2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உஷார்

முகம்மது தம்பி மரைக்கார்   / 2017 ஜூன் 27 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகவதி’ என்று ஒரு திரைப்படம் 15 வருடங்களுக்கு முன்னர் வெளியானது. நடிகர் விஜய்தான் திரைப்படத்தின் கதாநாயகன். அந்தப் படத்தில் இரண்டு பாத்திரமேற்று வடிவேலு நடித்திருக்கிறார். நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத திரைப்படம். வடிவேலுவின் பிரபல வசனமான, ‘வந்துட்டான்யா... வந்துட்டான்’, அந்தத் திரைப்படத்தில்தான் உள்ளது. 

அத்திரைப்படத்தில், விஜய்யின் பெயர் பகவதி. அதனால், இரண்டு வடிவேலுகளில் ஒருவர், தனது பெயரை ‘சின்ன பகவதி’ என்று வைத்துக்கொண்டு காட்டும் அலப்பறைகள் படுசுவாரசியமானவை. ‘சின்ன பகவதி’ வடிவேலு, மற்றைய வடிவேலுவைச் சந்திக்க வரும்போது, நிலம் அதிரும்; பாத்திரங்களில் அசைவற்றிருக்கும் நீர் தளம்பத் தொடங்கும்; புழுதி கிளம்பும்; இதன்போது, சொல்ல முடியாத ஒரு மின்னல் வேகத்தில், சுழற்காற்று போல் ‘சின்ன பகவதி’ வருவார். போகும் போதும், அதேவேகத்தில் சுழன்று மறைந்து விடுவார்.

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர், கடந்த புதன்கிழமை வெளியே வந்து, நீதிமன்றில் சரணடைந்ததும், அதையடுத்து அவருக்குப் பிணை வழங்கப்பட்டதும், பிறகு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதும், அதன் பிறகு, மீண்டும் பிணை வழங்கப்பட்டதும், பிறகு அவர் அங்கிருந்து கிளம்பியதும் என, ஒன்றிரண்டு மணித்தியாலங்களில் நடந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தபோது, சுழற்காற்று வேகத்தில் ‘சின்ன பகவதி’ வந்து போகும், திரைப்படக் காட்சிகள்தான் நினைவுக்கு வந்து போயின.

விசனங்களும் விமர்சனங்களும்

நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேடப்படுவதாகக் கூறப்பட்ட ஒருவர், அதுவும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர், சுழற்காற்று போல் வந்து, எல்லாப் பிடிகளிலிருந்தும் கழன்று சென்றமையானது திகைப்புக்குரியதாகும். 

பாமர மனிதர்கள் முதல் சட்டம் தெரிந்தவர்கள் வரை, அவற்றை ஏமாற்றத்துடன் வாய் பிளந்து பார்த்து நின்றனர். பிரபலமான சட்டத்தரணிகளும் கவனிப்புக்குரிய ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்த எதிரணியினரும் ‘அந்த’ சம்பவங்களைக் கேள்விக்குட்படுத்தி விமர்சனம் செய்தனர். 

மேலும், அவை குறித்து, அரசாங்கத்துக்குள்ளிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. உதாரணமாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த நிகழ்வுகள் குறித்துக்   கூறுகையில், “சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன” என்று விசனம் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

ஞானசார தேரரை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்த பொலிஸார், “அவருக்குப் பிணை கொடுப்பதற்குத் தாங்கள் எதிர்ப்பில்லை” என, நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதைச் சுட்டிக்காட்டி குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் “நாசகாரி ஒருவருக்காக, மன்றில் பொலிஸார் கெஞ்சி விடுதலை பெற்றுக்கொடுத்த கபடத்தனமான செயலொன்று, இந்த நல்லாட்சியில் அரங்கேறி முடிந்திருக்கிறது. இனவாதி ஒருவரைச் சட்டத்தின் பிடியிலிருந்து, அதன் பாதுகாவலர்கள் தப்ப வைத்திருக்கிறார்கள். நீதியும் நியாயமும் செத்துப் போயிருக்கிறது” எனப் பகிரங்கமாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆனால், ஆட்சியாளர்கள் இவை குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

பொய்த்துப்போன ஆருடங்கள்

இன்னொருபுறம், பிணை வழங்கப்பட்டு வெளியேறிய ஞானசார தேரர் மனம் கசிந்து, கண்ணீர் சிந்தியதாக சில ஊடகங்கள் வீடியோக்களுடன் செய்திகளை வெளியிட்டன. 
அதேவேளை, “நான் இனி மகாநாயக்கர்களின் சொற்கேட்டு நடப்பேன்” என்று ஞானசார தேரர் கூறியதாகவும் ஒரு செய்தி வெளிவந்தது. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த சிலர், “முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசார தேரர் மேற்கொண்டு வந்த தீவிர செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறார்” என, ஆருடம் கூறினார்கள். 

ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் தகர்த்தெறிந்து விட்டு, சில தினங்களுக்கு முன்னர், ஊடகமொன்றுக்கு வீடியோ வடிவிலான பேட்டியை வழங்கிய ஞானசார தேரர், “முஸ்லிம் அடிப்படைவாதத்தைத் தொடர்ந்தும் எதிர்ப்பேன்” என்று கூறியிருக்கின்றார். அப்படியென்றால், விவகாரம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பது அர்த்தமாகும்.

இவ்வளவும் நடந்த பிறகும், ஞானசாரர் இப்படிக் கூறுகின்றார் என்றால், அவருக்குப் பின்னாலும் முன்னாலும் பெரும் சக்திகள் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் கருதுகின்றனர். ஞானசார தேரர் தலைமறைவாகியிருந்த போது, அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில்தான் அவர் இருக்கின்றார் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. 

அமைச்சர்களான சம்பிக ரணவக்க, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் துமிந்த திசாநாயக ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, இவர்களில் ஒருவர்தான் ஞானசார தேரரைப் பாதுகாக்கின்றார் என, சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும், இதுவரையில் அவை நிரூபிக்க முடியாத சந்தேகங்களாக மட்டுமே இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க, கடந்த ஒரு மாத காலமாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டு வந்தன. மிகத் திட்டமிட்டு அந்தச் செயற்பாடுகள் நடைபெற்றிருந்தன. இதனால், ஒரு மாதத்தில் மட்டும், 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளை முஸ்லிம்கள் இழந்தனர் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார். 

இந்த நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குத் தீ வைத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் சிலரைப் பொலிஸார் கைது செய்துமிருந்தனர்.

ஹக்கீம் போட்ட குண்டு

இவ்வாறானதொனதொரு சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மேற்படி விவகாரங்கள் தொடர்பில் மிகப் பெரியதொரு ‘குண்டு’ ஒன்றை, மிகச் சாதாரணமாகத் தூக்கிப் போட்டிருக்கின்றார். 

ஆனால், அது மிகவும் பாரதூரமானதொன்றாகும். “முஸ்லிம்கள் மீது, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும்” என, கண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். மேலும், “வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அது பாரதூரமானதாகும்” எனவும் அவர் கூறியிருந்தார்.

தங்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றவர்கள் யார்? அந்தத் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன? அவற்றின் பின்னால் எவரெல்லாம் உள்ளனர் என்கிற கேள்விகளுக்கெல்லாம், உறுதியான விடைகள் தெரியாமல், முஸ்லிம் சமூகம், தமது தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும்போது, “தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று, எமக்குத் தெரியும்” என, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கின்றமையானது அதிர்ச்சிகரமானதொரு செய்தியாகும். 

ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள ஒரு கட்சியின் தலைவராவார். முஸ்லிம் காங்கிரஸ் எனும் அந்தக் கட்சியானது, இலங்கையிலுள்ள முஸ்லிம் கட்சிகளில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள ஒரு கட்சியாகும். 

அந்தவகையில், முஸ்லிம் சமூகம் மீது அக்கறையுடையவராக ரவூப் ஹக்கீம் இருக்க வேண்டும் என்பதோடு, அந்தச் சமூகத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடும் அவருக்கு உள்ளது. 

இந்த நிலையில், முஸ்லிம்கள் மீது தற்போது மேற்கொள்ளப்படும் இனவாதத் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று, ரவூப் ஹக்கீமுக்கு தெரிந்திருக்கின்றபோதும், அதை அவர் இதுவரையில் வெளிப்படுத்தாமல் இருக்கின்றமையானது திகைப்புக்கும், விசனத்துக்கும் உரியதாகும்.

ஒரு சமூகம் மீது நடைபெறும், சட்ட விரோதமான இனவாதத் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று தெரிந்திருந்தும், அதைக் கூறாமல் மறைப்பதென்பது சட்டத்துக்கு முரணானதொரு விடயமாகும் என்பதையும் இந்த இடத்தில் பொறுப்புடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் சாமரம்

இது இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் மீது ஞானசார தேரர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு சாமரம் வீசும் வகையில், அஸ்கிரிய பீடம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்மூலம், முஸ்லிம்களுக்கு எதிராக, இதுவரையில் ஞானசார தேரர் மேற்கொண்ட அநியாயங்களை அஸ்கிரிய பீடம் நியாயப்படுத்தியிருப்பது, முஸ்லிம்களிடத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. ஆனாலும், அஸ்கிரிய பீடத்தின் அந்த அறிக்கை தொடர்பில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பல அமில தேரர் கண்டனங்களை முன்வைத்திருக்கின்றார். 

“அவசியமற்றதும், கூறக்கூடாததுமான கருத்தை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை அஸ்கிரிய பீடம் வெளியிட்டிருக்கிறது” என, அமில தேரர் தெரிவித்திருக்கின்றார். 

மேலும், “முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு, ஞானசார தேரர் கூறும் கருத்துகளினால் பௌத்த தர்மம் பிரகாசிக்காது” எனவும் அமில தேரர் கூறியிருக்கின்றார்.

அஸ்கிரிய பீடம் வெளியிட்ட அறிக்கையில், ஞானசார தேரரின் நடத்தை தொடர்பில் தமக்கு உடன்பாடு இல்லை என்கிற போதிலும், அவர் முன்வைக்கும் கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தக் கூடாது என்றும், நாட்டைப் பாதுகாப்பதற்காகவே, பௌத்த பிக்குகள் போராடி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தாக்கமும் தர்க்கமும்

இதேவேளை, அஸ்கிரிய பீடத்தின் இந்த அறிக்கையானது சிங்கள அரசியல்வாதிகளிடம் பலமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது. 

அஸ்கிரிய பீடத்தின் அறிக்கை வெளிவந்த சூட்டுடன், அஸ்கிரிய மகாநாயக தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்களிடம், தான் மன்னிப்புக் கோருவதாக அமைச்சர் 
எஸ்.பி.திஸாநாயக தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் பெயரை மரியாதையின்றி, தான் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில், பௌத்த தேரர்கள் தன்மீது அதிருப்தி கொண்டிருந்தால், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அமைச்சர் திஸாநாயக கூறியிருந்தார்.

இன்னொருபுறம், “பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சில சமூக இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுவதாகவும், அதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். களுத்துறை விகாரையொன்றில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த உரையை, அஸ்கிரிய பீடம் வெளியிட்ட அறிக்கையின் பக்க விளைவாகவும் பார்க்க முடிகிறது. 

கௌரவத்துக்குரிய மதகுருக்களை அவமானப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில், நேர்மையான மக்களிடம் இரண்டுபட்ட கருத்துகள் இருக்க முடியாது.

ஆனால், மதகுருக்கள் தமது கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும்போது, அது தொடர்பில் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்படக் கூடாது என்று யாரும் எதிர்பார்ப்பதும் நியாயமாகாது. இன்னொருபுறம், அஸ்கிரிய பீட அறிக்கையை முன்வைத்து, அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ள நியாயங்கள் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. “பௌத்த தேரர் ஒருவரை அவமதிக்கும் வகையில், நான் பேசியதாகக் கூறும், அஸ்கிரிய பீடத்தினரின் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஞானசார தேரரை, அரசியல் கட்சியொன்றின் அங்கத்தவராகவே நான் பார்க்கிறேன். சிங்கத்தின் பெயரைத் தவிர, மற்றைய மிருகங்களின் பெயர்களையெல்லாம் கூறி, என்னை அவர் திட்டியிருக்கிறார். அதையடுத்தே, நானும் அவர்மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தேன்” என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருக்கின்றார்.

அஸ்கிரிய பீட மகாநாயக தேரரை முன்னொரு தடவை ஞானசார தேரர் சந்திக்கச் சென்றபோது, அந்தச் சந்திப்புக்கு இடம் வழங்காமல் ஞானசார தேரர் திருப்பியனுப்பப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

 இப்போது, காட்சிகள் மாறியிருக்கின்றன. அதே ஞானசார தேரருக்கு ஆதரவாக அஸ்கிரிய பீடம் குரல் உயர்த்தியிருக்கிறது. இது, ஞானசார தேரருக்கு நிச்சயமாக உசாரை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த உசாருடன் அவர் களமிறங்கினால், நிலைமை எங்குபோய் முடிமோ என்பதை நினைக்கும் போதுதான் அச்சமாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X