2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இம்முறையும் தேசிய பட்டியல் வீணாகி விடுமா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 ஜூலை 08 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுறும் தமது எந்தவொரு வேட்பாளரையும், தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிப்பதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.   

தேர்தலில் தோல்வியடைவோர், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.   

ஏனெனில், இதற்கு முன்னரும் சில கட்சிகள் தேர்தலில் தோல்வியடைந்த தமது வேட்பாளர்களைத் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமித்த போது, அதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.   

ஆயினும், பொதுவாகச் சகல கட்சிகளும், தேர்தலில் தோல்வியடைந்த தமது சில வேட்பாளர்களை, தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிப்பது வழமையாகியுள்ளது. எனவே, பொதுஜன பெரமுனவும் அந்த மரபை இம்முறை கைவிடும் என உறுதியாகக் கூற முடியாது.  

கடந்த பொதுத் தேர்தலை அடுத்து, அத்தேர்தலில் தோல்வியடைந்தவர்களைச் சில கட்சிகள் தமது தேசிய பட்டியல் மூலம், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதைத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களான ‘கபே’ என்றழைக்கப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும் ‘பப்ரல்’ என்றழைக்கப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பும் கடுமையாக விமர்சித்து இருந்தன.   

நாடாளுமன்றத்துக்குப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை நியமிப்பதும் நாடாளுமன்றத்தில் கூடிய வரை இன விகிதாசாரத்தைப் பேணுவதுமே தேசிய பட்டியலின் நோக்கமாகும்.   

தேசிய பட்டியல் மூலம் எம்.பிக்களை நியமிக்கும் போது, நாடாளுமன்றத்தில் இன விகிதாசாரம் பேணப்படும் வகையில், அந்த நியமனங்களை வழங்குவதைத் தேர்தல் ஆணையகம் அரசியல் கடசிகளை வலியுறுத்த வேண்டும் என்று அரசமைப்புக் கூறுகிறது.  

எனினும், ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தேசிய பட்டியலின் நோக்கத்துக்கு மாறாகவே செயற்படுகின்றனர். 

பல கட்சிகளின் தேசிய பட்டியலில், துறைசார் நிபுணர்கள் உள்ளடக்கப்படுவதே இல்லை. தேசிய பட்டியல்களும் கட்சித் தலைவர்களின் நெருங்கிய சகாக்களின் பெயர்களால் நிரம்பிவிடுகின்றன. பின்னர், சிலவேளைகளில், தேசிய பட்டியல் புறக்கணிக்கப்பட்டு, தேர்தலில் தோல்வியுற்ற தமக்கு வேண்டியவர்களை, ஒவ்வொரு முறையும் தேசிய பட்டியல் மூலம், தலைவர்கள் நியமித்து விடுகின்றனர்.  

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அக்கட்சியின் கீழ் போட்டியிட்டுத் தோல்வியுற்ற டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க ஆகியோரைத் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமித்தது.   

ஐக்கிய தேசிய கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமக்குக் கிடைத்த ஒரே தேசிய பட்டியல் ஆசனத்துக்கு தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எம்எச்.எம். நவவியை நியமித்தது.   

இம்முறை போலவே, கடந்த முறையும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியலிலேயே ஆகக் கூடுதலான படித்தவர்களும் துறைசார் நிபுணர்களும் இருந்தனர். அக்கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் தேசிய பட்டியல் மூலம் கிடைத்தன. அவற்றுக்கு, தேசிய பட்டியலில் இருந்து பிமல் ரத்னாயக்கவும் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சுனில் ஹந்துன்னெத்தியும் நியமிக்கப்பட்டனர்.   

மக்களால் நிராகரிக்கப்ப ட்டவர்கள், தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்து, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இருந்தபோதிலும், தேர்தல்களின் போது, மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்கிறார்களா, நிராகரிக்க வேண்டியவர்களைத் தான் நிராகரிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. உதாரணமாக, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, கடந்த முறை மாத்தறை மக்களால் நிராகரிக்கப்பட்டார். அவரது கட்சி, அவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமித்தது.   

‘வெரிடே ரிசேர்ச்’ என்ற அமைப்பின் Manthri.lk என்ற இணையத்தளம், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றல், கொள்கை வகுத்தல், பொது நிதியைக் கண்காணித்தல், பொது மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தல் ஆகியன தொடர்பில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களைத்  தரம் பிரிக்கிறது. அந்தத் தர வரிசையில் ஹந்துன்னெத்தி நாடாளுமன்றத்தில் ஐந்தாவது சிறந்த உறுப்பினராக இருக்கிறார்.   

‘கோப்’ எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக, நாட்டில் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்துவதில், அவர்  ஆற்றிய பங்கை, எவராலும் நிராகரிக்க முடியாது. 

அவ்வாறாயின் அவரை நிராகரித்த மாத்தறை மாவட்ட மக்களின் முடிவு சரியா? மக்கள் விடுதலை முன்னணி தோல்வியடைந்த ஹந்துன்னெத்தியை தேசிய பட்டியல் மூலம் நியமித்தமை பிழையா?   

தேர்தல்களின் போது, மக்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பெரும் பிழைகளைச் செய்கிறார்கள். அதாவது, கூட்டாக ஒரு கட்சியை நிராகரிக்க வேண்டிய நேரத்தில், அக்கட்சியை வெல்லச் செய்கிறார்கள். அல்லது, நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் கட்சிகளைத் தோல்வியுறச் செய்கிறார்கள். அதேவேளை, நிராகரிக்க வேண்டிய வேட்பாளர்களைத் தமது சொந்த ஆசா பாசங்களால் வெல்லச் செய்கிறார்கள். அல்லது, தோல்வியுறச் செய்கிறார்கள்.   

உதாரணமாக, மிகவும் மோசமான முறையில் வெளிப்படையாகவே தேர்தல் மோசடிகளில் ஈடுபட்ட ஐக்கிய தேசிய கட்சியை, 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெல்லச் செய்தார்கள். அதே ஆண்டு, வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த வாக்கெடுப்பான சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற்ற போதும், ஊழலில் ஈடுபட்டவர்களுக்கே மக்கள் வாக்களித்தனர். 

அதேபோல், மிகப் பயங்கரமான தேர்தலாகக் கருதப்படும் 1999ஆம் ஆண்டு, வட மேல் மாகாண சபைத் தேர்தலில், ஊழலில் ஈடுபட்ட பொதுஜன ஐக்கிய முன்னணிக்கே வெற்றி கிடைத்தது.  

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரு ஜயசூரிய பெற்றதை விடக் கூடுதலாக, அக்கட்சியின் கீழ் போட்டியிட்ட உபேக்ஷா சுவர்ணமாலி என்ற நடிகை, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார். 13ஆவது அரசமைப்புத் திருத்தம் என்றாலே என்னவென்று சுவர்ணமாலிக்குத் தெரியாது என்பது, பின்னர் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி உரையாடலின் போது தெரிய வந்தது. 

சுவர்ணமாலி, ஐ.தே.க பட்டியலில் இறுதியானவராகத் தெரிவு செய்யப்பட்டு இருந்தால், கரு ஜயசூரிய தோல்வியடைந்து இருப்பார். அதாவது, சுவர்ணமாலி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவும் கரு ஜயசூரிய மக்களால் நிராகரிக்கப்பட்டவராகவும் இருப்பர்.   

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்த பிரேமலால் ஜயசேகர, இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.மு.சு.மு பட்டியலில் முதலாம் இடத்துக்குத் தெரிவானார்.  

எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அனைவரும் தகுதியற்றவர்கள் அல்லர். அதேவேளை, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் சிறந்தவர்களும் அல்லர். எனவே, அரசியல் கட்சிகள், தகுதியற்றவர்களை நாடாளுமன்றத்துக்கு நியமிப்பதற்காகத் தேசிய பட்டியலைப் பாவிக்காது, சிறந்தவர்களை நியமிப்பதற்காகப் பாவிக்க வேண்டும். அரசியல், சாக்கடையாக மாறியிருப்பதால் அதனை எதிர்ப்பார்க்க முடியாது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .