2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்திய விமானப்படை தாக்குதல்: மாற்றியமைக்கப்பட்ட 2019 தேர்தல் களம்?

எம். காசிநாதன்   / 2019 மார்ச் 04 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

புல்வமா தாக்குதல், இந்தியத் தேர்தல் களத்தில், புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.  
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஐந்தாண்டுச் செயற்பாடுகளை, முன்வைத்து நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல், இப்போது புல்வமா தாக்குதல், அதைத் தொடர்ந்து இந்திய விமானங்கள், எல்லை கடந்து சென்று, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தமை உள்ளிட்ட விடயங்கள், இப்போது தேர்தல் களத்தின் முன் வரிசைக்கு வந்து விட்டன.   

‘ரபேல் ஊழல்’ பற்றி விமர்சித்த எதிர்க்கட்சிகள், இன்றைக்கு மிராஜ் விமான தாக்குதல் பற்றியும் பாகிஸ்தான் நடத்தியதாகக் கூறப்படும் எதிர்தாக்குதல் பற்றியும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன.  

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடன், “இந்திய அரசாங்கத்துக்குத் துணை நிற்போம்” என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து, தீர்மானம் நிறைவேற்றி இருந்தன.  

இருந்தபோதிலும், “நாட்டுக்காகத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து, பா.ஜ.க தேர்தல் அரசியல் செய்வதா” என்ற விமர்சனத்தை, இப்போது முன்வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது இனி வரும் காலங்களில், எந்த அளவுக்குத் தீவிரமாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

அரசியல் கட்சிகளுக்குப் போர்கள், வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. 1971இல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் அமோகமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. 543இல் 352 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுப் பிரதமரானார்.   

அதேபோல், 1998இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் நடத்திய கார்கில் போர், 1999 நாடாளுமன்றத் தேர்தலில், அக்கட்சிக்கு அமோக வெற்றியைக் கொடுத்துவிடவில்லை. 1998இல், அவர் சார்ந்த பாரதிய ஜனதாக் கட்சி, 182 எம்.பிக்களைப் பெற்றது. பிறகு, 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சி, அதே 182 எம்.பிக்களைத்தான் பெற்றது.   

இவ்வாறாகக் கடந்த காலத் தேர்தல் வரலாற்றைப் பார்த்தால், 1966இல் பிரதமரான இந்திரா காந்திக்கு, அதிக இலாபத்தை, பாகிஸ்தானுடனான போர் கொடுத்தாலும், 13 மாதங்களே பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, ஏற்கெனவே பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள மட்டுமே ‘கார்கில் போர்’ உதவியது.  

இந்தத் தேர்தல்களின் முடிவின் அடிப்படையில், இப்போது நடைபெறும் பாகிஸ்தானுடனான விமானத் தாக்குதலைத் தொடர்புபடுத்தினால், ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவுக்கு என்ன லாபம்? பிரதமர் நரேந்திர மோடிக்கு, மீண்டும் ஒரு முறை வெற்றி பெற, இந்தத் தாக்குதல் உதவுமா என்பதுதான், இப்போது தேர்தல் அரசியலை அலசுவோர் மத்தியில், அனல் பறக்கும் விவாதமாக இருக்கிறது.   

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 2014ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுமோசமாகத் தோல்வியைத் தழுவிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு கூட, 114 எம்.பிக்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மோடியின் வெகுஜனக் கவர்ச்சியால், கடும் தோல்வியில் சிக்கிக் கொண்டது.   

464 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 44 எம்.பிக்களை மட்டுமே, பெற முடிந்தது. 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி, கட்டுத் தொகையைப் பறி கொடுத்த தேர்தலாகச் சென்ற தேர்தல் அமைந்தது.   

ஆனால், பாரதிய ஜனதாக் கட்சியைப் பொறுத்தமட்டில் 282 எம்.பிக்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், பா.ஜ.கவின் தேர்தல் வரலாற்றில், அசாத்தியமான சாதனையை நிகழ்த்திய தேர்தலாகும்.  

இந்த 282 எம்.பிக்களில், ஏறக்குறைய 220 எம்.பிக்கள் பீஹார், குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, இமாசல பிரதேசம், சட்டிஷ்கர், ஜார்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கிடைத்திருக்கின்றன.   

இந்த வெற்றியை, 2019இல் மீண்டும் பெற்றுக்கொள்வதுதான் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இப்போதுள்ள சவால். இப்படி, அதிக எம்.பி தொகுதிகள் பெற்ற மாநிலங்களில், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஷ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும், பா.ஜ.க அரசாங்கங்கள் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளன.   

அதிக எம்.பிக்கள் பெற்ற மாநிலங்களில், இந்த முறை, சென்ற தேர்தலில் பெற்ற எம்.பிக்களைப் பா.ஜ.கவால் பெற முடியவில்லை. அவ்வாறெனில், தென் மாநிலங்களில் அதை ஈடுகட்ட முடியாத சூழல் நிலவுகிறது.   
குறிப்பாக, சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்த வட மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளில், பா.ஜ.க தோல்வி அடைந்திருக்கிறது.   

வடமாநிலங்களில் 71 எம்.பிக்களைக் பா.ஜ.கவுக்குச் சென்ற தேர்தலில் அளித்த உத்தரபிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் செய்துள்ள கூட்டணி ஒப்பந்தம், பா.ஜ.கவை மிரட்டுகிறது. அது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி, இறுதிச் சுற்றில் பிரியங்காவைக் களமிறக்கியிருப்பதும் பா.ஜ.கவின் தேர்தல் முகவர்களைக் கவலை கொள்ள வைத்துள்ளது.  

ஆகவே, கிடைக்காது என்று உறுதியாகத் தெரியும் தென் மாநிலங்களில் கவனம் செலுத்துவதை விட, பா.ஜ.க பலமாக இருக்கும் வடமாநிலங்களில், ஆதரவான வாக்கு வங்கியைத் திரட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்.   

அதன் முதல் கட்டம்தான், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, அரசாங்க வேலை வாய்ப்பு; கல்வியில் பத்து சதவீத இட ஒதுக்கீடு என்று ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விகள் ஏற்பட்டவுடன் அறிவித்தார்; அரசியல் சட்டத்தையே திருத்தி, அதை அமுல்படுத்தவும் செய்தார். முற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வட மாநில இளைஞர்கள், இதற்கு அமோக ஆதரவு தருவார்கள் என்ற சிந்தனையின் வடிவமே, இந்த இட ஒதுக்கீடு.   

இது போன்றதொரு பரபரப்பான தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு, புல்வமா தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய விமானப்படையின் தாக்குதல், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்குக் கை கொடுக்குமா?   

குறிப்பாக, வடமாநிலங்களில் ஏற்கெனவே பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், இனிவரும் காலங்களில், தேர்தல் நெருங்க நெருங்க, “பயங்கரவாதிகளை வீழ்த்தியது பா.ஜ.க”, “நாட்டின் பாதுகாப்பு பிரதமர் மோடியின் கையில்தான் பத்திரமாக இருக்கிறது” போன்ற பிரசாரங்களை முன் எடுத்துச் செல்லும். அதற்கான முகாந்திரங்கள் இப்போதே தெரியத் தொடங்கி விட்டன.   

தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், பா.ஜ.க தொண்டர்களுடனும் பேசும் பிரதமர், இந்தப் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது. “நாட்டுக்குப் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது. முடியாது என்பது முடியும் என்றாகியுள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசியிருப்பது, அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.  

கடந்த ஐந்தாண்டு பா.ஜ.க ஆட்சியில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை; ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடவில்லை என்றெல்லாம், பிரசாரத்தைக் கூர்மையாக்கிக் களத்தில் இறங்கிய காங்கிரஸுக்கும், மற்ற மாநிலக் கட்சிகளுக்கும், இந்த விமானப்படை தாக்குதல், தேர்தல் களத்தில் பிரசாரத்தை மாற்றியமைத்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.   

குறிப்பாக, பா.ஜ.கவுக்குச் செல்வாக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வடமாநிலங்களில், எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் சேர்த்து, வெற்றி வாய்ப்புக் குறைந்த விடுமோ என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.   

ஆகவே, இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் விமானப்படையால் சிறை பிடிக்கப்பட்டது குறித்த விமர்சனங்களைச் செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளரான மணிஷ் திவாரி, “இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் இருக்கும் நேரத்தில், நாட்டு மக்களிடம் பேச வேண்டியவர், பா.ஜ.க தொண்டர்களிடம் பேசுவது ஏன்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.   

இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள், அடுத்தடுத்த நாள்களில் பா.ஜ.கவை நோக்கியும் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கியும் வீசப்படும் என்பதில் சந்தேகமில்லை.  

ஆகவே, ஐந்தாண்டு பா.ஜ.க அரசாங்கத்தின் விமர்சனம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ‘பாகிஸ்தான் எல்லைக்குள், பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்’ தேர்தல் களத்தை ஆக்கிரமிக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏராளமாகத் தெரிகின்றன.  

நாட்டுப்பற்று, நாட்டைக் காக்கும் பலம் எந்தக் கட்சிக்கு இருக்கிறது? என்பது போன்ற வலுவான பிரசாரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கிளம்பும். குறிப்பாக, நாடு முழுவதும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளுக்கும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலும் உருவாகும், ஒரு வித்தியாசமான தேர்தல் களமாக இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .