2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இனத்துவக் கண்ணாடி

மொஹமட் பாதுஷா   / 2018 ஜூன் 15 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாங்கள் ஒருகாலத்தில் அப்படி இருந்தோம்; தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாய் உடுத்துப் படுத்துறங்கி, ஒருதாய்ப் பிள்ளைகளாக இருந்தோம். ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டன” என்று..... நமது பெற்றோரும் பாட்டிமாரும் ஒரு பெருமூச்சுடன் கதைசொல்லக் கேட்டிருக்கின்றோம்.   

ஆனால், இப்போதெல்லாம் இனத்துவ உறவைப் புதுப்பித்தல் பற்றித் திரும்பத்திரும்பப் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் சமூகங்கள், அரசியலால் தூண்டப்பட்ட இன, மத காரணங்களுக்காக, நல்லிணக்கம் பேசிப் பேசிப்பேசியே பகைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே கசப்பாயினும் உண்மையும் நிகழ்கால அனுபவமுமாக இருக்கின்றது.   

இப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு இந்துமத அலுவல்கள்  பிரதியமைச்சு வழங்கப்பட்டமை, தமிழ் சமூகத்தின் மத்தியில் பெரும் வாதப் பிரதிவாதங்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கின்றது.   

இந்த நிலைமையானது, நாம் எந்தளவுக்கு இன, மத ரீதியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு, எல்லா விடயங்களையும் நோக்குகின்றோம் என்பதையும், அரசியலோடு எல்லா விடயங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்கின்றோம் என்பதையும் மீண்டும் ஒருமுறை, மீள்வாசிப்புச் செய்யவேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கின்றது.   

இந்து மதத்தைச் சாராத ஒருவருக்கு, அதன் அமைச்சு வழங்கப்பட்டிருப்பதை இந்துக்களில் ஒருபகுதியினர், தொடர்ச்சியாக வௌிப்படையாக எதிர்த்து வருகின்றனர்.   

இதனால் பிரதியமைச்சர் மஸ்தான், இன்னும் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, அந்த அமைச்சைப் பொறுப்பேற்காமல் விடுவதற்கான விருப்பத்தையும் தெரிவித்திருக்கின்றார். சமகாலத்தில் அரசாங்கமும் இது குறித்துக் கவனம் செலுத்தியுள்ளது.   

எவ்வாறிருப்பினும், தமிழர் ஒருவரே அந்த அமைச்சின் பிரதியமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே நடைமுறை யதார்த்தமும் நியாயமுமாக இருக்கிறது. ஆனாலும், அதையும் தாண்டி, முஸ்லிம் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டமையால், சகட்டுமேனிக்கு முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களும் கிண்டல்களும் தமிழ்-முஸ்லிம் உறவில், சிறியதொரு பாதகமான தாக்கத்தைச் செலுத்த மாட்டாது என்று யாரும் சொல்ல முடியாது.   

நல்லாட்சி அரசாங்கம், அமைச்சர்களை நியமிப்பதையும் அமைச்சரவையை மாற்றி அமைப்பதிலும் காட்டுகின்ற அக்கறையையும் செயலாற்றலையும் வேறெதிலும் காணமுடிவதில்லை.   

அந்த அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.  

இதன்போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு, இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சு வழங்கப்பட்டது.   

இது தமிழ்ச் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அமைச்சர் மனோகணேசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் எம்.பி, மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சாதாரண தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.   

விஞ்ஞானரீதியான அணுகுமுறையில், ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியிருக்கின்றார் என்று அபிப்பிராயம் முன்வைக்கப்படுகின்றது. முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இதைச் செய்திருக்கலாம்.   

ஆனால், உண்மையில் அந்த அமைச்சு என்ன விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றதோ அந்த வாசகமே அதன் பிரதியமைச்சுக்கும் உரித்தாகின்றது என்பதே நிதர்சனமாகும்.   

அந்த அடிப்படையிலேயே, மீள்குடியேற்ற பிரதியமைச்சுடன் இணைந்ததாக இந்துமத பிரதிஅமைச்சும், மஸ்தான் எம்.பிக்குச் சென்றிருக்கின்றது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.   

தமிழர்களின் கோரிக்கையில் நூறு சதவீதம் நியாயம் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்துமத அலுவல்களுக்கான பிரதியமைச்சராக தமிழர் ஒருவரையே போட்டிருக்க வேண்டும். அதுவே, இரு தரப்புக்கும் நல்லது.   

அத்துடன், அந்தப் பிரதியமைச்சரால் அந்த மதத்தின் அலுவல்களைச் சரியாக விளங்கிக் கொண்டு செயலாற்றவும் முடியும். அந்த வகையில் தமிழர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்.   

ஆனால், சொல்கின்ற விடயம் சரி என்றாலும், அதைச் சொல்லுகின்ற முறை மிகமோசமானதாகக் காணப்படுகின்றது.  

குறிப்பாகச் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் இது ஒருபெரும் விவகாரமாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டுள்ளதுடன், பிரதியமைச்சர் காதர் மஸ்தானை மோசமாக விமர்சிப்பதையும் காணமுடிகின்றது.  

தமிழர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது என்றாலும், அதை இவ்விதம் கையாள்வது, முஸ்லிம்களை முகம் சுழிக்கச் செய்திருக்கின்றது எனலாம்.   

முஸ்லிம் ஒருவர்தான், முஸ்லிம் அலுவல்கள் அமைச்சராக இருக்க வேண்டும் என்றோ, தமிழர் ஒருவர்தான் இந்து அலுவல்கள் பிரதியமைச்சைப் பொறுப்பேற்க வேண்டும் என்றோ எந்தச் சட்டமும் கிடையாது.   

மதங்களை, இனங்களைக் கடந்து சேவையாற்றுவதற்கு நமது அரசியல்வாதிகள் தயாராக இருந்தால், தமிழ் அமைச்சரைவிட, முஸ்லிம் பிரதியமைச்சர் இந்துக்களுக்கு நல்லது செய்யலாம்; தமிழ் அமைச்சர், முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கலாம்.   

ஆனால், இலங்கையின் அனுபவத்தில், நாம் அவ்வாறானவர்களைக் காண்பதரிது. எல்லாவற்றையும் இன, மத ரீதியாகப் பிரித்து நோக்குகின்ற ஒரு மனநிலைக்குத் தமிழர்களும் முஸ்லிம்களும் தள்ளப்பட்டுள்ளனர்.   
பிட்டும் தேங்காய்ப்பூவும் என்றும் நகமும் சதையும் என்றும் வர்ணனை செய்தாலும் நமது அரசியல் அபிலாஷைகள் வேறுபட்டவை என்பதையும் அடிப்படையில் ஒரு பிரிகோடு இருக்கின்றது என்பதுமே கசப்பான உண்மையாகும். அது மஸ்தான் விடயத்தில் வெளிப்படுவதாகத் தெரிகின்றது.   

இவ்வாறு முரண்நகையாக அமைச்சு அல்லது பிரதியமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுவது, இலங்கையில் இதுதான் முதன் முறையல்ல. தபால் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சராக எம்.எச்.ஏ. ஹலீம் இருக்கின்றபோதும் அதன் பிரதியமைச்சராக துலிப் விஜேசேகரவே பதவி வகிக்கின்றார்.   

மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் இருக்கத்தக்கதாக அதன் பிரதியமைச்சு மஸ்தானுக்கு வழங்கப்படுவதற்குத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றால், உண்மையில் துலிப் விஜேசேகரவை நீக்கச் சொல்லி முஸ்லிம்கள் வீதியில் இறங்கியிருக்க முடியும். ஆனால் அப்படி நடைபெறவில்லை.   

இதேபோன்று, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரால் துரோகியாகப் பார்க்கப்பட்ட கருணா எனப்படும் வி.முரளிதரன், மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான பிரதியமைச்சராக இருந்தார். தமிழர்கள் அதற்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை.   

வடபுலத்தமிழ் மக்கள், மீள்குடியேற்றத்தை வேண்டி நின்றவேளையில் ரிஷாட் பதியுதீன் அவ்வமைச்சுப் பொறுப்பை வகித்தார். ஆனால், தமிழ்ச் சமூகத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பவில்லை.   

அதுமட்டுமன்றி, கல்முனையைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸிடம் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி அமைச்சர் மீனவராகவோ, விவசாய அமைச்சர் ஒரு விவசாயியாகவோதான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.  

ஏன், இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பல உறுப்பினர்கள் சாதாரணதரம், உயர்தரம் சித்தியடையாதவர்களாகவும் ஓர் அரச ஊழியருக்கான தகுதியைக் கூடச் சரியாகப் பூர்த்தி செய்யாதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கே பொறுப்பு வாய்ந்த முக்கிய அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   
ஒருதுறையில் கற்றுத் தேர்ந்தவரே அத்துறைக்கு நியமிக்கப்படுவது நல்லது என்றாலும், அவ்வாறு நடைபெறாத சந்தர்ப்பங்களில் இலங்கை மக்களாகிய நாம் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை.   

ஆனால் மதம், மதம் சார்ந்த அலுவல்கள் என்பது ஏனைய துறைகளில் இருந்து வேறுபடுகின்றது என்பதையும் ஏனைய துறைகளைப் போல இதனை நோக்க முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.   

அதைத்தான் தமிழர்கள் கோருகின்றார்கள். எனவே, இவ்வாறான நியமனம் ஒன்றை வழங்குவதில் இருந்து முதலில் ஜனாதிபதி தவிர்ந்துக் கொண்டிருக்க வேண்டும்.   

அதேபோல், அவ்வாறான ஒரு நியமனம் வழங்கப்பட்டதற்காக இன்று தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கின்ற சில நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றே தோன்றுகின்றது.   

ஏதோ, பிரதியமைச்சர் மஸ்தான், தமிழின விரோதி போலவும் அந்தப் பிரதியமைச்சுப் பதவியை நீண்ட காலம் வகித்து, இந்துக் கலாசாரத்தை நாசமாக்கி விட்டது போலவும் மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது நல்லதல்ல. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவின், ஆழ - அகலம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதில் ஏற்பட்ட விரிசல்களை நிவர்த்தி செய்யவே இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.   

இந்தநேரத்தில், முஸ்லிம்கள் ஒரு தனியான இன, மத அடையாளத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றபோதிலும், தமிழ்த் தேசியம், இலங்கை முஸ்லிம்களை நெடுங்காலமாக இஸ்லாமியத் தமிழர்கள் என்று சொல்லி வருகின்றது.   

இரு இனங்களும் இணைந்தே செயற்பட வேண்டும் என்றும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கச் சம்மதம் தரவேண்டும் என்றும் தமிழ்த் தேசியம் கோரிவருகின்றது. இவ்வாறான நிலையில், ஒரு முஸ்லிம், இந்துமத அலுவல்கள் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டது தவறு என்றாலும் அதை எதிர்க்கின்ற பாங்கு, நல்லிணக்கத்துக்கு இட்டுச் செல்லக் கூடியதல்ல.   

தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தவே இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பதாகத் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், பிரதியமைச்சர் மஸ்தான் பணிகளைத் தொடங்க முன்னரே, அந்தமுரண்பாடு, தூண்டி விடப்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.   

தமிழ் சமூகத்தில் உள்ள கணிசமானோர், இவ்விடயத்தை முற்போக்குச் சிந்தனையுடன் நோக்குகின்றனர் என்பது நன்றிக்குரியது. ஆனாலும், இதைத் தமிழ் அரசியல்வாதிகள் அரசியலாக்கப் பார்க்கின்றனர். இவ்விடயத்தைப் பூதாகரமாக்க யாரோ நினைக்கின்றார்கள்.   

நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னாலும், கொழும்பின் காலி வீதியிலும் இந்துச் செயற்பாட்டாளர்கள் நடத்திய போராட்டங்கள் ஏதோ ஒரு சொல்லாத மறைமுகச் செய்தியைச் சொல்லி நிற்கின்றன.   

எவ்வாறு, பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு, இந்துமத அலுவல்கள் பிரதி அமைச்சு நியமனம் வழங்கப்படாது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமோ, அதுபோலவே அவருக்கு எதிரான தேவையற்ற விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கக் கூடாது என்றே தோன்றுகின்றது. இது தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலத்துக்கு நல்ல சகுணங்களாகத் தெரியவில்லை.   

உண்மையில், சுவாமிநாதன் வகிக்கின்ற புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சே காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பிரித்து வழங்குவதும் சாத்தியமற்றது.  

ஆனால், முஸ்லிம் அலுவல்கள் பிரதியமைச்சராக வேறு மதத்தைச் சேர்ந்தவர் இருப்பதை முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பதற்காக, காதர் மஸ்தான் இந்துமத அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூற முடியாது. அவர்கள், தங்களது மதத்துக்குப்  பொறுப்பான பிரதியமைச்சு ஒரு இந்துவிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.   

இந்தப் பின்னணியில் தமக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சின் துறைகளில் இருந்து, இந்துமத அலுவல்கள் அமைச்சை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்துடன், இந்த முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்தின் உயர்மட்டமும் இந்துமத அலுவல்களை மீளப் பெறலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.   

ஒருவேளை, காதர் மஸ்தான் இந்துமத அலுவல்கள் அமைச்சராக இன்னும் ஒன்றரை வருடங்களுக்குப் பதவி வகிக்கலாம்; அல்லது அவர் பதவி விலகலாம்; அல்லது அவரிடமிருந்து இந்துமத அலுவல்களை அரசாங்கமே மீளப் பெற்றுக் கொள்ளக் கூடும்.   

ஆனால், ஒரு முஸ்லிம், இந்துமத அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதால் முன்வைக்கப்பட்டு வருகின்ற தேவையற்ற விமர்சனங்களும் இனக் குரோதக் கருத்துகளும், ஆர்ப்பாட்டங்களும் காலாகாலத்துக்கும் தமிழ் - முஸ்லிம் உறவில் ஒருகறையாக இருக்கும் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.   

பிந்திய செய்தி:

பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி ஆகியன மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .