2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி

Gopikrishna Kanagalingam   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அநேகமான பகுதிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகளும், தமிழ் மக்களுக்குள்ளே மாத்திரமே சிக்கிக் கொண்டிருந்தன. ஆனால், இலண்டனில் இடம்பெற்ற சம்பவமொன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பார்வையை, சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியிருக்கிறது.   

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது, உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியொருவர், மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டுத் தான், இராணுவ மயமாக்கல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் என, பல்வேறு விடயங்களையும் பேசுபொருட்களாக்கியிருக்கிறது.   

உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை நோக்கிப் பார்த்தவாறு, கழுத்தை அறுப்பது போல, குறித்த அதிகாரி சமிக்ஞை செய்தார் என, வெளியான காணொளிகள் காண்பித்திருந்தன. அவ்வதிகாரி, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என, பின்னர் இனங்காணப்பட்டிருந்தார்.   

தமிழ்த் தேசிய ஊடகங்களால் ஆரம்பத்தில் கவனஞ்செலுத்தப்பட்ட இவ்விடயம், பின்னர் சர்வதேச பேசுபொருளாகியிருந்தது. இதன் ஒரு கட்டமாக, ஐக்கிய இராச்சியத்தின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இவ்விடயம் தொடர்பாக, வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சனுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அதில், குறித்த அதிகாரியின் இராஜதந்திரப் பத்திரங்களை நீக்க வேண்டுமெனவும், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமெனவும் கோரியிருந்தனர்.   

இவற்றை எல்லாம் அவதானித்ததாலோ என்னவோ, பாதுகாப்புக்கான ஆலோசகராகச் செயற்பட்ட குறித்த அதிகாரியை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது எனவும், இலங்கை இராணுவம் உட்பட, இலங்கையிலுள்ள அதிகாரிகள், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கவுள்ளனர் எனவும், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நேற்று முன்தினம் (06) அறிவித்தது. அவ்வறிவிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பின்னர் மீளப்பெறப்பட்டது.   

ஒரு முக்கியமான விமர்சனமாக முன்வைக்கப்பட்ட விடயம், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள், தமிழ் மக்களுக்கான நியாயமான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளையும் அவ்வமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படங்களையும் ஏந்தியிருந்தனர் என்றும், எனவே இவ்விடயத்தை அவர்கள் தூண்டினர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.   

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், பெரும்பான்மையின மக்களால் வெறுக்கப்படும் விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்துவது, அவர்களின் நோக்கங்களை எந்தளவுக்கு நிறைவேற்ற உதவுமென்பது கேள்வியே. சர்வதேச அமைப்புகளும் கூட, புலிக் கொடிகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத நிலையில், அவர்களின் போராட்டத்துக்கான ஆதரவை, புலிக்கொடிகள் குறைக்கின்றன என்பது உண்மையானது தான்.   

ஆனால், புலிக்கொடி ஏந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது, ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகளே. அந்நாட்டுச் சட்டத்தின்படி, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கான பிரசாரங்களை மேற்கொள்வோருக்கு, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் ஆகியவற்றில் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். எனினும் இவ்விடயம், ஐக்கிய இராச்சிய அதிகாரிகளுக்கு உரிய பிரச்சினை.   

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் காணப்படும் அதிகாரிகள், ஐக்கிய இராச்சியத்தின் சட்டங்களை அங்கிருக்கும் அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகிறார்களா, அவர்கள் நடைமுறைப்படுத்தாவிட்டால் தாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமா என்றெல்லாம் கண்காணிக்க வேண்டிய தேவை காணப்படவில்லை. இது உண்மையிலேயே இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என எண்ணினால், இராஜதந்திர அலைவரிசைகளூடாக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலகமும், இது தொடர்பாகக் கலந்துரையாடலாம். ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கின்றமையை, ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடுகளோடு இணைத்து வைத்துச் சமாளிப்பதென்பது, ஆரோக்கியமானது கிடையாது.   

ஆனால், இதில் முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. கொழும்பை மையமாகக் கொண்ட “மேற்தட்டுவர்க்க தாரளவாதக் குழுவினர்” என, இடதுசாரிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் செயற்பாட்டாளர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர், இவ்விடயத்தின் ஆழத்தை, முழுமையாகப் பார்த்துக்கொள்ளத் தவறிவிட்டனர் என்ற உண்மையும் இருக்கிறது.   

இது தொடர்பான கருத்துகள் பரிமாறப்பட்ட பின்னர், “அந்த இராணுவ அதிகாரி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இன்னொரு நாட்டில் இருக்கும் போது, இராஜதந்திர ரீதியாக நடந்துகொண்டிருக்க வேண்டும்” என்றவாறான கருத்துகள் பரிமாறப்பட்டமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்களின் அல்லது ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களின் தோழர்கள் என்று கூறப்படும் அவர்கள், இவ்விடயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை, அதிலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது.   

அங்கு பிரச்சினையாக இருந்தது, அவர் இராஜதந்திர ரீதியாக நடந்துகொள்ளவில்லை என்பது கிடையாது. மரண அச்சுறுத்தலை, கௌரவமாக, இராஜதந்திர ரீதியில் அவர் விடுத்திருந்தாலும் கூட, அது மோசமானதாகவே அமைந்திருக்கும்.   

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மையாக வெளியிடப்பட்ட காணொளியொன்றில், அப்போது வேட்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், சில ஆண்டுகளுக்கு முன்னர், பெண்கள் தொடர்பாகக் கதைத்த சில விடயங்கள் வெளியாகியிருந்தன. அதில் அவர், பெண்களின் அனுமதியின்றி “பெண்களின் பாலுறுப்பை நான் பிடிப்பேன்” என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பான அநேகமான விமர்சனம், “எவ்வளவு மோசமான மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார்” என்றவாறாகவே இருந்தது.   

அதே ட்ரம்ப், தற்போது ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் நிலையில், உயர்மட்டக் கூட்டமொன்றில், ஆபிரிக்க நாடுகளையும் வேறு சில அமெரிக்கக் கண்ட நாடுகளையும், “மலக்குழிகள்” என்று விளித்தார் என்று, தகவல் வெளியிடப்பட்டது. உடனேயே, அவரது “வார்த்தைப் பயன்பாட்டுக்கு” எதிரான கண்டனங்கள் எழுந்தன. ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பான மேற்படி இரண்டு விடயங்களிலும், அவர்களுடைய வார்த்தைகள் தான் பிரதான பிரச்சினை கிடையாது. அவற்றை வெளிப்படுத்தும் அளவுக்கு, அவருக்குள் காணப்படும் இனத்துவேசமும் பெண்களைப் போகப்பொருட்களாகப் பார்க்கும் பண்பும் தான், அங்கிருக்கும் பிரதான பிரச்சினை.   

அதேபோல் தான், கழுத்தை அறுப்பதாக அவர் சமிக்ஞை செய்தமை, அங்கு பிரதான பிரச்சினை கிடையாது. தனக்கு மாற்றான கருத்தைக் கொண்டிருப்போரை, வன்முறையின் மூலம் அடக்கலாம், அதுவும் வெளிநாடொன்றில் வைத்து அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தலாம் என்று அவர் எண்ணக்கூடிய வழியில் அதற்கான சூழல் காணப்படுவது தான் பிரச்சினை. இவரைப் போன்றவர், வெளிநாடொன்றில் அதுவும் ஐக்கிய இராச்சியம் போன்ற முக்கியமான நாடொன்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக இருப்பது தான் முக்கியமான பிரச்சினை. இவற்றைத் தீர்க்காமல், இராஜதந்திரப் பயிற்சிகளை வழங்குவதெல்லாம், இலங்கையின் அண்மைக்காலத்தில் கருத்தரங்குகள் மூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்று தான் அமையும்.   

இதில் இன்னொரு விடயமாக, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கத்தில், இவ்வாறான செயற்பாடொன்று இடம்பெற்றிருந்தால், இவ்வாறு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது என்று, அரசாங்கத்தைப் பாராட்டுவோரையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மையினர் தவிர, தமிழ் மக்களும் கூட, அவ்வாறான கருத்தை வெளியிட்டமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.   

சித்திரவதைகளுக்குப் பெயர்போனவரான, இலங்கையின் தேசிய புலனாய்வு நிலையத்தின் பணிப்பாளர் சிசிர மென்டிஸுக்கு, கடந்தாண்டு தான், ஓராண்டுக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது; ஜகத் ஜயசூரியவுக்கு, 2015ஆம் ஆண்டில் இராஜதந்திரிப் பதவி வழங்கப்பட்டது; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக இருந்த நவநீதம் பிள்ளையால் குற்றஞ்சாட்டப்பட்ட ஷவேந்திர சில்வாவுக்கு, கடந்தாண்டில் பதவியுயர்வு வழங்கப்பட்டது; ஐ.நாவால் குற்றஞ்சாட்டப்பட்ட நந்தன சில்வாவுக்கு, கடந்தாண்டில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. எனவே, அரசாங்கத்தின் மீது அவசரப்பட்டுப் பாராட்டுகளைத் தெரிவிப்பது பொருத்தமற்றது என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அக்கருத்து ஏற்கப்பட்டிருக்கவில்லை.

எனினும், இத்தடை உத்தரவை மீளப்பெறுவதற்கான பணிப்புரையை, ஜனாதிபதி விடுத்தமை, இதில் அவசரப்பட்டமை ஏன் தவறு என்பதைக் காட்டியது. எனவே, இவ்வரசாங்கத்துக்கு, திடீரெனத் தமிழ் மக்களின் ஆழமான பிரச்சினைகள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும் என்றெல்லாம், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தேவையில்லை. அது, நீண்டகால நோக்கில் ஆபத்தானதாகவும் அமையக்கூடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .