2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை: கணிசமான முன்னேற்றம்

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இந்தக் கட்டுரை, கடந்த திங்கட்கிழமை (29) பிரசுரமான பத்தியின் தொடர்ச்சியாகும்)  

 சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கு  

இலங்கையின் அரசமைப்பானது, இலங்கை ஒரு ‘சுதந்திரமான, இறையாண்மை, கொண்ட ஜனநாயக சோசலிச குடியரசு’ என்றும், இலங்கை ஓர் ‘ஒற்றையாட்சி அரசு’, ‘இறையாண்மை மக்களிடையே உள்ளது; அது அழியாதது’ என்றும் பிரகடனம் செய்கிறது.   

இந்தப் பிரகடனங்கள், இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிப்படியேறிய அரசாங்கங்களால் புனிதத்தன்மையுடனும் பேரார்வத்துடனும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, இலங்கை அரசமைப்புக்குச் செய்யப்பட்ட ஆறாவது திருத்தத்தின் மூலம், இலங்கை அரசமைப்பின் 157அ சரத்தினூடாக, ‘இலங்கையின் ஆட்புலத்துக்கு உள்ளாகத் தனியரசொன்று தாபிக்கப்படுவதற்கு, ஆளெவரும் இலங்கைக்குள் அல்லது இலங்கைக்கு வௌியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு அளித்தல், ஆக்கமளித்தல், ஊக்குவித்தல், நிதியுதவுதல், ஊக்கமளித்தல், பரிந்துரைத்தல் ஆகாது’ என்ற ஏற்பாடும், ‘அரசியற்கட்சி, வேறு கழகம், ஒழுங்கமைப்பு எதுவும், இலங்கையின் ஆட்புலத்துக்கு உள்ளாகத் தனி அரசொன்றைத் தாபித்தலைத் தனது இலக்குகளில், குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருத்தலாகாது’ என்ற ஏற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது.   

சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கில், மனுதாரர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக் கோரலானது, பிரிவினைக் கோரிக்கைக்கு ஒப்பானதாகும் என்றும், ஏனெனில் ‘சுயநிர்ணய உரிமை என்பது, ஒரு சுதந்திர அரசை அடைவது. சுயநிர்ணய உரிமை கொண்ட மக்கள், சுதந்திரமாக வேறோர் அரசின் ஒரு பகுதியாக, இணைந்துகொள்ள விரும்பினால், அவர்கள், தங்கள் விருப்பப்படி பிரிந்து செல்லும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பதாகும்.   

ஏனென்றால், ஒரு ‘மக்கள்’ தங்கள் அரசியல் நிலையை, முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே நம்பகமான வழி, அவர்களின் பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டைக் கட்டுப்படுத்த ஒரே வழி, ஒரு சுதந்திர அரசாகும். ஆகையால், பிரிந்து செல்வதற்கான உரிமை என்பது, சுயநிர்ணய உரிமையின் ஓர் அங்கமாகும்.   

இருப்பினும், சுயநிர்ணய உரிமையைப் பெற்ற மக்கள், தாம் விரும்பும் சந்தர்ப்பத்தில் பிரிவினைக்கான உரிமையைப் பயன்படுத்தாது இருக்கலாம். ஆகவே, மனுதாரர்கள் உயர்நீதிமன்றிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, தனது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையூடாக, அரசமைப்பின் 157அ சரத்தை மீறியுள்ளது என்று அறிவிக்கக் கோரியிருந்தனர்.   

இலங்கை உயர்நீதிமன்றம், ‘மக்களின் சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தை ஆராய்ந்தது; இது இரண்டாவது முறையாகும். ஆனால், இந்த முறை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற குறிப்பிட்ட சூழலில், உயர்நீதிமன்றம் இதை ஆராயத் தலைப்பட்டது.  

இலங்கையின் அரசமைப்பும் மக்கள்களின் சுயநிர்ணய உரிமையும்  

2008ஆம் ஆண்டு, சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) ஏற்பாடுகளுடன், இலங்கையின் அரசமைப்பின் ஏற்பாடுகள் பொருந்திப்போகிறதா என்று அறிய, இலங்கையின் ஜனாதிபதி உயர்நீதிமன்றிடம் அதன் கலந்தாய்வு நீதியதிகார வரம்பின் கீழான அபிப்பிராயத்தை வேண்டிய குறிப்பொன்றை அனுப்பியிருந்தார்.   

இதன்படி, இலங்கையின் உயர் நீதிமன்றமானது, மக்கள்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஆராய்ந்திருந்தது. Centre for Policy Alternative (Guarantee) Ltd and Three Others (In the matter of a Reference under Article 129(1) of the Constitution) ([2009] 2 SLR 389) என்ற இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயமானது, அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவால் வழங்கப்பட்டது. அவரோடு மற்றைய நான்கு நீதியரசர்கள் இணங்கியிருந்தார்கள்.  

குறித்த அபிப்பிராயமானது, சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் முதலாவது சரத்து பிரகடனம் செய்யும், ‘சுயநிர்ணய உரிமை’யை கொலனித்துவ நீக்க காலத்துக்குரிய, ஐ.நா பொதுச் சபையின் தீர்மானம் 2625 (XXV)இன் அடிப்படையில், பொருள்கோடல் செய்திருந்தது.   

குறித்த அபிப்பிராயமானது, ‘மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலானது, கொலனித்துவநீக்கச் சூழலில் மட்டுமே பொருந்தும் என்பதுடன், ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில், அதைப் பயன்படுத்தவோ, விளக்கவோ முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தது.   

குறித்த வழக்கில், ‘உள்ளக சுயநிர்ணய உரிமைக்கான சட்டரீதியான அங்கிகாரத்துக்காக’ வேண்டுகோள் விடுத்த 01, 02 தலையீட்டு மனுதாரர்களுக்கான சட்டத்தரணி சமர்ப்பித்ததைக் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம், இலங்கை குடியரசின் அரசமைப்பின் 3 வது பிரிவின் படி, இலங்கையின் இறையாண்மை மக்களிடையே உள்ளது; அது மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட முடியாதது. ஆகவே, ஒட்டுமொத்த மக்களிடமே இறையாண்மை உள்ளது. எனவே, எந்தவொரு குழுவோ, மக்களின் மொத்தத்தின் ஒரு பகுதியோ, சுயநிர்ணய உரிமைக்குத் தனி உரிமை இருக்க வேண்டும் என்று வாதிட முடியாது என்று உயர்நீதிமன்றம் அபிப்பிராயம் வழங்கியிருந்தது.   

உயர்நீதிமன்றத்தின் இந்த அபிப்பிராயமானது, கொலனித்துவநீக்க சூழலுக்கு மட்டுமே, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை மட்டுப்படுத்துகிறது. மேலும், சுயநிர்ணய உரிமைக்கு, குறிப்பிட்ட அரசமைப்பு அல்லது சட்டரீதியான அங்கிகாரம் தேவையில்லை என்றும் உரைக்கிறது.  

இவ்வாறு உரைப்பதன் மூலம், குறித்த அபிப்பிராயத்தில், சுயநிர்ணய உரிமையைத் தொடர்ச்சியான உரிமையாக அங்கிகரிக்கத் தவறிவிட்டது. மேலும், இந்த அபிப்பிராயத்தின படி, ஓர் அரசின் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் ‘மக்கள்களின் சுயநிர்ணய உரிமைக்கு’ போட்டியான கருத்தியல் என்ற தோற்றப்பாடும் உருவாகிவிடுகிறது.   

இதைவிடவும், சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ‘மக்கள்கள்’ என்ற பன்மையை, இந்த அபிப்பிராயம் மறைமுகமாக மறுக்கிறது. அத்துடன், இலங்கை மக்களை மொத்தமாக, ஒரே ஒற்றைத் தன்மையில் ‘இறையாண்மை’ என்ற கருத்தியலுடன் இணைத்துக் கருதுகிறது. இதன் விளைவாக, மறைமுகமாக சிறுபான்மையினத் தேச மக்களின் ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தை நிராகரிக்கிறது.   

மேலும், இந்த அபிப்பிராயமானது, 1970ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொதுச் சபையின் தீர்மானம் 2625 (XXV)இற்குப் பிறகு, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியல் தொடர்பில் ஏற்பட்ட மாற்றங்களை, நீதித்துறை, புலமைத் தளத்தில் சுயநிர்ணய உரிமை தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.  

தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையும் சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கும்  
சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கில், பிரதம நீதியரசர் பிரியசத் டெப், மற்றைய இரண்டு நீதியரசர்களின் இணக்கத்துடன் வழங்கிய தீர்ப்பானது, உயர்நீதிமன்றத்தின் முந்தைய ‘சுயநிர்ணய உரிமை’ தொடர்பான சுருக்கமான அபிப்பிராயத்துடன் ஒப்பிடும்போது, மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து, ஒரு குறிப்பிட்ட பார்வையை முன்வைக்கிறது.   

அத்துடன், உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை, அங்கிகரிப்பதாக அமைகிறது. குறித்த தீர்ப்பில், பிரதம நீதியரசர் டெப், ‘க்யூபெக்’ பிரிவினை குறிப்பு மனுமீது, கனடிய உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்மானத்தை மேற்கோள் காட்டி, ‘மக்கள் தங்களின் தற்போதைய அரசின் கட்டமைப்புக்குள் சுயநிர்ணயத்தை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றும், ‘மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது அதன் எல்லைக்குள் வாழும் மக்கள்களை, சமத்துவத்தின் அடிப்படையில், பாகுபாடின்றி, அதன் உள்ளக ஏற்பாடுகளில் சுயநிர்ணயக் கொள்கையை மதிக்கும் அரசாங்கத்தைக் கொண்ட அரசானது, சர்வதேசச் சட்டத்தின் கீழ், தனது ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும், அதன் ஆட்புல ஒருமைப்பாட்டை ஏனைய அரசுகள் அங்கிகரிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

மேலும், சர்வதேச நீதிமன்றம் கொசோவோ தொடர்பில் வழங்கியிருந்த அபிப்பிராயத்தில், நீதிபதி ட்ரின்டேட் தனது வேறான அபிப்பிராயத்தில் குறிப்பிட்டிருந்ததன் படி, சுயநிர்ணய உரிமையின் உள்ளக, வௌியகப் பரிமாணங்களை மீளுணர்த்தியதுடன், சுயநிர்ணய உரிமையானது கொலனித்துவநீக்க காலத்தையும் தாண்டி, வலிதாகும் கருத்தியல் என்பதையும் மேற்கோள் காட்டியிருந்த பிரதம நீதியரசர் டெப், “சுயநிர்ணய உரிமைக்கு, ஓர் உள்ளகப் பரிமாணம் உள்ளது என்பது தெளிவாகிறது. அதில் நாட்டுக்குள் உள்ள ஒரு ‘மக்களின்’ நன்மைக்காக, அது நாட்டுக்கு உள்ளாகப் பயன்படுத்தப்படலாம். ஆகவே, சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையானது, ஒரு தனி அரசுக்கான கோரிக்கையாக அமையாது. ஏனெனில், சில நேரங்களில் இந்த உரிமையானது ஏலவே உள்ள அரசின் எல்லைக்குள், உள்ளக ரீதியில் பயன்படுத்தப்படுகிறது” என்று தீர்ப்பளித்திருந்தார். இது, இலங்கை அரசமைப்புச்சட்ட வரலாற்றில், ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.   

இலங்கையின் உயர்நீதிமன்றம், முதன்முறையாக ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் அது, இலங்கையின் அரசமைப்புக்கும் ஏற்புடையதாக அமைவதையும் சந்தேகத்துக்கு இடமின்றி அங்கிகரித்தது.  

மேலும், நீதிபதி பிரயசத் டெப், தனது தீர்ப்பில், பிரதிவாதிகள் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) தரப்பில் செய்த ‘சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச சட்டத்தின் கீழ்’ குறித்த உரிமைக்கு உரித்துடையவர்களாக இருப்பது ‘மக்கள்கள்’ தான், மேற்கூறிய சர்வதேச உடன்படிக்கைகளின்படி தமிழ் மக்கள் ஒரு தனித்த ‘மக்கள்’. எனவே, தமிழ் மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு”, என்ற சமர்ப்பணத்தை எந்தவொரு மறுப்பும் கண்டனமும் குழப்பமும் இல்லாமல், தனது தீர்ப்பில் மீளக்குறிப்பிட்டு இருந்தமையை, தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை, உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவே கருதலாம். இதுவும் குறித்த தீர்ப்பின் இன்னொரு முக்கிய மைல்கல்லாகும்.  

ICCPR, ICESCR ஆகிய சர்வதேச உடன்படிக்கைகள் குறிப்பிடும் ‘மக்கள்கள்’ என்ற பதத்துக்கான பொருள்கோடல் மிக நீண்டகாலமாக தொக்கிநிற்கும் ஒன்றாகவே இருந்தது.  

‘மக்கள்’ என்றால் யார் என்பதற்கான பொருள்கோடல், பல தசாப்தங்கள் கழித்து, 1990இல் கிடைத்தது. 1990ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) மக்களின் உரிமைகள் பற்றிய கருத்தியல் கற்கைகள் தொடர்பிலான தௌிவுறுத்தல்களுக்காகச் சர்வதேச நிபுணர்களின் சந்திப்பை நடத்தியிருந்தது.  

அந்தச் சந்திப்பின் அறிக்கையானது, ‘மக்கள்’ என்ற பதத்தைப் பின்வருமாறு வரையறுத்தது. ‘மக்கள்’ எனப்படுவோர், பின்வரும் பொதுவான அம்சங்கள் சிலவற்றையோ அல்லது, எல்லாவற்றையோ அனுபவிக்கும் தனிப்பட்ட மனிதர்களைக் கொண்ட குழு ஆகும்.   

(அ) பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம்.  
(ஆ) இனம் (race or ethnicity) என்றதோர் அடையாளத்தைக் கொண்டிருத்தல்.  
(இ) கலாசார ஒருமைத் தன்மை.   
(ஈ) மொழி ஒற்றுமை.  
 (உ) மதம், கருத்தியல் இணைப்பு.  
(ஊ) ஆட்புல இணைப்பு.  
(எ) பொதுவான பொருளாதார வாழ்க்கை.   

மேலும், குறித்த குழுவானது, ஒரு குறித்த எண்ணிக்கையைக் கொண்டதாக அமைய வேண்டும். எனினும், அவ்வெண்ணிக்கை பெரியதாக இருக்கத் தேவையில்லை. ஆயினும், இது ஒரு மாநிலத்துக்கு உள்ளான, தனிநபர்களின் ஒன்றியத்தை விடப் பெரியதாக இருக்க வேண்டும். குறித்த குழுவுக்குத் தாம், ஒரு மக்கள் என்று, அடையாளப்படுத்தும் விருப்பு இருக்க வேண்டும்; அல்லது, தாம் ஒரு மக்கள் என்ற பிரக்ஞை இருக்க வேண்டும்.   

குறித்த குழுவானது, அதன் பொதுவான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதற்கான, தமது அடையாளத்தை, வௌிப்படுத்துவதற்கான நிறுவனங்களை, வேறு வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, மேற்குறிப்பிட்ட அம்சங்களில் சிலவற்றையேனும் கொண்டிருக்கும் தனிமனிதர்களின் குழுவானது, அந்தக் குழு சாதாரண ஒரு சங்கத்தைவிட, அதிக மக்கள் தொகையைக் கொண்டிருப்பதுடன், அந்த மனிதர்களின் குழு, தம்மைத் தனித்ததொரு மக்களாக அடையாளப்படுத்தும் விருப்பையும் அந்த அடையாளம் தொடர்பான பிரக்ஞையையும் கொண்டிருப்பதுடன், அதற்கான நிறுவனங்கள், அதனை வௌிப்படுத்துவதற்கான வேறு வழிமுறைகளைக் கொண்டிருந்தால், அந்தத் தனிமனிதர்களின் குழு, தனித்ததொரு ‘மக்கள்’ என்று கருதப்படும்.  

சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்பில், இந்த அம்சங்கள் கருத்திலெடுக்கப்பட்டு இன்னும் விரிவாக அலசப்பட்டிருந்தால், அது மேலும் சிறப்பாகவும், தௌிவானதொரு நிலைப்பாட்டை உறுதியாக வௌிப்படுத்தும் தீர்ப்பாகவும் அமைந்திருக்கக்கூடும்.   

ஆயினும், தமிழ் மக்கள் ஒரு தனித்த ‘மக்கள்’; அவர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு என்ற கருத்தைப் பிரதிவாதிகளின் சமர்ப்பணத்தை மீளவுரைப்பதன் மூலம், குறித்த தீர்ப்பு வலியுறுத்தி இருந்தது.   

எது எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு, உயர்நீதிமன்றம் ‘சுயநிர்ணய உரிமை’ தொடர்பில் அளித்திருந்த அபிப்பிராயத்திலிருந்து சந்திரசோம எதிர் சேனாதிராஜா தீர்ப்பு, கணிசமான முன்னேற்றமாக அமைந்திருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.  

(முற்றும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .