2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவும் தமிழ்த் தலைமையும்

என்.கே. அஷோக்பரன்   / 2017 நவம்பர் 20 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 119)

அரசியலில் முக்கியத்துவம் பெற்ற ஆயுதக் குழுக்கள்  

‘Out of sight is out of mind’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று. அதன் அர்த்தம், ‘பார்வையிலிருந்து விலகிவிட்டால், விரைவில் மனதிலிருந்தும் விலகிவிடுவர்’ என்பதாகும்.   

அரசனின் முக்கிய பண்புகளுள் ஒன்றாக வள்ளுவன், ‘காட்சிக்கு எளியனாக’ இருப்பதைக் குறிக்கிறான். அதாவது, மக்கள் இலகுவில் காணத்தக்கவாறு, அவர்களுடைய தலைவன் இருக்க வேண்டும்.   

ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கும் மேலாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், இந்தியாவில் இருந்தார்கள். அதற்கான நியாயங்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், தாயகத்தில், தமது தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளைத் தமிழ் மக்களுக்குக் காணவே கிடைக்கவில்லை.  

 அதுவும், 20 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் கட்டவிழ்த்து விடப்பட்ட, மிகப்பெரும் இன அழிப்பைச் சந்தித்த மக்கள் முன், அவர்களின் தலைவர்கள் இல்லை. இந்த இடத்தில்தான், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கு, தமிழ் மக்களிடையே பெரிதும் முக்கியத்துவம் பெறுவதை, நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.   

அதுவரை காலமும், தமிழ் அரசியற் தலைமைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, குறிப்பிடத்தக்க அரசியல் அங்கிகாரத்தை வழங்கவில்லை. ஆனால், அந்த நிலைமை அப்போது மாறியிருந்தது.  

 1983 ஒக்டோபரில், இந்தியாவிலிருந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் விடுத்திருந்த அறிக்கையொன்றில், ‘ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம், இந்தியாவின் மத்தியஸ்தத்தின் உதவியுடன், எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுக்குமானால், அவர்கள் ஆயுதப்போராளிகளோடுதான் பேச வேண்டி வரும். அவர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட, அந்தத் தீர்வை, விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

பல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் இருந்த சூழலில், விடுதலைப் புலிகள் அமைப்பை, அமிர்தலிங்கம் முன்நிறுத்தியமை ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பானது.   

அமிர்தலிங்கத்துக்கு நெருக்கமான அமைப்பாக, விடுதலைப் புலிகள் இருந்தது என்று கருத்துரைப்போரும் உளர். இதற்கு அல்பிரட் துரையப்பா படுகொலைச் சம்பவம் முதல், அமிர்தலிங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடையேயான தொடர்புகள் பற்றிய கருத்துகளும் விமர்சனங்களும் பலராலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.   

ஆனால் இந்த இடத்தில், எமக்கு அவசியமான குறிப்பாவது, விரும்பியோ விரும்பாமலோ, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அரசியல் முக்கியத்துவத்தை, அங்கிகரிக்க வேண்டிய தேவையும் சூழலும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு ஏற்பட்டிருந்தது என்பதையாகும்.   

ஒருவேளை ஜே.ஆர் அரசாங்கத்தை, அச்சமூட்டிப் பேரம் பேசும் உத்தியாகக் கூட, தமிழ்த் தலைமைகள் இதைக் கையாண்டிருக்கலாம் என்றும் சிலர் கருதலாம். ஆனால், அந்த உத்தி அவ்வளவு சாதகமானது அல்ல; ஏனெனில், இந்தப் பிரச்சினையை இராணுவ வழியில் தீர்ப்பதற்கு, ஜே.ஆர் பின்நிற்கக்கூடியவரல்லர். தமிழ் அரசியலிலிருந்து ‘மிதவாதிகள்’ ஓரங்கட்டப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்நிறுத்தப்படுவதை ஜே.ஆர் சாதகமாகவே பார்த்திருப்பார்.   

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் பிரச்சினையை மறைத்து, இதை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக முன்னிறுத்துவதன் மூலம், சர்வதேச உதவியுடன், இராணுவ ரீதியில் இதை அணுகி, அடக்க முடியும் என்பது அவரது கணக்காக இருந்திருக்கும்.  

அதிருப்தியில் புலம்பெயர் தமிழர்  

அமிர்தலிங்கம் மிகவும் சிக்கலான சூழலில் இருந்தார். இந்தியாவின் மத்தியஸ்தத்தினுடனான பேச்சுவார்த்தைக்கு, அமிர்தலிங்கம் உடன்பட்டிருந்ததுடன், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, அதிலிருந்து கீழிறங்கி, ‘ஒன்றுபட்ட நாட்டுக்குள்’ அதிகாரப் பகிர்வுத் தீர்வொன்றை எட்டும் நோக்கில், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்த அமிர்தலிங்கம் ஒத்துக் கொண்டிருந்தமை, புலம்பெயர்ந்திருந்த அவருடைய ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக் கட்சி, முன்னர் எடுத்திருந்த இரண்டு முக்கிய தீர்மானங்களான ‘தனிநாடு’ மற்றும் ‘ஜே.ஆர் அரசாங்கத்தோடு இனிப் பேசுவதில்லை’ ஆகியவற்றை, அவர் மீறியிருந்தமைதான் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.   

1983 ஒக்டோபரில், அமிர்தலிங்கம் ஐரோப்பாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது, கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் சந்திக்க வேண்டியிருந்தது. அமிர்தலிங்கம், இந்தியா இராணுவரீதியில் தலையிடக் கோரியிருக்க வேண்டும் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் புலம்பெயர் ஆதரவாளர்களின் கருத்தாக இருந்தது.   

ஜே.ஆர், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது, 1983 இன அழிப்பொன்று மீண்டும் நடத்தப்படும் என்பதையே, கோடிட்டுக்காட்டுகிறது என்பது, அவர்களின் அச்சமாக இருந்தது.   

தமிழ்த் தலைமைகளும் இந்தியாவும்  

தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இன்றும் கூட, இருக்கின்ற மிகப்பெரிய சிக்கல், இதுபோன்றதொரு ‘இருதலைக்கொள்ளி’ நிலையில் மாட்டிக்கொள்வது. 

இந்திரா காந்தியிடம் இராணுவத் தலையீட்டை அமிர்தலிங்கம் கேட்கவில்லையா? இந்திரா காந்தியிடம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை வரலாற்றை அமிர்தலிங்கம் எடுத்துரைக்கவில்லையா? இந்திரா காந்தியிடம் தமிழ் மக்கள் தேர்தலில் ‘தனிநாட்டுக்கு’ மக்களாணை வழங்கியிருந்ததன் தாற்பரியத்தை அமிர்தலிங்கம் எடுத்துரைக்கவில்லையா? நிச்சயமாக அவர் இவற்றையெல்லாம் செய்திருந்தார்.  

ஆனால், அதற்கு இந்திராவின் பதில் என்னவாக இருந்தது? இந்திராகாந்தி, இந்தியாவின் ‘பிராந்தியக் கொள்கை’யை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். இந்தியா ஒருபோதும், தன்னுடைய நலனைவிட, இலங்கைத் தமிழரின் நலனை முன்னிறுத்தப் போவதில்லை. 

அப்படியானால் அமிர்தலிங்கம், தமிழ்நாட்டுத் தலைமைகளோடு ஒன்றிணைந்து, மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்கியிருக்க வேண்டும் என்று சிலர் வாதிடலாம்.  தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளிலொன்று, இந்திராவுடன் இணக்கமாக இருந்தது.

அடுத்த தேர்தலில், அவை கூட்டணியாகப் போட்டியிட்டன. வாய்ப்புக் கிடைத்திருந்தால், மற்றைய கட்சியும் அந்தக் கூட்டணியை அமைத்திருக்கும். அரசியல் யதார்த்தம் அது.   

தமிழ் உணர்வுகள் தமிழகத்தில் மேலோங்கியிருந்தாலும், தமிழ் மக்கள் மீதான ‘தொப்புள்கொடி’ உறவின்பாலான அன்பும் அக்கறையும் மேம்பட்டிருந்தாலும் இந்திய தேசியத்தை மீறத்தக்களவுக்கு அவை மேம்பட்டவை அல்ல.   

மேலும், அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன், “தமிழ்நாட்டு மக்கள், இந்தியா தனது படைகளை, இலங்கைக்கு அனுப்பி, தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்கள்” என்று இந்திரா காந்திக்குச் சொன்னபோது, “அப்படிச் செய்வதானது, சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மக்களை, அது ஆபத்தில் போடும் செயல்; குறிப்பாக, இலங்கை அமைச்சரான காமினி திசாநாயக்க போன்றவர்கள், பொதுவிலேயே, இந்தியா ஆக்கிரமிப்புச் செய்தால், இலங்கை இராணுவமானது தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும்” என்று பேசியதாகச் சுட்டிக் காட்டியதுடன், தமிழ் நாட்டு மக்களுக்கு இதை எடுத்துரைக்கச் சொன்னதுடன், தனது ‘இருவழி அணுகுமுறை’யை எடுத்துரைத்தும் இருந்தார்.   

அதாவது, ஒருபுறத்தில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை முன்னெடுக்கும் செயற்பாடுகளை, இந்தியா ஊக்குவிக்கும் அதேவேளையில், மறுபுறத்தில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா பயிற்சி அளிக்கும் என்பதே, இந்திராவின் ‘இருவழி அணுகுமுறை’யாகும்.  “இந்த இருவழி அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்களைத் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்கில்லை” என்று எம்.ஜி.ஆர், இந்திராவுக்குச் சொல்லியிருந்தாலும், அதனை மீறி, அவர் எதையும் செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம்.   இலங்கைத் தமிழர் பிரச்சினையை, ஆத்மார்த்தமாக முன்னெடுத்த கட்சிகள் கூட, இன்றளவுக்கும் தமிழ்நாட்டின் அரசியலில் உதிரிகளாகவே இருக்கின்றன என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.   

இலங்கை தொடர்பில், மத்தியரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி ஏற்படும் என்று இந்திய மத்திய அரசாங்கம் அச்சம் கொண்டிருந்தாலும், அதனை இலாவகமாகச் சமாளிக்கக் கூடிய, நீர்த்துப் போகச் செய்யக்கூடிய தந்திரோபாயங்களை அவர்கள் கையாண்டிருந்தனர்.   

மேலும், இந்திராவோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சிறிமாவோ அரசாங்கத்தின் காலத்தில், இதுபோன்ற சம்பவம் இலங்கையில் நடந்திருந்தால், இன்று, ஜே.ஆர் அரசாங்கம் தொடர்பில், இந்திராகாந்தி எடுத்தளவு நடவடிக்கைகளைக் கூட எடுத்திருப்பாரோ என்பது கேள்விக்குரியது.   

தமிழ்த் தலைமைகளும் சர்வதேச அரசியலும்  

மறுபுறத்தில், அமிர்தலிங்கம் குழுவினர், இந்தியாவைத் தாண்டிச் சிந்தித்திருக்க வேண்டும். சர்வதேச அரசியலையும் அதன் முரண்பாடுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று வாதிடுவோரின் வாதத்தில் உண்மை இருக்கிறது.   

ஆனால், அது ஓர் இரவில், சில மாதங்களில் சாதித்திருக்கக் கூடியதொன்றல்ல. சர்வதேச அரசியல் மற்றும் பூகோள அரசியல் பற்றிய தமிழ்த் தலைமைகளின் தந்திரோபாய ரீதியிலான ஈடுபாடு, வரலாற்று ரீதியில், மிகக் குறைவானதாகவே இருந்திருக்கிறது என்பதை அவதானிக்கையில், அது மிகவும் ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.   

புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கையின் இனப்பிரச்சினையை, சர்வதேசமெங்கும் கொண்டுசென்று சேர்த்துக் கொண்டிருந்த போதும், தமிழ்த் தலைமைகள், சர்வதேசங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்த போதும், சர்வதேச அரசியலைத் தமிழ்த் தலைமைகள், தந்திரோபாய ரீதியில் அணுகியமைக்கான போதிய சான்றுகள் இல்லை.   

ஆனால், இலங்கை அரசாங்கம், குறிப்பாக, ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம், அமெரிக்கா, மேற்கு நாடுகள், பாகிஸ்தான், இஸ் ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மிக நெருங்கிய உறவுகளை வளர்த்திருந்தது.   

இந்தியாவுக்கு ஜே.ஆர் மீதான வெறுப்புக்கு இது ஒரு முக்கிய காரணம். தெற்காசியப் பிராந்தியத்தில் தம்மை மீறி, இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்ற ‘இந்தியக் கொள்கைக்கு’ ஜே.ஆர் முரண்பட்டுச் செயற்படுவதை, இந்தியா தனக்கெதிரான நடவடிக்கையாகவே பார்த்தது.   

இலங்கையின் திருக்கோணமலைத் துறைமுகத்தை, இலங்கையில் அமைந்த முதலாவது அமெரிக்கத் தளம் என்று விவரித்த இந்திராகாந்தி, 1983 ஓகஸ்டில் ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’வுக்கு ஒலிபரப்புத் தளம் அமைக்க, இலங்கை அனுமதி வழங்கியதை ‘அமெரிக்காவின் இரண்டாவது தளம்’ என்று விவரித்தார்.  

இலங்கையில், ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ ஒலிபரப்புத் தளம் அமைப்பதற்கு, இந்தியா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டது. இந்தத் தளம் மூலம், தெற்காசியா, மத்தியகிழக்கு, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவின் சில பகுதிகள், கிழக்காபிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு, அமெரிக்கா தனது பிரசாரத்தை முன்னெடுக்கும் என்பதுடன், குறித்த பகுதிகளிலுள்ள ஏனைய ஒலிபரப்புகளைக் குழப்புவதற்கும் வாய்ப்புண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய இந்தியா, இதை அமெரிக்காவின் சித்தாந்தப் பிரசார முகவர் என்றும் விவரித்தது. இந்தியாவின் கண்டனத்தைக் கண்டுகொள்ளாத இலங்கை, “இது புதிய விடயமல்ல; ஏலவே நடைமுறையிலிருந்த ஒப்பந்தம்தான், புதுப்பிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டது. இந்தியாவின் மேலாதிக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றத்தக்க ஒரு கவசமாக அமெரிக்காவை, ஜே.ஆர் பார்த்தார்.   

“கொஞ்சம் பொறுங்கள்”  

ஐரோப்பிய விஜயத்தைத் தொடர்ந்து, இந்தியா திரும்பியிருந்த அமிர்தலிங்கம், பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து, தனது புலம்பெயர் ஆதரவாளர்களின் கருத்தை எடுத்துரைத்தார்.   

அமிர்தலிங்கத்தையும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களையும் கொஞ்சம் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டதே, இந்திராவின் பதிலாக இருந்தது. 
  
இதுபற்றிச் சந்திப்பின் பின்னர், அமிர்தலிங்கம் குழுவினருக்கு விளங்கப்படுத்திய, இந்திரா காந்தியின் விசேட ஆலோசகர் கோபால்சாமி பார்த்தசாரதி, “தெற்காசியாவின் பிராந்திய சக்தியாக இருக்க, இந்தியா விரும்புகிறது. நாங்கள் ஏகாதிபத்தியவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இலங்கை விவகாரத்தில் நாம் தலையிடுவதை, இதுவரை எந்த நாடும் கேள்விக்குட்படுத்தவில்லை. அதுவே, மற்றைய நாடுகள், எம்மைப் பிராந்திய சக்தியாக அங்கிகரித்திருப்பதன் அடையாளம். எங்களுக்குக் கொஞ்சக் காலம் தாருங்கள். உங்கள் உரிமைகளை நாம் வென்று தருகிறோம்” என்று எடுத்துரைத்திருந்தார். இந்தியா முடியாதென்றிருந்தால் கூட, தமிழ்த் தலைமைகளுக்கு வேறு மாற்று இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.  

வோல்டேர்ஸின் விஜயம்  

பார்த்தசாரதியின் மத்தியஸ்த முயற்சிகள் சில வாரங்களாக எந்த முன்னேற்றமுமின்றி, நட்டாற்றில் நின்று கொண்டிருந்தது. பார்த்தசாரதியை, மீண்டும் இலங்கைக்கு அழைக்க வைக்க, ஜே.ஆருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசர காரணங்கள் சில, இந்தியாவுக்கு எழத்தொடங்கின.   

மறுபுறத்தில், பார்த்தசாரதியின் மத்தியஸ்தத்தைப் பற்றி, எந்த அக்கறையுமற்ற மனநிலையைப் பிரதிபலித்த ஜே.ஆர், 1983 ஒக்டோபர் இறுதியளவில், அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரேகனின் விசேட அதிதியாக, இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட லெப்டினன் ஜெனரல் வேர்னன் வோல்டேர்ஸை வரவேற்றுச் சந்தித்தார். இது இந்தியாவை மேலும் சினமூட்டுவதாக அமைந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .