2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரு துருவங்களில் ஊடகங்கள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 01:47 - 1     - {{hitsCtrl.values.hits}}

“தமிழர்கள் ஆயுதப் போரில் ஈடுபடாமல், அஹிம்சை வழியில் போராடியிருக்கலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் கூறியதை அடிப்படையாக வைத்து, கடந்த வாரம் நாம் எழுதிய கட்டுரையைச் சிங்களத்திலும் எழுதி, ‘லங்காதீப’ பத்திரிகையிலும் வெளியிடச் செய்திருந்தோம்.  

அதை வாசித்த, ஒரு மூத்த சிங்கள ஊடகவியலாளர், “சம்பந்தன் அவ்வாறு கூறியிருந்ததை, நான் அறிந்திருக்க வில்லை” என்றார். காரணம், சிங்களவர்கள் விரும்பக் கூடிய, சம்பந்தனின் இந்தக் கூற்றையாவது, ‘சபல’ சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு இருக்கவில்லை.   

அத்தோடு, அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த, இன்றைய தமிழ் அரசியலில் முக்கியமான பிரச்சினைகளாகக் கருதப்பட்டு வரும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிப் பிரச்சினை, காணாமற்போனவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியவற்றைப் பற்றியும் மேற்படி மூத்த ஊடகவியலாளருக்குப் போதிய தெளிவு இருக்கவில்லை. “சிங்கள மக்கள் இவற்றை அறிந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.   

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே, தகவல் பரிமாற்றத்தில் உள்ள பாரிய இடைவெளியையே இது எடுத்துக் காட்டுகிறது. ஒரு மூத்த ஊடகவியலாளருக்கே இந்தப் பிரச்சினைகளைப் பற்றித் தெரியாவிட்டால், சாதாரண சிங்கள மக்கள், இவற்றை அறிந்திருக்க எவ்வித நியாயமுமில்லை.   

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையில் போர் இடம்பெற்ற காலத்திலும், அதற்கு முன்னரும் இந்த இடைவெளி காணக்கூடியதாகவே இருந்தது. ஒரு வகையில், அந்த இடைவெளியே போரை வளர்த்துவிட்டது என்றும் கூறலாம்.  

1950களில் இருந்தே, சில விடயங்களை ஆராந்து பார்த்தால், அது தெளிவாகிறது. உதாரணமாக, போருக்கு முன்னர் அரசாங்கத்தின் மொழிக் கொள்கையால், சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டதை, போர் முடிவடைந்து சுமார் பத்து ஆண்டுகளாகியும் இன்னமும் பல சிங்களவர்களுக்குத் தெரியாது. மொழிப் பிரச்சினை, போருக்கு வழி வகுத்த பிரதான பிரச்சினைகளில் ஒன்றாகும்.   

தனிச் சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போது, அதைத் தமக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகப் பார்க்க, பெரும்பாலான சிங்கள மக்கள் முற்பட்டார்கள்.   

சிலவேளை, தமிழ் பேசும் மக்களை அது இரண்டாந்தர பிரஜைகளாக்கி விட்டது என்பதையும் சில சிங்கள புத்திஜீவிகள் உணர்ந்திருக்கலாம். ஆனால், அந்தச் சட்டம் அம்மக்களின் வாழ்க்கையை, எவ்வாறு பாதித்தது என்பதைச் சிங்கள மக்களில் பலருக்குத் தெரியாது.   

அரசாங்கத் தொழில் பெறுவதிலும், பதவி உயர்வு பெறுவதிலும் அச்சட்டம் தமிழ் பேசும் மக்களை, வெகுவாகப் பாதித்தது என்பது, பெரும்பாலான சிங்களவர்களுக்குத் தெரியாது. ஏனெனில், சிங்கள ஊடகங்கள் அந்த விடயத்தை தொடர்ச்சியான முறையில் அவர்களிடம் எடுத்துச் செல்லவில்லை.  

உயர் கல்விக்கான தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, சிறந்த பாடசாலைகள் இருந்த யாழ்ப்பான மாணவர்கள் மட்டுமன்றி, அவ்வாறான பாடசாலைகள் இருந்த கொழும்பில் வாழ்ந்த சிங்கள மாணவர்களும் பாதிக்கப்பட்டார்கள். 

ஆனால், இதற்கு எதிரான போராட்டத்தை, அந்தச் சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து நடத்த, தமிழ்த் தலைவர்கள் முன்வரவில்லை. அவர்கள், அதையும் தமிழர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினையாகச் சித்திரித்தனர். தமிழ் ஊடகங்களும் இரு சாராரையும் பாதிக்கும் பிரச்சினையாக, அதைச் சித்திரிக்க முன்வரவில்லை.   

இந்த நிலையில், தீர்வு தேடித் தமிழர்கள் தனியாகப் போராடினார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், சிங்கள மாணவர்களும் தரப்படுத்தல் கொள்கையை எதிர்த்து, பெரிதாகப் போராடவில்லை. சிங்கள இடது சாரிகள் மட்டுமே, அதற்கு எதிராக ஓரளவுக்காவது குரல் கொடுத்தார்கள். எனவே, சிங்கள ஊடகங்களும் அதைத் தமிழர்களின் பிரச்சினையாகவே கருதிக் கைவிட்டுவிட்டன.   

போதாக்குறைக்கு, தமிழ்பேசும் மக்களைப் பாதிக்கும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு, நாட்டைப் பிரித்து, தனித் தமிழ் நாடொன்றை உருவாக்குவதே சிறந்தவழி என்று, தமிழ்த் தலைவர்கள் முடிவு செய்தனர். அத்தோடு, தமிழர்களின் போராட்டத்துக்கு, சிங்கள மக்கள் மட்டுமன்றி சிங்கள ஊடகங்களும் எதிரிகளாகி விட்டனர். தமிழர்களும் அதற்கு நேரெதிராக செயற்படத் தொடங்கினர்.  

போர்க்காலத்தில் அரச படையினர் செய்யும் எதையும் சிங்கள ஊடகங்கள் நியாயப்படுத்தின; அவர்கள் செய்த அல்லது அவர்கள் செய்திருக்கலாம் என்று யூகிக்கக் கூடிய அத்தனை செயல்களையும் நியாயப்படுத்தின; மூடி மறைக்க முற்பட்டன.   

அதேபோல் புலிகள் செய்த அல்லது செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கக் கூடிய சகலவற்றையும் தமிழ் ஊடகங்கள் நியாயப்படுத்தின; மூடி மறைத்தன.  

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி, புலிகள் அநுராதபுரத்தில் ஸ்ரீ மகா போதி அருகே, சமயக் கிரியைகளில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்டதாகக் கருதப்படும் மக்களைக் கொன்று குவித்த போதும், 1987 ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் குண்டொன்றை வெடிக்கச் செய்து நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்ற போதும் அதன் பின்னர் இடம்பெற்ற இது போன்ற பலநூறு சம்பவங்களின் போதும் தமிழ் ஊடகங்களின் இந்த நிலைமை காணப்பட்டது.   

1990ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸவுடனான சமாதான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்ட புலிகள், இரண்டாவது ஈழப் போரை ஆரம்பித்த போது, கிழக்கு மாகாணத்தில் 600க்கும் மேற்பட்ட பொலிஸ்காரர்களைச் சிறைப்பிடித்துக் கொன்றார்கள். அப்போது தமிழ் ஊடகங்கள், அதைக் குற்றமாகக் காணவில்லை.   

2004ஆம் ஆண்டு, ‘கருணா’ புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய போதுதான், தமிழ் ஊடகங்கள் முதன் முதலில், அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதாகக் கூறத் தொடங்கின. ஆனால், இறுதியில் புலிகளே பொறுப்புக் கூற வேண்டியதால், அந்தக் குற்றச்சாட்டும் ஓரிரு நாள்களில் கைவிடப்பட்டது.  

வடக்கு, கிழக்கு போரின் போது, முதன் முதலில் சாதாரண மக்களைத் திட்டமிட்டு இலக்கு வைத்தவர்கள் இராணுவத்தினரே. புலிகள் அதற்குப் பின்னரே அக்கொடூரச் செயல்களில் ஈடுபட்டனர். முதலில், புலிகளுக்கு எதிரான கண்மூடித்தனமான தாக்குதலாகவும் பின்னர், திட்டமிட்டும் பொது மக்கள் மீது, படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றன.   

போரின் ஆரம்ப காலத்திலும் அதாவது, 1984ஆம் ஆண்டிலும் இவை இடம்பெற்றன. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9,10,11, 12 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது, 300க்கும் மேற்பட்டவர்கள் (புலிகளும் சாதாரண மக்களும்) கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.   

தமிழ்ப் பத்திரிகைகள், சூசகமாக என்ன நடந்தது என்பதை அறிவித்திருந்த போதிலும் சிங்களப் பத்திரிகைகள் அன்று அமுலில் இருந்த தணிக்கைக்குப் பின்னால் மறைந்து, சம்பவங்களை இருட்டடிப்புச் செய்தன.   

முதலாவது திட்டமிட்ட சம்பவம், 1984ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வவுனியா, பூவரசங்குளத்தில் இடம்பெற்றது. அன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று, அநுராதபுரம் அருகே, ரம்பேவ என்னுமிடத்தில் வழிமறிக்கப்பட்டு, பூவரசங்குளத்துக்கு திசைதிருப்பிக் கொண்டு செல்லப்பட்டு, சுமார் 15 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதும் தமிழ், சிங்கள ஊடகங்கள் அச்சம்பவத்தைப் பற்றிய செய்திகளை வேறுபட்ட கண்ணோட்டங்களிலேயே வெளியிட்டன.   

அதையடுத்துப் படையினரும் புலிகளும் பல இடங்களில், சாதாரண மக்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, பல்லாயிரக் கணக்காகும்.   

ஒரு சில இடங்களில், முஸ்லிம் குழுக்களும் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில், இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. அவ்வப்போதெல்லாம் ஊடகங்கள் ‘தத்தமது’ சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் அல்லது ‘தத்தமது’ சமூகத்தின் குற்றங்களை மூடி மறைக்கும் வகையிலேயே செயற்பட்டுள்ளன.   

இது ஒக்டோபர் மாதம். இது போன்றதோர் ஒக்டோபர் மாதத்திலேயே (1990ஆம் ஆண்டு) புலிகள் சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களை, வட மாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றினார்கள்.   

இன்று பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் வில்பத்துவில் இருந்து, முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் அந்த ஒக்டோபர் மாதத்திலேயேதான். அந்த வெளியேற்றங்களின் போதும் தமிழ், சிங்கள ஊடகங்கள் வேறுபட்ட கண்ணோட்டத்திலேயே பிரச்சினையை அணுகின.   

சிங்களப் பத்திரிகைகள் புலிகள், முஸ்லிம்களை விரட்டினார்கள் என்று கூறும்போது, தமிழ் ஊடகங்கள் முஸ்லிம்கள், வடக்கிலிருந்து வெளியேறினார்கள் என்று கூறவே விரும்பின.   

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21, 22ஆம் திகதிகளில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே, போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதிலும், ‘வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்’ என்று குறிப்பிடுவதைப் புலிகள் விரும்பவில்லை.   

இதே விரட்டியடிப்புகள், தமிழர்களுக்கு எதிராகவும் இடம்பெற்றன. ஆனால், அவை பெரும்பாலும், இவ்வாறு திட்டமிடப்பட்டதாகத் தெரியாத வகையிலேயே இடம்பெற்றன. வடக்கில் பல இடங்களில், இராணுவம் தமது முகாம்களைச் சுற்றிப் பாரிய பிரதேசங்களை, அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தின.   

அப்பிரதேசங்களில் வாழ்த்த மக்கள், பெரும் கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதால், அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அவ்விடங்களைப் படையினர் தமதாக்கிக் கொண்டனர். அந்தக் காணிகளுக்கான போராட்டமே, தற்போது வடக்கில் நடைபெற்று வருகிறது.  

இதேபோல், புலிகளின் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக கிழக்கில் முஸ்லிம்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். அது சிங்கள, தமிழ் ஊடகங்கள் இரண்டினதும் கண்களில் படவில்லை.  

இவை, சிங்கள மக்களுக்குத் தெரியாது. ஒரு வருடத்துக்கு மேலாக, கேப்பாபிலவில் காணிகளுக்காக இடம்பெற்ற போராட்டத்தைப் பற்றிய செய்திகளையோ படங்களையோ நாம் சிங்கள ஊடகங்களில் காணவேயில்லை.   

அதுமட்டுமல்ல, தாமே அன்று அனுதாபத்தோடு நோக்கிய வில்பத்து பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினையையாவது இன்று சிங்கள ஊடகங்கள் காண்பதில்லை. அவை, அதனை முஸ்லிம்களின் காடழிப்பாக திரிபுபடுத்தி, இன்று பிரசுரிக்கின்றன.   

எத்தனையோ வருடங்களாக நடைபெற்று வரும் தமிழ்க் கைதிகளுக்கான போரட்டத்தைப் பற்றிய செய்திகளையும் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் காண முடிவதில்லை. 

அது பற்றிய செய்திகள் பிரசுரிக்கப்பட்டாலும் ‘ஆபத்தான புலிப் பயங்கரவாதிகளை’ விடுதலை செய்யுமாறு தமிழ்த் தலைவர்கள் கோருவதாகவே பிரசுரிக்கப்படுகின்றன.   

அதேவேளை, போரில் நேரடியாக ஈடுபட்டு, அப்போரின் தோல்வியின் பின்னர், கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 12,000 புலிப் போராளிகளை, அரசாங்கம் விடுதலை செய்ததாகக் கூறி, அரச தலைவர்கள் பெருமையும் அடித்துக் கொள்கிறார்கள். அந்தப் போராளிகளுக்கும் இந்தப் போராளிகளுக்கும் இடையில் ‘பயங்கரத்தில்’ என்ன வித்தியாசம் இருக்கிறது?  

நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்படாமலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலர் 10, 15 வருடங்களாகச் சிறையில் இருப்பது, உண்மையிலேயே பெரும்பாலான சிங்கள மக்களுக்குத் தெரியாது.   

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர், அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரை, 17 வருடங்களாகச் சிறையில் இருந்தார் என, அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.   

இவ்வாறு நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டுத் தான், இந்தக் கைதிகள் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியுள்ளது என்பது, சிங்கள மக்களுக்குத் தெரியாது.   

தென்பகுதியில் 1986 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, காணாமற்போன சுமார் 60,000 பேர் தொடர்பாக, பிரேமதாஸ அரசாங்கமும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கமும் ஐந்து ஆணைக்குழுக்களை நியமித்தன. அவற்றின் சாட்சியங்களை, தமிழ் ஊடகங்கள் அறிக்கையிடவில்லை; போதிய முக்கியத்துவமும் வழங்கவில்லை.   

இதேபோல் கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற் போனோருக்கான பரணகம ஆணைக்குழு முன் தமிழ் மக்கள் அளித்த சாட்சியங்கள் சிங்கள மக்களுக்குத் தெரியாது.  

எனவே, சரணடைந்தவர்கள் 16 பஸ்களில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள்; ஆனால், அவர்கள் திரும்பி வரவில்லை என்பது போன்ற சாட்சியங்கள் சிங்கள மக்களைச் சென்றடையவில்லை.   

இந்த நிலைக்கு, அரசியல்வாதிகளே பிரதான காரணம். அவர்கள் தமது வாக்காளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தமது மொழியில் மட்டும் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக் கூற முற்படுகிறார்கள். ஏனைய மொழி ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அனேகமாகப் புறக்கணிக்கிறார்கள்.   


You May Also Like

  Comments - 1

  • மகாதேவா Wednesday, 24 October 2018 03:41 AM

    இந்தக் கட்டுரையையும் சிங்கள மொழியில் வெளியிட்டால் நன்று!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .