2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இந்தியா: சாமியார்களின் ‘சாமம்’

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று தசாப்தங்களாக சாமியார்கள், இந்தியச் சமூகங்களை ஆளுபவர்களாயிருக்கிறார்கள்; இது தற்செயலல்ல.   

இந்தியாவில், உலகமயமாக்கலும் திறந்த சந்தையும் அறிமுகமான காலப் பகுதியிலேயே, இச்சாமியார்களின் வருகையும் நடந்தது. அவர்கள் சந்நியாசிகளாகவன்றி, கோடிகளில் மிதக்கும், குற்றச் செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள்.   

கதவைத் திறந்து, ‘கமெரா’ உள்ளே வந்து, அவர்களின் கேவலங்களை அம்பலப்படுத்திய பின்பும், அவர்கள் காட்டில் மழைக்குக் குறைவில்லை; பக்தர்களுக்கும் குறைவில்லை. 

கோடிகள், மாடமாளிகைகள் ஒருபுறமிருக்க, இவர்களின் காமலீலைகள், மறுபுறம் வியப்பூட்டுகின்றன. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா உட்பட, கடந்த வாரம் தண்டனை பெற்ற குர்மீத் சிங் வரை, காமம் அவர்களின் வாழ்வின் பகுதியாகும்.   

இந்தியாவில் கடந்த வாரம், பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆதரவாகக் கட்டவிழ்ந்த கலவரத்தில், 38 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 300க்கும் அதிகமானவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள்; பலகோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமாகியுள்ளன.   

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மலோட், பல்லுவான்னா ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் தீக்கிரையாகின. டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் நின்ற, ‘ரேவா எக்ஸ்பிரஸ்’ ரயிலின் இரண்டு பெட்டிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.   

இவை யாவும், நீதிமன்றம் ஒரு சாமியாரைக் குற்றவாளியாகக் கண்டதன் விளைவுகள். ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, இராணுவத்தை அழைத்தே நிலைமை கட்டுக்கு வந்தது என்றால், குர்மீத் சிங்கின் செல்வாக்கை நீங்கள் கணித்துக் கொள்ளலாம்.  

இந்தியாவில், இவ்வாறு சாமியார்களின் வரவையும் அவர்களது பெருகும் செல்வாக்கையும் சாத்தியமாக்கியவைகளாக என, இரண்டு முக்கிய விடயங்களைச் சுட்டலாம்.  

முதலாவது, இந்திய அடையாளத்துக்கும் தேசிய இன அடையாளத்துக்கும் முரண்பாடு இருப்பதுபோல, ‘இந்து’ அடையாளத்துக்கும் இந்து மதத்தின் பிரிவுகளுக்குமிடையேயும் குறிப்பாக முரண்பாடுகள் உள்ளன. அவை, பாரம்பரிய மத அடிப்படையில் அமைந்தவை.   

அதேவேளை, அந்த உள்முரண்பாடுகள் கடந்த, புதிய வடிவங்களின் தேவையை உணர்த்தின. அடிப்படையில் இவை, மேலாதிக்கம் சார்ந்த முரண்பாடுகளாகையால் புதிய வடிவங்களில் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கும் தேவை இருந்தது.   

ஒரு பெரும்பான்மை அடையாளத்தை இழக்காமல், அப்பெரும்பான்மைக்குள் தன்னைக் கரைத்து, தனது தனித்துவத்தையும் இழக்க விரும்பாமல் தடுமாறும் தன்மையை மதங்களில் காணலாம்.   

தத்தமது பிரிவுகளின் அடையாளங்களை மதத்தின் அதி உண்மையான விளக்கம் சார்ந்தவை என்றோ, தொன்மையானவை என்றோ காட்டும் போக்கை நாம் பரவலாகக் காணலாம். அதேவேளை, குறிப்பான சில நடைமுறைகள் கூடிய சமூகப் பொருத்தப்பாடுடையவை என்றும் பகுத்தறிவு சார்ந்தவை என்றும் காட்டும் முனைப்பையும் காணலாம்.   

இதற்கு அமைவான காவலர்களாக சாமியர்கள் உருவாயினர். வழிபாட்டு முறைகளும் அவை சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களும் பெருமளவும் மரபின் பெயராலேயே நிலைபெற்றாலும், இன்று அவற்றை விஞ்ஞான ரீதியாக விளக்கி, நியாயப்படுத்தும் தேவை உணரப்படுகிறது.   

சடங்கு சம்பிரதாயங்களில் ஒவ்வொன்றையும் விளக்கவும் நியாயப்படுத்தவும் நமது முன்னோரின் அறிவும் ஆழ்ந்த ஞானமும் பற்றிய புனைவுகள் உருவாக்கப்படுகின்றன. இப்புனைவுகள், வரலாற்று உண்மைகளைத் திரிப்புக்கும் மறுப்புக்கும் ஆளாக்குகின்றன.

வசதிக்கேற்ப சாட்சிக்கு அழைக்கப்படும் பகுத்தறிவும் விஞ்ஞானமும் திரிக்கவும் குறுக்கவும்படுகின்றன. இவற்றைச் செயற்படுத்துவோராகச் சாமியர்கள் தங்களைத் தகவமைத்துள்ளார்கள்.   

இரண்டாவதாகக், கடந்த மூன்று தசாப்தங்களாக புதிய கதியில் நகரும் பொருளாதாரக் கொள்கைகள், முன்னேற்றத்தின் பெயரால் பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்வை அழிப்பதோடு, புதுப்புதுச் சிக்கல்களை அன்றாடம் உருவாக்குகின்றன.   


அதிகரிக்கும் கல்வி, மருத்துவச் செலவுகள், வீட்டுவாடகை அல்லது வீட்டுக்கடன், வாழ்க்கைத் தரம் பேணும் செலவுகள் எல்லாம் சேர்ந்து பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் தனிமனிதனை அச்சுறுத்துகின்றன.   

வாழ்வின் உயரங்களை எல்லோராலும் அவ்வளவு சுலபத்தில் அடைய முடியாது. எனினும், அனைவருக்குள்ளும் ‘வாழ்வின் உச்சத்தைத் தொடமுடியும்’ என்ற மாயை, நீக்கமற நிரம்பியுள்ளது. இந்த இலக்கு உருவாக்கும் ஆசை, ஆசையால் விளையும் போட்டி, போட்டியில் தோல்வி என எட்டாத வாழ்க்கை, மாயமானாக அலைக்கழிக்கக், கைக்கெட்டிய வாழ்க்கை உப்பாக உவர்க்கிறது.   

நகர வாழ்க்கை, பரபரப்பு, வேகம், போட்டி, பொறாமை, சதி, வஞ்சகம், வெறி, வக்கிரம், இயலாமை, பதட்டம், மன அழுத்தம், மனச்சிதைவு, இரத்த அழுத்தம், நோய்கள் என வாழ்க்கை முடிவின்றி அலைக்கழிக்கிறது.   

இந்த அலைக்கழிச்சலில் இருந்து, ‘மீட்க யாருமில்லையா?’ என்ற கூக்குரலாக பின்னர் எழுகிறது. அதனிடையே மீட்போராயும் தீர்வு தருவோராயும் கடவுளைக் காட்டுவோராயும் இந்தச் சாமியார்கள் அமைகிறார்கள்.   

சிறிதாகவோ, பெரிதாகவோ பணம் செலவழித்து, இந்த விஷச் சுற்றிலிருந்து கடைத்தேற முடியும் என்ற நம்பிக்கையை நவீன ஆன்மீகச் சாமியார்கள் பரப்புகிறார்கள். நடப்பில் சாதாரணமாயும் கனவில் அசாதாரணமாயும் வாழும் நடுத்தர வர்க்கம், இந்த ஆன்மீகச் சந்தை வலையில் சிக்கக் காத்திருக்கிறது; அதுவே சாமியார்களின் பலம்.   

அண்மையில், தண்டனை பெற்றமைக்காக வன்முறையைக் கட்டவிழ்த்த 50 வயதான குர்மீத் சிங்கின் அடையாளம் சாமியார்; நவீன கோர்ப்பரேட் சாமியார்களின் வரிசையில் இவர் தனி ரகம். நடிகர், பாடலாசிரியர், பாடகர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், சமூக சேவகர், விளையாட்டு ஆர்வலர் எனப் பல்வேறு தோற்றங்களை இவர் பூண்டுள்ளார்.   

பல கோடிகளுக்குச் சொந்தக்காரரான இக் குற்றச் செயற்காரர், ஏறத்தாழ ஆறு கோடி பக்தர்களைக் கொண்ட ‘தேரா சாச்சா சௌதா’ என்ற குழுவின் தலைவராவார்.   

‘தேரா சாச்சா சௌதா’, பலுக்கிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா பலோசிஷ்தானி என்பவரால் 1948 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட ஒரு மதக் குழுவாகும். சீக்கிய, இந்து மதங்களின் நம்பிக்கைகளைக் கலந்து உருவான ஒரு கோட்பாட்டை முன்மொழியும் இக்குழுவுக்கு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் இடைநிலைச் சாதிகளிடையிலும் தலித்துகளிடையிலும் மிகுந்த செல்வாக்குள்ளது.   

குர்மீத் சிங்கைத் தற்போது தண்டித்த வழக்கு 2002 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு, ஒரு பெண் எழுதிய ஒரு கடிதத்தில் தொடங்கியது. அக்கடிதத்தில், குர்மீத் தன்னையும் மடத்தில் இருந்த பிற பெண் சாமியார்களையும் 
வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக, அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.   

தனது குடும்பத்தவர்கள், ‘தேரா’ மடத்தின் தீவிர பக்தர்கள் என்றும், குர்மீத்தைக் கடவுளாகவே ஏற்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தான் உட்பட, மடத்தில் தங்கியிருந்த பல பெண்கள், பாலியல் சித்திரவதைக்கு ஆளாவதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்ட அப்பெண், அதை ஊடகங்களுக்கும் அனுப்பினார்.   

உள்ளூர்ப் பத்திரிகையாளரான ராம்சந்தர் என்பவர், வன்புணர்வு குறித்த கடிதத்தையும் குர்மீத்தின் பிற முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்தார். மக்களிடையே தனது போலி பிம்பம் கலைவதைக் கண்டு சினந்த குர்மீத், தனது அடியாட்கள் மூலம், ராம்சந்தரைச் சுட்டுக்கொன்றார். பாலியல் வழக்கைத் தொடர்ந்து, ராம்சந்தரைக் கொன்றதாக குர்மீத்தின் மேல் தொடரப்பட்ட மேலும் ஒரு வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது.   

இதற்கிடையே, வன்புணர்வுக் குற்றச்சாட்டுக் கடிதத்தை ஹரியானா உயர்நீதி மன்றம், தானே முன்வந்து, வழக்காக ஏற்றுக் கொண்டு, அதைக் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. ‘தேரா’ மடத்தை விட்டு நீங்கிய பல பெண் சாமியார்களை, சி.பி.ஐ விசாரித்த போது, முன்னாள் பெண் சாமியார்கள் இருவர், குர்மீத் தங்களை வன்புணர்வுக்கு உட்படுத்தியதை உறுதிப்படுத்தினர்.   

தான் கிருஷ்ணரின் அவதாரமென்றும், மடத்தில் உள்ள பெண் சாமியார்கள், கோபியர்கள் என்றும் சொல்லி, அவர்களை மூளைச் சலவை செய்த குர்மீத், அவர்களின் பாவங்களைப் போக்க வேண்டின், தன்னோடு உறவு கொள்ள வேண்டும் எனச் சொல்லியே, பெண் சாமியர்களை வன்புணர்வுக்கு உட்படுத்தினார்.   
அதேவேளை, தனது சீடர்கள் பாலியல் ‘நல்லொழுக்கத்தை’ கடைபிடிக்க வேண்டி, மடத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆண் சாமியார்களின் விரைகளை அறுத்த குற்றச்சாட்டும், குர்மீத் சிங்கின் மேல் உள்ளது. இந்தியாவில் பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்ற முதலாவது சாமியாரான பிரேமானந்தா, இலங்கையர் என்பதால், இலங்கையில் இவர் வழக்கு நன்கறியப்பட்டது. சிலகாலத்துக்கு முன்பு, பிரேமானந்தா வழக்கில் பிரேமானந்தாவுக்கு உடந்தையாயிருந்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மூன்று குற்றவாளிகளையும் விடுதலை செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பரிந்துரைத்தமை நினைவிருக்கலாம்.   

அத்துடன், ‘2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து ஒரு குற்றவாளி; பாவி என்று அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இன்று அவரை எல்லோரும் வணங்குகிறார்கள். அவ்வாறே சுவாமி பிரேமானந்தாவும் செய்யாத குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார்” என்ற விநோதமான கருத்தை முதலமைச்சர் அண்மையில் தெரிவித்தமையை இங்கு நினைவூட்டல் தகும்.   

இந்தச் சாமியார்களின் வளர்ச்சியில் அரசியலின் பங்கு பெரிது. குறிப்பாக பாரதிய ஜனதா அதன் பிரதான தளமாகும். “அவர்கள் (முஸ்லிம்கள்) ஓர் இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முஸ்லிம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” எனச் சூளுரைத்துக் கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காதில் கடுக்கனும் போட்டுக் காவி உடையில் திரியும் யோகி ஆதித்யநாத், இன்று உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர். 

 இதுவரை கலவரம் செய்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், இடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொடூர ஆயுதங்களை வைத்திருத்தல் உட்பட்ட பல்வேறு பிரிவுகளில், யோகி ஆதித்யநாத்தின் மீது குற்றச்செயல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.   

அவற்றில் எதுவும் இந்தச் ‘சாமியார்’ முதலமைச்சர் ஆவதைத் தார்மீகமாகவும் சட்டரீதியாகவும் தடுக்க இயலாமையே, இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு. இவைகள்தான் இந்தியாவில் சாமியார்களை வாழவைக்கின்றன.   

பெங்களூருக்கு அருகே ஒரு மலையை அரசாங்கத்திடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து ‘வாழும் கலை’யை நடாத்தும் ரவிஷங்கரின் வருடாந்த வணிக மதிப்பு 10 பில்லியன்  ரூபாய்.   

டெல்லியில் ஆச்சிரமம் நடாத்தும் ஆஷரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் எட்டு பில்லியன் ரூபாய். நாடு பரந்த தியான நிலையங்களை நடத்திவரும் சுதர்ஷன் மகராஜூக்கு ஏழு பில்லியன் ரூபாய். பாடசாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் வருடாந்த வரவு செலவு 10 பில்லியன் ரூபாய். வட இந்தியாவில் யோக சிகிச்சையும் மருந்து விற்பனையும் செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 10 பில்லியன் ரூபாய்.   

இவை ஒரு வருடக் கணக்கு மட்டுமே; இவர்களின் சொத்து மதிப்பு அதன் பல மடங்கு. உதாரணமாக, அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு 30 பில்லியன் ரூபாயைத் தாண்டுகிறது.   

இவ்வாறு பணக்கார சாமியார்கள் இந்தியாவெங்கும் வலம் வருகிறார்கள். ஒவ்வொருவரது கதையும் தனித்தனிக் கட்டுரைகளாக பலபக்கங்களுக்கு நீளும் தகிடுதத்தங்களையும் தில்லுமுல்லுகளையும் கொலைகளையும் வன்புணர்வுகளையும் கொண்டது. இந்தச் சாமியர்களின் வாழ்வில் காமமும் கலவியும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இவற்றுக்கு மூலகுரு எனக் காஞ்சிக் காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனலாம். இவர் கொலைக்குற்றத்துக்காக விசாரணைச் சிறையிலிருந்தவர் என்பது போக, அனைத்துச் சாமிமாரது கேவலங்களையும் காத்தருளும் மூலவருமாவார். காஞ்சி மடத்தின் இப்போதைய சொத்து மதிப்பு 150 மில்லியன் ரூபாய்.   

நித்தியானந்தாவின் பஞ்சணை, உலகறிந்த போது, காத்து உதவியவர் இவரே. மதமும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து வர்த்தகத்ததுடன் குலாவுகையில் குர்மீத் சிங் போன்றவர்கள் உருவாவது தவிர்க்கவியலாது.   

இச் சாமியார்களின் காமலீலைகளைக் ‘கிளுகிளு’ செய்திகளாக ஊடகங்கள் பரிமாற, அதே கிளர்ச்சியுடன் மக்கள் அதைக் கடந்து போகிறார்கள். இல்லாவிடின் அம்பலப்பட்ட பின்னும் எவ்வாறு நித்தியானந்தாவால் அருளுரை ஆற்ற முடிகிறது? ஆயிரக்கணக்காணவர்கள் ஏன் இன்னமும் அவரைக் காணத் தவமிருக்கிறார்கள்?   

சாமியார் குர்மீத் சிங்குக்கு வழங்கப்பட்ட தண்டனை, சாமியார்களின் யோக்கியதையை இன்று முக்கிய பேசுபொருளாக்கியுள்ளது. ஆனால் பலர் ,’நல்ல சாமியர்களிடையே குர்மீத் சிங் ஒரு கறுத்த ஆடு’ என்றவிதமாகப் பேசி, மற்றச் சாமியார்கள் யோக்கியர்கள் என்ற பிம்பத்தைக் கட்டுகிறார்கள்.   

ஒரு விடயத்தைத் தெளிவுபடக் கூறவேண்டும். காசு திரட்டும் சாமியார்களில் நல்ல சாமியார், கெட்ட சாமியார் என்ற பாகுபாடு என்றுமே இருந்ததில்லை; இருக்கவும் முடியாது. அகப்பட்டவன், அகப்படாதவன் என்ற வேறுபாடு மட்டுமே உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X