2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இருபெரும் படுகொலைகள்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -164)

அநுராதபுரப் படுகொலைகள்   

1985 ஏப்ரல், மே மாதங்களில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.இதற்குப் பதிலடியாக, அரச படைகளும் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன.   

அரச படைகளின் பதில்தாக்குதலில், அப்பாவிப் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர்; காயப்பட்டனர்; பாதிக்கப்பட்டனர்.   

1985 மே ஏழாம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு, வல்வெட்டித்துறை பகுதியில் இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலொன்றில், ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, அரச படைகள் அப்பகுதியிலும், அதை அண்டிய பகுதிகளிலும் நடத்திய பதில் தாக்குதல்களில், ஏறத்தாழ 75 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் அரச படைகளைத் தாக்குவதும், அதற்குப் பதிலடித் தாக்குதலை, அரச படைகள் முன்னெடுக்கும் போது, அதில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதும், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பதில்த் தாக்குதல் நடத்துவதும், ஒரு விஷச்சுழலாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.   

வல்வெட்டித்துறைத் தாக்குதலுக்கு ‘பதிலடி’ என்ற அடிப்படையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழு ஒன்று, (சில காலத்துக்குப் பின்னர், இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு உரிமை கோரியிருந்ததாகச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்) நடத்திய தாக்குதல், வரலாற்றில் அழிக்கமுடியாத, பெரும் இரத்தக் கறையாகப் படிந்து கிடக்கிறது.  

அசோகனின் மகள் சங்கமித்தையால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதும், கௌதம புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் கிளையிலிருந்து, உயிர்த்தெழுந்திருந்த ‘மஹாபோதி’ மரத்தையும் இலங்கையின் பல்வேறு மன்னர்களும் அமைத்திருந்த சைத்தியங்களையும் அநுராதபுர நகரம் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்புகளும் பெருமைகளும் மிக்கதும் சிங்களப் பௌத்தர்களால் ‘புனித பூமி’யாகவும் கருதப்படும் அநுராதபுர நகரத்துக்குள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழு உறுப்பினர்கள் 1985 மே 14ஆம் திகதி, பஸ் ஒன்றில் நுழைந்தனர். அந்த ஆயுததாரிகள், முதலில் அநுராதபுர பஸ் நிலையத்திலும், பின்னர் ‘மஹாபோதி’ ஸ்தலத்திலும் பெரும் தாக்குதலை நடத்தினர்.   

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், புத்த பிக்குகள், ஆண்கள், பெண்கள் என அங்கிருந்தவர்கள் மீது, ஈவிரக்கமின்றி வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஏறத்தாழ 120 பேர் பலியானதோடு, ஏறத்தாழ 58 பேர் படுகாயமடைந்ததாக ‘ரூபின் மற்றும் ரூபின்’ தம்முடைய நூலில் குறிப்பிடுகின்றனர். வேறும் சிலர், ஏறத்தாழ 146 பேர் பலியானதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  

‘வரலாற்றுத் தவறு’ என்ற சொற்றொடருக்கு அர்த்தமுண்டாயின், அது நிச்சயமாக, இந்தச் சம்பவத்தைச் சுட்டி நிற்கும். உணர்ச்சி ரீதியாக, இந்தத் தாக்குதலை ஆதரிப்பவர்கள் உளராயின், அவர்களது நியாயப்படுத்தலானது, ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற, ‘காட்டுமிராண்டி நீதி’யின் அடிப்படையிலானதாகவே இருக்கும்.   

அந்த, உணர்ச்சிவசப்படுதலைத் தாண்டிய, நீண்டகால அரசியல், சமூக விளைவுகளை, அவர்கள் கருத்தில் கொண்டிலர். 

அரச படைகள் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்கியதை, ‘அரச பயங்கரவாதம்’ என்று சொல்லிக்கொண்டு, மறுமுனையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், அப்பாவிச் சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் போது, அது, “ஆயுதக் குழுக்களானவை பயங்கரவாதிகளே” என்ற ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, குறித்த ஆயுதக் குழுக்களே வழிமொழிவதாக அமைகிறது.   

இது மட்டுமல்ல, இலங்கையின் பெரும்பான்மை மக்களாகிய சிங்களப் பௌத்தர்கள் மத்தியில், இச்சம்பவம்  ஆறாத காயத்தையும் அழிக்கமுடியாத வடுவையும் ஏற்படுத்தி விடுகிறது. 

இது, எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு ஆதாயத்தைத் தரக்கூடியதொன்றல்ல; மாறாக, பெரும் பாதகத்தைத் தரக்கூடியது என்பதை, அன்று இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்களும், அதற்குக் கட்டளை இட்டிருந்தவர்களும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர்களும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.   

குறிப்பாக, இதன் அரசியல் விளைவுகளைப் பற்றி, அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இதைப் பற்றி, ‘முறிந்த பனை’ நூலில் கருத்துரைக்கும் அதன் நூலாசிரியர்கள், ‘அநுராதபுரப் படுகொலைகளை அங்கிகரித்த அநேகர், சிங்களவர்களின் உயிர்களோடு நினைத்தபடி விளையாடுதல், தமிழர்களின் உயிர்களுக்கு மோசமான பாதுகாப்பின்மையை ஏற்படுத்துமென உணரவில்லை’ என்று குறிப்பிடுகிறார்கள்.   

ஆனால், இந்தத் தாக்குதலை, மற்றைய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பான ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி’, குறித்த தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சியையும் கடும் எதிர்ப்பையும் பலியானவர்கள் தொடர்பில் பெரும் வருத்தத்தையும் பதிவு செய்திருந்தது.   

மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் குறித்த தாக்குதல் தொடர்பில், தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவுசெய்திருந்தது.   

சில காலம் கழித்து வௌிவந்த ஊடகத் தகவல்கள், குறித்த தாக்குதல் விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ இருந்ததாகவும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையொன்றில் அசோக பண்டாரகே கோடிட்டுக் காட்டுகிறார்.   

இது பற்றி, தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடும் ராஜன் ஹூல், ‘பிற்காலத்தில் ஊடகங்களில் வந்த தகவல்களின் படி, இந்தத் தாக்குதலை முன்னெடுப்பதற்காக, ‘றோ’ அமைப்பு, முதலில் புளொட், டெலோ இயக்கங்களையே நாடி இருந்ததாகவும், ஆனால், அவர்கள் இதை மறுத்துவிட்டார்கள்’ என்றும் குறிப்பிடுகிறார்.   

ராஜீவ் காந்தி அரசாங்கமானது, இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளுடனான வௌியுறவுக் கொள்கை தொடர்பிலான, தன்னுடைய வௌிப்படையான அணுகுமுறையை நட்புறவானதாக மாற்றி இருந்தாலும், இந்திய உளவுத்துறையினூடான மறைமுக அணுகுமுறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. 

இந்தியாவின் நலன்களுக்கு, இந்த இரட்டை அணுகுமுறை அவசியமென்று, அவர்கள் கருதியிருந்திருக்கலாம். ஆனால், இது தமிழர்களின் நிலையை, இன்னும் சிக்கலானதாகவே மாற்றியிருந்தது.   

தமிழ் அரசியல், ஏற்கெனவே இந்தியாவின் கைப்பொம்மையாக மாற்றப்பட்டுவிட்டிருந்த நிலையில், தமிழ் ஆயுதப் போராட்டத்தையும் தன்னுடைய பிடிக்குள் முழுமையாகக் கொண்டுவரும் கைங்கரியத்தை, இந்தியா முன்னெடுத்தது.   

குமுதினிப் படுகொலைகள்   

‘கண்ணுக்குக் கண் என்பது, ஒரு குருடான உலகத்தையே உருவாக்கும்’ என்பது மகாத்மா காந்தியின் பிரபல்யமான கூற்றுகளில் ஒன்று. மேற்குறிப்பிட்டது போல, தாக்குதலுக்கு பதில்த்தாக்குதல் என்பது ஒரு ‘விஷச்சுழல்’.   

இந்த விஷச்சுழலின் அடுத்த கொடூரத்தை, அநுராதபுரத் தாக்குதல் நடந்ததன் மறுநாள், நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடைப்பட்ட கடலில், அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்தனர். 

அநுராதபுரப் படுகொலை இடம்பெற்றதற்கு மறுதினம், 1985 மே 15ஆம் திகதி, வடக்கின் பசுந்தீவு எனப் புகழப்படும் நெடுந்தீவிலிருந்து, யாழ்ப்பாணம் நகர், ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு, ‘குமுதினி’ என்ற பெயர்கொண்ட படகு, தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. 

நடுக்கடலில் பயணப்படகு  சென்றுகொண்டிருக்கும் போது, வேறொரு ‘பைபர்’ படகில் வந்த நபர்கள் சிலர், குமுதினிப் படகை வழிமறித்து, அதற்குள் நுழைந்து, அதிலிருந்த பயணிகளான அப்பாவிப் பொதுமக்களை,குழந்தைகள், முதியவர்கள் என்ற வயது வேறுபாடின்றி, ஈவிரக்கமின்றி வெட்டிக் கொன்றனர். 

இந்தத் தாக்குதலில் ஏறத்தாழ 36 முதல் 48 பேரளவில் கொல்லப்பட்டார்கள் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். தாக்குதலை நடத்தியவர்கள் ‘ரீ சேர்ட்’ அணிந்திருந்ததுடன், சிலர் நீளக்காற்சட்டையும் சிலர் கட்டைக்காற்சட்டையும் அணிந்திருந்ததாகக் கண்கண்ட சாட்சிகள் குறிப்பிட்டிருந்தன. 

அத்துடன், அவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, குறித்த சாட்சிகள் அடையாளப்படுத்தி இருந்ததாகக் குறித்த தாக்குதல் தொடர்பிலான, தன்னுடைய அறிக்கையில், சர்வதேச மன்னிப்புச் சபை கோடிட்டுக் காட்டியிருந்தது.   

இந்தக் குரூரத் தாக்குதல், இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, அதற்குப் பதிலளித்த இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, “குறித்த தாக்குதலுக்கு, யார் பொறுப்பு என்பதற்கு, எந்தவித சாட்சியங்களும் இல்லை” என்று குறிப்பிட்டார். 

இந்த வன்முறைகள் முடிவின்றித் தொடர்ந்தன. மே 16 - 18க்குள், மட்டக்களப்பில் ஏறத்தாழ 63 தமிழ் இளைஞர்கள், அரச படைகளால் கைது செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டார்கள். 

மே 31இல், திருகோணமலையின் கிளிவெட்டியில், ஏறத்தாழ 37 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.   

‘போர் மூலமான வெற்றி’ என்ற இலக்கிலேயே, ஜே.ஆர் அரசாங்கமும், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தன. விஷச்சுழல் சுழன்று கொண்டிருந்தது.   

ராஜீவின் திட்டம்   

இந்தச் சூழலில்தான், ராஜீவ் காந்தி அரசாங்கம், தன்னுடைய பெரும் திட்டத்துக்கான அத்திபாரத்தைத் தயார் செய்துகொண்டிருந்தது. ராஜீவ் காந்தியின் எண்ணம், மீண்டும் இலங்கைப் பிரச்சினையை, பேச்சுவார்த்தை மேசைக்கு  எடுத்து வருவதில் இருந்தது. ஆனால், இம்முறை வெறுமனே, ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் மட்டுமன்றி, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரும் எண்ணத்தை, ராஜீவ் காந்தி கொண்டிருந்தார்.   

இது மிகவும் சிக்கலானதொன்று; ஏனெனில், ஜே.ஆர் அரசாங்கத்தையும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இதற்குச் சம்மதிக்கச் செய்வதென்பது சிக்கலானதொரு காரியம்.  

 ஜே.ஆர் அரசாங்கமானது, ராஜீவ் காந்தியுடன் நல்லெண்ணத்தை வளர்க்க விரும்பியிருந்தமை, இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதகமானதொன்று. ஏனெனில், ராஜீவ் காந்தியோடு நல்லுறவை விரும்பிய ஜே.ஆர், ராஜீவினுடைய பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, நேரடியாக எதிர்க்கும் வாய்ப்புக் குறைவு. ஆகவே, ஜே.ஆர் அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவது தொடர்பில், இந்தியா நேர்மறையான எண்ணத்தைக் கொண்டிருந்தது.   

மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் இயக்கங்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவது, அவ்வளவு இலகுவான காரியமில்லை என்பதையும் இந்திய அரசாங்கம் உணர்ந்திருந்தது.  

 முக்கிய இயக்கங்கள், ‘தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி’யாக ஒன்றிணைந்திருப்பது, சாதகமான ஒன்றாக இருந்தாலும், பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கு அவை, எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது நிச்சயமற்று இருந்தது. 

இதில், இந்திய உளவுத்துறையான ‘றோ’வினது உதவி அவசியமாக இருந்தது. இந்த விடயத்தில், இந்தியாவுக்குச் சிக்கலே தராது, இந்தியாவின் சொல்கேட்கும் செல்லப்பிள்ளையாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மட்டுமே இருந்தது.   

இந்தப் பேச்சுவார்த்தைத் திட்டத்தின் முதற்படியாக, இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஜே.என்.டிக்ஸிட், 1985 மே மாத இறுதியில் இந்தியா நியமித்திருந்தது. 

1985 மே 26 ஆம் திகதி, இலங்கை வந்த டிக்ஸிட், மறுதினம், ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்து, தனது உயர்ஸ்தானிகர் நியமனத்தைச் சமர்ப்பித்திருந்தார்.   

இதற்கு மறுநாள், 1985 மே 28ஆம் திகதி, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, இலங்கையை வந்தடைந்திருந்தார். 

புதிய, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என். டிக்ஸிட் ஆகியோர் இணைந்து, அடுத்த கட்டக் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க இருந்தனர்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .