2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இஸ்லாமிய பிரிவினைவாதச் செயற்பாடுகள் 10 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன’

Editorial   / 2019 மே 08 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுக்களின் செயற்பாடுகள், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதும் காணப்பட்டன. யுத்தத்துக்குப் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.   

இது தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு, 

கே: முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவில், எதிர்பாராத ஓர் அசாதாரண நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேரிட்டது ஏன்? 

இதனை 10 வருடங்களுக்குள் இடம்பெற்ற சம்பவம் என நாம் கருதினாலும், அது உண்மையில்லை. இது, நீண்டகாலச் செயற்பாடுகளின் பலனாகவே இடம்பெற்றது. இஸ்லாமிய பிரிவினைவாத பயங்கரவாதச் செயற்பாடு என்பது, இன்று நேற்று உருவெடுத்த ஒன்றல்ல. இது, புலிகளுக்கும் முன்பே ஆரம்பித்தது. எமது நாட்டில் இது காணப்படவில்லை என்றாலும், உலக நாடுகள் பலவற்றிலும் வியாபித்திருந்தது. 

1988ஆம் ஆண்டில், புலனாய்வுக் கற்கைகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு 3 விடயங்கள் பற்றிப் பேசப்பட்டன.  சீனாவின் எழுச்சி, மேற்கத்தேய நாடுகளின் எழுச்சி மற்றும் இஸ்லாமியப் பிரிவினைவாத எழுச்சி உள்ளிட்ட காரணங்களை, அவர்கள் அன்​றே அறிந்திருந்தனர். 

கே: இதனை, அரசியல் எழுச்சி என்று கருதுகிறீர்களா அல்லது மதப் பிரிவினைவாத எழுச்சி என நினைக்கிறீர்களா? 

இது மதப் பிரிவினைவாத எழுச்சியென்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் என்று நோக்கினாலும், இதனை மதப் பிரிவினைவாதம் சூழ்ந்துள்ளது. 

கே: மதப் பிரிவினைவாத எழுச்சிக்கும் அரசியல் எழுச்சிக்கும் உள்ள வேறுப்பாட்டை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? 

அரசியல் மாற்றங்கள், ஒன்றோடொன்று மாறுபடும், ஒவ்வொருவரும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வர். ஆனால், மதப் பிரிவினைவாதம் என்பது அவ்வாறானதல்ல. மிகவும் அச்சுறுத்தலானது. தற்கொலைத் தாக்குதல்களை நடத்துகின்றனர். அதனால் இதனை, இலங்கைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திப் பார்க்காமல், சர்வதேச அளவில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 

கே: இதனுடன் தொடர்புபட்டவர்கள் சகலரும் இலங்கையர்கள். அவ்வாறிருக்க, நீங்கள் இதனைச் சர்வதேசப் பயங்கரவாதம் எனக் கூறுகிறீர்களே...

இவர்கள், கட்டமைக்கப்பட்ட இஸ்லாமியக் குழுவாக, சர்வதேச தரப்புகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளனர். அதனூடாக கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களால் தூண்டப்பட்டதாலேயே, இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.   இவர்களுடன், புதியவர்களும் இணைந்து கொள்ளலாம் என்பது தான் அச்சுறுத்தலான விடயமாகக் காணப்படுகிறது. அதேபோல், இலங்கைக்குள் சிங்களர்களின் காலசாரத்துடன் ஒன்றித்துப் பயணிப்பதாலேயே, இதனை மட்டுப்படுத்த முடிந்துள்ளது.  அதனால், அவர்களுடன் எமக்குப் பிரச்சினை இல்லை. அவர்களின் இனவாதத் தன்மை குறைவடைந்துள்ளது.  

கே: ஏன்  எம்மால் இதனை முன்​பே உணர முடியாமல் போனது? 

வடக்கில் யுத்தம் ஒன்று இருந்த காரணத்தினால், நாடு என்ற வகையில் மேற்படி காரணம் மீது செலுத்தப்பட்ட அவதானம் குறைந்து காணப்பட்டது.  

கே: அதனாலா எம்மை இவ்வாறு தாக்கினார்கள்? 

இல்லை. முஸ்லிம்களுக்கும் எமக்கும் முரண்பாடுகள் இருக்கவில்லை. அவர்களை நாம் ஓரங்கட்டவும் இல்லை. அவர்களுடன் நெருக்கத்தையே பேணிவந்தோம். அதனால், அவர்களுக்குத் தற்கொலைத் தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அப்படியிருந்தும் இவ்வாறான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால், நிச்சயமாக சர்வதேச வழிநடத்தல்கள் இருந்திருக்க வேண்டும். 

கே: அப்படியானால், இது தற்செயலாக நிகழ்ந்ததெனக் கூறுகிறீர்களா? 

இல்லை. தற்செயல் எனக் கூறமுடியாது. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்று இல்லாமையே இதற்குப் பிரதான காரணமாகும். இதுதான் இங்குள்ள பிரச்சினை. ஒரு நாடு என்ற வகையில், அவ்வாறானதொரு பொறிமுறையை செய்யத் தவறியுள்ளோம். நபர்களைக் கண்டறிதல், அதற்கான மாற்று வழிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட விடயங்களைச் செய்யத் தவறியுள்ளோம். 

கே: இராணுவப் புலனாய்வுப் பிரிவை பலவீனப்படுத்தியதுதான் இதற்குக் காரணமெனப் பலரும் கூறுகின்றனரே... 

அதுதான் கிட்டிய காரணம்.

கே: யுத்தம் நிறைவடைந்த பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவு சரியாகச் செயற்பட்டிருந்தால், இவர்களை முதலிலேயே கண்டிறிந்து முடக்கியிருக்கலாம் அல்லவா? 

யுத்தத்துக்குப் பின்னர் நாம் அனுப்பிய சில குழுக்கள் ஊடாக, பயங்கரவாதிகள் தொடர்பிலான தரவுகள் கிடைக்கப்பெற்றன. அதனைக் கொண்டுதான், அடுத்த வாரத்தில், மாதத்தில் அல்லது அடுத்தடுத்த வருடத்தில் எமது செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமெனத் தீர்மானித்தோம். மேற்குறிப்பிட்ட சோதனைகளின் போதும், யுத்தகாலத்திலும், இவர்கள் பற்றிய தகவல்கள் எமக்குச் சிறியளவில் கிடைக்கப்பெற்றிருந்தன.  

கே: அந்தக் காலத்தில் , இவர்களின் எழுச்சி அந்த மட்டத்தில் காணப்பட்டதா?

அப்போதைய தகவல்களுக்கமைய, இவர்கள் பெரும் அளவில் உருவெடுத்திருக்கவில்லை. எதிர்காலத்தில் உருவெடுக்க முடியும் என அறிய முடிந்தது. அதனால்தான், அப்போது பல தரப்புகளுக்கு எதிரானச் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்தோம். 

கே: அந்தச் செயற்பாடுகளை அப்போது முடக்குவதற்கான செயற்பாடுகளை ஏன் எடுக்கவில்லை? 

அப்போது இவர்கள் குறித்துத் தேடிறிய, பல்கலைக்கழக மாணவர் குழுக்களை இணைத்துக்கொண்டு பல முயற்சிகளை எடுத்திருந்தோம். அதன் கீழ், தனியான புலனாய்வுப் பிரிவொன்றும் நிறுவப்பட்டு, அதனூடாக மேற்படி குழுக்களின் போதைப்பொருள் வியாபாரம், ஆட்கடத்தல் செயற்பாடுகள் பற்றி அறிய முடிந்தது. அதற்காகவே, சமூக வலைதளங்களை மேற்பார்வை செய்யும் பிரிவொன்றும் நிறுவப்பட்டது.  

கே: இனவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு எவ்வாறானது?

இனவாதிகள்தான் பயங்கரவாதிகளாக உருவெடுக்கின்றனர். இன்று அதுதான் நிகழ்ந்துள்ளது. 

கே: நீங்கள் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில்தான், அழுத்கம சம்பவம் இடம்பெற்றது. அப்போது இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முனையவில்லையா?  

அப்போது, இஸ்லாமிய பிரிவினைவாதக் குழுக்களின் பின்னணியில் இருக்கும் சகல மதத் தலைவர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டனர். அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கிலானோருடன் கலந்துரையாடி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இவர்களை ஒப்பிட்டுப் பார்த்து, இவ்வாறானவர்களை முடக்குவது குறித்துப் பேசப்பட்டது. 30 வருட யுத்தத்துக்குப் பின்னர், மீண்டும் எமது நாடு பயங்கரவாதத்தைத் தாங்காது எனக் குறிப்பிட்டிருந்தோம். அதன் பின்னரும் அந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. 

அதனையடுத்து, மற்றைய மத தலைவர்களுடனும் கலந்தாலோசித்தோம். அப்போதும், பள்ளிவாசல்களின் தலைவர்கள் சிலர், பிரிவினைவாதிகள் பற்றிய தகவல்களை வழங்கினர். அவர்களை விரட்டியடிக்க வேண்டாம் என்றும் சரியான பாதையில் அவர்களைப் பயணிக்கச் செய்யுமாறும், நாம் அறிவுரை வழங்கினோம். அந்தச் செயற்றிட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. 

கே: அந்தச் செயற்பாடுகள் தற்போதும் முன்னெடுக்கப் படுகின்றனவா? 

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், அந்தச் செயற்பாடுகள் அனைத்தும் தடைபட்டதால் தான், பிரச்சினை தலையெடுக்க ஆரம்பித்ததென அறிய முடிகிறது. 

கே: புலனாய்வுப் பிரிவு மாத்திரமன்றி, பாதுகாப்புப் தரப்புகள் முடக்கப்படமையும் இதற்குக் காரணமென்றா கூறுகின்றீர்கள்? 
பாதுகாப்பு என்பது உணரப்பட வேண்டும். அதுவும் ஒருவகை கலாசாரமாகும். அதனாலேயே, பாதுகாப்புக் கலாசாரம் என்கிறோம். அந்தக் கலாசாரம், யுத்தம் முடிந்த பின்பும் சிறப்பாகவே கட்டியெழுப்பட்டது. அதற்கு, அடிமட்ட வீரர்களிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரையிலான தொடர்பாடல்கள் காணப்பட வேண்டியது அவசியம். யுத்த காலத்தில், இராணுவப் பிரதானிகளுக்கு நேரடியாகத் தகவல் கிடைக்கவில்லை. ஓட்டோ சாரதிகள்தான் தகவல் வழங்கினர். அதனால், அப்போதைய காலத்தில் பாதுகாப்பு வேலியொன்று காணப்பட்டதெனக் கூறலாம். அந்தப் பாதுகாப்பு வேலி, 2015க்குப் பின்னர் முற்றாகத் தகர்க்கப்பட்டைமையே பாதுகாப்புக் கலாசாரம் வீழ்ச்சியடையக் காரணமானது. 

கே: 2015 அரசியல் மாற்றத்தின் பின்புதான் இந்தப் பாதுகாப்புக் கட்டமைப்பு மாறுபடுகிறது. அதனால், அப்போது பொறுப்பேற்ற தலைமை​த்துவத்தின் பிரச்சினைதான் காரணம் என்றா கூறுகிறீர்கள்? 

தலைமைத்துவம்  மாத்திரமல்ல, அவர்களது கொள்கைகளும் இதற்கு வழிசமைத்தது. அவர்கள், தேசிய பாதுகாப்புச் செயற்பாடுகளை, தேசிய குற்றங்களாகவே கருதினார்கள். அது, சில அரசியல் தலைமைகளின் உரைகளில் வெளிப்பட்டது. இராணுவ வீரர்கள் குப்பையில் எறியப்பட்டனர். இராணுவத் தளபதிகளும் திருடர்கள் என்று கூறப்படும் நிலைமை ஏற்பட்டது.  

கே: உங்கள் கருத்துக்கமைய, பாதுகாப்பு வேலிக்கு நேர்ந்த பிரச்சினைதான் இதற்குக் காரணமா? 

நிச்சயமாக. அண்மையில் அரசியல் தலைவர் ஒருவர், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருக்கின்றபோது, ஓரிருவர் இல்லாவிட்டால் கட்டமைப்பு பாதிப்படையாதெனக் கூறியிருந்தார். ஆனால், ஓரிருவரின் இழப்புகூட கட்டமைப்பொன்று வீழ்ச்சியடையக் காரணமாக அமையக்கூடும். ஆட்சியாளர்கள்களுக்கு, தேசிய பாதுகாப்பு பற்றிய அக்கறை இல்லை என்று அறிந்தவுடன், பாதுகாப்புத் தரப்புகள் பலவீனமடையும். நாட்டுத் தலைவருக்கு நாட்டின் மீது பற்று இருக்கின்ற போது மாத்திரமே, வீரர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை வரும். 

கே: சரத் பொன்சேகாவின் காலம் தொடக்கம் நீங்கள் இராணுவ தளபதியாக இருந்த காலம் வரையில், இராணு வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை பொய்யானவையா? 

இவற்றை, முழுமையான அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் என்றே கூறமுடியும். சில நபர்களின் பெயர்களைக் கூறிவிட்டுத் தப்பிச்செல்ல முடியும் என்ற நிலையும் இருந்தது. நானும்  ஆணைக்குழுக்களிடம் சாட்சியமளிக்கச் சென்றிருந்தேன். இதனை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு நாம் குழந்தைகள் அல்லர்.

கே: நீங்கள் நினைக்கும் அளவுக்கு, தற்போதைய பாதுகாப்பு எந்தளவுக்கு பலவீனமடைந்துள்ளது? 

தற்போது நடத்தப்பட்ட தாக்குதல், மென் தாக்குதல் என்றே கூறப்படுகிறது. தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளுக்கு அமைய, இதனைவிடப் பாரதூரமான தாக்குதலை நடத்தியிருப்பதற்கான  இயலுமை இருந்தது. தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியமையே இதற்குக் காரணமாகும். 

கே: அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷதான் பயங்கரவாதிகளைப் பலப்படுத்தினார் எனக் கூறினார். அவரது காலத்திலிருந்த இராணுவத் தளபதி நீங்கள்தான். அது உண்மையா? 

அவ்வாறு கூறுபவர்கள்தான் புலிகளைப் பலப்படுத்தினார்கள். அந்தக் காலங்களில், நாம் திருப்தியுடன் பணியாற்றினோம். அப்போது, நாடு பற்றிய உணர்வு இருந்ததே அதற்குக் காரணமாகும்.  அதனால், நாம் எவரையும் பலப்படுத்தவில்லை. மாறாக, இவர்கள்தான் கட்டமைப்புகளைச் சிதைத்தார்கள். 

கே: மேற்படிச் சம்பவம் தொடர்பிலான சில கடிதங்கள், அங்கும் இங்குமாக வலம் வந்தன. அதற்கமைய, எங்கு தவறு விடப்பட்டிருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? 

முதலில் கூறியதுதான் அதற்கான காரணம். நாட்டின் பாதுகாப்பு  பலவீனப்படுத்தப்பட்டதால் தான், இவ்வாறான செயற்பாடுகள் நிகழ்ந்தன. அதனால் தற்போது அவரையும் இவரையும் விரல் நீட்டிக்கொண்டிருக்காமல், தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். 

கே: இந்தளவுக்குப் பாரதூரமானதாக அமையுமென நினைக்கவில்லை என்று, இந்தத் தாக்குதல் பற்றி, பாதுகாப்புச் செயலாளர் கூறியிருந்தாரே... 

அவருக்கு துறைசார் அறிவு இல்லை என்பதே, இதனூடாக  வெளிப்பட்டுள்ளது. அவர் சிறந்த நிர்வாக அதிகாரி. நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்புச் செயலாளர் பதவிக்குப் பொருத்தமானவர்கள் எனப் பலரும் கருதுகின்றனர். நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாதபோதுதான், அவ்வாறான ஒருவரை நியமிப்பது பொருத்தமானது. 

கே: தற்போது இந்தப் பிரச்சினைக்கு, பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ் மா அதிபருமே பொறுப்புக்கூற வேண்டுமெனக் கூறப்படுகிறது. உண்மையில், அவர்கள் இருவருமா பொறுப்புக்கூற வேண்டும்? 

எங்காவது தாழ்வான இடத்துக்குத் தான், நீர் அடித்துச்செல்லும். அப்படித்தான் இந்தப் பிரச்சினையும் காணப்படுகிறது. இதற்குப் பலர் பொறுப்புகூற வேண்டும். இருப்பினும், பாதுகாப்பு பற்றிச் சிறிதும் அறியாத அமைச்சர்கள் சிலர், இதனை விளையாட்டாகப் பார்க்கின்றனர். அதனால், மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். 

கே: இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், பல இடங்களிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. இவை அண்மையில் கொண்டுவரப்பட்டவை அல்ல. நாட்டுக்குள் இந்த அளவு ஆயுதங்கள் எவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்தன? 

இவற்றின் பின்னணியில் பல முக்கிஸ்தர்களும் உள்ளனர்.  

கே: ஆம், அரசியல்வாதிகளின் பெயர்களும் கூறப்படுகின்றன? 

நாட்டில் பெருமளவிலான வியாபாரங்கள் உள்ளன. இவற்றின் பின்னணியில், முக்கிஸ்தர்கள் பலரும் உள்ளனர். சகலர் மீதும் விரல்நீட்ட விரும்பவில்லை. நல்லவர்களும் மௌனம் சாதிப்பதுதான் இதில் உள்ள பிரதான பிரச்சினையாகக் காணப்படுகிறது. 

கே: சரத் பொன்சேகாவால் மாத்திரமே இந்தப் பிரச்சினையை நிவர்த்திக்க முடியுமெனப் பலரும் கூறுகின்றனரே...

அவர், யுத்த காலத்தில் பெரும் சேவையாற்றிய அதிகாரி. அரசியலுக்கு வந்தபின்னர், பலரையும் பகைத்துக்கொண்டுள்ளார்.  அதனால், அவரைக்கொண்டு மாத்திரம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. பாதுகாப்புச் சபையை முழுமையாக மாற்றவேண்டும்.  அவ்வாறாக அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட்டால், மற்றையவர்கள் தாமாகவே திருந்துவார்கள். 

கே: எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து நீங்கள் கலந்துரையாடி விடயங்கள் என்ன? 

நானும், இராணுவ தளபதிகளும், பொலிஸ் மா அதிபர்கள் 9 பேரும், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தோம். அவர், நாட்டின் தற்போதைய நிலவரம் பற்றிய அறிக்கை ஒன்றைக் கோரினார். அதைக் கையளித்தோம்.  

கே: மேற்படி பிரச்சினையுடன் தொடர்புபட்டவர்கள், சிவில் சமூகத்துடனும் நடமாடுகின்றனர். இவர்களை அறிவதற்கு எந்தளவு காலஅவகாசம் தேவைப்படும்? 

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, இலகுவான வழிமுறைகள் இல்லை.

கே: தற்போதைய விசாரணைகள் குறித்து நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?

ஓரளவு முன்னேற்றம் இருக்கிறது. விரைவில் சகலரும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த வேண்டும். பின்னர், தீர்வைத் தேடலாம். 1983 பிரச்சினையைக் கொண்டு, இதற்குத் தீர்வைப்பெற முடியும். தற்போது, சகலரும் ஒன்றுபட்டுள்ளனர். இது, எதிர்கால நலனுக்கான சிறந்த ஆரம்பமாகும்.

கே: இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளில் திருப்தியில்லை என, பேராயர் கூறுகிறார். 

திருப்தியடைய முடியாது. அது உண்மைதான். பாதுகாப்புச் செயற்பாடுகளைச் சரியாக செய்யாவிட்டால், பாதுகாப்புத் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் கலங்கம் ஏற்படும்.

கே: ஏதேனும் பதவிகளை ஏற்றுகொள்ள, அரசாங்கத்திலிருந்து உங்களுக்கு அ​ழைப்பு வந்ததா?

பல இடங்களில் அவ்வாறான பிரசாரங்களை நான் பார்த்துள்ளேன்.  ஆனால், அ​ழைப்புகள் எவையும் கிடைக்கவில்லை. 

கே: உங்களுக்கு அழைப்பு கிடைத்தால்?  

தற்போதைய நிலைமைகளுக்கமைய, நாட்டுக்காக ஏதேனும் செய்ய வாய்ப்பு கிடைத்தால், பின்வாங்காது முன்வருவேன்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .