2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு?

கே. சஞ்சயன்   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம், அரசாங்கத்துக்குக் கிடையாது என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூற வேண்டிய நிலை, ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கிறது. 

ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன.  

முதலாவது, அரசியலில் ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம்; ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளில் ராஜபக்‌ஷவினரே இருக்கிறார்கள்.  

இரண்டாவது, நாட்டின் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகளின் அதிகரிப்பு.  
இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

அதுபோல, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுபோல, இன்னும் பல முன்னாள் இராணுவ அதிகாரிகள், அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.  

இவ்வாறான ஒரு நிலையில் தான், கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப் போகிறார் என்ற பரவலான குற்றச்சாட்டு ஒன்று, முன்வைக்கப்பட்டு வருகிறது.  

சிவில் நிர்வாகத்துக்கு உதவும் வகையில், ஆயுதப்படைகளுக்குச் சிறப்பு வர்த்தமானி மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும், இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்த்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.  

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, “நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வரும் எண்ணம், ஏதும் கிடையாது” என்று கூறியிருந்தார்.  

ஆனால் நடைமுறையில், கோட்டாபய ராஜபக்‌ஷ, தனக்கு நெருக்கமான, தனது உத்தரவுகளை நிறைவேற்றக்கூடிய, தனக்குப் பிடித்தமான இராணுவ அதிகாரிகளை அருகில் வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்.  

ஒவ்வொரு ஜனாதிபதியும் ஆட்சியாளரும் தமக்கு ஏற்றவாறு, ஒத்துழைத்துச் செயற்படக் கூடியவர்களைத் தான், முக்கிய பதவிகளில் நியமிப்பார்கள்.  

அந்தவகையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக இருப்பவர்களில், அதிகம் பேர் இராணுவ அதிகாரிகள் தான். எனவே அவர், தனது நிர்வாகத்தில், இராணுவ அதிகாரிகளை அதிகளவில் உள்ளீர்க்க முனைவது இயல்பு.  

எனினும், சிவில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றில், இராணுவ அதிகாரிகளின் கை ஓங்குகின்ற போது, அது எதிர்மறையான விம்பத்தையே காட்டுவதாக இருக்கும்.  

இப்போதைய நிலையில், அவ்வாறான ஒரு பெரிய விவகாரமாக பார்க்கப்படுவது, பொலிஸ் திணைக்களம் தொடர்பான நடவடிக்கைகளாகும். பொலிஸ் திணைக்களம், இப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பொதுவாக ஜனநாயக நாடுகளில், பொலிஸ் என்பது, உள்நாட்டு விவகாரங்களைக் கையாளும் அமைச்சின் கீழேயே இருப்பது வழமை.  

பொலிஸ் திணைக்களம் என்பது, சிவில் நிர்வாக விவகாரங்களைக் கையாளுகின்ற ஓர் அலகே தவிர, பாதுகாப்பு அமைச்சால் கையாளப்படக் கூடிய ஒரு துறை அல்ல.   

இலங்கையில், போர்க்காலத்தில் பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இயங்கியது. அப்போதிருந்த தேவைகள், ஒருங்கிணைப்பு முறைகளால் அது, சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படவில்லை.  

ஆனால், போருக்குப் பின்னர் பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று, சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தின. சட்டம், ஒழுங்கு, சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று அழுத்தங்களைக் கொடுத்தன.  

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அதற்கு மசிந்து கொடுக்காத நிலையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கிய போது, அதைத் தடுப்பதற்கான ஓர் உத்தியாக, சட்டம் ஒழுங்கு அமைச்சை, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் உருவாக்கியது.  

அதன் கீழ், பொலிஸ் திணைக்களம் கொண்டு வரப்பட்டது. இராணுவ அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு, ஒரு மறைமுகமான இராணுவ நிர்வாகத்தின் கீழ் அது கொண்டு வரப்பட்டது.  

ஆனால், மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சு, ஐ.தே.க வசமே இருந்தது. பாதுகாப்பு அமைச்சுக்கும், பொலிஸ் திணைக்களத்துக்கும் ஒருங்கிணைப்பில் கூட குறைபாடுகள் இருந்தன.  

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கைகள், பொலிஸ் திணைக்களம்,  புலனாய்வுப் பிரிவுகளுக்குக் கிடைத்திருந்த போதும், அது இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. இதுவே, பொலிஸ்,  பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பில் இருந்து வந்த குறைபாட்டை வெளிப்படுத்தியது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால, பொலிஸ் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார்.  

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலை,  அதன் மீதான கவனம் குவிக்கப்பட்டிருந்த நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். அவரது அந்த நடவடிக்கையை, ரணில் அரசாங்கமும் பெரியளவில் எதிர்க்கவில்லை. ஊடகங்களும் அதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.  பாதுகாப்பு அமைச்சில் இருந்து, பொலிஸ் திணைக்களத்தை வேறாகப் பிரிக்க வேண்டும் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தக்கு, அழுத்தங்களைக் கொடுத்த சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் கூட, அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை.  

இவ்வாறான சூழலில், மைத்திரிபால சிறிசேன உருவாக்கிக் கொடுத்த அந்தத் தளத்தை, தற்போதைய அரசாங்கமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  

பாதுகாப்பு அமைச்சில் இருந்து, பொலிஸ் திணைக்களத்தை வேறாகப் பிரிக்க, முன்னைய மஹிந்த அரசாங்கம் பெரிதும் சிரமப்பட்ட போதும், இப்போது எந்தச் சிக்கலுமின்றி, மீண்டும் அதே இணைப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது.  

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்ற நியமனங்கள், இடமாற்றங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் எல்லாமே, சர்ச்சைக்குரியனவாக இருந்து கொண்டிருக்கின்றன.  

முக்கியமான பல வழக்குகள் குறித்த, விசாரணைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள், அந்த வழக்குகளைக் கையாளும் பிரிவுகளில் இருந்து மாற்றப்படுகிறார்கள். தற்போதைய அரசாங்கத்துக்குச் சாதகமான அதிகாரிகள், நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.  

இதற்கு மத்தியில், பொலிஸ் ஊடகப் பிரிவை கலைத்து விடும் முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இனிமேல், பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே, பொலிஸ் தகவல்களும் வெளியிடப்படும். இது, தகவல் அறியும் சுதந்திரத்தை மீறும் செயல் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.   ஊடக அமைப்புகள் கிளப்பியிருக்கின்ற இந்தக் குற்றச்சாட்டுகளை, அரசாங்கம் கண்டுகொள்ளக் கூடிய நிலையில் இல்லை.  

இதுபோன்ற நிகழ்வுகள், அதிகரித்து வருவதால் தான், இராணுவ ஆட்சி பற்றிய குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.   

இவ்வாறான குற்றச்சாட்டுகள், பரவுகின்ற செய்திகளுக்கெல்லாம் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள், மறுப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இருக்கிறார்கள். இதிலிருந்தே, இந்த விவகாரம் எந்தளவுக்கு அரசாங்கத்துக்கு தொல்லை கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை ஒரு ‘டெர்மினேற்றர்’ என்ற உருவகத்தைக் கொடுக்கவே அவரது தரப்பினர் முயன்றனர். ஆனால், அந்த ‘டெர்மினேற்றர்’ அடையாளத்துடன், ஆட்சியில் இருப்பதை கோட்டாபய விரும்பவில்லை. அவர் தனது குடும்பத்திலேயே, தானே சிறு வயதில் இருந்து, அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை நிரூபிக்கவே முனைகிறார்.   அவரிடம் ‘டெர்மினேற்றர்’ பற்றிக் கேள்வி எழுப்பப்படும் சந்தர்ப்பத்திலும், தான் அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.  

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பொலிஸ் திணைக்கள விவகாரத்திலும், ஜனாதிபதி கோட்டாபய கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார்.  அவர் இராணுவப் பின்னணி கொண்டவர்களை, அரச நிர்வாகத்துக்குள் உட்புகுத்துவதில் காட்டி வருகின்ற தீவிரம் தான், இராணுவ ஆட்சி பற்றிய அச்சங்களுக்கு காரணம்.   

பேச்சை விட செயலுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் இராணுவ ஆட்சிக்குத் திட்டமிடவில்லை என்று கூறிக் கொண்டிருப்பதை விட, அவ்வாறான ஒரு சூழலுக்கு இடமில்லை என்று கருதக்கூடிய சூழலை ஏற்படுத்துவது தான் பொருத்தம்.  
அதுதான் மக்களை நம்ப வைப்பதற்கான இலகுவான வழி.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .