2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்னொரு கூட்டமைப்பு சவால்களும் சாத்தியங்களும் (பகுதி -02)

Johnsan Bastiampillai   / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.கே. அஷோக்பரன்  

இன்றைக்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் என்று, நாம் எந்தக் கட்சிகளை வரையறுக்கிறோம் என்பது இங்கு முக்கியமானது. குறைந்த பட்சமாக, திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தும் கட்சிகளே, ‘தமிழ்த் தேசிய கட்சிகள்’ என்ற அடையாளத்துக்கான குறைந்தபட்ச தகுதியைக் கொண்டுள்ளன எனலாம். 

வடக்கு, கிழக்குப் பகுதிகளில், அரசியலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான தமிழ்க் கட்சிகள், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையே முன்னிறுத்துகின்றன. ஆகவே, அவர்கள் முன்னிறுத்தும் அடிப்படைக் கொள்கை,  சுவீகரித்துக்கொண்டுள்ள சித்தாந்தம் ஆகியவற்றுக்கு இடையே, வேறுபாடுகளைக் காண்பது கடினம். 

ஆனால், அந்த அடிப்படைக் கொள்கையின் விஸ்தீரணம், இயங்குமுறை, நெகிழ்ச்சித்தன்மை என்பவற்றில்தான் வேறுபாடுகள் இருக்கின்றன. இன்று, தமிழ்த் தேசிய அரசியலின் இருதுருவங்களாக, பொதுவில் அடையாளப்படுத்தப்படும் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் நாடாளுமன்றத்தில் பேசும் விடயங்கள், ஒருவருக்கொருவர் ஆதரவானதாக இருப்பதை அவதானிக்கலாம். ஆனால், அவர்கள் பேசும் விதம், விடயங்களுக்கு வழங்கும் முன்னுரிமை என்பவற்றில் வேறுபாடுண்டு. 

இத்தகைய செல்நெறி, பெரும்பாலான தமிழ்க் கட்சிகளிடையே அடிப்படைக் கொள்கைகளில் முரண்பாடு இல்லை என்பதையும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முரண்பாடில்லை என்பதையும் கோடிட்டுக்காட்டி நிற்கின்றன. 

ஆகவே, இக்கட்சிகள் இடையே, கூட்டமைப்பாக உருவாகுவதற்கான அடிப்படைகள் இருக்கின்றன. ஆனாலும், தமிழ்த் தேசிய கட்சிகள் இடையேயான கூட்டமைப்புகள், இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் நீடித்து நிலைக்காததற்கான காரணமென்ன என்று, சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.  

கொள்கை அரசியல் என்பது, ஒரு விடயம்; தேர்தல் அரசியல் என்பது, இன்னொரு விடயம். தேர்தல் அரசியல் என்று வரும்போது, தமிழ்க் கட்சிகளிடையே வாக்குகள் அடிப்படையிலான சமமின்மை காணப்படுகின்றது. 

இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சி பெருமளவு வாக்குவங்கியை, ஒப்பீட்டளவில் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தப் பலம், அதைத் தன்னிச்சையுடன் நடந்துகொள்ளச் செய்கிறது. ‘பெயருக்கு மட்டும்தான் கூட்டமைப்பு; வாக்குகள் யாவும் என்னுடையவை; ஆகவே, நானெடுப்பதுதான் முடிவு’ என்ற, தன்னிச்சை மனநிலையில், தமிழரசுக் கட்சி செயற்படும் போது, கூட்டணியிலுள்ள ஏனைய தரப்புகள் கசப்படைந்து விலகிக் கொள்கின்றன. 

இதனால்தான், கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் இருந்தபோது, அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், “கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டும்” என்றார். கூட்டமைப்பு பதிவு செய்யப்படும் போது, அதன் கட்டமைப்பு, தீர்மானிக்கப்பட வேண்டி வரும். அத்தகைய கட்டமைப்பு தீர்மானிக்கப்படும் போது, தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிரான தடைகள், முன்வைக்கப்படும். கூட்டமைப்பு மீதான, தமிழரசுக் கட்சியின் கிடுக்குப்பிடி தளரும்.இதனால்தான் என்னவோ, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில், தமிழரசுக் கட்சி ஆர்வம் காட்டவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை சார்ந்த பிரச்சினையும் இங்கு, குறிப்பிட்டாக வேண்டியதொன்றாக இருக்கின்றது.   

இன்னொரு தரப்பால், கூட்டமைப்புக்கு  என்று பேச்சுவார்த்தைக்கான அழைப்போ, கூட்டமைப்பு சார்பில் கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்போ வழங்கப்படும் போது, அந்த அழைப்பும் வாய்ப்பும், கூட்டமைப்பின் தலைமைக்கே செல்கின்றது. 

கூட்டமைப்பின் தலைமையாகத் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தோர் உள்ளபோது, அழைப்பு கூட்டமைப்புக்கானதாக அமையும்போது, அதுதொடர்பில் அங்கத்துவக் கட்சிகளோடு பேசி முடிவெடுக்க வேண்டியதும், குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்வதற்கான வாய்ப்பை அவற்றுக்கும் வழங்க வேண்டியதுமான தார்மிகக் கடமை, தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறது. தமிழரசுக் கட்சி, இதைச் செய்யவில்லை என்ற விசனத்தை, பலமுறை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினர் பதிவு செய்துள்ளார்கள்.  மேற்கூறிய பிரச்சினைகளால்த்தான், நீதியரசர் விக்னேஸ்வரன், இன்னொரு கூட்டமைப்பாகத் தமிழ்க் கட்சிகள் இணையும்போது, தமிழரசுக் கட்சி அல்லாதவர்களிடம் அதன் தலைமை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

இன்று, கட்சிகள் பிரிந்துள்ளதால், தமிழரசுக் கட்சி கணிசமானளவு வாக்குகளை இழந்துள்ளது என்பது உண்மை. ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகள் இடையேயான இந்த ‘அடிபிடிகள்’, அவை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் ஊறிப்போகாத இளம் வாக்காளர்கள், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு மாற்றான தரப்புகளுக்கு வாக்களித்து உள்ளமையை, 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கின்றன. 

குறிப்பாக, கிழக்கில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த வியாழேந்திரன், ராஜபக்‌ஷர்களின் மொட்டுச் சின்னத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார். யாழ். மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளை, ராஜபக்‌ஷர்களின் கூட்டுக்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் பெற்றிருக்கிறார். இவைதான், தமிழ் மக்கள் குறிப்பாக, இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கியுள்ள எச்சரிக்கை சமிக்ஞைகள்.   

தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ்த் தேசிய அரசியலை நடைமுறைப் பிரச்சினைகளோடும் ஒத்திசைந்த வகையிலும் திட்டமிட்டு, தமிழ் மக்களுக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடிய வகையில் முன்கொண்டு செல்லாவிட்டால், அவர்களை நிராகரிக்க தமிழ் மக்கள் தயங்கமாட்டார்கள். இந்தச் சூழலில், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைவது, தமிழ்த் தேசியத்துக்கு மாற்றான கட்சிகளை, அரசியல் ரீதியாகப் பலத்துடன் எதிர்கொள்வதற்கு அவசியமான ஒன்றாகிறது.   

தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, மீளிணக்கப்பாடு உருவாகுவதற்கான அடிப்படையாக, முதலில் தமக்கு இடையேயான தற்போதைய உறவில் குறைபாடுள்ளது என்பதையும் பிழைகள் விட்டுள்ளோம் அநீதிகள் சில இழைக்கப்பட்டுள்ளன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு, பழிவாங்கல், பிரிவு என்பவை அல்லாத வகையில், தமக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளத் திடசங்கற்பம் பூண வேண்டும்.   

முதற்படியாக, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபடுவதற்கு, அதிக வாய்ப்புள்ள விடயங்களில் இருந்து, ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டும். தேர்தல் அரசியல் என்பதுதான், இங்கு மிகப் பிரச்சினையானதாக இருக்கிறது. ஆகவே, அதைத் தற்போதைக்குத் தவிர்த்துவிட்டு, கொள்கை ரீதியிலான கூட்டை ஸ்தாபிக்க வேண்டும். இதற்கான முதற்படியாக, நாடாளுமன்றத்திலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ்த் தேசிய ஆதரவு தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து, ‘தமிழ் கோகஸ்’ (Tamil Caucus) ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும். இது, நாடாளுமன்றத்தில் கொள்கை அளவிலேனும் தமிழ் உறுப்பினர்கள் ஒரே குரலில் செயற்பட வழிவகுக்கும்.  

அடுத்தபடியாக, அனைத்துத் தமிழ்த் தேசிய கட்சிகளும், கூடிப்பேசும் மாநாட்டுத் தளம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும். இதன் நோக்கம், தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவது அல்ல; மாறாக, தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பிலான கொள்கை முடிவை, இந்த மாநாட்டில் கலந்துரையாடி, ஒற்றைக் குரலில் வௌியிட வேண்டும். இந்த மாநாட்டில், தமிழ்த் தேசிய கட்சிகளுடன், சிவில் அமைப்புகளும் அழுத்தக் குழுக்களும் இடம்பெறுவதுகூடச் சிறப்பானது. 

இந்தக் கட்சி சாரா அமைப்புகள், தமிழ்த் தேசிய கட்சிகள், கட்சி நலன்களைத் தாண்டிச் சிந்திப்பதைத் தூண்டுவனமாகவும் அழுத்தம் தருவனவாகவும் கூட அமையும். இவ்வாறு, தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, பொதுக்கலந்துரையாடல் வௌி உருவாகும் போது, அதன்மூலம் பொதுவான கொள்கை நிலைப்பாடுகளில் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குரலாக நிற்கும் போது, அது கட்சிகள் இடையேயான இணக்கப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வலுப்படுத்தும். 
இவ்வாறான நெருங்கிய செயற்பாடும், இணக்கப்பாடும் நீண்டகாலத்துக்குத் தொடரும் போது, தேர்தல் அரசியலிலும் அவை இணக்கப்பாட்டுடன் ஈடுபடவேண்டிய சூழல் உருவாகும். அப்போது, தேர்தல் அரசியலிலும் ஒற்றுமையும் இணக்கப்பாடும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு.  
ஆகவே, தமிழ்த் தேசிய கட்சிகள் இன்னொரு தேர்தல் கூட்டணியை பதவி செய்வதைப் பற்றி யோசிக்காமல், ஒரு மாநாடாக ஒன்றிணைவதைப் பற்றிச் சிந்திப்பதே சாலச் சிறந்ததோர் உபாயமாகும். தமிழினத்துக்கு யார் தலைவர் என்று அடிபடுவதைவிட, தமிழினத்தை எவ்வாறு காப்பாற்றப்போகிறோம் என்று சிந்திப்பதுதான் காலத்தின் தேவை. அதைத் தமிழினத்தின் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்வோர் செய்வார்கள் என்று நம்புவோம்!   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X