2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

ஈரான் - இலங்கை உறவு ‘பொருளாதாரத்தையும் தாண்டிய ஒத்துழைப்பு’

Editorial   / 2018 ஜூன் 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தாஹா முஸம்மில், முஸ்தீன்

மத்திய கிழக்குக்கான முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் சபாநாயகரின் சர்வதேச விவகாரத்துக்கான தற்போதைய சிரேஷ்ட ஆலோசகருமான டொக்டர் ஹொசைன் அமீரப்துல்லாஹியான் உடன், சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு, மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களின் தொகுப்பு இங்கு வழங்கப்படுகிறது.

இலங்கை விஜயத்துக்கான நோக்கம்

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு, நீண்டகால சரித்திரத்திரத்தைக் கொண்டதாகும். அண்மைக்காலமாக இத்தொடர்பு கலை, கலாசார, பொருளாதார, இராஜதந்திர ரீதியாகவும் மேலும் பலமடைந்து வருகிறது. வணிக ரீதியிலும் தனியார் துறையினர், பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்கின்றனர். இன்னும் இதுபோன்ற வாய்ப்புகளைக் கண்டறிவதும் இவ்விஜயத்துக்கான நோக்கங்களில் ஒன்று. இலங்கையின் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கும், ஈரான் நிதியுதவி வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விஜயம், பொருளாதார இணக்கப்பாடுகளுக்குமப்பால், பரஸ்பர புரிதலையும் மேம்பட்ட ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொள்ளவும் உறுதிசெய்துகொள்ளவும், சிறந்த வாய்ப்பாகவும் அமையும்.
ஏனெனில் இலங்கை, பல விடயங்களை எதிர்பார்க்கிறது, இன்னும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றது, சிறந்த வாய்ப்புகளை பரஸ்பரம் உருவாக்கிக் கொள்ளவும் இன்னும் சில விடயங்களை இறுதிப்படுத்திக்கொள்ளவும் இந்த விஜயம் துணை செய்யும்.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலை

மத்திய கிழக்கின் தற்போதைய பிரச்சினைகளுக்கான மூல காரணம், ஐக்கிய அமெரிக்காவும் இஸ்‌ரேலும் என்பது, பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயம். பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இவர்கள் அவசியமின்றித் தலையிடுவதனாலேயே, மத்திய கிழக்கு இன்று கொந்தளிப்பு நிலையில் இருக்கிறது. அத்தகையதொரு கொந்தளிப்பு நிலை, அவர்களுக்கும் அவசியமாகவுள்ளது. அமெரிக்க சியோனிச அழுத்தங்கள், வெறுமனே மேலோட்டமாகப் பார்க்கமுடியாதவை.ஏனெனில் அதன் செயற்பாடுகளுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் பல விடயங்கள், மிகவும் ஆபத்தானவை.

சிரியாவில் இவர்களது திட்டம், படு பயங்கரமானது. உலகெங்குமுள்ள தீவிர எண்ணம் கொண்ட முஸ்லிம் இளைஞர்களை சிரியாவில் ஒன்று திரட்டி, அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவதே, இவர்களது நோக்கமாகும். அதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற தற்போதைய ஊடகம் தான், ஐ.எஸ்.ஐ.எஸ். இது போன்று, அவர்களுடைய தேவைக்கேற்ப பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை உருவாக்குவார்கள். அதன் மூலம் அவர்கள் அடைய நினைப்பதை அடைந்துகொள்ள முயல்வார்கள். ஆப்கானிஸ்தானில் இவர்கள் செய்துவரும் அதே செயன்முறைதான் இங்கும் செய்யப்படுகின்றது. இவர்களது சதிவலையில், சவூதி அரேபியாவும் சிக்கியுள்ளமை துரதிர்ஷ்டமாகும். 

இந்த சியோனிஸ்ட்டுகளின் நோக்கம், சிரியாவுடன் நின்றுவிடப்போவதில்லை. எதிர்காலத்தில் அது சவூதியிலும் பாதகமான பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம், இவர்களுக்கு எத்தனையோ முறை எடுத்துக்கூறியுள்ளோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நான், நேரடியாக, மிகத் தெளிவாக அதைப் பற்றி அறிவுறுத்தியிருக்கின்றேன். ஏனோ தெரியவில்லை, அவர்கள் ஒருவித முரட்டுப் பிடிவாதத்துடன் இருக்கின்றனர். ஆயினும் சவூதி அரேபியாவை எப்போதும் நாம், எமது சகோதர முஸ்லிம் நாடாகவே கருதுகிறோம். அதற்குப் பாதகம் ஏற்படுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை.

யேமன் விவகாரத்திலும் நாம், அவர்களுக்கு ஆலோசனை வழங்கினோம். ‘யேமனின் உள்நாட்டுப் பிரச்சினையில் நாம் தலையிட வேண்டியதில்லை, அவர்கள் அதனை தீர்த்துக்கொள்ள விடுங்கள்’ என்று எடுத்துக்கூறினோம். அரசியல் முரண்பாடுகளை ஒரு போதும் இராணுவ நடவடிக்கையால் தீர்த்து வைக்க முடியாது என்றும், இராணுவ நடவடிக்கை அதற்குத் தீர்வாகாது என்றும் மிகவும் வலியுறுத்தினோம். எமது ஆலோசனையிலோ பேச்சிலோ அவர்கள் கரிசனை கொள்ளவில்லை. மாறாகக் கோபப்பட்டார்கள், ‘அரபுக்கள் விடயத்தில் நீங்கள் ஏன் தலையிடுகின்றீர்கள்?’ என்ற அடிப்படையில் பகிரங்கமாக மிகக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, ‘நீங்கள், பெருந்தவறொன்றைச் செய்யப் போகின்றீர்கள்’ என்று முன்கூட்டியே எச்சரித்தோம். அதைக் கூட கண்டுகொள்ளாமல் அதற்கு அவர்கள் அளித்த பதில், ‘மூன்று வாரங்களில் நாம் பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டிவிடுவோம்’ என்பதுதான். பின்னர் இராணுவ ரீதியிலான தாக்குதல்களை ஆரம்பித்தார்கள் ஆனால் இன்று என்ன நடந்துகொண்டிருக்கின்றது? இப்போது மூன்றாண்டுகளாகிவிட்டன, எந்த முடிவையும் இதுவரை காணவில்லை.

எகிப்து ஒரு முஸ்லிம் நாடு. அத்துடன் எமக்கு மிகவும் முக்கியமான நாடும் கூட. அதனுடன் நாம் நெருங்கிய உறவைப் பேணவே விரும்புகிறோம். எகிப்திய மக்கள், உணர்வுபூர்வமாக எம்மை விரும்புவோராக இருக்கின்றனர். இப்போதுள்ள அரசாங்கம், மக்கள் மனம் வைத்துத் தேர்வு செய்தது அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். அதனால், வலுவான உறவு தற்போதைய நிலையில் இல்லை. ஆனால் ஜனாதிபதியாக முர்சி இருந்த காலத்தில், மிக நெருக்கமான உறவு பேணப்பட்டிருந்தது. பலஸ்தீன விவகாரத்தில் எமது நிலைப்பாட்டை அவர்களை மிகவும் மதிக்கின்றனர். 

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர், எகிப்தில் அவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தக்க வைத்துக் கொள்வதில் முர்சி, மூன்று முக்கியமான பிழைகளை விட்டார். அனைத்து அரசியற் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு செயற்பட வேண்டிய தருணம் அப்போது இருந்தது, முரண்பாடுகளுக்கு அப்பால் அதைச் சாத்தியப்படுத்தவேண்டிய அவசியம் இருந்தது, அதைத் தவறவிட்டார், அடுத்தது, கிடைத்தவாய்ப்பை இஹ்வான்கள் ஊடாகவே பயன்படுத்தத் தலைப்பட்டார். அது, அவருக்கான ஒத்துழைப்பு மையங்களை உருவாக்கத் தவறிவிட்டது. எதிப்தில், ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்த முன்னர், பலரைத் திருப்திப்படுத்த எடுத்த முயற்சிகள், இறுதியில் அவருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டன. இந்தத் திருப்திப்படுத்த முனைந்த முயற்சிகளை, எதிரிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

அதன்விளைவுகளை நாம் பார்த்தோம். பல கட்டங்களில் நான், நேரடியாகச் சந்தித்து இது குறித்து எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். ஏனெனில் அங்கு ஒரு புரட்சி வெற்றிபெற்றிருந்தது. மாணவர்கள் பெரிதும் பங்கெடுத்திருந்தார்கள். புரட்சி பல மாற்றங்களை உருவாக்கிவிட்டது. அது பல்வேறு புதிய செய்திகளை முஸ்லிம் உலகுக்குச் சொன்னது. முர்சி ஆட்சிபீடமேறியபோது, மிக முக்கியமான ஓர் அம்சமாக விளங்கியது, நீண்ட காலத்துக்குப் பின்னர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியாக அவர் இருந்தமைதான். 

ஈரானில் புரட்சி வெற்றிபெற்றபோது நான் சிறியவன், பத்திரிகைகள், சில படங்களைப் பிரசுரித்து, ‘இஸ்லாத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்’ என்று எழுதியிருந்தன. இமாம் கொமெய்னி கீழ்மட்டக் கட்டமைப்பில் அதிகம் கவனஞ்செலுத்தியிருந்தார். முர்சி ஆட்சீபீடமேறியதும் நான், கெய்ரோவுக்கு விஜயம் செய்தேன். பல்வேறு விடயங்கள் குறித்தும் உரையாடியிருந்தேன். ஆயினும் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இந்தப் புரட்சிக்கு உரமூட்டினார்கள் என்பதற்கு அப்பால், அந்தப் புரட்சியை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனமை, கவலையான விடயமாகும். மாணவர்களைக் கட்டமைப்பது என்ற விடயத்தில், புதிய சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாம் அதை மிக வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பில், பல்வேறு கட்டங்களாகச் செயற்படுத்துகின்றோம். அவர்களை எதிர்காலத்துக்காக வலுப்படுத்துகின்றோம். ஆனால் எகிப்து இப்போது, பிர்அவ்னிய பாதையை நோக்கி நகர்வது போன்றுதான் தென்படுகின்றது. அல்பராதி போன்றவர்களே, அதனை வகுக்கப் போதுமானவர்கள்.

பலஸ்தீனம், பலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஹிஸ்புல்லாஹ், ஹாமாஸ் போன்ற இயக்கங்களுக்கான எமது ஆதரவு, இதனடிப்படையிலேயே ஆகும். பலஸ்தீனம், இஸ்‌ரேலுக்கு தாரைவார்க்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. இதுவே எமது நிலைப்பாடு. இஸ்‌ரேலை எதிர்கொள்வதில் ஹிஸ்புல்லாஹ் காட்டும் வெளிப்படைத் தன்மைக்கு, எமது உதவிகள் நிச்சயம் அதற்கு அவசியமானவை. அது, பலஸ்தீனத்தின் பாதுகாப்புக்கும் துணைசெய்யத் தக்கது. ஹிஸ்புல்லாஹ் அமைப்பு, ஐ.அமெரிக்க இஸ்‌ரேலிய அடைவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகுந்த சவாலை வெளிப்படுத்துகின்றமையால், அதன் ஸ்திரப்பாட்டுக்கு நாம் உதவுவது, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு வலுச் சேர்க்கும் நிமித்தமாகவே இருக்கும். 

துருக்கி எமது சகோதர நாடு என்பதன் காரணமாக, நாம் அதனுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றோம். முக்கியமான இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளில் நாம் இருந்தாலும், எமக்கிடையேயான உறவு காத்திரமாக இருக்கின்றது. அதாவது இஸ்‌ரேல் எதிர்ப்பு மற்றும் அதனுடான உறவுகள் குறித்த கொள்கை, மற்றது சிரியா பற்றிய நிலைப்பாடு. சிரியா தொடர்பான அவர்களது நிலைப்பாட்டில், இன்னும் தெளிவில்லாத ஒருவித மயக்க நிலையே காணப்படுகிறது. இருந்தும், துருக்கியுடன் பல துறைகளில் வலுவான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம். குறிப்பாக, பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் மேம்பட்ட இணக்கமான போக்குகளுடன் கூடியது. 

மேலும், பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுடனும் நாம், சகோதரத்துவ ரீதியில் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகின்றோம். எம்மத்தியில், ஏதாவது பிரச்சினைகள் இருப்பின், அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்பது எமது நம்பிக்கை. வெளிநாட்டுத் தலையீடுகளை நாம் அறவே வெறுக்கின்றோம். குறிப்பாக சிரிய, ஈராக்கிய விடயத்தில், ஐ.அமெரிக்க இஸ்‌ரேலிய நலன்களைத் தவிர்த்து துருக்கி, சவூதிஅரேபியா, ஈரான் ஆகிய மூன்றும் ஒருமித்த நிலைப்பாடுகளுடன் இருப்பது, பிராந்திய ஸ்திரப்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று நாம் கருதுகின்றோம். யேமன் விடயத்தில் பின்பற்றப்படுகின்ற போக்குகள் போன்றதல்ல. அங்கு தினமும் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. அண்மையில், ஒரே பாடசாலை 12 முறை தாக்கப்பட்டது. சவூதி அரேபியா நினைத்தால், பிராந்தியத்தில் விதைக்கப்படும் பயங்கரவாத வேர்களை அடியோடு அழித்து விடமுடியும். சவூதியின் உளவுத்துறைக்கு அது நன்கு தெரியும். அதற்கான வரைவுகளை ஈரான் தயாரித்திருந்தது, துருக்கியுடன் இணைந்து அதைச் சாத்தியப்படுத்தலாம். சிரியாவை வீழ்த்துவதற்குப் போடப்பட்டுள்ள மிக மோசமான பயங்கரவாதத்தின் அடிப்படையிலான திட்டத்தை, நாம் இணைந்து இலகுவாக முறியடிக்க முடியும். ரஷ்யாவுடன் நாம் பேசுவதற்கு ஒரு நாளைக்கு முன்னால், மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ரஷ்யப் பிரதிநிதியை சவூதி சந்தித்தது. ஆனால் பிரச்சினையை வேறு மாதிரிக் கையாளவே சவூதி விரும்புகின்றது. 

துருக்கியை மையப்படுத்தி நகர்த்தத் திட்டமிட்டிருந்த எல்லா விடயங்களையும் நாம் அறிவோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள துருக்கி முனைந்திருக்கும் நிலையில், சிரியாவை வீழ்த்துவதற்குப் போடப்பட்டுள்ள பயங்கரத் திட்டங்களின் பின்னால் உள்ள அழிவுகளைப் புரிந்துகொண்டபடி, அடுத்த கட்டம் நோக்கி நகரவேண்டும். உருவாக்கப்படுகின்ற உலகப் பயங்கரவாதம், துருக்கியைக் கபளீகரம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான வரைவை நாம், துருக்கியோடும் சவூதியோடும் இணைந்து மேற்கொள்வதற்காக முன்வைத்தோம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் சவூதி இருக்கவில்லை. ஐ.அமெரிக்க - இஸ்‌ரேல் படைவளத்தில் தங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை. இது இன்னும் சிக்கலான கருதுகோள்களுக்கு இட்டுச் செல்கின்றது. பிராந்தியத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை, நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

இப்போது சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஈரானியத் துருப்புகள் அங்கு பிரச்சினை முடியும்வரை இருக்கும். அங்கு நிரந்தரமான முகாமை அமைத்துக் கொள்ளும் எண்ணம், ஒருபோதும் எமக்கில்லை. சிரியாவுக்கு எதிராகத் திட்டமிட்டு நகர்த்தப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்த வழிமுறை மிகவும் அவசியமானதாகத் தெரிகின்றது.

ஈரானின் தற்போதைய நிலை

ஈரான், பல தசாப்தங்களாகவே மேற்குலகப் பொருளாதாரத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு நாடு. இதனால் எமக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டபோதும், அதனை நாம் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டோம். இந்தத் தடைகள் எமக்கு மறைமுக அருளாகவே அமைந்தது எனலாம். எமது தேவைகளை நாமே அடைந்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம். 

இப்போது நாம் இராணுவத் துறையில், பிறர் எம்மீது கைவைக்கப் பயப்படும் அளவுக்கு, வளர்ச்சியடைந்துள்ளோம். மருத்துவத்துறையில் 90 சதவீதம் தன்னிறைவடைந்துள்ளோம். கடந்த காலங்களில் ஈரான், செய்மதிகளை விண்ணுக்கு ஏவியதை அறிந்திருப்பீர்கள். இன்னும் ஒரு சில ஆண்டுகளில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

அணுவாராய்ச்சித் துறையிலும் நாம் பாரிய வளர்ச்சி கண்டுள்ளோம். எமது விஞ்ஞானிகளில் அநேகரின் சராசரி வயது 27 என்று கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஆக அதிமானவர்கள் இளம் விஞ்ஞானிகள் என்று வைத்துக் கொள்வோமே. எமது இளைஞர்களை, இத்தகையதொரு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு வலுப்படுத்தி நகர்த்துவதில் நாம் வெற்றி கண்டிருக்கின்றோம். 

முப்பது வருடங்களுக்கு முன் ஒரு இலட்சமாக இருந்த பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை, இன்று 45 இலட்சமாக உள்ளது. உலகின் பல பாகங்களில் இருந்தும், உயர் கல்விக்காக, ஈரானிய பல்கலைக்கழகங்களை நாடிவருவோரின் எண்ணிக்கையும், கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 

எமது விஞ்ஞானத் தொழிநுட்பக் கட்டமைப்பு, மிகவும் வலுவாகவே உள்ளது. நீங்கள் ஈரானுக்கு வந்தால், அவற்றைக் கண்டு கொள்ள முடியும். ஏனெனில், எதிர்கால விஞ்ஞான தொழிநுட்ப மேம்பாடு என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது, இளைஞர்களை மையப்படுத்தி நகரக்கூடியது. அதை நாம், தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கின்றோம். இந்தச் செய்தியைச் சுமந்துகொண்டு, அநேகமான முஸ்லிம் நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன். 

ஆறு நாடுகள் ஒருபக்கம் நின்று, எமது அணுச் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கையில், நாம் தனியாக நின்று, ஒற்றையாக இருந்து அவற்றை எதிர்கொண்டோம். நேர்பட்ட வழியில் எமது மாணவர்களைத் தயார்படுத்த எமக்கு நன்கு தெரியும் என்பதை, அல்பராதி போன்றவர்களுக்குப் புரிய வைத்திருக்கின்றோம்.

எமது விடயத்தில் எதிரிகளின் பிரசாரம், நிச்சயம் வெற்றியளிக்கப் போவதில்லை. எமது அரசியல் அத்திபாரம், மிகவும் பலமாகவும் தெளிவானதாகவும் இருக்கின்றது. அதனால் ஆட்டங்காணச் செய்வது மிகவும் கடினமானது. பொருளாதாரத் தடைகள் இன்னுமின்னும் எம்மை மேம்பட்ட நிலைக்கே இட்டுச் செல்லும் என்ற அளவுக்கு, அதை எதிர்கொள்ள எம்மால் முடியும். இதைத்தான் ஐ.அமெரிக்க இஸ்‌ரேலிய நலன்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதையும், நாம் தெளிவாகவே விளங்கியிருக்கின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X