2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈரான் - ரஷ்ய உறவுநிலை: வலுவிழக்கக்கூடிய இஸ்‌ரேலின் மாற்றுக்கொள்கை

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜனகன் முத்துக்குமார்

இஸ்‌ரேலின் மூலோபாயக் கொள்கையின் முக்கியத்துவங்களில் ஒன்றாக, சிரியாவிலிருந்து ஈரானை விரட்டுதல், அதற்கு ரஷ்யாவுடன் ஒத்துப்போகவும் இஸ்‌ரேல் தயாராக உள்ள நிலைமை பற்றி, கடந்த பத்தியில் இப்பத்தியாளர் ஆராய்ந்திருந்திருந்தார். அக்கொள்கை என்ற நாணயத்தின் மறுபக்கமே, ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுநிலை. குறித்த உறவுநிலை பற்றி ஆராய்தல், இவ்விடத்தில் அவசியமானது. ஏனெனில், குறித்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுநிலையின் பரிமாணங்களை விளங்கிக்கொள்ளாது, இஸ்‌ரேலின் மூலோபாய நகர்வை, அதன் முக்கியத்துவத்தை மதிப்பிடுதல் கடினமானது.

உண்மையில், ரஷ்ய - ஈரானிய ஒத்துழைப்புக்கான ஓர் அடையாளமாகவே சிரியா இருக்கிறது. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான ஒரேயொரு நிகழ்ச்சிநிரலாக இது இல்லை. மொஸ்கோவும் தெஹ்ரானும், ஆண்டுதோறும் வெற்றிகரமாக ஒத்துழைத்துள்ள ஏனைய பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. அவை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்க நிலைமைகளை வெளிப்படையாகவே காட்டவல்லன. தென் காகசஸ் (கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகியன இணையும் பகுதி), பொருளாதார ஆற்றல் நிறைந்த காஸ்பியன் கடலில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் கூட்டாண்மை ஆகியன, வளர்ந்து வரும் நட்பு நிலைக்கு, நல்லதோர் எடுத்துக்காட்டாகும். 1990களுக்கு பின்னரான சர்வதேச அரசியலில், மேற்குறித்த கூட்டாண்மை யூரேசியா முழுவதும் “புவிசார் அரசியல் குழப்பங்களை” நோக்கிச் செல்வாக்கு செலுத்துவதுடன், அங்கு ரஷ்யா, ஈரான், இன்னபிற பிராந்திய சக்திகள், ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்கொள்ள, இன்னும் நெருக்கமாக உழைக்கின்றமை வெளிப்படையானதாகும்.

ஈரானும் ரஷ்யாவும் வரலாற்று ரீதியாக ஒன்றுக்கொன்று புவிசார் அரசியல் அபிலாசைகளைப் நிறைவேற்றுவது தொடர்பில், மிகவும் ஆக்கபூர்வமான தொடர்புகளையே கைக்கொண்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டில், தெற்கு காகசஸ்; 20ஆம் நூற்றாண்டில் வடக்கு ஈரானில் ஏற்பட்ட போரியல்கள் ஆகியன, இரு சக்திகளுக்கும் இடையேயான ஆழமான ஒத்துழைப்பைத் திடப்படுத்தியிருந்தன. ஆயினும், 2011இல் இருந்து சிரியாவில் நடந்த விடயங்கள், மொஸ்கோவினதும் தெஹ்ரானினதும் மீதான ஐ.அமெரிக்க அழுத்தம் போன்றன, இரு நாடுகளும் இன்னும் கூடுதலாக இணைந்து செயற்படுவதற்குச் சூழ்நிலைகளை அதிகரித்திருந்தன.

ரஷ்யாவும் ஈரானும், மேற்கத்தேய நாடுகளின் (முதன்மையாக அமெரிக்காவின்) செல்வாக்கைச் சிரியாவில் வலுவிழக்கச்செய்வதில் மிகவும் முன்னிற்கின்றன. இருப்பினும், இந்த ஆழமான ஒத்துழைப்பு, மொஸ்கோ - தெஹ்ரன் புவிசார் அரசியலுக்கு ஓர் அடையாளமாக மாறியது. ஆதலால் அது, ஈரானிய - ரஷ்ய உறவுகளில் வரலாற்று ரீதியான தெற்கு காகசஸ், காஸ்பியன் கடலில் ஆழமான கூட்டுநடவடிக்கை போன்ற, நீண்டகாலத் தொடர்புகளை சர்வதேச அரசாங்கங்கள் அக்கறை எடுப்பது தொடர்பான கண்மட்ட ஆராய்வுகளில் இருந்து மறைத்துவிடுகின்றது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் அடிப்படை, ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான வடக்கு - தெற்கு நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஆகும். இது, அஜர்பஜானைக் கடந்து செல்கின்றது. அந்நிலை, ஏற்கனவே மூன்று நாடுகளும் ரயில் இணைப்புகள் மூலம் இணைக்கப்படக் காரணமாக அமைவதுடன், ரஷ்ய பால்டிக் துறைமுகங்களும் பாரசீக வளைகுடாவும், திறமையான இணைப்புகளை ஒரு நாள் அனுபவிக்க முடியும் என்ற கருத்து, இம்மூன்று நாடுகளுக்கும் கூட்டாக உள்ளமை, இம்மூன்று நாடுகளையும் அரசியல் நட்பு நாடுகளாக்குகின்றன. தெற்கு காகசஸில் வடக்கு - தெற்கு வர்த்தக முன்னேற்றத்தைத் தத்தமது நாடுகளின் பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளில் முக்கியதோர் அங்கமாக அஜர்பஜான், தெஹ்ரான், மொஸ்கோ ஆகியன பார்க்கின்றன. மேற்கத்தேய நாடுகள் தலைமையிலான உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தடுக்க, அஜர்பஜானுடன் இணைந்து இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. மேலும் இவை, சீனாவால் ஆதரிக்கப்படும் மேற்கு - கிழக்கு சாலை முயற்சிகளை எதிர்த்து நிற்கின்றன. இது தவிர குறித்த பிராந்தியத்தில், குறிப்பாக ஜோர்ஜியாவில், எந்தவொரு வெளிநாட்டு இராணுவப் பிரசன்னத்தையும் தவிர்க்க ஈரானும் ரஷ்யாவும், பொதுவான நலன்களைக் கொண்டுள்ளமை வெளிப்படையானதே.

ஈரானின் பார்வையூடாக நோக்கின், துருக்கி, ஜோர்ஜியா, அஜர்பைஜான் ஆகியவற்றுக்கிடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பு, ஈரானின் பிராந்திய வல்லரசாகும் நோக்கில் சிக்கலை உருவாக்கும். மறுபுறத்தில், நேட்டோவின் விரிவாக்கத்தில் பிரதானமாக ஜோர்ஜியா இணைவதானது, ரஷ்யாவுக்கு நெருக்கடியைத் தரவல்லது. இவ்விரு சிந்தனைகளும், அச்சிந்தனைகளின் மீதான செல்வாக்கின்மீது தொடர்ச்சியான இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று இணங்கிப்போவதற்கு, இரு நாடுகளும் ஒத்துழைக்கின்றன. குறித்த பிராந்தியத்தில், துருக்கியின் செல்வாக்கு பொருளாதார ரீதியில் தொடர்ச்சியாக இருந்தாலும், ரஷ்யர்கள் இப்பகுதியில் இராணுவ இருப்பைப் பொறுத்தவரையில், துருக்கியர்களைவிட அதிக மேலாதிக்கம் செலுத்துகின்றனர். உண்மை என்னவென்றால், அஜர்பஜான் - ஈரானிய உறவுகளில் நேர்மறை வளர்ச்சிகள் உள்ளன. ஆனால் இன்னும், அங்காரா, பாகுவுடன் நல்ல உறவுகளை அனுபவித்து, நிக்கோரோ - கராக்பாக் (Nagorno - Karabakh) மோதலை ஊக்கப்படுத்தி ஆதரிக்கிறது. அது ஈரான், ரஷ்ய வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு முரணானது.

இவ்வாறான சர்வதேச அரசியல் நகர்வுகள் மத்தியிலேயே, ஈரான் - ரஷ்ய உறவானது தொடர்ச்சியாகவே வலுப்பெற்று உள்ளமை பார்க்கப்படவேண்டியதாகும். இந்நிலையிலேயே, இஸ்‌ரேல் தனது பாதுகாப்புக்காக, சிரியாவில் இருந்து ஈரானை விரட்ட ரஷ்யாவுடன் உடன்படத் தயாராக உள்ளபோதிலும், அதற்கு ரஷ்யா - ஈரான் கூட்டணி எவ்வாறாக பதிலளிக்கும், அல்லது ரஷ்யா இஸ்‌ரேலின் குறித்த புதிய சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கத் தலைப்படுமோ என்பது ஒரு சிக்கலான அரசியல் நகர்வுகளாகவே இருக்கப்போகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .