2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இம்ரான் கான் எனும் ‘கொண்டாட்டம்’

Gopikrishna Kanagalingam   / 2018 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழப்பங்களுக்குப் பெயர் போன தெற்காசிய நாடான பாகிஸ்தானின் பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்பது உறுதியாகியிருக்கிறது. பழுத்த அரசியல்வாதியான இம்ரான் கானை, கிரிக்கெட் அடையாளத்தைக் கொண்டு அழைப்பது, ஒரு வகையில் அவரது அரசியலுக்குச் செய்யும் அவமானம் என்ற போதிலும், சர்வதேச அளவில் அவரது அடையாளத்துக்காகவும், அவரைப் பிரபலப்படுத்திய பின்னணிக்காகவும், அவ்வடையாளத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.  

பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை, தனது 39ஆவது வயதில், 1992ஆம் ஆண்டில் பெற்றுக் கொடுத்துவிட்டு ஓய்வுபெற்ற இம்ரான் கான், 1996ஆம் ஆண்டிலேயே அரசியல் கட்சியைத் தொடங்கியிருந்தார். ஆனால், 2002ஆம் ஆண்டிலேயே, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.  

அதற்குப் பின்னரான காலத்தில், சிறை, வன்முறைகள் என்று, அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்த கான், 2011ஆம் ஆண்டில் தான், மிகப்பெரிய மாற்றத்துக்கான அரசியலைத் தொடங்குவதாக அறிவித்தார். அதன் பின்னர் தான், தேசிய ரீதியில், அவரது கட்சியான தெஹ்ரீக்-ஈ-இன்சாப், பேசப்படும் கட்சியாக மாறியது.  

பின்னர், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், நேரடியாகப் போட்டியிடும் 272 ஆசனங்களில் 30 ஆசனங்களை அவரது கட்சி பெற்று, வளர்ச்சியை எடுத்துக் காட்டியது. என்றாலும், பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரிக்க அதிகரிக்கத் தான், இம்ரான் கானின் வளர்ச்சியும் அதிகரித்தது. நவாஸ் ஷெரீப் சிறையிலடைக்கப்பட்ட பின்னர், அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்ட பின்னர், அடுத்த பிரதமராக இம்ரான் வர முடியுமென்ற பேச்சுகள் எழத் தொடங்கின. இறுதியில், அவர் பிரதமராகுவது ஓரளவுக்கு உறுதியாகியிருக்கிறது.  

மேலே குறிப்பிட்டவை தான் அவரது குறுகிய வரலாறு என்ற போதிலும், ஊழலுக்கு எதிர்ப்பானவராகத் தன்னைக் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள இம்ரான் கான் மூலமாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்குள், இம்ரான் கானை வழிபடும் கூட்டமொன்று உருவாகியிருக்கிறது. இவற்றின் பின்னணியில், இம்ரான் கானைக் கொண்டாடும் இந்த நடைமுறைகள் தொடர்பாக ஆராய வேண்டிய தேவையிருக்கிறது. ஏனென்றால், பாகிஸ்தானுக்கு நெருங்கிய நாடான இலங்கையிலும், இம்ரான் கானின் வெற்றி பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது.  

இம்ரான் கானின் 22 ஆண்டுகால அரசியல் போராட்டப் பின்புலத்தை மறந்துவிட்டு, வெறுமனே கிரிக்கெட் வீரர் என்பதை மாத்திரம் நினைவில் கொண்டு, இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார வர வேண்டுமென, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபக்கமாக, 1992இல் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த தலைவர் (இம்ரான் கான்), 2018இல் பிரதமராகிறார்; 1996இல் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த தலைவர் (அர்ஜுன ரணதுங்க), 2020இல் ஜனாதிபதியாக வேண்டுமென, இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.  

இவை, இலங்கையில் காணப்படுகின்ற நிலைப்பாடுகள். மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்றால், இம்ரான் கானின் வெற்றி, நிச்சயமாகவே பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது; நம்பிக்கையை வழங்கியிருக்கிறது என்பதில் மாற்றுப் பேச்சில்லை. ஆனால், மக்களை வசப்படுத்துகின்ற அனைத்து விடயங்களும் நல்லவை தானா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதிலும், வெறுப்புப் பேச்சுகளையும் கடும்போக்கு வலதுசாரித்துவத்தையும் நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதை நாம் காணுகிறோம். இவற்றுக்கு மத்தியில், இம்ரான் கான் பிரசாரம் செய்த தேசியவாதம் எங்கே நிற்கிறது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், சர்வதேச ஊடகங்கள் சொல்லும், “உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த தலைவர், பாலியல் ரீதியான கவர்ச்சியான ஆணாக அறியப்பட்டவர்” என்பதைத் தாண்டி, இம்ரான் கானுக்கான வாக்குகள் கிடைத்தமைக்கு, அவரது அரசியல் போக்குத் தான் காரணமென்பதை மறந்துவிடக் கூடாது.  

பாகிஸ்தான் என்பது, பிராந்தியத்தில் எப்போதுமே குழப்பகரமான நாடாகவே இருந்துவந்திருக்கிறது. பயங்கரவாதிகள் என சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளை வளர்த்துவிட்ட அல்லது பாதுகாத்த குற்றச்சாட்டு, அந்நாடு மீது தொடர்ந்தும் காணப்படுகிறது. அல் கொய்தா ஆயுதக்குழுவின் நிறுவுநரான ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவற்றை மறுத்தே வந்திருந்தது பாகிஸ்தான். ஆனால் இறுதியில், பாகிஸ்தானில் வைத்துத் தான், பில் லேடன் கொல்லப்பட்டார்.  

பாகிஸ்தானின் இராணுவ மய்யத்துக்கு அருகிலேயே, அவர் தங்கியிருந்த இருப்பிடம் காணப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தின் அனுசரணை, அல் கொய்தா போன்ற ஆயுதக்குழுக்களுக்குக் காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.  

இப்படியான பின்னணியைக் கொண்ட பாகிஸ்தானில், தலிபான் ஆயுதக்குழுவுக்கு ஆதரவானவராகவே, இம்ரான் கான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இதுவொன்றும், தனியே ஒரு தடவை நடைபெற்ற விடயம் கிடையாது. தொடர்ச்சியான ஆதரவு கிடைத்தது. தலிபான்களும், இம்ரான் கானை விரும்பினார்கள் என்பதை, 2014ஆம் ஆண்டு, சமாதானப் பேச்சுகளில், தம்மைப் பிரதிநிதிப்படுத்த வேண்டுமெனத் தலிபான்கள் தெரிவுசெய்த 5 அரசியல்வாதிகளில், இம்ரான் கானும் ஒருவராக இருந்தார்.  

தலிபான்கள் மாத்திரமன்றி, ஏனைய கடும்போக்குத் தீவிரவாதக் குழுக்களுக்கான ஆதரவையும், இம்ரான் கானும் அவரது கட்சியான பி.டி.ஐ-உம் வெளிப்படுத்தியிருந்தன.  

அத்தோடு, சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிரான தரப்பினரோடு, இம்ரான் கான் இணைந்து செயற்பட்டார். தேர்தல் பிரசாரத்தின் சூடு அதிகரிக்க, மதநிந்தனைச் சட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். மதநிந்தனைச் சட்டமென்பது, ஏனைய மத சிறுபான்மையினரை மாத்திரமன்றி, முஸ்லிம்களிலும் சிறுபான்மையினராக இருக்கின்ற அஹ்மாடிகள் உள்ளிட்டோரையும் இலக்குவைக்கும் ஒரு சட்டமாக இருக்கிறது. அதற்கான வெளிப்படையான ஆதரவு தான், இன்னும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  

இவற்றுக்கு மேலதிகமாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு முன்னர் இருந்த சந்தர்ப்பத்தில், 2013ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி முதல் இவ்வாண்டு மே 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், 520 அமர்வுகளில், வெறுமனே 24 அமர்வுகளில் தான் (5 சதவீதம்), இம்ரான் கான் கலந்துகொண்டார். எனவே, மக்கள் மீதான அக்கறை கொண்டவர் என்ற நியாயப்படுத்தலையும் முன்வைக்க முடியாது.

இவையெல்லாம் சாதாரண விமர்சனங்களாக அமைந்தால், இராணுவத்தின் ஆதரவுடன் தான் இம்ரான் கான் வெற்றிபெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு, இன்னும் அதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் வரலாறு முழுவதும், இராணுவத்தின் ஆதிக்கமென்பது அதிகரித்தே காணப்பட்டிருக்கிறது. ஆனால், இத்தேர்தலின் போது இம்ரான் கானுக்கான முழுமையான ஆதரவை இராணுவம் வெளிப்படுத்தியது என்ற குற்றச்சாட்டு, தற்போது எதிர்க்கட்சியாக மாறியிருக்கின்ற முன்னைய ஆளுங்கட்சியால் மாத்திரமன்றி, ஊடகவியலாளர்களாலும் மனித உரிமை அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்கள், தேர்தல் காலத்தில் போது நிலவிய அரசியல் சூழலை, கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். தெற்காசியாவின் அண்மைக்காலச் சூழலில், தேர்தலொன்றின் போது, அரசியல் சூழல் தொடர்பான விமர்சனம் முன்வைக்கப்பட்டு, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த கட்சி மீது அதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத முதலாவது சந்தர்ப்பமாக, இது தான் அமைய வேண்டும். அந்தளவுக்கு, புறக்காரணிகளின் தாக்கம் காணப்பட்டிருந்தது.  

இப்படி, பிற்போக்கான பல விடயங்களைத் தன்னகத்தே கொண்ட ஒருவராக, பரப்பியல்வாதத்தை (populism) பயன்படுத்தி, மக்களின் பலவீனங்களையும் அச்சங்களையும் பயன்படுத்தி, வாக்குகளைப் பெற்றிருக்கிறார் இம்ரான் கான். இப்போது வெற்றிபெற்றுவிட்ட நிலையில், அவர் வாக்குறுதியளித்ததைப் போன்று, நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவாரா என்பது தான், இப்போதுள்ள கேள்வியாக இருக்கிறது.  

இதேவேளை, இம்ரான் கான் மீதான இந்த விமர்சனங்கள், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த நவாஸ் ஷெரீப் மீதான ஆதரவாகவும் கொள்ளப்படக் கூடாது. ஏனென்றால், மிகவும் ஊழல்மிகுந்த ஆட்சியை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டு, அவர் மீது காணப்படுகிறது. அத்தோடு, தனது மகள், சகோதரர் என, தனது குடும்பத்தை முன்னிறுத்திய வகையிலும், அவரது ஆட்சி அமைந்திருந்தது. எனவே, சிறந்த ஆட்சியை அவரால் முன்னெடுத்திருக்க முடியும் என்பது, இதன் வாதமாக அமையாது.  

மாறாக, தெற்காசியாவின் அண்மைக்கால வரலாற்றைப் பார்க்கும் போது, ஊழல்வாதிகள் அல்லது கடும்போக்குத் தேசியவாதிகள் என்ற இரு பிரிவினருக்கிடையே தான், தமது அரசியல் தலைவர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பது, கவலைக்குரியது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .