2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இழுத்தான் பிடித்தான் அரசியலுக்கு முடிவு வருகிறது

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு என்ற செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. “நான் ஜனாதிபதியான உடனேயே அரசாங்கத்தைக் கலைத்திருக்க வேண்டும்” என்று, இப்போதுதான் ஞானம் வந்தது போல் ஜனாதிபதி தெரிவித்த கருத்தால், இலங்கையின் தேசிய அரசியலில், பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பன்றிக்கு வாழ்க்கைப்பட்டால் அதன் உணவைத்தான் சாப்பிட்டாக வேண்டும் என்பதுதான், இப்போதைய நிலைக்குக் காரணமாகும்.  

சுதந்திரத்துக்கு முன், சுதந்திரத்துக்குப் பின், குடியரசுக்கு முன், குடியரசானதற்குப் பின் என்றிருந்த இலங்கையின் அரசியல், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்று வந்த தேசிய இனப்பிரச்சினைக்கான யுத்தம், தீர்வு இல்லாமல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின் முடிவுக்கு வந்த மிகப் பெருமளவான மாற்றத்தைக் கண்டது.

இருந்தாலும், 2009ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம், அனைத்து மக்களுக்குமே நிம்மதியானதாக இருந்தாலும், பெரும்பான்மைத் தரப்பினரால், தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் திடமானதொரு முடிவு முன்வைக்கப்படவே இல்லை. அதனுடன் இணைந்ததாக, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற விதத்தில், சர்வதேசமானது, இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றைப் பெற்றுத்தரும் என்ற முயற்சிகளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புகளும் தொடர்ந்தன.

ஆனால், அவற்றில் தீர்க்கமான முடிவுகள் காணப்படவில்லை. இதனுடன் இணைந்ததாகத்தான், அன்றைய மஹிந்த அரசாங்கத்துக்கு எதிரான முன்னெடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன், அதற்குப் பின் என்ற புதிய நிலை ஏற்பட்டது. இது, இப்போது கோட்டை சரிந்து விழுந்த தன்மையில் தான் இருக்கிறது. 

இலங்கை அரசாங்கத்தைத் தன்பக்கம் வைத்துக்கொண்டிருப்பதற்காக, இந்தியா மற்றும் வேறு நாடுகள் எனப் போட்டி போட்டுக்கொண்டு போராட்ட இயக்கங்களை ஊக்குவித்தன. இதில், மேற்குலகும் ஒன்றுமில்லையென நின்றுவிடவில்லை.

உலகில் பல போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெறுவதற்கு, மேலை நாடுகளும் அவற்றின் முதலாளித்துவ நோக்கங்களும், ஆயுத உற்பத்தி மற்றும் விற்பனைகளுமே காரணங்களாக அமைந்திருந்தன. ஆனால், அவற்றின் தொடர்ச்சிகள் இன்னமும் நின்றுவிடவில்லை என்றே சொல்லியாக வேண்டும். 

இலங்கையின் தேசிய அரசியலில், 70களுக்குப் பின்னர் உருவான போராட்ட இயக்கங்கள், ஆயுதக் கலாசாரத்தையே முதன்மையான வழியாகக் கைகொண்டு, அந்த இயக்கங்களுக்குள் போராடி, தம்முடைய அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் எடுத்திருந்தன.

பின்னர், விடுதலைப் புலிகளே, ஏகபோகமாகத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கானவர்களென மாற்றம் பெற்றனர். இந்த மாற்றத்தின் மூலம் உருவான பல விடயங்கள், இப்போது இல்லையென்றாகிவிட்டன. 

பொதுப்பணி என்கிற அரசியலுக்குள் நுழைந்துவிட்டாலே, வெட்கம், மானம், சூடு, சுரணை என்கிறவைகளைத் தொலைத்துவிட்டுத் தான் வாழ்ந்தாக வேண்டும். இவ்வாறிருக்கையில், “நான் ஜனாதிபதியானவுடன், நூறுநாள் திட்டத்தைச் செய்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை நடத்தி, புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்க வேண்டும்” என்ற ஜனாதிபதியின் கருத்தும், அதில் அவர் சொல்லிய “எனக்கு எந்தவொரு நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது.

எனக்கும் எனது குடும்பத்துக்கும், பிள்ளைகளுக்கும், அவமானமும் செய்திருக்கமாட்டார்கள்” என்பது, எதனைக் காட்டுகிறது என்பதற்குப் பதில் தேவை. 

‘மைத்திரி நிர்வாகமும் நூறு நாள்களில் புதிய நாடும்’  எனும் நூறு நாட்கள் வேலைத்திட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல. ஜனாதிபதிக்கான பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த சகலரும் இணைந்து தயாரித்த கொள்கைத்திட்டமாகும்.

இந்த நிலையில், “ஜனாதிபதிக்குத் தெரியாது” என்ற புதிய கருத்தொன்று, அமைச்சரவை முடிவு அறிவிப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்னவால்  வெளியிடப்பட்டிருக்கிறது. 

2015ஆம் ஆண்டு ஜனாதிபத் தேர்தலில், பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, இந்த நூறு நாட்கள் வேலைத்திட்டத்தைத் தயாரித்திருந்தாலும் அது, ஜனாதிபதியின் பார்வைக்கு வழங்கப்படாமல் முன்னெடுப்புகள் நடைபெற்றிருக்குமா என்பது கேள்வி. 

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றிய எவ்வாறான கருத்துகள் இருந்தாலும், வேலைகள் நடைபெறுகின்ற போதுதான் அவற்றுக்குப் பெறுமதிகள் இருக்கப்போகின்றன.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டவுடன் இருந்த சூழ்நிலையில், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னர், தன்னை ஜனாதிபதியாக ஆக்கிவைத்தவர்களுக்கு ஆதரவானவராகவே அவர் இருந்தார். அந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது போன்றதோர் ஆட்சியே நடத்தப்பட்டிருந்தது. 

அன்றைய நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டே, அவரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முடிவுகளுக்கு முன்னரே, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானதொரு நாடாளுமன்றமும் தேசிய அரசாங்கமும் அமைக்கப்பட்டது. இதற்குள் நடந்துமுடிந்த விடயமாகத்தான், மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் சம்பந்தப்படுகின்ற பிணைமுறி விவகாரம் பார்க்கப்படுகிறது. 

ஒரேயொரு தீப்பொறி, ஒரு நாட்டையே அழித்தது போன்று, இப்போது பிணைமுறியால், அரசாங்கம் எரிந்து கொண்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை கொள்ளையடித்ததை விடவும், இந்தப் பிணைமுறிக் கொள்ளையை அதிகமென்று சொல்வதா? அந்த ஊழலுக்குள் சம்பந்தப்பட்டவர்களை தண்டித்தாக வேண்டுமென்று சொல்வதா என்பது, மக்கள் மத்தியில் இருக்கிற குழப்பமாகும். 

பொருளாதாரப் பலம் என்பதற்கு, மக்கள் மத்தியில் பணம் புரள்வதையும் ஓர் அடையாளமாகக் கொள்ளவேண்டும். தனிப்பட்ட வாழ்க்கைச் செலவு என்பது, ஒரு நாட்டுக்குரியதாக மாறுகிறது. ஆனால், வாழ்க்கைச் செலவு இப்போது எகிறிப் போயிருக்கிறது. கேவலம், அடிமட்ட சாதாரண மக்களின் வயிற்றிலடிப்பது போன்று, மண்ணெண்ணெய்க்குக் கூட விலையை ஏற்றிவிட்டுக் குறைக்க வேண்டிய நிலைப்பாட்டில் தான் அரசாங்கம் இருக்கிறது. 

யாரும் தங்களை வைத்துக்கொண்டே எதையும் சிந்திப்பதும் முடிவுகளை எடுப்பதும் சாத்தியமே இல்லாததாக அமையும். ஒரு மீன்பிடி விவசாய நாடாக இருந்துகொண்டு, ஒரு மிகச் சிறிய அளவேயான வர்த்தகர்களை வைத்து முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியாது.

மீனவர்களின் வாழ்க்கைத் தரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாக இருந்தால், அவர்களுடைய நலனோம்புத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அதனை விடுத்து, பிரதானமானதொரு பொருளான மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படுகிறது.

சாதாரணமான போக்குவரத்துச் சாதனமாக மோட்டார் சைக்கிள்கள் தான் அதிகம் இலங்கையில் பாவனையில் இருக்கின்றன. அவற்றின் எரிபொருளான பெற்றோலுக்கும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதான சமையல் எரிவாயுவின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. இதில் விநோதம் என்னவென்றால், வாகனங்களுக்கு மண்ணெண்ணெயைப் பாவிக்கிறார்கள் என்பதுதான். 

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும், பாணுக்கும் பருப்புக்கும் விலை குறைக்கப்பட்டு தேசிய உணவு என்ற பெயர் வழங்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து 20 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், இன்னமும் எவ்வளவு அதிகரிக்கப்படப் போகிறதோ என்று மக்கள் கவலை கொள்ளுமளவில் 60 ரூபாயாகப் பாண் இருக்கிறது. 

அடிப்படையான விடயங்களைக் கூடத் திட்டமிட்டு, சாதாரணமான மக்களை அதிகமாகக் கொண்ட இலங்கையில் முடிவெடுக்க முடியாததொரு நிலையிருக்கையில், பிரதிச் சபாநாயகருக்கே ஒற்றுமைப்படாத ஒன்றிணைந்த எதிரணி, விரைவில் கலைந்துவிடும் என்று சொல்லிக்கொள்வதில் ஒன்றுமில்லை. 

ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகைசெய்யும் அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்து, ஒவ்வொரு மாகாண சபைகளாக நிராகரித்து, அந்தத் திருத்தத்தை நிறைவேற்ற முடியாததாக மாற்றிவிட்டது. அரசியல் விவகாரங்களுக்காக மாகாணங்களிடம் ஆலோசனை கேட்கின்ற தன்மை உருவாக்கப்பட்டபோது எதிர்க்கப்பட்டாலும், தற்போது வரவேற்பு பெற்றிருக்கிறது. 

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் என 13 மனுதாரர்களினால், சட்டமா அதிபரைப் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், நாட்டில் ஏற்பட்டிருக்கிற இப்போதைய ஒன்றுமேயில்லாத நிலைக்கு எதிராக வழக்கைத் தொடர்வதற்கு யாருமே இல்லை. 

20 திருத்தங்கள் வரையில் சென்றுவிட்ட எமது நாட்டின் அரசியலமைப்பு, இன்னமும் மக்களின் அடிப்படையான எந்தவொரு விடயத்தையும் சரியாகத் தீர்த்து வைத்ததாக இல்லை. நாட்டில் தேர்தல் வருவதற்கு முன்னர், பொருட்களின் விலைகளைக் குறைப்பதும் தேர்தலுக்குப் பின்னர் விலையேற்றி மக்கள் மீது சுமையேற்றுவதும் சாதாரணமானதொரு நடைமுறையாகத் தான் இருக்கிறது. இதில் என்ன விசேடம் என்றால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு மக்கள் பழைய குருடி கதவைத் திற என்பது போன்று வாக்களிப்பதும் நடைபெறுகிறது தான். 

இலங்கையில் இருக்கிற இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்கிற விடயத்தில், அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது, தம்முடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற கட்சியாக எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகிறது. இதற்கு, சிங்கள மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் எழத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாட்டுக்கா அல்லது தமிழ் மக்களுக்கா என்பதே அந்தக் கேள்வியாகும்.  

எதிர்க் கட்சியென்பது, நாட்டில் பலமாக இருப்பதானது, மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். ஆனால், நமது நாட்டைப் பொறுத்த வரையில், பலமான எதிர்க்கட்சி என்பதற்கு அப்பால், பாரம்பரியமான முறையில் வந்ததாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இது, எதிர்க் கட்சியொன்று இல்லாதது போன்றதொரு நிலைப்பாட்டையே ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு, கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்ற மரபு உருவாக்கம் பெற்றதே ஒரு காரணம். 

அந்த வகையில் தான், அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிணைந்த எதிரணி என்கிற ஒன்று அங்கிகரிக்கப்படாமலேயே, நாடாளுமன்றத்தில் இந்த ஒன்றிணைந்த எதிரணி செயற்பட்டுக் கொண்டிருப்பதால் நமக்கென்ன பிரச்சினை என்று கணக்கெடுக்காமல் இருந்துவிட்டு, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் தலையில் கைவைத்த தேசியக் கட்சிகளுக்கு, இப்போது அச்சம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 

இந்த அழுத்தம், வெவ்வேறு விதமான காரணங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கத்தான் செய்யும். எல்லோரும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்குவது பற்றி மனதுக்குள் அச்சத்துடன் இருக்கின்றனர்.

அதற்கு முன்னர் வரவேண்டிய மாகாண சபைத் தேர்தல், இன்னும் ஆறு வாரங்களில் அறிவிக்கப்பட்ட பின்னர் என்ன முடிவை எடுப்பதென்பது மறக்கப்பட்டதாக இருக்கிறது. 

ஆனால், தேசியக் கட்சிகள், சிறு கட்சிகள், பிரதேச, பிராந்தியக் கட்சிகளின் கூட்டுகளை உருவாக்கி, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஆட்சியமைப்பு வரையான முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமிருக்கின்றன. நாட்டில் எதுவானாலும் நடக்கட்டும் என்று விட்டுவிட்டு, மாகாண சபைத் தேர்தலை இலக்குவைத்துச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

ஒவ்வொரு ஜனாதிபதியும் அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியலமைப்பை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்வது நடைபெறுவது தான் நமது நாட்டின் வழமை. அது போலவே, 19ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. 18ஆவது திருத்தத்தின் மூலம், ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலம் வரையறை அற்றதாக்கியது. அதில், மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவந்ததை செயலற்றதாக்கியது. 

என்னென்னவோ நடைபெற்று ஒரு குழப்பகரமான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கையில், “நான் எனக்கு வருகின்ற எந்தப் பிரச்சினையையும் நாடு என்ற இடத்திலிருந்தே பார்ப்பேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். 

எது எப்படியானாலும், எல்லாவற்றிலும் எல்லோரும் புகுந்து விளையாடும் பண்புகள் உருவாக்கப்படுமாக இருந்தால், நாட்டில் அமைதியின்மையும் குழப்பங்களும் தான் குடிகொண்டிருக்கும் என்பதற்கு, இலங்கை நல்லதோர் உதாரணமாகும். 

இவ்வாறான நிலைப்பாடுகளில் இருந்துகொண்டிருக்கும் இலங்கையின் ஊழல் பிரச்சினைக்குத் தீர்வு தேடும் மக்கள் விடுதலை முன்னணி, நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று கொண்டே இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள், இலங்கையின் ஆட்சியை மீண்டும் பிடிக்கத் துடிக்கும் மஹிந்த கூட்டணி,  கரையோர தென்கிழக்கு அலகைக்காண வேண்டுமென்று கூறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் என்றிருக்கிற சூழலில் உருவாகும் மாற்றம் ஒன்று தான், நாட்டைக் கட்டியெழுப்பும். 

அமைச்சரவையை ஜனாதிபதி நியமிக்கும் போது, பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது, மணிக்கணக்கில் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்துவது எல்லாமே, தீர்வுகளைக் கொண்டுவருவதாக இருக்குமானால் சிறந்ததே. இருந்தாலும், அதனால் எந்தப்பயனும் இல்லையென்றால் என்னதான் செய்துகொள்ள முடியும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்ததிலிருந்து, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகள், ஊழலுக்கெதிரான செயற்றிட்டங்கள், மத்திய வங்கிப் பிணைமுறி விவகாரம், அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துதல் என்று இப்போது ஏற்பட்டிருக்கும் ஜனாதிபதியின் கருத்துடன் இந்தப் பதவிக்காலம் நிறைவுக்கு வரட்டும்.

புதிய அரசாங்கத்துக்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர், இன்னுமோர் இழுத்தான் பிடித்தான் நடைமுறை தான் இலங்கையின் அரசியல் பாரம்பரியமாக இருக்கட்டும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .