2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

இந்தியா, பாகிஸ்தான் ஆகியன சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்தியா பாகிஸ்தானில் தொடர்ச்சியாகவே, குறிப்பாக பாகிஸ்தான் ஒரு பிராந்திய வல்லரசாக வருவதைத் தடை செய்தல் மற்றும் இந்தியாவுக்கு போட்டியாக விளங்குதலை நிறுத்தல் தொடர்பில் தனது தலையீட்டை வைத்திருந்ததுடன், அதன்மூலம் பாகிஸ்தானின் உட்கட்டமைப்பை நிலையற்றதாக்குவதிலும் தீவிரமாகவே ஈடுபட்டுள்ளது.

இந்தியா ஒருபோதும் சுதந்திரத்துக்கு பின்னரான இந்திய - பாகிஸ்தான் பகர்வை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வரலாற்று ரீதியாக இத்தலையீட்டின் காரணமாகும். பாகிஸ்தானில் இந்திய தலையீடு தொடர்பான - குறிப்பாக உளவுத்துறையின் தலையீடு அண்மைய காலங்களை பொறுத்தவரை அதிகரித்திருக்கின்றமைக்கு இந்திய றோ அதிகாரியான கமாண்டர் குல்பூசன் ஜாதவ் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி மஷ்கெல் பலூசிஸ்தானில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டமை, குறித்த கைதின்போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு மேல் சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததில் இருந்து வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியிருந்தது.

பலூசிஸ்தான் மற்றும் கராச்சியில் பயங்கரவாத நிதியுதவியில் ஈடுபட்டதற்கான மறுக்கமுடியாத ஆதாரத்துடன் இந்தியாவை எதிர்கொள்வதற்கும் அம்பலப்படுத்துவதற்கும் மேற்கொண்டிருந்த குறித்த இந்த புலனாய்வு நடவடிக்கை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்திருந்தது. குறித்த நடவடிக்கை மூலம், இந்திய புலனாய்வுத்துறை கராச்சி மற்றும் பலூசிஸ்தானில் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நிதி மற்றும் உளவு ரீதியான உதவிகளை வழங்கியிருந்தமை புலப்பட்டதுடன், குறித்த பயங்கரவாத நடவடிக்கைகளின் போது, பல ஆயிரம் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய உளவுத்துறை குறித்த உளவு நடவடிக்கைகளில் பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு நிதியளித்தல், குறிப்பாக கராச்சியில் குறிவைக்கப்பட்ட கொலைகள், ரயில் தடங்களில் குண்டு வெடிப்புகள், தாக்குதல்களுக்கு ஊக்கமளித்திருந்தமை என பலவேறு விடையங்கள் குறித்த அதிகாரியின் கைதைத் தொடர்ந்து வெளிவந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் குறித்த சர்வதேச நீதிமன்றில் இந்தியாவுக்கு எதிரான வழக்கில் கூறியிருந்தது.

வழக்ககை நன்கு விசாரித்திருந்த சர்வதேச நீதிமன்றமும், ஜாதவ் ஒரு போலி அடையாளத்துடன் எல்லையைத் தாண்டிய இந்திய கடற்படை அதிகாரியாக இருந்தார் என கூறியிருந்தமை இந்தியா பாகிஸ்தானில் மேற்கொண்டிருந்த உளவு நடவடிக்கையை அம்பலப்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் வர்ணனை செய்கின்றன. மறுபுறம், இந்திய ஊடகங்கள் தவறான பிரச்சாரங்களை தயாரிப்பதன் மூலம் தனது மக்களுக்கு குறித்த விடயம் திரிபுபடுத்தப்பட்டு புகட்டுவதற்கு செயல்பாடுகளை மேற்கொள்கின்றது என்றும் குறித்த பாகிஸ்தான் ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றன.

பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் மிகவும் மனச்சோர்வடைந்திருந்த தனது ஆயுதப்படைகளை சீர்குலைக்க இந்தியா விரும்பவில்லை என்பதால் இவ்வாறாக தனது உளவு நடவடிக்கை தொடர்பான உண்மையான நிலையை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் கருதமுடியும்என குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

எது எவ்வாறாயினும், குறித்த கைது தொடர்பாக இந்தியா கருத்து வெளியிடுகையில், ஒரு இந்திய பிரஜை பாகிஸ்தானால் தேவையில்லாமல் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானின் அரசியல் லாபங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார் எனவும் அவருக்கு இந்திய தூதரகத்தின் உதவியை வழங்க பாகிஸ்தான் மறுத்தல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறியிருந்தமை அவதானிக்கப்படவேண்டியதாகும்.

குறித்த இந்தியாவின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் கூட, குறித்த இந்த வழக்கின் தீர்ப்பு பலூச் கிளர்ச்சியாளர்களுக்குப் பின்னால் இந்தியா உள்ளது என்ற பாகிஸ்தானின் வாதத்தை ஆதரிக்கிறது என்பதுடன் பலப்படுத்தி உள்ளது என்பதே இப்போதைய நிலையாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான அதன் மூலோபாயத்தில் இந்தியா பல குறிக்கோள்களைக் கொண்டுள்ளது, முதலில் இந்தியா பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு வழங்குகின்ற உதவியை அதிகரிக்க விரும்புகிறது, இதன்மூலம் அவர்கள் பாகிஸ்தான் படைகள் மற்றும் பலூசிஸ்தானில் திட்டங்களில் பணிபுரியும் சீன பொறியாளர்களுக்கு எதிராக அதிக தாக்குதல்களை நடத்த முடியும் என இந்தியா கருதியிருக்கலாம் . [பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம் ஒரு மூலோபாய புள்ளியில் இருப்பது மற்றும், இது பிராந்தியத்தில் பொருளாதார மையமாக மாற்றம் பெறுகின்ற நிலைமை இந்தியாவின் நீண்ட கால நலன்களுக்கு ஏதுவானதல்ல என்பதை இந்தியா புரிந்துகொண்டதன் விளைவே , இந்தியா இந்த குவாடர் துறைமுக விருத்திக்கான திட்டத்தை நாசப்படுத்த விரும்புகிறது என கருதமுடியும்.

மறுபுறம், இந்த நோக்கத்துக்காகவே தான் இந்தியா ஈரானின் சஹாபஹார் துறைமுகத்தில் அதிக முதலீடு செய்கிறது என்பதையும் கருத்தில் கொண்டால், பாகிஸ்தானையும் சீனாவையும் ஒரே வேகத்தில் சீர்குலைக்க இந்தியா விரும்பியிருந்திருக்கலாம் - இதன் அடிப்படையிலேயே குறித்த தீவிரவாத குழுவுக்கு இந்தியா ஆதரவு தந்திருக்கலாம் என கருதமுடியும்.

பிற நாடுகளின் நேரடியானதோ அன்றி மறைமுகமான ஆதரவோ இல்லாமல், ஒரு கிளர்ச்சிக் குழு ஒரு நாட்டுக்கு எதிராக போராடுவது உண்மையில் சாத்தியமற்றது என்பதற்கு பல வரலாற்று உதாரணங்கள் உள்ளன. பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தானில் மற்றும் இந்தியாவில் உள்ள முகாம்களில் தீவிர பயிற்சி அளிக்கிறது என்பதே இப்போதைய பாகிஸ்தானின் பலப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்பதுடன், சர்வதேச அரசியலில் - மற்றும் மூலோபாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளில் அவற்றின் உளவுத்துறையின் வகிபாகம் மிகவும் முக்கியமானது என்பது ஒரு புறம் வெளிப்படையான உண்மை எனினும், சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு பாகிஸ்தானின் வாதத்துக்கு சாதகமாக அமைந்தமை இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், இந்தியா தொடர்ச்சியாக இதுபோன்ற உளவு நடவடிக்கைகளை பாகிஸ்தானில் மேற்கொள்வதனையும் முடியாத அல்லது கடினமான ஒரு நகர்வாக்கிவிடுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .