூலம் அவர்கள் பூரண இலங்கைப் பிரஜைகளாகி விட்டனர்.  

எனவே, மோடி எதிர்ப்பாளர்களின் வாதத்தை, மலையகத் தமிழ்த் தலைவர்களால் நிராகரிக்க முடியாது. ஏனெனில், அவர்களே இதற்கு முன்னர், மலையக மக்களைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவளியினராகக் கருத முடியாது எனக் கூறியுள்ளனர்.   

இந்த அடிப்படையிலேயே, தமது சமூகத்தைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவளியினராகக் குறிப்பிட வேண்டாம் என, தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், கடந்த வருடம் சகலரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார்.  

ஆனால், மலையக மக்கள், இந்திய வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அம்மக்கள் மத்தியில் உரையாற்ற நோர்வூட் நகருக்குச் சென்று, அவர்களுக்கு அவர்களது இந்தியத்தொடர்பை இந்தியப் பிரதமர் நினைவூட்டிய போது, அவரை வரவேற்பவர்களில் கணேசன் முன்னணியில் இருந்தார்.  

ஆனால், அந்த நிலையில் கம்மன்பில போன்ற இனவாதிகள், மலையக மக்கள் பூரண இலங்கைப் பிரஜைகள் என்ற நிலைப்பாட்டில் கருத்து வெளியிட்டு இருந்தனர். இது ஒரு விசித்திரமான நிலைமையாகும்.  

மோடியின் மலையக விஜயத்தை, கம்மன்பில போன்றோர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு அதைப் பாவித்து, இந்திய எதிர்ப்பை தூண்ட முயற்சித்த போதிலும், அவர் இலங்கையில், மலையகத்துக்கு மட்டும் செல்லவில்லை. 2015 ஆம் ஆண்டு, வட பகுதிக்கு விஜயம் செய்தார். அப்போது அதற்கு கம்மன்பிலயோ, சரத் வீரசேகரவோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  

இம்முறை மோடிக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பு, அரசியல் நோக்கம் கொண்டதாகும். சர்வதேச ரீதியில் மஹிந்தவுக்கு மட்டுமே வரவேற்பும் மதிப்பும் கிடைக்க வேண்டும் என மஹிந்தவின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்.   

ஐ.நாவின் சர்வதேச வெசாக் வைபவம் மஹிந்தவின் காலத்திலன்றி, மைத்திரியின் காலத்தில் இலங்கையில் நடைபெறுவது, மஹிந்த ஆதரவாளர்கள் மத்தியில் ஒருவித பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது போலும். எனவேதான், அவர்கள் கடந்தமுறை மோடியின் இலங்கை விஜயத்துக்கு இல்லாத எதிர்ப்பை இம் முறை தெரிவித்து இருந்தார்கள்.  

மோடி, கடந்த முறை வட பகுதிக்கு விஜயம் செய்தமையையும் இம்முறை மலையகத்துக்கு விஜயம் செய்தமையையும் சரியாகப் புரிந்து கொண்டால், மஹிந்த ஆதரவாளர்கள், இவ்வாறு இம்முறை கறுப்புக் கொடி காட்ட முற்பட்டு இருக்க மாட்டார்கள்.   

வட பகுதித் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் சந்திப்பதன் மூலம், மோடி, அம்மக்கள் மீது பரிவு கொண்டவர் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இது அவரது அரசியலாகும். வடபகுதி மக்கள் மீதும் மலையக மக்கள் மீதும் பரிவைக் காட்டி, தமிழக மக்களின் மனதை வெல்லவே மோடி முயற்சிக்கிறார்.   

நாட்டுக்குப் பாதகமான சில ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவே மோடி இம்முறை வருகிறார் என மஹிந்தவும் அவரது அணியினரும் கூறிய போது, மோடியின் இம்முறை இலங்கை விஜயத்தில், எவ்வித அரசியலும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.  

 ஆயினும், மோடி தமது விஜயத்தின் நோக்கங்களில் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முயற்சிக்கவில்லை. அவர் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தின பிரதான நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் அரசியல் பேசினார். நோர்வூட் நகருக்குச் சென்று மலையக மக்கள் முன் பேசும் போதும் அரசியல் பேசினார். நோர்வூட் விஜயமே அரசியல் தான்.  

இவை எல்லாம் மோடி எதிர்ப்பாளர்களுக்குச் சாதகமான விடயங்களாக இருந்த போதிலும் அவர்கள் அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கும்போது, மோடியை மஹிந்த, சந்தித்தமையானது அந்த எதிர்ப்பாளர்களின் முகத்தில் அறைந்ததற்குச் சமமாகும்.   

குறிப்பாக, அது மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட முற்பட்ட மஹிந்தவின், மிக நெருங்கிய சகாவான வீரவன்சவைப் பெரும் நெருக்கடியில் தள்ளிவிட்ட சம்பவமொன்றாகும்.  

