2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள்: வெளிநாடுகள் வழக்குத் தாக்கல் செய்யுமா?

Johnsan Bastiampillai   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

இலங்கை அரச தலைவர்கள், ஓரளவுக்காவது அச்சமடையும் வகையில், இம்முறைதான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை,  சில முடிவுகளை எடுத்துள்ளது.இம்முறை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இலங்கை அரசியல்வாதிகள், முப்படைத் தலைவர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.  

இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கமே ஏதாவது ஒரு பொறிமுறையை அமைத்து, விசாரணை செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என, ஆரம்பத்தில் மனித உரிமைகள் பேரவை கூறியது. 

அரசாங்கம் அதற்கு இணங்காததை அடுத்து, இலங்கையையும் வெளிநாடுகளையும் உள்ளடங்கிய நீதிபதிகள் கொண்ட பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என, மனித உரிமைகள் பேரவை கூறியது. அதற்கும் அரசாங்கம் இணங்காததால், இப்போது இலங்கையர்களுக்கு எதிராக, வெளிநாடுகளில் வழக்கு விசாரணை நடைபெறப் போகிறது.

இலங்கையில், போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, மனித உரிமைகள் பேரவையில் வெளிநாடுகளால் முதன் முதலில், 2012 ஆம் ஆண்டே பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. அமெரிக்காவால் முன்நின்று கொண்டு வரப்பட்ட அந்தப் பிரேரணையில், மூன்று நடைமுறை வாசகங்கள் (Operative clauses) மட்டுமே இருந்தன. 

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் போது, மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதாக, பலரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை அமல் செய்ய வேண்டும் என்பதே, அந்த வாசகங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டன.

ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம், அதைச் செய்யாது இழுத்தடித்துக் கொண்டே இருந்தது. அதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் காலத்தில், அதாவது 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில், மற்றொரு முக்கியமான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மூலம், இலங்கை மற்றும் பிரதானமான பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளின் நீதிபதிகள் அடங்கிய பொறிமுறையொன்றின் மூலம், அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம், அந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய போதிலும், அந்த விடயத்தில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. ஆயினும், அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் முட்டி மோத முற்படாததால் நிலைமை மோசமாகவில்லை. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், அதற்கு நேர் மாறாக, மனித உரிமைகள் பேரவையுடன் முட்டி மோதியது. அதன் விளைவாக, இவ்வருட பிரேரணையின் கீழ், வெளிநாட்டு நீதிமன்றங்களிலேயே இலங்கை அரச மற்றும் முப்படை தலைவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெறப் போகிறது. 

இது, 2014ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே தெரிகிறது.அந்தப் பிரேரணையின் பிரகாரம், அப்போதைய மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணையொன்றை ஆரம்பித்தார். அது, தனித்தனி சம்பவங்கள் தொடர்பான விசாரணையல்ல. மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான பொதுவான மதிப்பீடொன்றாகும். 

இந்த விசாரணைக்காக சட்ட வல்லுநர்கள், சட்ட மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமைகளைக் கண்டறியும் நிபுணர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை நவநீதம் பிள்ளை நியமித்தார். சண்ட்ரா பெய்டாஸ் எனும் சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய பிரிட்டஷ் பெண் அதிகாரியை அதன் இணைப்பாளராகவும் நியமித்தார். 

இக் குழு, போரோடு தொடர்பு கொண்டிருந்த பலரை விசாரித்தும் பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்தும், ஓர் அறிக்கையைத் தயாரித்தனர். அந்த அறிக்கை, 2015 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. 

அரச படைகளும் புலிகளும் மிகப் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது. பாலியல் கொடுமைகள் தவிர்ந்த, அரச படைகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளும் புலிகளுக்கு எதிராகவும் சுமத்தப்பட்டு இருந்தது. 

சட்ட விரோதமான கொலைகள், ஆட் கடத்தல்கள், சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தல் போன்றவற்றில், இரு சாராரும் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

போர் முனையில், போர் தவிர்ப்பு வலயங்களில் சிக்கியிருந்த மக்களின் பின்னால் இருந்து, அரச படைகளுக்கு எதிராகப் புலிகள் பீரங்கிகளைப் பாவித்து, பொது மக்களை ஆபத்துக்கு உள்ளாக்கிதாகவும் அரச படைகள், பொது மக்கள் தங்கியிருந்த அவ்வலயங்கள் மீது கண்மூடித்தனமான மோட்டார், பீரங்கி ஆகியவற்றின் மூலம் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. 

அந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையில் போர் காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக, வடக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை, அவ்வாறு இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை என்று கூறியிருந்தது. எனவே, மனித உரிமைகள் பேரவை, அரசாங்கத்தைக் குறி வைத்துச் செயற்படுவதாக அரச தலைவர்கள் கூறுவது உண்மையல்ல. 

இம்முறை பிரேரணை, இலங்கையில் போர் காலத்திலும் அதன் பின்னரும் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டோருக்கும் ஈடுபடுவோருக்கும் எதிராக, ஐ.நா உறுப்பு நாடுகளில் வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு மனித உரிமைகளை மீறியதாக நம்பகமான முறையில் சந்தேகிக்கப்படுவோருக்கு எதிராக, சொத்துகள் மீதான தடைகள், பயணத் தடைகள் போன்ற தடைகளை விதிக்க வேண்டும் என்றும் உறுப்பு நாடுகளைக் கோருகிறது. இது, பொருளாதாரத் தடை போன்ற நடவடிக்கைகளால் முழு நாட்டையும் தண்டிக்காது, குறிப்பிட்ட நபர்களை மட்டும் தண்டிக்கும் திட்டமாகும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் கீழ், தனியானதோர் அலுவலகம் ஆரம்பிக்கப்படும். அதன் மூலம் தனித் தனியாக, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள் சேகரிக்கப்படும். 

இந்த அலுவலகத்துக்கு மூன்று சட்ட ஆலோசகர்கள், இரண்டு தகவல் பகுப்பாய்வாளர்கள், இரண்டு விசாரணை அதிகாரிகள் (மனித உரிமைகள் அதிகாரிகள்), தகவல் மற்றும் சாட்சியங்களைக் கையாளும் அதிகாரி ஒருவர், இரண்டு சட்ட மொழித்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அதிகாரி ஒருவர், வேலைத்திட்ட உதவியாளர் ஒருவர் என 12 அதிகாரிகள் நியமிக்கப்படுவர். 

மனித உரிமைகள் பேரவைக்கு, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை. எனவே தான், பேரவை இந்தப் பிரேரணையின் மூலம் அந்தப் பணியை உறுப்பு நாடுகளிடம் கையளித்துள்ளது. 

உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தால், பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செலவு மதிப்பீட்டின்படி, சாட்சியங்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து தொகுத்து வைக்கும் அலுவலகத்துக்காக, எதிர்வரும் 18 மாதங்களில் 2.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்படுகிறது. 

ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக வழக்கு விசாரணை செய்ய, எந்த அளவுக்கு உறுப்பு நாடுகள் முன் வரும் என்பதில் தான், இம்முறை நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் வெற்றி தங்கியிருக்கிறது. 

சில நாடுகள், குறிப்பாக மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கத்தை இது காலவரை வற்புறுத்தி, தொடர்ச்சியாக மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகளை கொண்டு வந்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதற்காக முன்வரலாம். 

ஏற்கெனவே, இந்தப் பிரேரணை நிறைவேற முன்னரே, முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் படுகொலையில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று, ஆறு வருடங்களும் பத்து மாதங்களும் கொண்ட சிறை தண்டனையை விதித்தது.சிரிய நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராகவும் சித்திரவதை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மற்றுமொரு ஜெர்மன் நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் நாலரை ஆண்டு கால சிறைத் தண்டனையை விதித்தது. 

இந்த நிலைமையை, புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இலங்கை அதிகாரிகளும் ஆகிய இரு சாராரும், ஒருவருக்கு எதிராக ஒருவர் பாவிக்கலாம். தமிழ் அமைப்புகளும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக முறைப்பாடு செய்யவும் சாட்சியங்களை வழங்கவும் இந்தப் பொறிமுறையைப் பாவிக்கலாம். 

ஏற்கெனவே சில முன்னாள் பாதுகாப்புப் படை அதிகாரிகள், வெளிநாடுகளுக்குத் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட போதும் உள்நாட்டிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்ட போதும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

அதேவேளை, இலங்கை அதிகாரிகளும் வெளிநாடுகளில் வாழும் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களுக்கு எதிராகவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிராகவும் அதைப் பாவிக்க முற்படலாம். அரசாங்கம் சில நாள்களுக்கு முன்னர், சில புலம் பெயர் அமைப்புகளுக்கு, அந்த நோக்கத்திலேயே தடை விதித்திருக்கக் கூடும்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .