2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘உள்ளத்தைக் கொட்டினார்; உள்ளதைக் கொட்டினார்’

காரை துர்க்கா   / 2018 ஜூலை 10 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள், தங்களது உயிரிலும் மேலாகப் போற்றித் துதிக்கும் கலாசாரம், பண்பாடு ஆகியவை, அவர்களது சொந்தப் பிரதேசங்களிலேயே என்றுமில்லாதவாறு, பெரும் சவால்களுக்கு ஆட்பட்டுள்ளன.  அன்றாடம் எண்ணிலடங்காத, பலவித சமூக விரோத செயற்பாடுகளுக்கு, முகம் கொடுத்து வருகின்றது.   

திடீர் சுற்றிவளைப்புகள், கைதுகள், சித்திரவதைகள் , வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், விமானக் குண்டு வீச்சுகள், எறிகணைத் தாக்குதல்கள், விழுப்புண்கள்,   மரணம், தொடர் இடப்பெயர்வுகள் என 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழர்களது வாழ்வு, இருள்மயமாகக் கழிந்தது.   

ஆனால், நாட்டில் தற்போது சமாதானம், சகவாழ்வு, நலவாழ்வு நல்லாட்சி மலர்ந்துள்ளது என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால், போரால் ஏற்படுத்தப்பட்ட பலவிதமான மனவடுக்களை, மனதில் சுமந்த வண்ணம் அல்லல்படுகின்றது தமிழர் சமூதாயம்.  போதிய ஆற்றுப்படுத்தல்கள் இன்றி, அனாதரவான நிலையில் உள்ளது.  

இது இவ்வாறிருக்க, பனையால் வீழ்ந்தவனை மாடு மிதித்தது போல, தற்போது தமிழர் பிரதேசங்களில், அதிகரித்த மதுப் பாவனை, போதைப் பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் வாள் வெட்டுக் கும்பல், திருட்டுக் கும்பல் எனத் தொடர்ந்து, விடாது துரத்தும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளால், திக்குமுக்காடிச் சிதைவுக்கு உட்படுகின்றது தமிழர் வாழ்வு. இதன் உச்சக்கட்டமாக,  உயிர் வாழ்தலே ஊசலாடுகின்றது.   

மொத்தத்தில், யுத்த காலத்திலும் யுத்தம் இல்லாத காலத்திலும் தமிழ் மக்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தோ(ற்றுவிக்கப்பட்டு)ன்றி உள்ளது.   

இவ்வாறான சமூகப் பிறழ்வுப் பிரச்சினைகள், புலிகள் காலத்தில் பூச்சியத்தை அண்மித்த நிலையில் அல்லது பூச்சிய நிலையில் காணப்பட்டது எனக் கூறலாம். இதை மய்யப்படுத்தியே, ‘புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்; அவர்கள் உருவானால், இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் போகும்’ எனச் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்தார்.  

நாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளைப் பின்தள்ளி, தற்போது இதுவே நாட்டின், பிரதான பேசுபொருள். அனைத்து மொழித் தினசரி செய்தித்தாள்களின் முக்கிய செய்தி.   

சரி, விஜயகலாவின் பேச்சு, வில்லங்கமான பேச்சு; விவகாரமான பேச்சு; விவரம் அறியாத பேச்சு, சிறுபிள்ளைத்தனமான பேச்சு; சிங்கள மக்களை உசுப்பேற்றும் பேச்சு என எவ்வாறாகவேனும் எடுத்துக் கொள்ளட்டும்.   

புலிகள் மௌனித்து பத்து ஆண்டுகள் கடந்தும், தமிழ்ச்சமூகத்திலுள்ள சாதாரண பொதுமகன் தொடக்கம், ஓர் இராஜாங்க அமைச்சர் வரை, புலிகள் தொடர்பில் ஏன் சிந்திக்கின்றனர் என, எந்தச் சிங்கள மகனும் இன்னமும் சிந்திக்கவில்லை.   

ஏன், புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது என்று கூடச் சிந்திக்கவில்லை. ஏனெனில், அவ்வாறு சிந்திக்க, பௌத்த சிங்கள கடும் போக்குவாதம் இம்மியளவும் இடமளிக்கவும் இல்லை.  

பலமடங்கு அதிகரித்த ஆட்பலத்தால், ஆயுத பலத்தால் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்தாலும், அவர்களது ஆன்மாவை அனுக முடியவில்லை. இனியும், அவ்வாறு அணுக முடியப்போவதில்லை என்பதையே  அண்மைய நிகழ்வுகள், ஆணித்தரமாகக் கட்டியம் கூறி நிற்கின்றன.   

உண்மையில், இவ்வாறு கூச்சல், குழப்பம் இட்டு, மற்றவரில் தவறுகளைக் கண்டுபிடிப்போர், தங்களது 70 ஆண்டுகாலத் தவறுகளை, மானசீகமாக ஒரு கணம் எண்ணியிருந்தால், ஆயுதப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்தும், சொற்போர் பிடிக்க வேண்டிய தேவையில்லை; மல்லுக்கட்ட வேண்டிய அவசியமில்லை.   

கடந்த மூன்று தசாப்த கொடிய யுத்தத்தின் காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெடிய மன உளைச்சலை, இம்மியளவும் பொருட்படுத்தாது, அதனது வேதனைகளைப் புரிந்துகொள்ள விளையாது, அதன் ஊடே தங்கள் அரசியல் விளைச்சலை முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களையே ஆட்சியாளர்கள்  தீட்டுகின்றனர்.    

தமிழ் மக்களையும் இந்த நாட்டின் சம பங்குதாரர்களாகக் கருதி, அவர்களையும் அணைத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்ல, கொழும்பு எப்பொழுதும் தயாரில்லை என்பதை மீண்டும் ஒரு முறை சிங்களம் தெளிவாக காண்பித்து உள்ளது.   

இதற்கிடையில், விஜயகலாவின் உரையைக் கொண்டு, ஒன்றிணைந்த எதிரணி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடிவுரை எழுத முயல்கின்றது. 

சிங்களப் பெருந்தேசியக் கட்சிகளுக்கு, சிங்களப் பௌத்த வாக்குகள் மிகவும் முக்கியமானவை; பொன்னானவை. அவற்றை இழப்பது, தம் அரசியல் வாழ்வை இழப்பதற்கு ஒப்பானது.   

அதனடிப்படையில், “ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமையைப் பாதுகாப்போம் போன்ற கொள்ளைகளின்  பிரகாரம் நாம் செயற்படுவோம்” என விஜயகலா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க தெளிவாகத் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம், சிங்களப் பௌத்தர்கள் அச்சப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அவர்கள் அச்சத்தையும் தனது அச்சத்தையும் நீக்கியுள்ளது.   

ஆகவே, ஒற்றையாட்சியில் சிங்கள தேசம் ஒற்றுமைப்பட்டு உள்ளது. எனவே, வரவுள்ள அரசமைப்பு ஒற்றையாட்சியை ஒட்டியதாவே அமையும் என எதிர்பார்க்கலாம். 

பழைய அரசமைப்பின் பிரதியே, புதிய ஒற்றையில் வரப்போகின்றது. இது தமிழ் மக்களின் வளர்ச்சியை ஓரம் கட்டும்; இருப்பை  ஒழித்துக் கட்டும்.   

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், “தமிழ் மக்களது, வலிக்கான நியாயமான நிவாரணியாக, அரசமைப்பு அமையும்” என நீண்ட காலமாகக் கூறி வருகின்றார். 

அரசியல் தீர்வு (அரசமைப்பு), அபிவிருத்தி என்பன வழமை போன்று, வெறும் கண் துடைப்பு நாடகங்கள் ஆகும்.   

அங்கே, தமிழ் மக்களது பாதுகாப்பு, தமிழ் மக்களது நிலத்தின், தமிழ் மொழியின், பொருளாதாரத்தின் பாதுகாப்பு என அவர்களது ஒட்டு மொத்த இருப்பின் பாதுகாப்பு என்பன தொக்கி நிற்கும் வினாக்கள் ஆகும்.  இந்நிலையில், விஜயகலா விவகாரம் பல படிப்பினைகளைத் தமிழ் மக்களுக்குத் தெளிவாக உறைக்கும் படியாக, உரத்து நிற்கின்றது. 

அண்ணளவாக, சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக, கணவன் - மனைவி என இருவரும் கடுமையான பல நெருக்குவாரங்களுக்கு மத்தியில், உயிரைப் பறிகொடுத்து, யாழ்ப்பாணத்தில் கட்டி வளர்த்த கட்சியால், அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் நன்மைகள் கிட்டவில்லை.   

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக வீற்றிருந்தும், தமிழர் பிரதேசங்களில் வீழ்ந்திருக்கும் சிறுவர், பெண்கள் விகார விவகாரங்களைத் தூக்கி நிமிர்த்த முடியாமல் போய் விட்டது. அதன் குற்ற உணர்வே, கையறு நிலையே அவரின் பேச்சு.   

கொழும்பின் மனது சற்றேனும் நோகாது, அடக்கம் ஒடுக்கமாகப் பவ்வியமாக அவர்களுக்குச் சேவகம் செய்தால், பல பட்டங்கள், பதவிகள் காலடி தேடி வரும். 

அதனை விடுத்து, தமிழ் மக்களது நியாயப்பாடுகளுக்காகக் குரல் கொடுத்தால், அவர்களது காலடி பதம் பார்க்கும். இதுவே, பலருக்கும் நடந்தது; கடைசியாக விஜயகலாவுக்கும் நடந்துள்ளது.    

பல ஆயிரக்கணக்கில் முப்படையினர் ஏப்பமிட்ட தமிழ் மக்களது விவசாய நிலங்களையும் அடாத்தாக படை ஆசிர்வாத்துடன் சிங்கள விவசாயிகளால் கடந்த காலங்களில் பறித்தெடுத்த தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் குறித்த விவகாரத்தை அரசாங்கத்தின் முன் கொண்டுசென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க நியாயம் கேட்க, தேசியப் பட்டியல் மூலமாக, மத்திய அரசாங்கத்தின் பிரதி விவசாய அமைச்சராக இருக்கும் அங்கஜன் இராமநாதனால் முடியுமா?   

தொல்பொருள்,  வனபரிபாலன திணைக்களங்களால் பல்வேறு வழிகளிலும் விழுங்கப்படும் தமிழ் மக்களது காணிகளைத் தடுக்து நிறுத்த முடியுமா? மீட்டுக் கொடுக்க முடியுமா? இந்நிலையில், தமிழ் மக்களுக்கு, சிங்களப் பெருந் தேசியக் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைப்பது என்பது தொடுவானம் போன்றதாகவே  உள்ளது.   

ஆகவே, ஈழத்தமிழ் இனம், தனது விடுதலையை வென்றெடுக்க இனி, என்ன செய்யப் போகின்றது என்பதே உணர்வுள்ள யாவரின் முக்கிய கேள்வி ஆகும்.   

விடை இலகுவானது; ஆனால் நடைமுறைக்கு முற்றிலும் கடினமானது. அதுவே, தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை தொடர்பாகச் சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், சாதாரன பொதுமக்கள் என அனைவரும் கதைத்துக் கதைத்து, அலுத்துப் போய் விட்டார்கள்; வெறுத்துப்போய் இருக்கின்றார்கள்.   

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் இன்றி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள், அடக்கிக் காட்டுகின்றோம் என அரசாங்கத்துக்கு சவால் விட்டிருக்கின்றார் வடக்கு முதலமைச்சர்.   

“எங்கள் குரல்கள் வலிமையற்றவை; ஆதலால் குரல்வளை நசுக்கப்படுகின்றோம். எம்மிடம் அதிகாரம் இல்லை; ஆதலால் எமக்கான பாதுகாப்பும் எம்மிடம் இல்லை. எமக்கான மரியாதை இல்லை; ஆதலால் புறக்கணிக்கப்படுகின்றோம்.  இறுதியாக எம்மிடம் ஒற்றுமை இல்லை; ஆதலால் பலமாக ஒடுக்கப்படுகின்றோம் -  அடக்கப்படுகின்றோம். எங்கள் நியாயங்கள், அவர்களது வலிமைக்கு முன்னால் தோற்று விட்டன. ஆகவே, உண்மையான நேரிய பாதை கொண்ட தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை ஒன்றே, மீண்டும் தலை நிமிர வழி வகுக்கும். ஆதலால் வலி நீங்கும்”   

முன்னாள் இராஜாங்க அமைச்சர், ஆற்றாமையால் தனது உள்ளத்தில் உறைந்திருந்ததைக் கொட்டினார். இதன் காரணமாக, இந்நாள் முதலமைச்சர்  உண்மையாக உள்ளதைக் கொட்டினார். அவ்வளவு மட்டுமே. இதில் வேறு என்னதான் உள்ளது?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X