2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன, மத சகிப்பு தன்மையும் புத்திசாலித்தனமும்

மொஹமட் பாதுஷா   / 2019 ஜனவரி 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்லின சமூகங்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மதக் குழுமங்களும் வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில், மத சகிப்புத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும். இன ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றுக்கெல்லாம் முன்னதாக, மத சகிப்புத்தன்மை கட்டியெழுப்பப்படுவது  அடிப்படையானது. 

சிறுபான்மைச் சமூகங்களின் மத நம்பிக்கைகளைப் பெரும்பான்மைச் சமூகங்கள், நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்குவதோ, நாசமாக்குவதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. மறுபுறத்தில், பெரும்பான்மைச் சமூகத்தின் மத விடயங்களை, சிறுபான்மையினர் யாரும் கேலிக்குள்ளாக்குவதும் பெரும் சிக்கல்களைக் கொண்டு வரும். 

சுருங்கக் கூறின், சரிபிழை, விஞ்ஞானபூர்வமான கேள்விகள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவே, மத நம்பிக்கைகள், உலகெங்கும் பெரும்பாலான மக்களால் நோக்கப்படுகின்றன. அந்த மதத்தினுடைய அனுஷ்டானங்கள், தமக்கு எவ்விதம் தோன்றினாலும், அதைச் சகித்துக் கொண்டு, ‘அது அவர்களுடைய நம்பிக்கை’ என்ற அடிப்படையில், அதற்குண்டான மரியாதை வழங்கப்பட வேண்டும். 

அந்தவகையில் பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் எல்லோரிடையும் மத ரீதியான, இன ரீதியான சகிப்புத்தன்மை புகட்டப்பட வேண்டியதாகத் தெரிகின்றது.  

கடந்த காலங்களில் இன, மத சகிப்புத்தன்மை இல்லாமல், பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றதன் காரணத்தாலேயே, இன்று அதுபற்றிப் பேச வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையில், பள்ளிவாசல்களுக்குள் ஆயுதக்குழுக்கள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்; கைக்குண்டு வீச்சுகள் இடம்பெற்றன. விகாரைகளில் குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ தேவாலங்களின் புனிதம் கெடுக்கப்பட்டன. 

குறிப்பாக, மிக அண்மைக்காலத்தில் கூட, பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன; பள்ளிவாசல்களை மூடவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன; பள்ளியின் புனிதத்தை இல்லாமல் செய்யும் விதத்தில், அசுத்தமான பொருட்கள் வீசப்பட்டன; குர்ஆன் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. இப்படி, இன்னும் எத்தனையோ அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. 

இந்நிலையில், அண்மையில் மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்புகளை, அதை முஸ்லிம் இளைஞர் குழுவொன்றோ, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களோ யார் செய்தாலும், அதையும் இந்த வரிசையிலேயே நோக்க வேண்டியிருக்கின்றது. எந்த மதம் சரியானது என்ற வாதங்களுக்கு அப்பால், இவ்வாறான செயல்கள் எல்லாம், நல்லிணக்க விரோத சார்பான, ஒரேவகையான குற்றங்களே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

இந்தப் பக்கத்தில் வெளியாகும் பத்தி, முஸ்லிம்களின் கோணத்தில், நாட்டு நடப்புகளை நோக்குகின்ற பத்தியாகக் காணப்படுகின்றமையால், சிலை உடைப்பு, சந்தேகநபர்கள் கைது, ஆயுதங்கள் மீட்பு, மௌலவி இப்றாகிம் கைது போன்ற விடயங்களின் பாரதூரத் தன்மை மீதான ஒரு கண்ணோட்டம், காலத்தின் அவசியம் ஆகின்றது. ஏனெனில், முஸ்லிம்கள் ஏனைய மதக் குழுமங்களைப் போலல்லாது, சமய ரீதியாக, மிகவும் ‘உணர்வுத் தூண்டுதல்’ மிக்கவர்கள் என்பதை, எவரும் அறியாதவர்களல்லர். எனவேதான், இலங்கையில் இடம்பெறுகின்ற கலவரங்கள், முஸ்லிம்களை மய்யமாகக் கொண்டே, கட்டமைக்கப்படுவதைக் காண்கின்றோம். எனவே, முஸ்லிம்கள் மிகவும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். 

அதற்காக, குட்டக் குட்டக் குனிகின்ற மடையர் கூட்டமாக இருக்க வேண்டும் என்பதோ, பள்ளிவாசல்களை உடைத்தாலும், குர்ஆன் பிரதிகளை எரித்தாலும் வாயை மூடிக் கொண்டு, அடங்கி இருக்க வேண்டும் என்பதோ அர்த்தமல்ல. அதற்கெதிராகப் பாடுபட வேண்டியதும், மத உரிமையை நிலை நாட்ட வேண்டியதும் ஒவ்வொரு முஸ்லிமுமுடைய கடமையாகும். 

ஆனால், ஏனைய மதங்களை நிந்திப்பது போன்ற, முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடாமல், புத்திசாலித்தனமான முறையில், அறிவார்த்தமான அடிப்படையில் விடயங்களைக் கையாள வேண்டும் என்பதையே, கூற வருகின்றோம். 

இலங்கை முஸ்லிம்கள், வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்புகளைப் பேணுகின்றார்கள் என்றும் தீவிரவாதக் குழுக்கள் நாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்றது என்றும் கடந்த பல வருடங்களாகக் கடும்போக்காளர்களும் இனவாத அமைப்பு சார்ந்தவர்களும் கூறி வருகின்றனர். 

இருப்பினும், இலங்கையில், தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவல் கிடையாது என்றும் முஸ்லிம்கள் யாரும், அவ்வாறான வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்புபடவில்லை என்றும் பாதுகாப்புத் தரப்பினரே அறிவித்திருந்தனர். 

ஆனால், இன்று, வெறும் வாயையே மென்றுகொண்டிருந்த கூட்டத்தின் வாய்க்கு, ‘வெள்ளை அவல்’ கொடுத்தது போலாகி இருக்கின்றது. நாட்டில் உள்ள 99.9 சதவீதமான முஸ்லிம்கள், இன, மத நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நான்கைந்து பேர்வழிகள் மாத்திரம், மேற்குறிப்பிட்ட இனவாத அமைப்புகளின் கட்டுக்கதைகளை உண்மைக் கதைகளாக்கி விடுவார்களோ என்ற பேரச்சம், முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. 

மாவனல்லை பிரதேசத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சில புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், தீவிரமான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரும், முஸ்லிம் இளைஞர்கள் என்பதே, அதிர்ச்சிகரமான தகவலாகும். இதில் முக்கிய விடயம், இந்தக் குழுவினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கும்  தொடர்பிருப்பதாகக் கூறப்படுகின்றது. அத்துடன், இந்தக் குழுவினரின் செயற்பாடுகளுக்குப் பக்கபலமாக, முஸ்லிம் சமய போதகர் ஓரிருவரின் மூளையும் வேலை செய்திருக்கலாம் எனச் சொல்லப் படுகின்றது. இந்தக் கதைகள் எல்லாம், உண்மை ஆனவையாக இருந்தால் நிலைமைகள் பாரதூரமானவையாக அமைந்துவிடும். 

இதுபற்றி, முஸ்லிம்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், புத்தளம், வனாத்தவில்லுப் பிரதேசத்தில், பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் மாவனல்லைச் சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணைகளில் இருந்தே, இவை கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதைச் சிங்கள ஊடகங்கள், ஒவ்வொரு கோணத்தில் வெளியிட்டு வருவதையும் காண முடிகின்றது. 

இதற்கிடையில், மாவனல்லை சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்கள் எனத் தேடப்பட்டு வருகின்ற இருவரின் தந்தையான இப்றாகிம் மௌலவி, கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இவரை, இன்று வரை (72 மணித்தியாலங்கள்) தடுத்துவைத்து விசாரிக்க, மாவனல்லை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. பிரதான சந்தேக நபர்களைப் பிடிக்க, பலாங்கொடை வரை, தேடுதல் வேட்டை விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது. 

இதற்கிடையில், முஸ்லிமான பிரதிமேயர் ஒருவர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

அதுபோதாதென்று, பௌத்த புனிதஸ்தலம் ஒன்றின் மீதேறி, புகைப்படம் எடுத்து, அதைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சிலை உடைப்பு, ஆயுதங்கள் மீட்பு போன்ற பெரிய பிரச்சினைகள் போதாதென்று, சிங்கள மக்களைக் குழப்பமடையச் செய்கின்ற, இவ்வாறான சிறிய பல சம்பவங்களும் இடம்பெற்று, நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன. எனவே, முஸ்லிம்கள் இன்றைய காலப்பகுதியில், மிகவும் பக்குவமாகவும் கவனமாகவும் விடயங்களை அணுக வேண்டும். 

முஸ்லிம்கள் மீதும் அவர்களது மத அடையாளங்கள், நம்பிக்கைகள் மீதும் பௌத்தம், ஏனைய இனவாதங்கள், வன்முறைகளைப் பிரயோகிக்கின்றன என்பதற்காக, அதே ஆயுதத்தை அவர்களும் கையிலெடுக்கக் கூடாது; அதை இஸ்லாம் அனுமதிக்கவும் இல்லை. உலகில், ‘ஜிகாத்’ என்ற பெயரில் நடப்பதெல்லாம், இஸ்லாம் சொன்ன ‘ஜிகாத்’ என்று, சொல்ல முடியாது. 

எனவே, சிலையுடைப்பை, முஸ்லிம் இளைஞர் குழுவே உண்மையில் மேற்கொண்டிருந்தால், அவர்களுக்குப் பின்னால் இருக்கின்ற சக்திகள், திட்டங்கள் பற்றிய புலன் விசாரணைகளுக்கு, ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், இதன் ரிஷி மூலங்களைக் கண்டறியப் பாதுகாப்புத் தரப்பினருக்கு இடமளிக்க வேண்டும். அந்த வகையில், முஸ்லிம்கள் இந்த விடயத்தில் பக்குவமாக நடந்து கொண்டதாலோ என்னவோ, சாதாரண சிங்கள மக்கள், பொய்ப் பிரசாரங்களை நம்பாத ஒரு சாதகநிலை ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. 

அதேவேளை, இந்தச் சம்பவங்களைப் பெரிதுபடுத்தி, ஒன்றை ஒன்பதாக்கி, முஸ்லிம்களுக்குள் தீவிரவாத அமைப்புகள் செயற்படுகின்றன என்று கூறுவதன் ஊடாக, முஸ்லிம்களை நெருக்குவாரப்படுத்த எத்தனிக்கும் சக்திகள் தொடர்பில், விழிப்புணர்வுடன் இருப்பதும் காத்திரமாக எதிர்வினையாற்றுவதும் அவசியம்.

ஆக, மொத்தத்தில் மத சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதுடன், நடப்பு நிலைவரங்களை  மிகக் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் முஸ்லிம்கள் கையாள வேண்டும்.   

முஸ்லிம்களுக்குப் பாராபட்சமா?

மாவனல்லையில் சிலை உடைத்தவர்கள், அநுராதபுரத்தில் பௌத்த புனிதஸ்தலம் மீதேறிப் புகைப்படம் எடுத்த, முஸ்லிம்களைக் கைது செய்கின்ற சட்டமும் பொறுப்பு வாய்ந்தவர்களும்,  முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களை உடைத்தவர்களை சட்டத்தின் முன், இவ்விதம் ஏன் நிறுத்தவில்லை? 

அப்படியென்றால், சட்டத்தை அமுலாக்குவோர், முஸ்லிம்கள் விடயத்தில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படுகின்றார்களா என்ற வினா, அவர்கள் மனதில் இருக்கின்றது. 

தம்புள்ளை, கிராண்ட்பாஸ், தெஹிவளை உள்ளிட்ட பள்ளிவாசல்கள், கடந்த காலங்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. அம்பாறைப் பள்ளிவாசலுக்குள், கட்டம் கட்டமாகப் புகுந்த காடையர் கூட்டம், பள்ளியைச் சேதமாக்கியதுடன், குர்ஆன் பிரதிகளையும் எரித்து நாசமாக்கியது. 

அத்துடன், கடந்த வருடம் மார்ச்சில், திகண முதல் கண்டி வரையாக, சுமார் 20 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு இலக்காகின. சில பௌத்த துறவிகளும், இதற்குப் பின்னால் நின்றனர் என்பதை உலகமே அறியும்.

ஆனால், சிலர் கைது செய்யப்பட்ட போதும், இந்தளவுக்குக் கடுகெதியான விசாரணைகள் இடம்பெற்றதா என்பது தெரியவில்லை என்பதுடன், இவர்களுக்கும் வெளிநாட்டு இனவாதக் குழுக்களுடன் தொடர்பேதும் இருக்கின்றதா என்ற கோணத்தில், புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு, அடிவேர்கள் கண்டறியப்பட்டதாகத் தெரியவில்லை. 

நல்லிணக்கம் பேசுகின்ற அரசாங்கம், முதலில் இந்தப் பாராபட்ச நிலையை, முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். 

முன்னிற்காத அரசியல்வாதிகள்

இலங்கையில் முதலாவது இனக் கலவரம், முஸ்லிம்களை மய்யமாக வைத்தே இடம்பெற்றது. நூறு வருடங்களாக, இந்நிலைமை மாறவும் இல்லை. 

இப்போது, இலங்கையில் மட்டுமன்றி, தென்னாசிப் பிராந்தியத்திலேயே மூன்று விதமாகப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய, இனவாதங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூன்றினதும், ஒருமுகப்பட்ட இலக்காக, முஸ்லிம்கள் இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். 

இதுதவிர, வெளிநாட்டு ஆயுதக் குழுக்களும் சதிகார அமைப்புகளும் உளவுப் படைகளும் நாட்டில் தமக்குச் சாதகமான நிலைமைகள் எப்போது ஏற்படும் என்று, பார்த்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த கடும்போக்குச் சக்திகள், போர்க்கொடி தூக்குவது போன்ற திட்டமிட்ட சம்பவங்கள், இடம்பெற்றுக் கொண்டிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவைச் சிதைக்கும் சம்பவங்களும் அண்மைக் காலமாக, இடம்பெற்று வருகின்றன. 

முன்னதாக, மாட்டிறைச்சி, ஹலால், அபாயா, பள்ளிவாசல்கள் என முஸ்லிம்களின் அடையாளங்களைச் பேரினவாதிகள் நெருக்குவாரப்படுத்தினர். இப்போது, மாட்டிறைச்சி, அபாயாவுக்குத் தமிழர்கள் சிலர், எதிர்ப்புக்காட்டுவது மட்டுமன்றி, முஸ்லிம் ஒருவரை, ஆளுநராக நியமித்தாலும் விமர்சிக்கும் அளவுக்கு, நிலைமைகள் மாறியிருக்கின்றன. 

இதைத் தமிழ்க் குழுக்கள் சில செய்கின்றன. அவர்களை, வெளிச் சக்திகள் சில தூண்டி விடுகின்றன. பதிலுக்கு, முஸ்லிம் தரப்பிலிருந்தும் தர்க்க ரீதியான, ஏட்டிக்குப் போட்டியான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதைச் சமரசப்படுத்தவோ, அன்றேல் சரி எது, பிழை எது என அறியவோ, எந்தத் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முன்னிற்கவில்லை என்பது, இவை எல்லாவற்றையும் விட, கொடூரமானதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X