2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியா: நீதியரசர்களின் கலகம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2018 ஜனவரி 18 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதியின் உறைவிடங்களாக நீதிமன்றங்கள் இருந்து வருகின்றன. நீதி, நீதியாக வழங்கப்படுகிறதா என்கிற கேள்வி காலங்காலமாய் கேட்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை, நீதியின் மீதான நம்பிக்கையைத் தக்கவைத்துள்ளது எனலாம்.   

இருந்தபோதும், மூன்றாமுலக நாடுகளில் ‘நீதியின் விலை’ பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. சாதாரண மக்கள் பாதிக்கப்படும்போது, தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்பும் இறுதி நிறுவனமாக, நீதித்துறை இருந்து வந்திருக்கிறது.   

இதனால் அரசாங்கத்தின் வேறெந்த நிறுவனத்தையும் விட, நீதித்துறையின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளது.  

 இருந்தபோதும், நீதியின் விலை குறித்த பல்வேறு நிகழ்வுகளை, ஆண்டாண்டுகளாய் நாம் கேட்டு வந்திருக்கிறோம். மக்களின் கடைசி நம்பிக்கையாக, நீதிமன்ற‍ங்கள் இல்லை என்பதை, நீதிமன்றங்கள் தொடர்ந்து நிறுவி வந்திருக்கின்றன.   

இந்திய வரலாற்றில், முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வொன்று, கடந்தவாரம் நடந்தேறியது. இந்தியாவின் தலைமை நீதியரசருக்கு அடுத்த நிலையில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதியரசர்கள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினார்கள்.   

அவர்கள், இந்திய ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள ஆபத்துப் பற்றி, மக்களை எச்சரிப்பதாகவும் இந்திய ஜனநாயகத்தின் பிற தூண்களான சட்டத்துறை, நிர்வாகத்துறை என்பன சீரழிந்து, செல்லரித்துப் போனது போலவே, நீதித்துறையும் சீரழிந்துள்ளது என்ற எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளனர்.   

இந்நான்கு நீதியரசர்கள் கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில், “தலைமை நீதியரசர் தீபக் மிஷ்ரா, வழக்குகளை நீதியரசர்களுக்கு ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டுகிறார்; நீதியரசர்கள் நியமனத்தில் கலந்தாலோசிப்பதில்லை எனப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கு, நீதிபதி லோயா மரணம் எனச் சில பிரச்சினைகளை மட்டும் உதாரணங்களாகக் காட்ட விரும்புகிறோம். பலவற்றைக் கூறினால், தர்மசங்கடமாக இருக்கும் எனத் தவிர்க்கிறோம்” எனப் பல விடயங்களைப் பொதுவெளியில் முன்வைத்தார்கள்.  

“நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, எங்களுக்கு வேறு வழியில்லை. தலைமை நீதியரசருடன் பேசித் தீர்வுகாண நாங்கள் எடுத்த முயற்சிகள், தோல்வி அடைந்து விட்டன. இதற்குமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை, நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்; எங்களை இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்து விட்டன” எனச் சொல்லி, எழுந்து சென்றார்கள்.  

இந்நிகழ்வு, இந்தியாவின் ஜனநாயக மூடியின் இறுதிப் பாதுகாப்பையும் கிழித்து எறிந்துவிட்டது. இந்திய ஜனநாயகம் பற்றி, பெருமை பேசும் அனைவரும், இந்திய நீதித்துறையைக் காக்கக் களம் கண்டார்கள்.  

 ஊடகங்களில் இச்செய்திக்கான இடம், மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. “இது நீதியரசர்கள், தலைமை நீதியரசருடன் பேசித் தீர்க்க வேண்டிய விடயம். இது, உச்சநீதிமன்ற நீதியரசர்களின் பெரும்பான்மையான கருத்தல்ல; வெறும் நான்கு பேரின் கருத்து மட்டுமே” என, இந்திய ஜனநாயகத்தின் மானம் காக்க, கருத்துக் காவலர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.   

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதியரசர்களும், உச்சநீதிமன்றத்தின் மிகவும் மூத்த நீதியரசர்கள்.   

மூத்தோர் அடிப்படையில், ரஞ்சன் கோகோய், அடுத்த தலைமை நீதியரசராகப் பதவியேற்க உள்ளவர். இந்நிலையில் இவர்கள், நேரடியாக மக்களைச் சந்தித்ததானது, நீதித்துறையின் மோசமான சீரழிவைக் காட்டி நிற்கின்றது.   

கடந்த சில காலமாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக, நீதித்துறையின் மீதும், நீதியரசர்கள் மீதும் வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரத் துஷ்பிரயோக‍ங்கள், நீதிக்குப் புறம்பான தீர்ப்புகள் என, நீதித்துறை ஊசலாடிய நிலையிலேயே, இந்நிகழ்வு நடந்துள்ளது என்பது முக்கியமானது.   

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளர் குற்றமே செய்யவில்லை என்று, சம்பந்தப்பட்ட சி.பி.ஐ வாக்குமூலம் கொடுத்த பின்னரும், 24 ஆண்டுகளாக பேரறிவாளர் சிறையில் வாடுகிறார்.  

ஜெயலலிதா வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முறைகேடான பிணை, நீதியரசர் குமாரசாமியின் முறைகேடான தீர்ப்பு, பிறகு அவர் மரணம் அடையும் வரை வழக்கின் தீர்ப்பை வழங்காமல் இழுத்தடித்தது உச்ச நீதிமன்றம்.  

2016 ஆம் ஆண்டு, தற்கொலை செய்து கொண்ட அருணாசல முதலமைச்சர் கலிகோ புல், தற்கொலைக் கடிதத்தில் உச்ச- -நீதிமன்ற நீதியரசர்கள் மீது ஊழல் புகாரை முன்வைத்திருந்தார்.   

தலைமை நீதியரசர் தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர், சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக, நீதியரசர்களின் தரகர்கள் 370 முதல் 860 மில்லியன் இந்திய ரூபாய்களைக் கேட்டதாக, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.   
கலிகோ புல்லின் மரணசாட்சிக் கடிதத்தை, பொலிஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியன, பொது வெளிக்கு அனுமதியாமல் தடுத்திருந்த நிலையில், கடந்த எட்டாம் திகதி, முழுக் கடிதமும் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதில், நீதித்துறையில் புரையோடிப் போயுள்ள ஊழல் குறித்தும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், கலிகோ புல் விரிவாக எழுதியுள்ளார்.   

இவை, இந்திய நீதித்துறையை மையப்படுத்திய சில நிகழ்வுகள் மட்டுமே. இதேபோல ஏராளமான நிகழ்வுகள், தீர்ப்புகள் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.   

இருந்தபோதும், மக்களுக்கு நீதித்துறை மீதான குறைந்தபட்ச மரியாதை இருந்தது. ஆனால், கடந்த வார நிகழ்வுகள், அதையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளன. நான்கு நீதியரசர்களும் சுட்டிக்காட்டிய இரண்டு வழக்குகளிலும், தலைமை நீதியரசர் தீபக் மிஷ்ராவின் பங்கு முக்கியமானது.   

முதலாவது வழக்கு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு, புதியதொரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு, 2015 இல் மருத்துவச் சபையிடம் விண்ணப்பித்தது. அவ்விண்ணப்பத்தைப் பரிசீலித்த மருத்துவச் சபை, அக்கல்லூரிக்கு மருத்துவம் கற்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் இல்லை என மறுத்துவிட்டது.  

 இருந்தபோதும், நீதிமன்றில் முறையிட்டு, அடுத்த ஆண்டுக்குள் எல்லாக் குறைபாடுகளையும் சரி செய்வதாக உத்தரவாதமளித்து, பிரசாத் கல்வி அறக்கட்டளை அனுமதி பெற்றது.  

அடுத்த ஆண்டில், கல்லூரியைச் சோதனை செய்த மருத்துவச் சபை, மருத்துவமனையில் நோயாளிகள் இல்லை; கல்லூரியிலும் மாணவர்கள் இல்லை என்பன உள்ளிட்ட பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, அடுத்த இரண்டாண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது பிரசாத் அறக்கட்டளை.  

தலைமை நீதியரசர் தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, அறக்கட்டளைக்கு அநீதி எதுவும் இழைக்கப்படாமல் தவிர்க்கும்பொருட்டு, இன்னொருமுறை முடிவைப் பரிசீலிக்குமாறு, சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.   

அறக்கட்டளை நிர்வாகத்திடம் இன்னொரு விசாரணை நடத்தி, இன்னொரு முறை பரிசீலித்த சுகாதார அமைச்சகம், மீண்டும் பழைய முடிவையே உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது.   

இருந்தபோதும் தலைமை நீதியரசர், கல்லூரியை மீண்டும் ஒருமுறை நேரில் சென்று சோதனையிடுமாறு மருத்துவச் சபைக்கு உத்தரவிட்டார். இறுதியில் தகுதியற்றவை என்று அனுமதி மறுக்கப்பட்ட மேலும், ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு, உச்சநீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.   

பிரசாத் அறக்கட்டளைக்கு ஆதரவாக, தலைமை நீதியரசர் தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்த மறுநாளே, முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ பதிவு செய்தது.   

ஓய்வு பெற்ற ஒரிசா உயர்நீதிமன்ற நீதியரசர் குத்தூஸி உள்ளிட்டோர், டில்லியைச் சேர்ந்த விஸ்வநாத் அகர்வாலா என்ற நீதிமன்றத் தரகர் மூலம், பிரசாத் கல்வி அறக்கட்டளைக்குச் சாதகமான தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தில் வாங்குவதற்கு முயன்றனர் என்பது குற்றச்சாட்டு.   

குத்தூஸி, ஹவாலா புரோக்கர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 20 மில்லியன் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

சி.பி.ஐ இன் முதல் தகவல் அறிக்கையில், நீதியரசர்களின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், இவர்களுடன் பெயர் தெரியாத பொது ஊழியர்கள் சிலர் என்று கூறப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, சிரேஷ்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், பிரசாந்த் பூஷண், காமினி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும், நீதியரசர் சிக்ரி மற்றும் நீதியரசர் செல்லமேஸ்வர் ஆகியோரது தலைமையிலான அமர்வுகளில் தனித்தனியே இரு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.   

“இவ்விடயம் தலைமை நீதியரசரின் மீது குற்றஞ் சுமத்தப்பட்டது தொடர்பிலானது. எனவே, இதை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அந்நீதியரசர்கள் குழுவில் தீபக் மிஷ்ரா உள்ளிட்ட மூன்று நீதியரசர்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள நீதியரசர்களில் சிரேஷ்ட தரத்தில்க உள்ளவர்களான ஐந்து பேர் கொண்ட அரசமைப்பு அமர்வு கண்காணிக்க வேண்டும்” எனக் கோரினர்.  

 இதற்குச் சாதகமாக நீதியரசர் செல்லமேஸ்வர் தீர்ப்பளித்தார். ஆனால், மறுநாள் தலைமை நீதியரசர் மிஷ்ரா, இவ்வழக்கை விசாரிக்க, தனது தலைமையிலான எழுவர் கொண்ட குழுவை நியமித்தார். இதில், இரு நீதியரசர்கள் விலகிக் கொள்ள, ஐவர் கொண்ட குழு, இவ்வழக்கை ஏற்றது. இதில் மூவர் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியவர்கள். மனுவை விசாரித்த நீதியரசர் சிக்ரி மற்றும் நீதியரசர் செல்லமேஸ்வர் ஆகியோர் கட்டாயம் இக்குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்களை தலைமை நீதியரசர் உள்ளடக்கவில்லை.   

விசாரணையில், பிரசாந்த் பூஷண் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. “முதல் தகவல் அறிக்கை உங்களைக் குறிப்பிடுவதால், நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது” என்று, தீபக் மிஷ்ராவிடம் பிரசாந்த் பூஷண் கூறினார்.

“என் பெயர், முதல் தகவல் அறிக்கையில் இல்லை. உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பேன்” என்றார் தீபக் மிஷ்ரா.   

“ஒரு நீதியரசர் மீது, யாரும் முதல் தகவல் அறிக்கை போட முடியாது எனும்போது, அப்படி முதல் தகவல் அறிக்கை போட்டிருந்தால், அதுவே நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்” என்றார், இன்னொரு நீதியரசர் அருண் மிஷ்ரா.   

அதற்கு ஆதரவாக, பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல், நீதியரசர்கள் குழப்பம் விளைவித்தனர். “மனுதாரராகிய என்னைப் பேசவிடாமலேயே வழக்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருப்பம் போலத் தீர்ப்பு எழுதிக்கொள்ளுங்கள். நான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறேன்” என்று கூறி, வெளியேறினார் பிரசாந்த் பூஷண்.   

இறுதியில் அவருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் அடிப்படையில், 2.5 மில்லியன்  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நீதியரசர்களுக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டுச் சொன்னாலே தண்டிப்போம் என்று மிரட்டுவதற்காகவே இந்த உத்தரவு என்று இதை விமர்சித்திருக்கிறார் பிரசாந்த் பூஷண்.  

நான்கு நீதியரசர்களும் சுட்டிய இரண்டாவது வழக்கு, நீதிபதி லோயா மரணம் தொடர்பிலான வழக்கு. குஜராத்தின் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த அமித் ஷா, தனக்கு வேண்டாதவர்களைக் கொலை செய்வதற்காகப் போலி பொலிஸ் மோதல்களுக்கு உத்தரவிட்டார் என்பதை, ஆதாரங்களுடன் சி.பி.ஜ நிறுவிய நிலையில், இதை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், இவ்வழக்கை குஜராத்துக்கு வெளியே மாற்றவும், நியமிக்கப்படும் சிறப்பு நீதிபதி, இவ்வழக்கை முழுவதுமாக நடாத்த வேண்டும் எனவும் அறிவித்தது.   

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த நீதியரசர், பிரதான குற்றவாளியான அமித் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரினார். இக்கட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராகவும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அமித் ஷாவும் உருவெடுத்திருந்தனர்.   

இக்கோரிக்கையை அடுத்து, நீதிபதி மாற்றப்பட்டு, அவ்விடத்துக்கு நீதிபதி லோயா நியமிக்கப்பட்டார். அவ்வழக்கு, விசாரணையில் இருக்கும்போது, நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தார். இறப்பதற்கு முதல்நாள், சாதகமான தீர்ப்புக்கு 1000 மில்லியன் தருவதாக, அமித் ஷாவின் ஆட்கள் பேரம் பேசியதாக, லோயாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.   

லோயாவுக்குப் பின் வந்த நீதிபதி, அமித் ஷாவை உடனே அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவித்து, அவரை நிரபராதி என அறிவித்தார்.   

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அதை முடக்கும் விதத்தில், உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதைச் செய்தவர், தலைமை நீதியரசர் தீபக் மிஷ்ரா. இவ்வழக்குக்கு, மூத்த நீதியரசர்களைத் தவிர்த்து, ஏனையோர் நியமிக்கப்பட்டனர்.   

இவ்விரண்டு வழக்குகளை மட்டுமே, கடந்தவாரம் நீதியரசர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். இவை, நீதித்துறை அரசாங்கத்தின் சேவர்களாகவும் ஊழல் நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதற்கு போதுமான தரவுகளைத் தந்துள்ளன.   

இந்தியாவின் உச்சநீதிமன்றம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி, ஏற்கெனவே சிதைந்துள்ள இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே ஆட்டங்காணச் செய்துள்ளது.   

இந்திய ஜனநாயகம் குறித்த பெருமைப்பேச்சுகளின் பின்னால், நிறைந்திருக்கின்ற பொய்யையும் புரட்டையும் புனைகதையை மக்கள் இனியும் நம்பினால் காலாதிகாலத்துக்கும் ஜனநாயகத்தின் பெயரால் அவர்கள் ஏமாற்றப்படுவது உறுதி. புதிய ஜனநாயகம் பற்றி, இனிச் சிந்திக்கத் தொடங்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .