2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இறங்கு முகம்

மொஹமட் பாதுஷா   / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


‘ஓடுகின்ற தண்ணீரில் அழுக்குச் சேர்வதில்லை; தேங்கி நிற்கின்ற தண்ணீரிலேயே, எப்போதும் அதிக அழுக்குக் காணப்படும்’ என்பது அனுபவமொழி.    

இன்றைய நிலையில், குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக, நாடு தழுவிய ரீதியிலும் ‘முஸ்லிம்களுக்கான அரசியல்’ என்று சொல்லப்படுகின்ற விடயத்திலும், இவ்வாறான தேக்க நிலையையே, உணரவும் நோக்கவும்  முடிகின்றது.    

இறங்கு முகமான இந்தப் போக்கின் காரணமாக, நாளை ஒரு தேர்தல் திடீரென நடைபெற்றால், எந்த முஸ்லிம் கட்சியும் கிழக்கிலோ அதற்கு வெளியிலோ பெரும் வெற்றியைப் பெறும் நிலை, இன்று கிடையாது என்றே கூற வேண்டும்.   

முஸ்லிம்களுக்கான அரசியல் என்பது, ஒவ்வொருவரும் தாம் சார்ந்தகட்சியை வளர்க்கும் களமாகவும் சின்னச் சின்ன நிதியொதுக்கீடுகள், பொருளுதவிகள் செய்வதோடும் அறிக்கை விடுவதோடும் முடிந்து விடுகின்ற காரியம் போலவும் உருமாற்றப்பட்டிருப்பதையும் தெளிவாகவே காண முடிகின்றது.   

வடக்கிலும் கிழக்கிலும் கொழும்பிலும் மலையகத்திலும் தென்பகுதியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் அபிலாஷைகள் என்ன, இன்றைய காலகட்டத்தில் எந்த விடயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எதைச் சாதிக்க வேண்டும்? என்று தெரியாத, தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசியல் தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த அரசியல் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.   

‘இதுதான் அரசியல்’ என்று நம்பிக் கொண்டு, முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளின்பால், மந்திரித்து விடப்பட்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் போக்கும், இதற்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.  

இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கான உண்மையான தலைமைத்துவ இடைவெளி என்பது, வெகுவாக உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.   

இன்று முஸ்லிம்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற பௌதீக அபிவிருத்திகள், தொழில்வாய்ப்புகள், வாழ்வாதார உதவிகள் என்பன, 1985இற்கு அதாவது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்னரும் கிடைத்தன. 

ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் அங்கம் வகித்த மூத்த முஸ்லிம் அரசியல்வாதிகள், அந்தப் ‘பங்கை’ப் பெற்று, மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருந்தனர். எனவே, அதற்காக ஒரு தனித்துவ அடையாளக் கட்சி உருவாக்கப்படவில்லை.   

மாறாக, முஸ்லிம் இளைஞர்களை ஆயுத இயக்கங்களின் பக்கம் செல்லாமல் தடுத்து, அவர்களை அரசியல் மயப்படுத்துவதற்கும், இச்சமூகத்துக்கான உரிமைகளை வென்றெடுக்கவுமே, தனித்துவ அடையாள அரசியல் சிந்தனை தோற்றம் பெற்றது. இதன்படியே, முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது எனலாம்.   

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபுக்குப் பின்னர், கட்சியின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட ரவூப் ஹக்கீமும், ‘அஷ்ரபின் அரசியலை பின்பற்றுகின்றவர்கள்’ என்று சுயபிரகடனம் செய்கின்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் ஹசன்அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத், இப்போது ஆளுநராக இருக்கின்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட எல்லோருமே, இந்தத் தார்ப்பரியத்தை உணர்ந்து செயற்படுவதாக நம்மால் மார்தட்டிக் கொள்ள முடியாதபடி யதார்த்தங்கள் அமைந்துள்ளன.   

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டு, கிழக்கு அரசியல்வாதிகள் வெளியேறத் தொடங்கியதும், இந்த உரிமை சார்ந்த அடையாள அரசியல் என்பது, மறக்கடிக்கப்படத் தொடங்கியது எனலாம்.   

அதுவும், மு.காவின் முழு அமைச்சுப் பதவி, அதன் தாய்வீடான கிழக்குக்கு மறுதலிக்கப்பட்டதுடன், பிரிந்து சென்றவர்களால் தனித்தனிக் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் முக்கியஸ்தர்களுக்கு எல்லாம், ‘கொழுத்த பதவிகள்’ தேவைப்படத் தொடங்கியது.  

 அப்போதே, முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல், எதற்காக உருவாக்கப்பட்டதோ, அதை அடைவதற்கான இலக்கை நோக்கி அல்லாமல், கட்சிகளின், தனிநபர்களின் சுயலாபத்தை முதன்மைப்படுத்திய பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது என்று கூறலாம்.   

வகுப்புக்கு வரும் ஆசிரியர் ஒருவர், மாணவர்களை எழுப்பி, நிற்பாட்டி கேள்விகளைக் கேட்பது போல, இந்த முஸ்லிம் சமூகம், முஸ்லிம் தலைமைகளையும் ஏனைய அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், எம்.பிக்களையும் ஓரிடத்தில் ஒன்றுதிரட்டி, “இன்று முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினைகளை, முதன்மை ஒழுங்கின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, சொல்லுங்கள் பார்ப்போம்” என்று ஒரு கேள்வியைக் கேட்டால், இவர்கள் விழிபிதுங்குவதிலிருந்து, அவர்களது இலட்சணத்தை அறிந்து கொள்ளலாம்.   

வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களின் சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான காணிப் பிரச்சினைகள், பிணக்குகள் காணப்படுகின்றன. தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு, எதிர்காலத்துக்கு அவசியமான காணிகளைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.   

இனப்பிரச்சினைத் தீர்வில், முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியிருக்கின்றது. மிக முக்கியமாக அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்குப் பல மாகாணங்களில் அதிகாரம் கிடைக்காது என்பதுடன், நாட்டில் பரவலாக அடக்கி ஆளப்படுகின்ற சமூகமாக மாறுவார்கள் என்று, ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்ற நிலையில், இது விடயத்தில், முஸ்லிம் கட்சிகள் உறுதியான ஒரு நிலைப்பாட்டை, எடுக்க வேண்டியிருக்கின்றது.   

புதிய தேர்தல் முறைமை, எல்லை மீள்நிர்ணயச் செயற்பாடுகளாலும் ஏனைய சட்டவாக்கங்களாலும் முஸ்லிம் சமூகத்துக்குத் தற்போது ஏற்பட்டிருக்கின்ற, எதிர்காலத்தில் ஏற்படக் கூடியதுமான பாதிப்புகளுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்கான வழிவகைகள் கண்டறியப்படவில்லை.   

யுத்த காலத்தில், தமிழ் ஆயுதக் குழுக்களாலும் ஆயுதம் தரித்த ஏனைய படைகளாலும் முஸ்லிம்களும் மனித உரிமை மீறல்களைச் சந்தித்துள்ளனர் என்பதை ஆதாரபூர்வமாக, உலகின் கண்களுக்கு முன்வைக்கவில்லை. இந்த நிமிடம் வரை, நீண்டு கொண்டிருக்கும் இருபக்க இனவாத நெருக்குவாரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளெல்லாம், இன்னும் கதையளவில்தான் இருக்கின்றன.   

இதற்குப் புறம்பாக, ஒலுவில் கடலரிப்பு பிரச்சினை, அஷ்ரப் நகர் காணிப் பிரச்சினை, சாய்ந்தமருது நகர சபை விவகாரம், கல்முனையின் நெருக்கடிநிலை, அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் காடாகிக் கிடக்கும் சுனாமி வீடுகளை பகிர்ந்தளித்தல், கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரம், அறுவாக்காட்டில் குப்பை கொட்டுவதற்கான மக்களின் எதிர்ப்பு, சிலாவத்துறையில் முன்னெடுக்கப்படும் காணி மீட்புப் போராட்டம் என்பவற்றோடு, வில்பத்தோடு முடிச்சுப்போட்டு, வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராக, தென்னிலங்கையில் எழும் அலை ஆகியவை குறித்தும், கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி 20 எம்.பிகளும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.   

எனவே, அபிவிருத்தி அரசியல் செய்வதும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதும் ஒருபுறமிருக்க, உண்மையிலேயே முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகள் அனைவரும், மேலே பட்டியலிடப்பட்ட அடிப்படை உரிமைசார் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கே, முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டும். ஆனால், நிஜத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது?  

கிழக்கு ஆளுநர், தமது அரசியலை நிலை நிறுத்தும் நோக்கிலோ, ஏதோ ஒருசில நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதிலும், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் மக்களின் வாக்குகளோடு நாடாளுமன்றத்துக்குச் சென்றவர்களும், தாம் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து, தங்களது கட்சிகளை வளர்ப்பதிலும் ‘கல்லாப் பெட்டிகளை’ நிரப்புவதிலுமே கூடிய கவனம் செலுத்துவதாகத் தெரிகின்றது.   

குறிப்பாக, இரு ஊர்களின் மக்கள், அழுத்தங்களின் பிரதிபலனாக சம்மாந்துறையில் இருந்தும் அட்டாளைச்சேனையில் இருந்தும் தேசியப்பட்டியல் எம்.பி என்ற ‘பிச்சை’யைப் பெற்றுக் கொண்டு, நாடாளுமன்றம் சென்றவர்கள், மக்கள் எதிர்பார்த்தபடி மேலே பட்டியலிடப்பட்ட உரிமைசார் விவகாரங்களில் விடாப்பிடியாக, ஒற்றைக்காலில் நின்று சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள் என்று நம்மால் கூற முடியாத நிலையிருக்கின்றது.   

ரவூப் ஹக்கீம் அணியினர், மு.கா கட்சிக்குள் இன்னும் உள்ளக முரண்பாடுகளை உருவாக்கிக் கொண்டேயிருப்பதுடன் சின்னச் சின்ன அபிவிருத்தி மாயை அரசியலின் ஊடாக, கட்சியை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். 

ரிஷாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் அணியினர் வடக்கில் மீள்குடியேற்றம் என்ற முக்கிய விடயத்தில் கவனம் செலுத்தினாலும், கிழக்கில் வாழ்வாதாரத்துக்கான பொருளுதவி செய்தால் போதுமென்ற நினைப்பில் இருக்கின்றார்களா என எண்ணத் தோன்றுவதுண்டு.   

அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்றவையும் கட்சியை மய்யப்படுத்திய நகர்வுகளிலேயே குறியாக இருக்கின்றன.  

அதைவிடுத்து, உண்மையான தனித்துவ அடையாள அரசியலின் அடிப்படையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தி, அதனை வென்றெடுப்பதற்காகப் பதவி பட்டங்கள், பண வருவாய்களுக்கு அப்பால் நின்று, தொடர்ச்சியாகப் போராடுகின்ற அறிகுறிகளைப் பெரிதாகக் காண முடியாதிருக்கின்றது.   

இதனால் பொதுவாக முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான முஸ்லிம் அரசியல், இறங்குமுகமாக இருப்பதுடன், இன்றைய நிலையில் ஒரு பிரசாரமும் மேற்கொள்ளாமல், உடனடியாக முஸ்லிம் கட்சிகளுக்கான பிரத்தியேக தேர்தல் அல்லது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுமாயின், எந்தக் கட்சியோ அணியோ பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாது என்றே கணிப்பிட முடிகின்றது.   

சுருக்கமாகக் கூறினால், அஷ்ரப் போன்றோர் காட்டித்தந்த, தனித்துவ அடையாள அரசியல் வழித்தடத்தில் பயணிக்காமல், பாதை மாறிப் பயணித்தமையாலேயே இன்று முஸ்லிம் அரசியல் என்பது, பெரும்பான்மை மற்றும் தமிழ்க் கட்சிகளிடையே மட்டரகமான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுவது மட்டுமன்றி, முஸ்லிம்களின் உரிமைசார் பிரச்சினைகளுக்கான நகர்வுகளும் மர்ஹூம் அஷ்ரப் விட்ட இடத்திலேயே அப்படியே நிற்கின்றன.   

80களிலேயே வெளியாகிவிட்ட ‘பாதை மாறிப் போகும்போது ஊரு வந்து சேராது...’ என்ற பாடல் இந்த நிலைமைக்கு நன்றாகப் பொருந்தும்.   

அஷ்ரப் காட்டிய தனித்துவ வழித்தடம்

முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியலின் சிந்தனைத் தலைமைத்துவமாக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபை சொல்வது பரிசீலனைக்குரியது.   

ஏனெனில், அரசியல் சிந்தனையாளரான எம்.ஐ.எம். மொஹிதீன், எம்.எச். சேகு இஸ்ஸதீன் உட்படப் பலர் முஸ்லிம்களின் ‘அடையாள அரசியல்’ பற்றிய கருத்தியலுக்கு, அஷ்ரப்பைச் சிந்தனை அடிப்படையில் வழிநடத்திச் சென்றிருப்பதாகச் சொல்ல வேண்டும்.   

ஆனால், சரியான சந்தர்ப்பத்தில், முஸ்லிம்கள் தமக்கொரு கட்சி தேவையெனப் பட்டறிந்து கொண்டிருந்த சமயத்தில், இவ்வகை அரசியலை வெற்றிகரமாகப் சந்தைப்படுத்தியவர் மர்ஹூம் அஷ்ரப் என்று அறுதியிட்டுக் கூற முடியும்.   

பெருந்தேசிய அரசியலை அறிந்து கொண்டு, தமிழ்த் தேசிய அரசியலோடு பயணித்து, பின்னர் தனிவழிக்கு வந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், இன்று முஸ்லிம் அரசியலை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோலாகத் திகழ்கின்றார்.   

அவர் செய்த அபிவிருத்திகள், சேவைகள், உரிமைகளை வென்றெடுப்பதற்கான நகர்வுகளோடு இன்று இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் பணிகள் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன என்பதே, அவர் மக்கள் சார்பு அரசியலில் எதைச் சாதித்தார் என்பதை, மறைமுகமாக உணர்த்தி நிற்கின்றது.   

முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்திய அஷ்ரப், இளைஞர்களிடையே சமூக உணர்வுகளையும் ஒருவித விடுதலை வேட்கையையும் விதைத்தார். முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கின்ற போது, இன்றிருக்கின்ற அரசியல்வாதிகள் போல அடக்கி வாசித்தவரல்ல அவர்; ஒரு காலத்தில் ‘அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத்தரவில்லை என்றால், தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்’ என்று சொன்ன அவர், தமிழ் ஆயுத இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு அநியாயமிழைத்த சந்தர்ப்பங்களில், ஜனநாயக வழிமுறையில் அதைத் துணிச்சலாக எதிர்க்கவும் தயங்கவில்லை.   

பெரும்பான்மைக் கட்சிகளுக்கு அவரும் முட்டுக் கொடுத்தார் என்றாலும் அதன்மூலம் அவர் முற்றுமுழுதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது சுதந்திரக் கட்சியின் ஒரு ‘கிளைக் கட்சி’ போல, முஸ்லிம் காங்கிரஸை மாற்றிவிடவில்லை. மாறாக, எதிர்க்க வேண்டிய எல்லா இடங்களிலும் எதிர்த்தார்; பேச வேண்டிய தருணங்களில் எல்லாம் பேசினார்.   

இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில், முஸ்லிம்களுக்காக இன்றைய அரசியல் தலைமைகள் செய்வதை விடவும் பன்மடங்கு பெரிய, தூரநோக்குடனான அபிவிருத்திகளையும் உரிமையை உறுதி செய்வதற்கான நகர்வுகளையும் சமாந்திரமாக மேற்கொண்டார். அவருக்கு முன்னரோ பின்னரோ எந்தக் கட்சித் தலைமையும் அதைச் செய்யவில்லை என்பதை அவரது எதிரிகளும் மறுக்கமாட்டார்கள்.  

இன்று இத்தனை கட்சிகளும்,தலைவர்களும், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களும் இருந்தும் கூட, இலங்கை முஸ்லிம்கள் பொதுவாகவும், கிழக்கு முஸ்லிம்கள் குறிப்பாகவும் ‘அஷ்ரபின் இடைவெளியை’ உணர்கின்றார்கள் என்றால், அந்த இடைவெளியை அவருக்குப் பின்வந்த யாரும் நிரப்பவில்லை என்பதுதானே அதன் அர்த்தம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .