2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இஸ்‌ரேல் - சிரியா மோதல்

Editorial   / 2018 நவம்பர் 05 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

சிரியாவில், ஈரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்கள், வெளிப்படையாக புதிய, பெரிய அளவிலான பிராந்தியப் போரொன்றின் சாத்தியத்தை அதிகரித்துள்ளன. இஸ்‌ரேலிய உயர்மட்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் தொடர்ச்சியாக இஸ்‌ரேலைச் சுரண்டும் வகையில் செயற்படுமாயின், குறித்த பதற்ற நிலைமையைத் தவிர்க்க முடியாமல் போகலாம் எனவும், அது கட்டுப்பாடற்றதொரு சூழ்நிலையாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர். இஸ்‌ரேலுடன் இணைந்த ஐக்கிய அமெரிக்க இராணுவக் கொள்கை, சிரியாவில் இரண்டு முக்கிய காரணங்களுக்காக நிலைநிறுத்தப்பட்டிருந்தது: ஒன்று, இஸ்‌ரேலின் இராணுவ இருப்பை ஆதரிப்பதன் மூலம், இப்பகுதியில் ஈரானியச் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது; மற்றைய காரணி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை, தொடர்ச்சியாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே ஆகும். ஆயினும், ஐ.அமெரிக்கா அண்மையில், சிரியாவில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்திருந்தமை, குறித்த இஸ்‌ரேல் - ஈரான் மோதலுக்கு மேலதிகக் காரணியாக காணப்படுகின்றது.

குறித்த வெளியேற்றத்தின் பிறகான காலப்பகுதியில், தனது பாதுகாப்பை நிலைநிறுத்தும் பொருட்டு இஸ்‌ரேல், அண்மைக்காலமாகவே இராணுவ நகர்வுகளையும் ஒருதலைப்பட்சமாக இராணுவத் தாக்குதல்களையும் முன்னெடுத்து வருகின்றது. அவை குறிப்பாக, ஈரானிய இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களாகவே காணப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக, இஸ்‌ரேலிய விமானப்படை, பல இராணுவ தாக்குதல்களை சிரியா - ஈரான் எல்லைகளில் நடாத்தியிருந்தது. மேலும், இவ்வாண்டு ஜூலை மாதம், இஸ்‌ரேல், சிரிய விமானத்தை இஸ்‌ரேல் வான்வெளியில் சுட்டு வீழ்த்தியதுடன், அலெப்போவில் உள்ள நெய்ராப் விமானத் தளத்தைத் நோக்கியும், ஹிஸ்புல்லா நிலைகளைக் குறியாகக் கொண்டும் ஆயுதத் தாக்குதல்களை, மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு மேலதிகமாக, சிரிய-ஈராக் எல்லைகளுக்கு அருகே ஜூலை 17 ம் திகதி ஈரானிய ஆதரவுடைய  ஈராக்கிய கடாபி ஹிஸ்புல்லா மீது இஸ்‌ரேல் தாக்குதலை நடாத்தியிருந்தமை, 52 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்படக் காரணமானது.

குறித்த எல்லாத் தாக்குதல்களுமே, இஸ்‌ரேல் அதன் வான்வழிப் பாதுகாப்பை தனது உறுதியான மூலோபாயமாக கையாள்வதையே காட்டுகின்றது. மேலும், இது ஈரானிய எல்லைகளில் ஈரானிய இருப்பை நீக்குவதோடு, ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்புகள், இப்பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்துவதைத் தடுக்கும் செயற்பாடாக அமையும் என, இஸ்‌ரேல் நம்புகின்றது.

எது எவ்வாறாய் இருப்பினும், இஸ்‌ரேலும் ஈரானும், முழுமையானதொரு யுத்தத்தை  விரும்பவில்லை. அவ்வாறான யுத்தம், எவ்வாறாகிலும் இரு தரப்புக்கும் இஸ்‌ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்குட் இடையில் நடைபெற்ற 2006 மோதல் போன்று, இணையில்லாச் சேதத்தை வரச்செய்யும் என்பதை, இரு தரப்பினரும் உணர்ந்துள்ளனர். இந்நிலையிலேயே, இஸ்‌ரேலியத் தாக்குதல்கள், குறிப்பிட்ட அச்சுறுத்தல்களையும் ஈரான் ஒருவிதக் கட்டுப்பாடுகளையும் கொண்டிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிரியாவில் ஈரானின் பிரசன்னம், இஸ்‌ரேலிய எல்லைகளிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. ஆனால் சிரியாவில் இருந்து ஈரான் முழுமையாகப் பின்வாங்கவேண்டும் என்பதை இஸ்‌ரேல் வலியுறுத்தியது. ஈரான், சிரியாவில் நிரந்தர இராணுவப் பிரசன்னத்தை நிறுவும் நோக்கில், தொடர்ச்சியாக இருப்பது, லெபனானிய ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளிப்பதோடு, இஸ்‌ரேலிய எல்லைகளுக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம், இஸ்‌ரேலியப் பாதுகாப்புக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தலாக இருக்கமுடியும் என்றே, ஈரான் நம்புகின்றது.

இவற்றையும் மீறி, இஸ்‌ரேல் - ஹிஸ்புல்லா யுத்தமொன்று இப்போதைய சாத்தியத்தில் ஏற்படுமாயின், அது 2006 யுத்தத்தை விட பலமடங்கு சேதத்தை, இரு பகுதியினருக்கும் ஏற்படுத்தும். இப்போது ஹிஸ்புல்லா குழு, சிரியாவில் பல நடவடிக்கைகளிலிருந்து தனது போர்க்கள அனுபவத்தைக் கண்டுள்ளதுடன், இஸ்‌ரேலியப் பிராந்தியத்தில் ஆழமானதும் துல்லியமானதுமான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய திறனைக் கொண்ட நவீன ஏவுகணை முறைமையைக் கொண்டுள்ளது. மறுபுறம், சிரியா முழுவதிலுமுள்ள ஹிஸ்புல்லா நிலைகளைத் தாக்க, பரந்தளவில் வான், இராணுவத் தாக்குதல்களை  நடத்துவதற்கு இஸ்‌ரேல் தயங்காத இந்நிலை, பெரிய அளவிலான ஈரானிய - இஸ்‌ரேலியமோதல் நிலைமைக்குக் கொண்டு செல்வதுடன், அது, பிராந்திய யுத்தமொன்றுக்கே வழிவகுக்கும். இந்த அச்சப்பாடுகள் மத்தியிலேயே, சிரியாவிலிருந்து தனது இராணுவத்தை விலக்கும் ஐ.அமெரிக்காவின் அறிவிப்புப் பார்க்கப்படவேண்டியதாய் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .