2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இருண்ட சூனியவெளிக்குள் அரசாங்கம்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்து வந்த விஜயதாச ராஜபக்ஷ, கடந்த வாரம் பதவி விலகியிருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புகளை அவர் தொடர்ந்தும் மீறி வருகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, அவரை பதவி விலக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்தது.

தான் அங்கம் வகிக்கும் கட்சியே, தன்னை பதவி நீக்குமாறு பரிந்துரைத்தமை தொடர்பில், விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களிடம் பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. மற்றப்படி, தான் தனி ஆவர்த்தனம் செய்து வந்தமை தொடர்பில் அவர் வெளிப்படையாகவே இருந்தார். மறைமுகமாக பெருமையாகவும் உணர்ந்தார்.  

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த விஜயதாச ராஜபக்ஷ அப்போது மிகவும் வலுக்குறைந்திருந்த எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் பெரும் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக மாறினார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் வரை சட்ட ரீதியான விடயங்களை கையாள்வது தொடர்பிலும் விஜயதாச ராஜபக்ஷவையே ரணில் விக்கிரமசிங்க முன்னிறுத்தி வந்தார்.

ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னராக விஜயதாச ராஜக்ஷ தொடர்பில் எழுந்த ‘அவன்கார்ட்’ சர்ச்சையும், அது தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டு வந்த குற்றச்சாட்டுகளும் அவரை பொது வெளியில் சற்றே நிலைத்தடுமாற வைத்தது. விமர்சன ரீதியில் அவரால் ஊடகங்களை மாத்திரமல்ல, சொந்தக் கட்சியையே எதிர்கொள்ள முடியாமல் போனது.   

அத்தோடு, அவர் வகித்து வந்த நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுகள் விஜயதாச ராஜபக்ஷவை இன்னும் சற்று அதிகாரம் கூடிய பக்கத்தில் நகர்த்தவும் வைத்தது. மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளில் போதிய முன்னேற்றங்கள் இல்லை என்கிற நிலையில், அதன் எதிர்வினைகள் அரசாங்கத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதும், துறை சார் அமைச்சராக விஜயதாச ராஜக்ஷ எந்தவிதமான துரித நடவடிக்கைகளையும் எடுப்பதிலிருந்து விலகியிருந்தார் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான குற்றச்சாட்டாகும்.

அது, ரணில் விக்கிரமசிங்கவையும் பெரும் எரிச்சல் படுத்தியது. அதன் நீட்சியாக, விஜயதாச ராஜபக்ஷவை கட்சிக்குள் தரமிறக்கும் வேலைகள் ஆரம்பமாகின. குறிப்பாக, விஜயதாச ராஜபக்ஷவை ஊழல்வாதியென்றும், மோசடிக்காரர் என்றும் குற்றஞ்சாட்டி வந்த சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இணைக்கப்பட்டார்.

அத்தோடு, களனி தொகுதி அமைப்பாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், விஜயதாச ராஜபக்ஷ பெரும் ஏமாற்றம் அடைந்தார். சரத் பொன்சேகாவை கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிப்பது தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் வெளிப்படுத்திய போது, விஜயதாச ராஜபக்ஷ வெளிப்படையாகவே தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

அங்கிருந்து அவர், தனி ஆவர்த்தனத்தை வெளிப்படையாகவே செய்ய ஆரம்பித்தார். அதற்கு, அவர் வகித்துவந்த அமைச்சுப் பதவிகளும் அதிகளவில் உதவ ஆரம்பித்தது. குறிப்பாக, புத்தசாசன அமைச்சினூடு மைத்திரி- ரணிலை மீறி பௌத்த பீடங்களோடு நெருக்கமும், ஒத்திசைவையும் அவர் வெளிப்படுத்த முனைந்தார். அது, ஒண்றிணைந்த எதிரணியின் அரசியல் முனைப்புகளுக்கு அதிகளவில் இடங்கொடுப்பதாகவும் அமைந்தது.

இதனால், ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் பௌத்த பீடங்களின் அழுத்தங்களை, அரசாங்கம் தொடர்ச்சியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நகர்த்தியது.   

குறிப்பாக, பொது பல சேனா மேற்கொண்ட அத்துமீறல்கள் தொடர்பில், நியாயமான நீதி விசாரணைகளை முன்னெடுப்பதை தடுக்கும் நோக்கில், விஜயதாச ராஜக்ஷ தலையீடுகளைச் செய்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டது. அத்தோடு, நீதியமைச்சராக இருந்து கொண்டு தன்னுடைய வரைமுறைகளை மீறி மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி ஒருவரை வெளிப்படையாக ஊடகங்களினூடு மிரட்டிய விவகாரம், நல்லாட்சி அரசாங்கம் என்று தொடர்ந்தும் தம்மை முன்னிறுத்திக் கொண்டு இருக்கும் மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் ஊடகங்களில் வெளிப்பட்ட அதிகமான விமர்சனங்கள் உண்மையிலேயே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறான நிலை ஏற்படும் என்று தெரிந்து மைத்திரியோ- ரணிலோ அவருக்கு குறித்த அமைச்சுகளை கையளிக்கவும் இல்லை.

ஆனால், அவர் தனக்கான தற்போதையை நிலையை விட்டு நகரும் போது, தான் எதிர்காலத்தில் பெரும் ஆதாயங்களை அல்லது அதிகாரத்தை அடைந்துவிட முடியும் என்று நம்பினார் என்பது வெளிப்படையானது. அதுதான் இன்றைக்கு அவரை பதவியிலிருந்து செல்ல வைத்திருக்கின்றது.  

‘நல்லாட்சி’ என்கிற கவர்ச்சிகரமான அடையாளத்தோடு ஆட்சிக் கட்டிலில் ஏறிய மைத்திரி- ரணில் கூட்டு, இன்றைக்கு அதிக நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு முக்கிய அமைச்சரான ரவி கருணாநாயக்க பதவி விலகி வேண்டிய ஏற்பட்டது. இன்னொரு பக்கம், சுதந்திரக் கட்சி மூத்த அமைச்சர்கள் அரசாங்கம் தொடர்பில் வெளிப்படுத்தும் அதிருப்தி, கூட்டு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைகளை அதிகளவில் ஆட்டம் காணச் செய்திருக்கின்றது.

ஆட்சி மாற்றத்தினூடு மைத்திரியும் ரணிலும் எழுதிய நூறு நாட்கள் திட்டத்தில் 30 வீதமானவையே நிறைவேற்றப்படாத நிலையில், நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில், மக்கள் பெரும் ஏமாற்றத்துடனேயே இருக்கின்றார்கள். அது, மஹிந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த ஏமாற்றத்தின் அளவை அண்மித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில், அமைச்சரவைப் பொறுப்புகளை மீறி விமர்சிக்கின்ற அரசாங்க முக்கியஸ்தர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்கிற விடயத்தை ஆளுங்கட்சியே அமைச்சர்களுக்கு எதிராக கையிலெடுக்க வேண்டிய ஏற்பட்டிருக்கின்றது. விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதனொரு கட்டமே.   

ஆனால், இவ்வாறான கட்டுப்பாடுகள் மாத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீள வலுப்படுத்துவதற்கு உதவுமா என்கிற கேள்வி எழுகின்றது?  

மைத்திரியும் ரணிலும் இரு பெரும்பான்மைக் கட்சிகளில் தலைவர்களாக தங்களுடைய வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையின் பக்கத்தில் செயற்படுவது வழக்கம்.

ஆனால், இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடிவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், தேர்தல்களை பிரதானப்படுத்திக் கொண்டு நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலிருந்து பின்நிற்கும் காரணிகளே, கூட்டு எதிரணியையும், அரசாங்கத்துக்கு எதிரான தென்னிலங்கையின் சக்திகளையும் பெருவாரியாக வளர வைக்கின்றது. அது, நிலைமைகளை கட்டுப்படுத்துவதிலிருந்து நழுவும் போது எழும் விளைவுகள்தான். இன்றைக்கு அரசாங்கம் வந்து சேர்ந்திருக்கின்ற இடம் அது.  

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பற்றி முன்னணி தொழில் முனைவோர் ஒருவர் உரையாடல் ஒன்றின்போது கூறினார், “பதவிக்கு வரும் வரையில் அந்த இரு அமைச்சர்களும் நான் எப்போது தொலைபேசியூடாக பேசினாலும் உடனே பேசுவார்கள்.

பொதுத் தேர்தல் முடிந்து அமைச்சர்கள் ஆனாதும், முதல் சில வாரங்கள் தொலைபேசியால் பழைய மாதிரியே பேசினார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மாறியது. தொலைபேசியால், அமைச்சர்களின் பிரத்தியேகச் செயலாளர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

பிறகு சில நாட்களின் பின்னர், பிரத்தியேகச் செயலாளரின் உதவியாளர் பதில் சொல்ல ஆரம்பித்தார். சில தருணங்களில் அந்த உதவியாளரும் அதிகாரத் தோரணையில் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

அமைச்சர்களோடு தொடர்பு கொள்வது என்பது முடியாத காரியமாகி விட்டது. தொழிற்றுறையில் முன்னணியில் இருக்கும் என் போன்றவர்களுக்கே அமைச்சர்களுடனான (அரசாங்கத்துடனான) தொடர்பாடல் இவ்வளவு சிரமமாக இருக்கும் போது, சாதாரண மக்களின் நிலை எவ்வாறானது என்பதை நினைத்துப் பாருங்கள்.

சாதாரண மக்களை தேர்தல் வாக்குகளாக மாத்திரமே அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். ஆட்சியாளர்கள் தங்களின் தொடர்பாடல் வெளியை அகற்றம் செய்யும் போது, மக்களின் எதிர்பார்ப்பை அறிந்து கொள்வதிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதிலிருந்து தந்திரமான செய்கையை முன்னிறுத்திக் கொண்டு மக்களிடம் செல்ல நினைக்கின்றார்கள். அதற்காக, மக்களை குழப்புவதில் கவனம் செலுத்துகின்றார்கள்.

இதையெல்லாம் விட்டு, மக்களுடனான தொடர்பாடல் வெளியை சரியாக, இலகுவாக பேணினாலே அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியும்” என்றார்.   

ஊழலற்ற வெளிப்படையான அரசாங்கத்தை அமைப்பதே தங்களுடைய இலக்கு என்று சொல்லிக் கொண்டு வந்த மைத்திரியும்- ரணிலும் தற்போது அடைந்திருக்கின்ற இடம், கடந்த கால அரசாங்கங்கள் அடைந்த அதே இருண்ட சூனிய வெளியே. அங்கு, அவர்கள் தங்களை நோக்கி வெளிச்சங்களைப் பாய்ச்சுவதில் மாத்திரமே குறியாக இருக்கின்றார்கள்.

ஆனால், அந்த வெளிச்சம் மக்களையோ நாட்டையோ மீட்டெடுக்க உதவாது. அவ்வாறான கட்டங்களில் விஜயதாச ராஜபக்ஷக்களின் பதவி நீக்கமோ, ரவி கருணாநாயக்களின் இராஜினாமாவோ ஒருவித கண்துடைப்பாக மாத்திரமே இருக்கும். எல்லா நேரங்களிலும் கண்துடைப்புகள் போதிய வெளிச்சத்தைத் தருவதில்லை.

ஒட்டிக்கொண்டிருப்பது பெரும் இருள் என்றால், அது இன்னும் இன்னும் சிக்கலாகவே முடிந்து போகும். மைத்திரியும் ரணிலும் அடைந்திருக்கின்ற இடம், விரைவாக மீளாய்வு செய்யப்பட வேண்டியது. புரிந்து கொண்டால், அவர்கள் மாத்திரமல்ல, மக்களும் தப்பித்துக் கொள்வார்கள்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .