2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம்

எம். காசிநாதன்   / 2019 ஜனவரி 14 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்று, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தம், இந்திய இட ஒதுக்கீடு வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கியிருக்கிறது.   

அரசமைப்பின்படி, ‘சமூகத்தில் பின்தங்கியவர்கள்’, ‘கல்வியில் பின்தங்கியவர்கள்’ ஆகியோருக்கு மட்டுமே இதுவரை இட ஒதுக்கீடு இருந்தது. அது மத்திய அரசு பணியாக இருந்தாலும் சரி, மாநிலங்களில் பணியாக இருந்தாலும் சரி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருந்தது.   

அதேபோல் வேலைவாய்ப்புகள் என்று வரும் போது, ‘மத்திய, மாநில அரச பணிகளில் போதிய அளவில் வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கலாம்’ என்றுதான் அரசமைப்புக் கூறியிருக்கிறது. ஆனால், அரசமைப்பு உருவாக்கப்பட்ட 69 வருடங்களான நிலையில், குடியரசுத் தின விழாவுக்கு முன்பு, இட ஒதுக்கீடு கொள்கையில் அதிரடியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  

மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமுல்படுத்தியது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் சிறு, குறு தொழில்களுக்கும், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று, எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு குற்றஞ்சாட்டி வந்தன.   

ஒரு வருடத்துக்கு இருபது மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்று பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேள்வியெழுப்பி வந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதை நிரூபிக்கும் வகையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஷ்கர் போன்ற மாநிலங்களில் தங்களிடமிருந்து ஆட்சியைப் பறிகொடுத்தது பா.ஜ.க.  
 சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அக்கட்சிக்குக் கிடைத்த இந்தத் தோல்வி, முற்பட்ட வகுப்பினர் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பாதை விலகிப் போகிறார்கள் என்ற எண்ணத்தை அக்கட்சிக்கு ஏற்படுத்தியது.

அப்படி விலகிச் செல்லும் முற்பட்ட சமுதாயத்தினரைத் தடுத்து நிறுத்தி, தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில்தான், இந்தப் பத்து சதவீத இட ஒதுக்கீடு, மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தச் சட்டம் நிறைவேறிய நிலையில், மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 60 சதவீதத்தை எட்டியுள்ளது.  

இங்குதான் மத்திய அரசாங்கம் மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை சந்திக்கப் போகிறது. அதற்கு அறிகுறியாக, இப்போதே பத்து சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விட்டது.   

பிரதமராக வி.பி.சிங் இருந்த போது, ‘மண்டல் ஆணைக்குழு’ பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டன. பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் அங்கிகாரம் கிடைக்கவில்லை என்று நீண்ட காலமாக இருந்த கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், கிடப்பில் போடப்பட்டிருந்த ‘மண்டல் ஆணைக்குழு’ அறிக்கையைத் தூசி தட்டி எடுத்து, மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்தார் வி.பி.சிங்.   
அதனால் அன்றைக்கு காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் ஏன் மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியும் கூடக் கூட்டணி சேர்த்துக் கொண்டு, வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக வாக்களித்து, அவர் தனது பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. பதவி போகும் என்று தெரிந்தும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அளித்த வி.பி.சிங்குக்கு, ‘சமூக நீதிக்காவலர்’ என்ற பட்டத்தை அளித்து, நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்கள் எல்லாம் பாராட்டினார்கள்.  

ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீட்டையும் சேர்த்தால், இது ஏறக்குறைய 50 சதவீதத்தைத் தொட்டு விடுகிறது. ‘பாலாஜி வழக்கு’, ‘நாகராஜு வழக்கு’ போன்ற பல்வேறு வழக்குகளில், இட ஒதுக்கீடு, 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று அறுதியிட்டுத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.   

அந்த தீர்ப்புகளின் அடிப்படையில், இந்த முற்படுத்தப்பட்டோருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்பது, ஏற்கெனவே இருந்த இட ஒதுக்கீட்டை 60 சதவீதத்துக்கு எடுத்துச் சென்று விட்டது. ஆகவே, உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடஒதுக்கீடு நியாயமான அளவைத் தாண்டி, இந்த இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றத்தில் மிகப்பெரிய சட்டப் போராட்டத்துக்கு மத்திய அரசாங்கம் தயாராகியே ஆக வேண்டும்.  

அடுத்ததாக, அரசமைப்பு சமூக, கல்வி அடிப்படையில் பின்தங்கியோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்று கூறியிருக்கிறது. அதுதான் அடிப்படை அம்சமாகவும் இருக்கிறது. ஆனால், இப்போது பொருளாதார இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பின் அடிப்படை அம்சத்தை (Basic features of the Government) மாற்றியிருக்கிறது.   

நாடாளுமன்றத்துக்கு அந்த அதிகாரம் இல்லை. அரசமைப்பில் நாடாளுமன்றம் திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆனால், அந்தத் திருத்தம், அரசமைப்பின் அடிப்படை அம்சத்தை மீறுவதாக அமையக்கூடாது என்பதுதான், ‘கேசவானந்த பாரதி’ வழக்கில், உச்சநீதிமன்றம் கூறியுள்ள மிக முக்கியமான தீர்ப்பு.   

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், நாடாளுமன்றம் அரசமைப்பின் அடிப்படை அம்சத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அரசமைப்புத் திருத்தங்களை உச்சநீதிமன்றம் இரத்துச் செய்திருக்கிறது. 1991இல் பிரதமராக இருந்த நரசிம்மராவ், ‘பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு’ என்று ‘அலுவலகக் கட்டளை’ மூலம் கொண்டு வந்த போது, அரசமைப்பு மீறல் என்று கூறி, உச்சநீதிமன்றமே இரத்துச் செய்தது குறிப்பிடத்தக்கது.   

‘மண்டல் ஆணைக்குழு’ பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிசெய்த ஒன்பது நீதியரசர்கள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்வு, இது மாதிரியான ‘பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை’ இரத்துச் செய்தது.   

அந்த வகையில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள பத்து சதவீத இட ஒதுக்கீடு, அரசமைப்பு வகுத்துக் கொடுத்துள்ள அடிப்படை அம்சத்தை மீறியுள்ளது. ஆகவே, இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் என்பதே இன்றைய நிலை.  

இட ஒதுக்கீட்டில், அரசமைப்பு வகுத்துக் கொடுத்துள்ள கொள்கையில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வர, உச்சநீதிமன்றம் அனுமதித்தால், இது ஒரு முன்னுதாரணமான வழக்காக மாறிவிடும்.  

‘மண்டல் ஆணைக்குழு’ பரிந்துரை அமுல்படுத்தப்பட்டு 25 வருடங்கள் கழிந்த பிறகும் மத்திய அரசு பணிகளில் இன்னும் அனைத்துத் துறைகளிலும் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் முழுமையாக நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, வருடம் வருடம் அதிகரித்து வருகிறது. 27 சதவீதம் நிரப்பப்பட வேண்டிய துறைகளில் 10 சதவீதம் கூட நிரப்பப்படாத துறைகள் உள்ளன. 27 சதவீதத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு அளிக்காத துறைகளும் மத்திய அரசில் உள்ளன. ஏன் மத்திய அமைச்சரவையிலேயே இந்தப் பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.   

இப்படிப் பிற்படுத்தப்பட்டோருக்கு, ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அலுவலகங்களில் அவர்கள் முழுமையாக அனுபவிக்கும் முன்பே, பத்து சதவீத இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் சிறிதளவு கிடைத்து வரும் வாய்ப்புகளையும் பறித்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.   
இது தவிர, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 69 சதவீதம் வரை இட ஒதுக்கீடு ஏற்கெனவே சிறப்புச் சட்டம் மூலம் நடைமுறையில் இருக்கிறது. இப்போது ஒரு வேளை இந்தப் பத்து சதவீத இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுமேயானால், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 79 சதவீதமாகிவிடும்.  

 இதுவரை சமூகம், கல்வி என்று வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு, இன்றைக்கு பொருளாதாரம் என்று வந்து விட்டது. குறிப்பாக, ஏற்கெனவே இட ஒதுக்கீட்டை அனுபவித்து வரும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலை வாழ் மக்கள், இந்தப் பயனை அனுபவிக்க முடியாது. அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடும் பொருந்தாது.   

ஆகவே இந்தியாவின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை மிக முக்கியமான பரிணாம வளர்ச்சியை நோக்கி பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம், 2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நகர்த்திச் செல்கிறது. இதன் அடுத்த கட்டம், இனிமேல் அனைத்துப் பிரிவினருக்குமே பொருளாதார அளவில்தான் இட ஒதுக்கீடு என்ற நிலை ஏற்படுமோ என்பதுதான், இப்போது எழுந்துள்ள மிக முக்கியமான சந்தேகம்.   

தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் கையாளும் வியூகத்தை, பா.ஜ.க. இப்போது கையாண்டுள்ளது. இது வெற்றியா தோல்வியா என்பது, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .