2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலக ஒழுங்கு: தீர்மானிப்பவர்கள் யார்?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2018 ஜூன் 21 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அலுவல்கள் இயல்பாக நடப்பது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால், அனைத்தும் இயல்பாக நடப்பதில்லை.   

இன்னொரு வகையில் சொல்வதானால், உலகின் முக்கிய மாற்றங்கள் எவையும் இயற்கையானவையும் இயல்பானவையுமல்ல.   

உலக அலுவல்களைத் தீர்மானிப்போர் உளர். அவர்களின், செல்வாக்கு எல்லைகள் குறித்த, தெளிவான முடிவுகள் எவையும் கிடையாது. ஆனால் போர்கள், தேர்தல்கள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துவோர் இத்தரணியில் உண்டு.   

அவர்கள் பற்றி, நாம் அறிந்திருப்பது இல்லை. நாம் எல்லாம் இயற்கையாகவே நடக்கின்றன என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம், அவ்வளவே.

கடந்த வாரம், இரண்டு நிகழ்வுகள் பலரது கவனத்தைப் பெறாமல், கடந்து போயுள்ளன. இரண்டுமே முக்கியமான விடயங்கள் என்பதாலும், கவனம் பெறுதல் நல்லதல்ல என்பதாலும், அவை ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டன; செய்யப்படுகின்றன.   இதனால், இவ்வாறு முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகளை, எதுவித கவனமும் குவியா வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது.   

முதலாவது நிகழ்வு, கனடாவின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி-7 மாநாடு ஆகும். அம்மாநாடு, முதன்முறையாக எந்தவோர் உடன்படிக்கையும் எட்டப்படாமல், அதேவேளை கூட்டறிக்கை வெளியிடப்படாமலே முடிவடைந்துள்ளது.   

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அம்மாநாட்டில் நடைபெற்றவை, அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் தீவிரத்தை வெளிப்படையாகக் காட்டி நின்றன.   

உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள ஏழு நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட இக்குழுவுக்கு இடையேயான முறுகல் நிலையும் தீர்க்க முடியாத முரண்பாடுகளும் உலக ஒழுங்கு தொடர்பான வினாக்களைத் தோற்றுவித்துள்ளன.   

இரண்டாவது, உலகின் மிகவும் இரகசியமான குழுக்களில் ஒன்றான ‘பில்டர்பேர்க் குழு’ (Bilderberg Group) தனது வருடாந்தக் கூட்டத்தில் என்ன விடயங்களைப் பேசியது என்பதை, புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவர் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளார்.   

இது, இக்குழு தொடர்பான புதிய வினாக்களை எழுப்பியுள்ளதோடு, உலக அலுவல்களில் இக்குழுவின் செல்வாக்குத் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது.  

ஜி-7 திமிங்கிலங்கள்  

ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், கனடா, அமெரிக்கா ஆகிய உலகின் ஏழு அபிவிருத்தியடைந்த, பெரும் பொருளாதாரங்களின் கூட்டானது, 1975ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாகக் கூடி வருகின்றன.   

அமெரிக்கா மைய உலக ஒழுங்கின் தளகர்த்தாக்களான இக்குழுவானது, உலக அலுவல்களின் தீர்மானகரமான சக்தியாக இருந்து வந்துள்ளது. 

ஆனால், இம்முறை மாநாட்டின் போதும் அதன் பின்னரும், அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் தங்களுக்கிடையே வெளிப்படையாக முரண்பட்டுக் கொண்டதோடு, குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளன.  

இம்மாநாட்டை அடுத்து, முன்னொருபோதும் இல்லாதளவில் கசப்புணர்வுகளும் பிளவுகளும் பின்தொடர்கின்றன.   

இது, இரண்டாம் உலக போருக்குப் பின்னர், அமெரிக்கா கட்டமைத்த பொருளாதார ஒழுங்கமைப்பில், அடிப்படையான மற்றும் சீர்படுத்தப்பட முடியாத முறிவையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், உலக முதலாளித்துவம் கணக்கிட முடியாத பாதக விளைவுகளோடு, ஓர் உலகளாவிய வர்த்தகப் போருக்குள் மூழ்கி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.  

பதற்றங்கள் மற்றும் பெரும்பாலும் கசப்பான விவாதங்களை அடுத்து, அமெரிக்காவுக்கும் ஏனைய ஜி-7 நாடுகளுக்கும் இடையே ஆழமடைந்து வரும் பிளவை மூடிமறைக்க, எழுதப்பட்டிருந்த ஜி-7 அறிக்கையை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.   

ட்ரம்ப் வழி, தனி வழி  

மாநாட்டுக்குத் தாமதமாக வந்த ட்ரம்ப், காலநிலை மாற்றம் மீதான அமர்வில் பங்குபற்றுவதில் இருந்து தவிர்த்துக் கொண்டார்.   

இதன்மூலம், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில், அமெரிக்கா அக்கறை கொள்ளாது என்ற செய்தியை இன்னொருமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.   

உலகம் எதிர்நோக்கியுள்ள காலநிலை மாற்றத்துக்கு, முக்கிய காரணகர்த்தாக்களாகிய இந்த ஏழு நாடுகளும், போலியாகவேனும் காலநிலை மாற்றம் தொடர்பில், அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டமுனையும் நிலையில், அமெரிக்கா வெளிப்படையாகவே, அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.   

அதேவேளை, இம்முறை மாநாட்டில், ட்ரம்ப் முழுமையாகக் கலந்து கொள்ளவில்லை. மாநாடு முடியும் முன்னதாகவே, புறப்பட்டுச் சென்று விட்டார்.   

மாநாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தி, கனடா மற்றும், ஏனைய ஐரோப்பிய உறுப்பு நாடுகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், “ஜி-7 இல் உள்ள ஏனைய நாடுகள், அமெரிக்காவை ‘கொள்ளையிடுவதற்கான ஒரு வங்கிக் கருவூலம்’ போல, கையாளுகின்றன” என்றார்.  

ட்ரம்பின் இக்கருத்துகள், ஏனைய ஜி-7 தலைவர்களை எரிச்சலூட்டின. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், “ட்ரம்பின் கருத்துகள் வருத்தமளிக்கின்றன” என்று விளித்து, “நாம் ஐரோப்பியர்களாக, நம் தலைவிதியை, நமது கரங்களில் எடுத்தாக வேண்டும்” என்ற அவர், அதிக சுதந்திரமான ஒரு ஜேர்மன்-ஐரோப்பிய இராணுவ வல்லரசுக் கொள்கைக்கான தேவையை முன்மொழிந்தார்.   

மேர்க்கெல், “இதை, அமெரிக்கா கவனித்துக் கொள்கிறது என்று, பல பத்தாண்டுகளாக நாம் ஏதோவிதத்தில் கவனக்குறைவாக இருந்ததைப் போல, இனியும் நம்பிக் கொண்டிருக்க முடியாது” என்றார்.   

ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவைப் பொறுத்த வரையில், முடியுமானளவில் கனடாவுடனும் ஜப்பானுடனும்  கூட்டணி சேர்ந்து, ஐரோப்பாவில் நமது கோட்பாடுகளையும் நமது மதிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும்; அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான பங்காண்மையை, இனியும் சார்ந்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன.   

மேர்க்கலின் கருத்துகள், இனியும் அமெரிக்காவைக் கூட்டாளியாகக் கொள்ளவியலாது என்பதையும் அமெரிக்காவில் தங்கியிராத, சுதந்திரமான ஒரு ஜேர்மன்-ஐரோப்பிய இராணுவக் கோட்பாட்டின் தேவையை, இனிமையான வகையில் எடுத்துரைக்கின்றன.   

ட்ரம்பின் வருகையைத் தொடர்ந்து, ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கை தீவிரத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்படும் காலமதில், அதற்கான பதிலாக, ‘ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முதலில்’ என்பதை ஜேர்மன்-ஐரோப்பிய பதிலாகக் கொள்ளவியலும்.  

இதில் கவனிப்புக்குரிய விடயம் யாதெனில், இன்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஈராக்குக்கு எதிரான சட்டவிரோதமான போருக்கான ஏற்பாடுகளை, அமெரிக்கா செய்து கொண்டிருந்த வேளை, அப்போதைய ஜேர்மன் சான்சிலர், ஹெகார்ட் ஷ்ரோடர், நிபந்தனையின்றி அமெரிக்காவை ஆதரிக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்து, ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கட்டுரையை, அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் எழுதியிருந்தார்.  

அக்கட்டுரையில், பின்வரும் வரிகளை, இப்போதைய நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ‘ஜேர்மனியைப் பொறுத்த வரையில், அமெரிக்காவுடன் பங்காளியாக இருப்பது அடிப்படையானது. இது ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல, அதேயளவுக்கு ஜேர்மன் கொள்கை வகுப்பின் ஓர் அடிப்படைக் கூறாகும். அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்குவது என்பது, கேள்விகளுக்கு அப்பாற்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.   

இன்று அதிலிருந்து தலைகீழான நிலைப்பாட்டுக்கு மேர்க்கலால் எப்படி வரமுடிந்தது; அதைச் சாத்தியமாக்கிய காரணிகள் எவை என்பது ஆராயத் தகுந்தவை.   

அமெரிக்கா எதிர் ஐரோப்பா   

 அமெரிக்க மக்களால் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல், அவரது ‘அமெரிக்கா முதலில்’ தேசியவாதப் பொருளாதாரக் கொள்கைக்கு உள்ள ஆதரவும், அதை மிகுந்த வலுவுடன் உந்தித் தள்ளும் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் வரை, அனைத்துமே தீவிரமடைந்துள்ள நெருக்கடியின் குறிகாட்டிகளே.   

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, சந்தைப் பொருளாதாரத்தை மையப்படுத்தி, உலகைக் கட்டுப்படுத்த முனைந்த அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கைகள், உலகமயமாக்கலின் உதவியுடன் முன்தள்ளப்பட்டு, உலகைத் தனது பொருளாதார வலுவால், அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.   

சோவியத் ஒன்றியத்துடனான கெடுபிடிப்போர் அதற்கு வாய்ப்பாகியது. சோவியத் ஒன்றியத்தின் மறைவைத் தொடர்ந்து, அமெரிக்கா உலகப் பொலிஸ்காரனாகியது.   

ஆனால், நிதிமூலதனத்தின் விரிவாக்கத்துக்குப் போர்கள் தேவைப்பட்டன. உலகெங்கும் அமெரிக்கா போர் தொடுத்தது. இவ்வளவும் செய்த பின்னரும், 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க இயலவில்லை. அதன் விளைவே இப்போதைய அமெரிக்க நிலைப்பாடு.   

அண்மையில், அமெரிக்கா விதித்த உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி வரிகள், ஐரோப்பா மற்றும் கனடாவுடன் நேரடியான வர்த்தகப் போருக்கான முதலடியாகும்.   

இது குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே பதற்றங்களைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதைப் பரந்த நோக்கில் சிந்தித்தால், முதலாளித்துவ அமைப்பு முறையின், ஓர் உலகளாவிய நெருக்கடியின் உச்ச நிலையில், அமெரிக்காவானது அதன் நெருக்கடியை, அதன் பிரதான போட்டியாளர்கள் மீது சுமத்தும் ஒரு முயற்சியாகும்.   

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இத்தகைய வர்த்தகப் போர் முறைகளைப் பயன்படுத்தி வருகிறது. 
இதே வகையான ஒரு நெருக்கடியை, அமெரிக்கா 1930களில் எதிர்கொண்டது. அதுதான் இரண்டாம் உலகப் போராகப் பரிமாணம் பெற்றது. அவ்வகையில் இன்னொரு நீண்ட கொடிய போருக்கான விதைகள் தூவப்படுகின்றன.   

இப்போது தோற்றம் பெற்றுள்ள இந்த வர்த்தகப் போர்கள், அமெரிக்காவின் மீயுயர் நிலையைத் தக்க வைப்பதற்கான மூலோபாயத்தின் பகுதியே ஆகும். உலக ஆதிக்கத்துக்கான மோதலானது ரஷ்யா, சீனா அல்லது ஐரோப்பிய சக்திகளையும் உள்ளடக்கிய, வல்லரசு மோதலாக அமையக்கூடும் என அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் கடந்தாண்டு இறுதியில் கூறியதை இங்கு நினைவுகூரல் தகும்.   

ஒருபுறம், அமெரிக்க ஜனாதிபதி முழு அளவிலான வர்த்தகப் போரொன்றைக் கட்டமைத்து வருகிறார்.  
மறுபுறம் ஜேர்மன் சான்சலர் மேர்க்கெல், இப்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து சுதந்திரமாக, ஜேர்மன்-பிரெஞ்சு தலைமையின் கீழ் ஐரோப்பா ஓர் இராணுவ பலம் வாய்ந்த அணியாக, ஸ்தாபிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்துகிறார்.   

இவை இரண்டும், தவிர்க்கவியலாமல் உலகை அமைதியின் பாதையில் எடுத்துச் செல்லவில்லை.   

‘பில்டர்பேர்க்’ குழு  

‘பில்டர்பேர்க்’ குழு என அழைக்கப்படுவது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர்தட்டு வர்க்கத்தினரின் பிரதிநிதிகளை, இரகசியமான உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழுவாகும்.   

உலகின் முக்கியமான அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பல்தேசியக் கம்பெனிகளின் தலைவர்கள், கல்வியியலாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழு இதுவாகும்.   

இவர்கள் ஆண்டுதோறும் கூடி, பல விடயங்களை விவாதிக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடியின் கொலையில் இவர்களுக்கு பங்கு உண்டு என்றொரு வாதம் முன்வைக்கப்படுவதுண்டு.   

 அதேவேளை, 1990ஆம் ஆண்டு, பில் கிளின்டன் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார். அப்போது, கிளின்டன் ஓர் இடைநிலை அரசியல்வாதி மட்டுமே. 1992ஆம் ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியானார்.   

இதேபோலவே, சாதாரண அரசியல்வாதியாக இருந்த மார்கிரட் தட்சர், பிரித்தானியப் பிரதமரானதில் இக்குழுவுக்குக் கணிசமான பங்குண்டு என்று சொல்லப்படுகிறது.   

 அதேவேளை, 1990களில் சாதாரண அரசியல்வாதியாக இருந்த டொனி பிளேயர், தொடர்ச்சியாக இக்குழுவினரால் அழைக்கப்பட்டார். 1997இல் பிளேயர் பிரித்தானியப் பிரதமரானார்.   

மேற்கு ஐரோப்பாவில் கொம்யூனிச அபாயம் அதிகரித்து வருவதை அவதானித்து, அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 1954இல் உருவாக்கப்பட்டதே, ‘பில்டர்பேர்க்’ குழுவாகும்.   

இதை முன்னின்று உருவாக்கியவர், நாடு கடந்து வாழ்ந்த போலந்து அரசியல்வாதியான ஜோசெப் ரைட்டிங்கர். இதற்கு உருக்கொடுத்தவர் நெதர்லாந்து இளவரசர் பேர்ன்கார்ட்.   

முதலாவது கூட்டம், நெதர்லாந்தில் உள்ள, பில்டர்பேர்க் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை கூட்டம், இத்தாலியின் டூரின் நகரில் நடைபெற்றது.   

இதற்குள் உள்நுழைந்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர், இங்கு உரையாடப்பட்ட விடயங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுள்ளார். 

மிகவும் இரகசியமாக நடைபெறும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் விடயங்களோ கலந்துரையாடப்பட்ட விடயங்களோ, வெளியே சொல்லப்படுவதில்லை.   

இக்குழுவே, உலக அலுவல்களைத் தீர்மானிக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. 

ஒருபுறம் அமெரிக்க- ஐரோப்பிய சண்டையானது இக்குழுவுக்குப் புதிய சவால்களை வழங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  

உலகை மறுபங்கீடு செய்யும் போட்டியின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .