2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இந்தியத் தேர்தல் களம் திசை திருப்பப்படுகிறதா?

எம். காசிநாதன்   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, பாலியல் புகாரைக் கூறி, இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண்ணொருவர்.  

17ஆவது மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், கிளம்பியுள்ள இந்தப் புகார், அரசியல் களத்தைத் திசை திருப்பியிருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையகம் துணை போகிறது என்றும், பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் மத ரீதியாகவும் நாட்டின் பாதுகாப்பை முன்வைத்தும் தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.   

குறிப்பாக, ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகளைத் தேர்தல் ஆணைக்குழு தடுத்து நிறுத்தவில்லை என்ற புகாரை, எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. பா.ஜ.க தலைவர்களின் தனிநபர் மற்றும் மத ரீதியான பிரசாரங்களைத் தேர்தல் ஆணையகம் தடுக்கவில்லை என்றெல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுகள் கிளம்பியிருந்தன.   

17ஆவது மக்களவைத் தேர்தல் களத்தில், எதிர்க்கட்சிகளுக்கு வேண்டிய சம களத்தை, தேர்தல் ஆணையகம் ஏற்படுத்தித் தரத் தவறி விட்டது என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் எங்கும் எதிரொலித்தன.  

இதன் உச்சகட்டமாக, உச்சநீதிமன்றத்தில் உத்தரபிரதேச முதலமைச்சரும், பா.ஜ.கவின் நட்சத்திர பிரசாரகருமான யோகி ஆதித்யநாத், இந்திய இராணுவத்தை, ‘மோடி சேனா’ என்று குறிப்பிட்டு, பிரசாரம் செய்த விவகாரம், ஜாதி ரீதியாக பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி பேசிய விவகாரம் விசாரணைக்கு வந்தது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியிடுவது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   

தேர்தல் களத்தில் இருக்க வேண்டிய அனல், உச்சநீதிமன்றத்தின் பக்கமாகத் திரும்பியது. இதைவிட முக்கியமாக, நாடாளுமன்றத் தொகுதிகளில் 50சதவீதம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், வாக்கு யாருக்குப் போட்டோம் என்று, வாக்களிக்கும் போதே அறிந்து கொள்ளும் இயந்திரம் (VVPAT) பொருத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.   

நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையகம் பற்றி விசாரித்தே ஆக வேண்டும் என்பது போன்ற வழக்குகள், உச்சநீதிமன்றத்தின் முன்பு வந்த நேரத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்றார். “வரம்பு மீறிப் பேசுவோர் மீது, நடவடிக்கை எடுக்க, உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா” என்று, தேர்தல் ஆணையகத்தை எச்சரித்தார். “உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை, நீதிமன்றம் திருப்தியடையும் விதத்தில் விளக்குங்கள். இல்லையென்றால், அடுத்த அரைமணி நேரத்தில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையாளரை இங்கு வர வைப்பேன்” என்றார்.   

தேர்தல் ஆணையகம் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருவதற்குள் “உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 72 மணி நேரங்கள் பிரசாரம் செய்யக்கூடாது” என்றும், “மாயாவதி 48 மணி நேரங்கள் பிரசாரம் செய்யக்கூடாது” என்றும் தடை விதித்தது. இந்தத் தடை, இந்திய அரசியலில், குறிப்பாக இந்தியத் தேர்தல் ஆணையக வரலாற்றில் முத்தாய்ப்பான நடவடிக்கை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நேர்கொண்ட பார்வையால், தேர்தல் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.  

இதைத் தொடர்ந்து, ‘விவிபிஏடி’ இயந்திரங்கள் பொருத்தும் வழக்கிலும் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையகம் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு, ஆறு இடங்களிலாவது குறைந்தபட்சம், ‘விவிபிஏடி’ இயந்திரங்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.   

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம், தேர்தலில் பெரும் குளறுபடி நடக்கிறது என்று சில வருடங்களாகவே தேர்தலில் தோற்கும் கட்சிகள் குற்றச் சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அதனால்தான் 2013இல் உச்சநீதிமன்றமே ‘விவிபிஏடி’ இயந்திரங்களைப் பொருத்துங்கள் என்று உத்தரவிட்டது.   

ஆனால், இப்போது ஆறு வருடங்கள் கழிந்த நிலையில் கூட, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த ‘விவிபிஏடி’ இயந்திரங்களைப் பொருத்த தேர்தல் ஆணையகம் முன்வரவில்லை. தேர்தலின் மீது, நம்பகத்தன்மை வேண்டும் என்று இப்போது போராடும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் தேர்தல் ஆணையகம் கண்டுகொள்ளவில்லை.   

ஆகவே, தேர்தல் ஆணையகம் நடுநிலைமை தவறிக் கொண்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தின் முன்பு பல வழக்குகள் வந்து விட்ட காரணத்தால், ஆளும் பா.ஜ.கவின் தனி நபர் பிரசாரங்களின் வேகம் குறைந்தது. குறிப்பாக, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது 72 மணி நேரத் தடை விதிக்கப்பட்ட பிறகு இராணுவம், மதம், ஜாதி போன்றவற்றைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த, பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் தயங்கினர். ஜாதியைப் பயன்படுத்த, எதிர்க்கட்சித் தலைவர்களும் அஞ்சினார்கள்.   
ஐந்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்த மறுக்கும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் அனைவருமே, புல்வாமா தாக்குதல், பாகிஸ்தானுக்குள் சென்று தாக்கியமை, நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் செய்த பிரசாரத்துக்கு, உச்சநீதிமன்றத்தின் தலையீடு, திடீரென்று பாதிப்பை ஏற்படுத்தியது.  

இந்தியத் தேர்தல் களம் இப்படியொரு திசையில் பயணித்த நேரத்தில்தான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது, புகார் வந்திருக்கிறது. அந்தப் பெண் இத்தனை மாதங்களாக எங்கே இருந்தார்? தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பொறுப்பேற்றதிலிருந்து, அதன் நிர்வாகத்தில் நேர்மையான பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர் இந்த தலைமை நீதிபதி.   

பிரதான வழக்கறிஞர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து, ‘ரபேல் விமான ஊழல்’ புகார் பற்றி, உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு வந்த போது கூட, “இதில் இப்போது உச்சநீதிமன்றம் தலையிட முடியாது” என்றவர், பிறகு இந்து ஆங்கிலப் பத்திரிக்கை, ரபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு, அதன் அடிப்படையில் சீராய்வு மனு வந்த போது, “அந்த ஆதாரங்களை விசாரிக்கலாம்” என்று மத்திய அரசுக்கு எதிராகவே தீர்ப்பளித்தவர்தான் இப்போதைய தலைமை நீதிபதி.  

சி.பி.ஐயில் இயக்குநருக்கும் இணை இயக்குநருக்கும் சண்டை நடந்த போது, நாட்டின் முன்னனி புலனாய்வு அமைப்பின் புகழ் கெட்டு விடக்கூடாது என்பதில் கடுமையான நிலைப்பாட்டை ​எடுத்துச் செயற்பட்டிருந்தார். அப்படிப்பட்ட தலைமை நீதிபதி மீது எழுந்துள்ள இந்தப் புகார், இந்தியத் தேர்தல் களத்தை திசை திருப்ப மட்டுமே உதவி செய்திருக்கிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில், களம் இப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது, இது போன்ற புகார்கள் கடந்த காலத்திலும் வந்திருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கங்குலி, 2-ஜி வழக்கில் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தவர். அவர் ஓய்வு பெற்று, மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த நேரத்தில் வந்த புகாரால், அவர் பதவி விலகினார். பிறகு, “புகாருக்கு ஆதாரம் இல்லை” என்று, இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.   

இதேபோல் இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஸ்வதிந்திரகுமார் மீது, புகார் எழுந்து பிசுபிசுத்துப் போனது. இப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது புகார் கூறப்பட்டுள்ளது. தன் மீதான புகார் என்றாலும், தனியாக நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.   

அதேநேரத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை இப்படி மாட்டி விட நடைபெற்ற சதி குறித்த விவரங்களை, உத்தவ் சிங் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்திடம் கொடுத்துள்ளார். அதுவும் தனி நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இறுதியில் இந்தத் திடீர் புகாரில் இருந்து, உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.  

உச்சநீதிமன்றத்தைச் சீரமைக்க எடுத்த நேர்மையான நடவடிக்கைகளுக்காக, இப்படியொரு புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்தித்துள்ளார். இந்தப் புகார் குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.   

தேசிய பாதுகாப்பு, புல்வாமா தாக்குதல், இராணுவ வீரர்களின் வெற்றி போன்றவற்றை முன்வைத்து, பிரசாரம் மூன்றாவது கட்டத்திலும், அடுத்த கட்டங்களிலும் அனல் பறக்கிறது. இது போன்ற விடயங்களைப் பேசக்கூடாது என்று, ஏற்​கெனவே வழிகாட்டல்களை வழங்கியிருக்கும் தேர்தல் ஆணையகமோ, தடுக்க முடியாமல் தத்தளித்து நிற்கிறது.   

நான்கு முதல் ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறும் பீஹார், சட்டிஷ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கன்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் 240 நாடாளுமன்றத் தொகுதிகளில், இந்தப் பிரசாரம் மேலும் ‘சுனாமி’ போல் வலுப்பெறும் என்பதை, உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய, பிரதமர் நரேந்திர மோடி நடத்தியிருக்கும் பிரமாண்டமான பேரணியில் எதிரொலிக்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .