2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடகப் பொறுக்கித்தனமும் தண்டனைகளும்

Gopikrishna Kanagalingam   / 2019 ஜனவரி 24 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிலங்கையிலிருந்து செயற்படும் இலத்திரனியல் ஊடகமொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தான், அண்மைய சில நாள்களாக அதிக கவனத்தை ஈர்த்திருந்தன. அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள், இலங்கை முழுதும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், சுமந்திரன் தெரிவித்த கருத்துகளும், அவை தொடர்பான அறிக்கையிடல்களும் முக்கியமானவை.  

தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரைக் கோபப்படுத்தும் வகையில் தான், சுமந்திரனின் அவ்வுரை அமைந்திருந்தது என்பது வெளிப்படை. ஒருமித்த நாடு என்பதற்குள் தீர்வொன்றைப் பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்த சுமந்திரன், தனிநாட்டுக் கோரிக்கையுடன் தமிழ் மக்கள் செயற்படவில்லை என்பதை, தென்பகுதி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமுள்ளதெனவும் தெரிவித்திருந்தார். இலங்கை வாழ் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரும், புலம்பெயர் தமிழர்களில் கணிசமான பகுதியினரும், “தமிழீழம்” என்ற கனவோடு வாழ்ந்துவரும் நிலையில், சுமந்திரனின் உரை, அப்பிரிவினரைக் கோபப்படுத்தியிருக்கும். ஆனால், அவரது உரையில் யதார்த்தம் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.   

விரும்பியோ, விரும்பாமலோ, ஒருமித்த நாடொன்றுக்குள் தீர்வொன்றைப் பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலையில், அந்த ஒருமித்த நாடு தொடர்பான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டியது, தமிழ் மக்களின் அவசியமாகும். அரசியல் தீர்வென்று பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு, ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்பதாகச் சொல்லிவிட்டு, உள்மனதுக்குள் தமிழீழக் கனவுடன் செயற்படுவது, நேர்மையற்ற செயற்பாடாகும். தமிழீழம் தான் தேவையென்றால், அதை நேரடியாகக் கூறுவது தான் பொருத்தமானது.  

இது இவ்வாறிருக்க, தனது மக்களையே கோபப்படுத்தும் வகையில் சுமந்திரன் ஆற்றிய உரையை, குறித்த இலத்திரனியல் ஊடகம், எவ்வாறோ திரித்து, “நாடு பிளவுபடும் ஆபத்து இன்னமும் இருக்கிறது” என்று சுமந்திரன் சொன்னார் என்று, அவரது நீண்ட உரையில் காணப்பட்ட சில சொற்களைக் கோர்த்து, செய்தி வெளியிட்டிருந்தது. அதன் சிங்கள, ஆங்கிலச் செய்திகள், அவ்வாறு தான் ஒளிபரப்பியிருந்தன.  

புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதில் காணப்படும் ஏராளமான பிரச்சினைகளில் ஒன்றாக, ஊடகங்கள் காணப்படுகின்றன என்பது வெளிப்படை. இரண்டு தரப்பு (சிங்கள, தமிழ்) ஊடகங்களும், புதிய அரசமைப்பைக் குழப்புவது என்று சேர்ந்து முடிவெடுத்ததைப் போல் செயற்படுகின்றன என்று சொல்லுமளவுக்கு, அவற்றின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அரசமைப்பின் வரைவு கூட இன்னமும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், “ஒற்றையாட்சி அரசமைப்பைக் கொண்டுவருகிறார்கள்” என்று, தமிழ் ஊடகங்களில் பலவும், “சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவந்து நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள்” என்று தென்பகுதி ஊடகங்களில் பலவும், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.  

இதில், ஊடகங்களின் தனிப்பட்ட எதிர்ப்புகளைத் தாண்டி, அரசமைப்பை எதிர்ப்போருக்கு முன்னுரிமை வழங்குகின்ற போக்கையும் காணக்கூடியதாக உள்ளது. கண்பார்வையற்ற பலர், யானையின் ஒவ்வோர் அங்கத்தையும் தடவிப் பார்த்து, அந்த அங்கம் தான் யானை என்று முடிவெடுத்தார்கள் என்ற கதையைப் போல், அரசமைப்புத் தொடர்பான முதற்கட்டப் பரிந்துரை அறிக்கைகளை வைத்து, இது தான் அரசமைப்பு என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலும். ஆனாலும் கூட, இவ்வாறு எதிர்ப்பவர்களில் பலர், அந்த அறிக்கைகளைக் கூட முழுமையாக வாசித்தார்களா என்றால், அதிலும் சந்தேகமே. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அரசமைப்புத் தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்த போது, “அரசமைப்பில் ஒன்றுமில்லாமலா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது?” என்று கேள்வியெழுப்பியிருந்தார். ஆகவே, அரசமைப்பில் காணப்படும் விடயங்களைச் சுட்டிக்காட்டி, அந்த எதிர்ப்பை அவர் முன்வைத்திருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதால், அதில் முக்கியமான ஏதும் இருக்க வேண்டுமென்ற கருதுகோளின் அடிப்படையில் தான் எதிர்க்கிறார். சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று, அரசமைப்பு உருவாக்க முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பது தான் அவரது பிரச்சினையோ என்றும் கேள்வியெழுப்பத் தோன்றுகிறது.  

இவ்வாறு, இந்த அரசமைப்பு முயற்சிகளை எதிர்ப்போரின் முக்கிய இலக்காக மாறியிருக்கும் சுமந்திரன் தான், மேலே குறிப்பிட்ட ஊடகத்தாலும் இலக்குவைக்கப்பட்டிருந்தார். அவர்களின் நோக்கமும், அரசமைப்பு முயற்சிகளுக்கான எதிர்ப்பாக அமைந்ததா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பா, இனவாதமா, சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலமாக இலாபம் தேடும் கீழ்த்தரமான ஊடக முயற்சியா என்பது தெரியவில்லை. (இவற்றில் ஏதாவது ஒன்றாகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை. அது தனியான விடயம்)  

ஆனால், குறித்த ஊடகத்தின் முயற்சியைத் தொடர்ந்து, அதற்கான எதிர்ப்பை, சுமந்திரன் எம்.பி வெளியிட்டிருந்தார். தனது உரையின் சாராம்சம் என்னவென்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கு மத்தியில், அவ்வுரையை வேறு மாதிரி அறிக்கையிடுவது தவறானது எனவும் அவர் தெரிவித்தார். அந்த எதிர்ப்புக்குப் பின்னரும், குறித்த ஊடகத்தின் விசமத்தனம் தொடர்ந்திருந்தது.  

இவற்றின் பின்னணியில், ஊடகங்களின் பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதிலையும், சுமந்திரன் எம்.பி, தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். குறித்த ஊடகத்தின் மோசமான நடவடிக்கைகளுக்கான விளைவுகளை, அது எதிர்கொள்ளுமெனவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். என்னவாறான நடவடிக்கை என்னவென்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கவில்லை. ஆனால், வேறு சில அரசியல்வாதிகளைப் போல், அடாவடி அரசியலில் சுமந்திரன் ஈடுபடுவதில்லை என்பதால், குண்டர்களை அனுப்பி, ஊடகத்தைத் தாக்குமாறு அவர் உத்தரவிடப் போவதில்லை. எனவே, நீதித்துறை மூலமான நீதி நடவடிக்கை, இல்லாவிட்டால் அரசாங்கத் தரப்பு மூலமாக விதிமுறைகளை இறுக்குவது போன்ற நடவடிக்கை ஆகிய இரண்டு விடயங்களைத் தான், அவர் குறிப்பிட்டார் என்று கருத வேண்டியிருக்கிறது.  

குறித்த ஊடகத்தின் விசமத்தனமான நடவடிக்கைகளை முற்றாக நிராகரிப்பதோடு, அதன் நடவடிக்கைகள், ஜனநாயக நாட்டுக்குப் பாதிப்பாக உள்ளனவென்பதில் மாற்றுக் கருத்துகள் எவையும் இல்லையென்பதைச் சொல்லிக் கொண்டு, சுமந்திரன் எம்.பியின் அக்கருத்தை நிராகரிக்க வேண்டியிருக்கிறது. ஊடகமொன்றுக்கு எதிரான நடவடிக்கையென்பது, எந்தவிதத்திலும் வரவேற்கப்பட முடியாததாக உள்ளது என்பது தான் உண்மையானது.  

சுமந்திரனின் விடயத்தில், இவ்விடயத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவராக அவர் உணர்வதை உணர முடிகிறது. பல முனைகளாலும் தாக்கப்படும் அவர், இயலாத நிலையில், சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முனைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், சட்ட நடவடிக்கை அல்லது வேறு ஏதாவது நடவடிக்கையின் நியாயப்பாட்டையும் எம்மால் உணரமுடிகிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் என்று முன்னிகழ்வு என்ற ஒன்று இருக்கிறது. ஒரு விடயம், ஒரு தடவை இடம்பெற்றுவிட்டால், அது பின்னர் தொடர்ந்து இடம்பெறும். ஊடகங்களுக்கெதிரான சட்ட நடவடிக்கையை, ஓரளவுக்கு நியாயமான இந்நேரத்தில் செய்து காட்டிவிட்டால், இனிவரும் காலங்களில், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குரிய காலங்களில், இப்படியான சட்ட நடவடிக்கைகள் மூலம் முடக்குவதற்கான முன்னிகழ்வாக, இவ்வூடகம் மீதான நடவடிக்கை அமைந்துவிடக்கூடாது.  

அதற்காக, இவ்வூடகத்தை அப்படியே விட்டுவிடுவதா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக இல்லை. இலங்கை ஊடகப் பரப்பில், ஊடகங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பது இல்லாத நிலை இருக்கிறது. மிக மோசமான, விசமத்தனமான விடயங்களுக்கு, ஊடகங்களைப் பொறுப்புக்கூற வைப்பது அவசியமானது. ஆனால், சட்ட நடவடிக்கைகள், அவற்றுக்கான சிறந்த வழியல்ல. மாறாக, விசமத்தனமான ஊடகப் பணியில் ஈடுபடும் ஊடகங்களை, மக்களே புறக்கணிக்கும் வகையிலான செயற்பாடுகள் அவசியமானவை. எந்த ஊடகமாக இருந்தாலும் சரி, ஜனநாயகத்துக்கு எதிராகவோ, மோசமான பக்கச்சார்புடனோ செயற்படுமாக இருந்தால், மக்களே அவ்வூடகத்தைப் புறக்கணிக்கின்ற சூழல் உருவாக வேண்டும். அதற்கான இயக்கம், அரசியல் கலப்பற்ற ரீதியில் உருவாக வேண்டும்.  

அப்படியான சூழ்நிலையில், அவ்வூடகங்களைப் புறக்கணிப்பதோடு, அவ்வூடகத்தின் விளம்பரதாரர்களை இலக்குவைத்து, மக்களின் எதிர்ப்பை வௌிப்படுத்த வேண்டும். வருமான இழப்பு ஏற்படும் ஆபத்துக் காணப்படுமாயின், ஓரளவுக்கு நியாயமான அறிக்கையிடலில் ஊடகங்கள் செயற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, சட்ட ரீதியான செயற்பாடுகளை விடுத்து, மக்களுக்கான பொறுப்புக்கூறலை இவ்வூடகங்கள் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் பொருத்தமாக அமையும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X