மஹிந்த அணியின் மற்றொரு தலைவரும் மஹிந்த, மோடி சந்திப்பை வைத்து, மோடி எதிர்ப்பாளர்களை மேலும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளார். பொது எதிரணியின் முன்னணி உறுப்பினரும் அவர்களது உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான பொதுஜன சுதந்திர முன்னணியின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மஹிந்த - மோடி சந்திப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அதன் விவரங்களை வெளியிட முடியாது” என்றார்.   
தமது ஆதரவாளர்கள் இலங்கையை, இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதிச் செயற்படுவதாகக் கூறி, மோடியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, மஹிந்த அதே மோடியோடு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியாத விடயங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.   

இலங்கைக்கு வந்த மோடி, அரசாங்கத்தின் தலைவர்களோடு இது போன்ற, வெளியில் கூற முடியாத விடயங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், மஹிந்த அணியினர் அதனை எவ்வாறு வர்ணித்து இருப்பார்கள் என்று ஊகித்துப் பார்க்க வேண்டும்.  

 அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டை இந்தியாவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவே, அப்போது அவர்கள் கூறியிருப்பார்கள்.  

இந்தச் சந்திப்பின் போது,இந்தியாவுக்கு வருமாறு மஹிந்தவுக்கு, மோடி அழைப்பு விடுத்தும் இருக்கிறார். மஹிந்த, அதனை ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். அவ்வாறாயின், மஹிந்த அணியில் சிலர் காட்டும் இந்த, இந்திய எதிர்ப்பின் அர்த்தம் என்ன?  

மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் இந்திய எதிர்ப்பைத் தூண்டி, அரசியல் இலாபம் தேட முற்பட்ட போதிலும், இலங்கை, இந்திய உறவில் பிராந்திய, பூகோள அரசியல் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும்.   

அதனை 2010 ஆம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரபல இந்திய ஊடகவியலாளர்  வி.கே. சஷிகுமாருக்கு வழங்கிய பேட்டியொன்றின் மூலம் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும்.  

“இந்தியாவுக்கு மட்டுமே எம்மீது இராணுவ ரீதியாகச் செல்வாக்குச் செலுத்த முடியும். இந்தியா என்பது, எமக்கு அருகில் உள்ள மிகப் பெரும் சக்தியொன்றாகும். அத்தோடு, இலங்கையில் நடப்பவற்றைப் பற்றி அக்கறையுடன் இருக்கும் தமிழகத்தின் ஆறு கோடி மக்களுக்கு அருகில் நாம் வாழ்கிறோம் என்ற காரணத்தையும் எடுத்துக் கொண்டால், எமது நிலைமை மிகவும் சிக்கலானதாகும்.

ஏனைய நாடுகள் எம் மீது பொருளாதார தடைகளைத் தான் விதிக்கலாம். ஆனால், இந்தியா எம் மீது இராணுவ ரீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நாடாகும் என்பதை நாம் அறிந்து தான் இருக்கிறோம்’ எனக் கோட்டாபய அந்தப் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.   

தமது வாதத்தை நிரூபிப்பதற்காக 1987 ஆம் ஆண்டு பிரிகேடியர் கொப்பேகடுவவின் தலைமையில், இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டை, புலிகளிடம் இருந்து கைப்பற்றிக் கொள்ள முயற்சித்த போது, இந்தியா ‘பூமாலை நடவடிக்கை’ என்ற பெயரில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு, அதனை முறியடித்ததாகவும் கோட்டாபய அந்தப் பேட்டியின் போது கூறினார்.

எனினும், இலங்கை அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இலங்கை மக்கள் மத்தியில், குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய எதிர்ப்பை அடிக்கடி பாவித்து வருகிறார்கள்.  

இந்தியா பல நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்புகளால் ஆரம்பத்தில் அநுராதபுரத்தில் இருந்த இலங்கையில் தலைநகரம் யாப்பஹூவ, தம்பதெனிய, குருநாகல், கம்பளை மற்றும் கண்டி எனப் படிப்படியாகத் தென்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.   

இவற்றை விவரிக்கும் சிங்களப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் வரலாறானது இந்திய எதிர்ப்பை, சிறுவர்கள் மனதில் ஊட்டும் வரலாறாகவே இருக்கிறது.  எனவேதான், அரசியல்வாதிகள் அடிக்கடி மக்கள் மனதில் உள்ள அந்த இந்திய எதிர்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முனைகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி, தமது இரண்டு கிளர்ச்சிகளின் போதும் இந்திய எதிர்ப்பை அரசியலாக்கியிருந்தது.   

சிலவேளைகளில், இந்த இந்திய எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பாக மாறிய சந்தர்ப்பங்களும் உண்டு. 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்துக்கு முன்னர், சில சிங்களப் பத்திரிகைகள், இந்தியா, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, கடும் இந்திய எதிர்ப்பை வளர்த்து வந்தன.

  அது, தமிழர் எதிர்ப்பாக மாறி இருந்த நிலையிலேயே, புலிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் வைத்து, 13 இராணுவ வீரர்களைக் கொன்றனர்.

ஏற்கெனவே, தமிழர் எதிர்ப்பு பரவியிருந்த நிலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துக்கு எதிரான சிங்கள மக்களின் கொந்தளிப்புத் தான் பெரும் இனக் கலவரமாக வெடித்தது.  எனவே, வீரவன்ச போன்றோர்களின் இந்திய எதிர்ப்பானது சந்தர்ப்பவாதமாக இருந்த போதிலும் பயங்கரமானது.           


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .