2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரட்டை நிர்வாகத்தில் இலங்கைத்தீவு

கே. சஞ்சயன்   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொருபுறமும் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.   

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், இப்படியொரு நிலை இருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள், கிட்டத்தட்ட ஒருமித்த வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருமித்த நிலை இருந்தது.  

எனினும், பிரதமர் ரணில், தன்னிச்சையாகச் செயற்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னர், குற்றஞ்சாட்டியிருந்தார். கூட்டு அரசாங்கத்தின் முடிவுகள், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையாலேயே எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்துக்கும் தனக்கும், எந்த தொடர்பும் இல்லாதது போலவே, ஜனாதிபதி கருத்துகளை வெளியிட்டிருந்தார்.  

அண்மையில், சிங்கப்பூருக்குச் சென்றிருந்த அவர், நாட்டுப் பிரதமருடன் நடத்திய சந்திப்பின் போது, முன்னைய அரசாங்கத்தால் சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாகவும் அதில் திருத்தங்கள் செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 

 இந்த உடன்பாட்டுக்கு, மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அமைச்சரவைதான் அனுமதி அளித்திருந்தது. இப்போது அவர், மற்றொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதால், அதில் குறைபாடு இருப்பதாகப் பிரச்சினைகளைத் தொடங்கியிருக்கிறார்.  

ரணில் விக்கிரமசிங்க ஒரு வழியில் பயணிக்க, மைத்திரிபால சிறிசேன மற்றொரு வழியில் பயணிக்க முயற்சிக்கிறார்.  இந்த இரட்டை நிர்வாகச் சூழலை, ஜனாதிபதியின் அண்மைய வெளிநாட்டுப் பயணங்கள், தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. இந்தப் பயணங்களின் போது அமைச்சர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

 பிலிப்பைன்ஸ் பயணத்தில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இணைத்துக் கொள்ளப்பட்ட போதும், சிங்கப்பூர் பயணத்தில், அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் யாருமே உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதி ஒருவர், அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளும்போது, அமைச்சர்களை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். அது கட்டாயம் இல்லை என்றாலும், இருதரப்புப் பேச்சுக்களில், குறித்த அமைச்சுக்களை வைத்திருக்கும் அமைச்சர்களை, பேச்சு மேசையில் பங்கேற்க வைப்பது வழமை.  

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும்- அதிகாரங்களைக் கொண்ட அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கும்போது, அதையும் அரவணைத்துச் செல்வது முக்கியம். பிலிப்பைன்ஸ் பயணத்தின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிங்கப்பூர் பயணத்தின் போது, அதே கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியுடன் சென்றிருந்தனர்.

இரு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்ற பேச்சுக்களில், இவர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்னொரு நாட்டின் அரசாங்கத் தரப்புடன் நடத்தும் பேச்சுக்களில் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக, அமர்த்தப்பட்டனர்.  ஜனாதிபதி சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தை வைத்து எப்படியும் செயற்படலாம் என்று கருதுகிறார் என்பதையே இது காட்டுகிறது.  

எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பவர்களை, ஒரு நாட்டின் அரச தரப்பு பிரதிநிதியாக, பேச்சு மேசையில் அமர வைத்தது நகைப்புக்கிடமான விடயம். இலங்கை ஜனாதிபதிகளில் குறுகிய காலத்துக்குள் அதிக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையை, மைத்திரிபால சிறிசேன பெற்றுவிடுவார் என்றே தெரிகிறது. 41 மாதங்களில் 34 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

 மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று, தனிப்பட்ட விமானங்களில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று காட்டிக் கொண்டாலும் பயணிகள் விமானங்களிலேயே அவர் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், தனது குழுவில் அவசியம் இல்லாதவர்களை இணைத்து, அரசாங்க நிதியை விரயம் செய்கிறார் என்றக் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியுள்ளன. பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் பயணங்களினால், இந்தக் குற்றச்சாட்டு தீவிரமாகியிருக்கிறது.   

அரசாங்கத்தைச் சாராதவர்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று முடிவுகளை எடுக்கும் அளவுக்கு, இரட்டை நிர்வாகச் செயன்முறையை ஜனாதிபதி ஊக்குவித்து வருகிறார்.

இந்த விடயத்தில் மாத்திரமன்றி, உள்நாட்டு அரசியல், அரசாங்க விவகாரங்களில் கூட, ஜனாதிபதியின் தரப்பில் உள்ளவர்களே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போல் பேச தொடங்கிவிட்டார்கள். ஜனாதிபதி, தனது கட்சியைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்பதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச தரப்பைப் போன்ற கருத்துக்களை வெளியிட முடியாது.  

 அரசாங்கமாக வெளிப்படுத்தக் கூடிய கருத்துக்களை, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் வெளியிடும் போது, அரசாங்க இரகசியம் பாதுகாக்க முடியாதக் கட்டத்தை அடைகிறது.   இலங்கையில் இப்போது இத்தகைய சூழல் தான் இருந்து கொண்டிருக்கிறது.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் விரும்பியவரையே அமைச்சராக நியமிப்பேன் என்று, அரசாங்கத்துடன் முட்டி மோதிக் கொண்டு இருக்கிறார். நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக, அரசமைப்புச் சபையுடனும் அவர் மோதி வருகிறார். கடந்த ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி, உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான இரு நீதியரசர்களை நியமிப்பதில், ஜனாதிபதிக்கும் அரசமைப்புச்  சபைக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்களை,  அந்தப் பதவிக்கு நியமிக்க மைத்திரிபால சிறிசேன முற்பட்டார். ஆனால், அரசமைப்புச் சபை, அதை மறுத்துவிட்டது. இது, ஒக்டோபர் 26 ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.  

உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தமக்கு சாதகமானவர்களை நியமிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன- மஹிந்த ராஜபக்ஷ கூட்டணி விரும்புகிறது. கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்திருந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதி பரிந்துரைத்த நீதியரசர் ஈவா வணசுந்தரவின் பெயரை, அரசமைப்புச் சபை நிராகரித்து விட்டதாகவும் அரசமைப்புச் சபை எவ்வாறு ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரிக்க முடியும் என்றும், விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன போன்ற மஹிந்த தரப்பு உறுப்பினர் பிரச்சினை எழுப்பினர். ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பதவிக்கு ஈவா வணசுந்தரவின் பெயரை ஜனாதிபதி முன்மொழியவில்லை என்று, அரசமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.  

நளின் பெரேரா, தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்ட பின்னர், நீதித்துறையில், ஆரம்ப நிலையிலிருந்து பணியாற்றிய அனுபவமிக்க ஒருவரை தலைமை நீதியரசராக தெரிவு செய்து இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூறியிருந்தார். நளின் பெரேராவை, தலைமை நீதியரசராக நியமித்து விட்டு, யாருமே செய்யாத ஒரு சாதனையைச் செய்துவிட்டார் என்பதுபோல கூறிய ஜனாதிபதியின் தரப்பில் உள்ளவர்கள், இப்போது ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டவரை அரசமைப்புச் சபை நிராகரித்ததாகக் கூறுவது அபத்தமான அரசியல்.  

இப்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக, நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி இரண்டு முறை செய்த பரிந்துரைகளும் அரசமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதில் மாத்திரமன்றி, எதிர்காலத்தில், பல்வேறு உயர்மட்ட நியமனங்களிலும் இதேபோன்று இழுபறிகள், முரண்பாடுகள் தோன்றும் சூழலே உள்ளது.

கூட்டு அரசாங்கம் பதவியில் இருந்தபோது, ரஷ்யாவுக்கான தூதுவர் பதவிக்கு, கலாநிதி தயான் ஜெயதிலகவை நியமிக்க, அரசமைப்புச் சபை விரும்பவில்லை. ஜனாதிபதியின் பரிந்துரையை பரிசீலனை செய்யுமாறு, திரும்பத் திரும்பக் கேட்ட போதும் ஜனாதிபதி அதற்கு இணங்கவில்லை.  
கடைசியாக வேறுவழியின்றி, அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக, அரசமைப்புச் சபை அறிவித்தது. அதற்குப் பின்னர், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பதவியேற்ற தயான் ஜெயதிலக, ஒரு இராஜதந்திரியாகச் செயல்படாமல்- இலங்கையின் இரண்டாவது அரசாங்கமொன்றின் பிரதிநிதி போலச் செயற்பட்டு வருகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது தரப்பினரையும் அரசியல் ரீதியாக பலப்படுத்துவதற்கான பிரசாரங்கள், பேச்சுக்களில் அவர் வெளிப்படையாக ஈடுபடுகிறார். ஒரு தூதுவராக, தயான் ஜெயதிலகவைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தான், வெளிவிவகார அமைச்சு இருந்து கொண்டிருக்கிறார். மொஸ்கோவில் இருந்து கொண்டு சிரியா, வெனிசுவேலா, கியூபா போன்ற இலத்தீன் அமெரிக்க, மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, அந்த நாடுகளை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக திருப்புவதில் முனைப்பு காட்டி வருகிறார்.  

இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம், ஜனாதிபதி எடுத்த தீர்மானமானமே ஆகும்.  ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தோற்கடித்தபோதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே பாதையில் பயணிக்கக் கூடிய நிலைக்கு இன்னும் வரவில்லை. அவ்வாறு இணைந்து செயற்பட முடியாத நிலை நீடிக்கும் வரை, இரட்டை நிர்வாகச் சூழல் நாட்டில் தொடரத் தான் போகிறது.  

இது வெறுமனே அரசியல் ரீதியான குழப்பங்களை மாத்திரமன்றி பொருளாதார, வர்த்தக, முதலீட்டு துறைகளிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். அத்தகைய நிலையை நோக்கித்தான், இப்போது இலங்கை பயணித்துக் கொண்டிருக்கிறது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .