2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எதற்காக அஞ்சுகின்றார்கள்; எதற்காகக் கெஞ்சுகின்றார்கள்?

காரை துர்க்கா   / 2019 ஜனவரி 22 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பெருவிழாக்களில், தைப்பொங்கல் தனியிடத்தை வகிக்கின்றது. 

தங்களது வேளாண்மைச் செய்கைகளுக்கு உதவிய, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய நன்னாளே உழவர் திருநாளான, பொங்கல் பண்டிகை ஆகும்.   

பொங்கல் விழாவையொட்டி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துச் செய்திகள் வெளியிடுவது வழமை. இம்முறை பொங்கலுக்கும் இவர்களது வாழ்த்துகள் செய்தித்தாள்களின் முதற் பக்கத்தை அலங்கரித்திருந்தன.   

‘கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு தைப்பொங்கல் சிறப்பு’ என ஜனாதிபதியும் ‘சகவாழ்வை அர்த்தம் உள்ளதாக்கட்டும்’ எனப் பிரதமரும் ‘தமிழ் மக்கள் உலகுக்கு எடுத்துரைத்த, நலன்மிகு முன்னுதாரணம் பொங்கல்’ என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். இந்த வாழ்த்துகளைப் பார்த்து, தமிழ் மக்களது மனங்கள் மகிழ முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களைப் பொங்கி எழச் செய்யும் சில நிகழ்வுகள் நடந்தேறியிருந்தன.   

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் பொங்கல் வழிபாட்டில், குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. பிக்குமாருடன் வந்தவர்கள் தர்க்கம் செய்து, குழப்பத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது என்ற செய்தியும் பொங்கல் வாழ்த்துச் செய்திகள் வெளியான அதே செய்தித் தாள்களில் வௌியாகியிருந்தன.    

மேற்படி, பிள்ளையார் கோவிலை ஆக்கிரமித்து, அடாத்தாக விகாரையைக் கட்டியிருக்கும் பௌத்த துறவியால், முல்லைத்தீவு, மக்களது பொங்கல் விழா தடைப்பட்டது. மொத்தத்தில், தமிழ் மக்களது பண்பாட்டு விழா, கொடூரமாகப்  படுகொலை செய்யப்பட்டு உள்ளது.   

நெல் அறுவடைக்கு தயாராகின்ற மனமகிழ்வுடன், ஊர் மக்கள் ஒன்று கூடி, கடவுள் வழிபாடு செய்து, புதுப்பானையில் பொங்கிப் படைத்து, உண்டு உறவாடும் வேளையில், நன்கு திட்டமிட்டு அரங்கேற்றியதும் அருவருப்பை ஏற்படுத்திய 2019ஆம் ஆண்டின் முதல் பதிவு இதுவாகும்.   

“ஆசையே துன்பத்துக்குக் காரணம்” எனப் புத்தர் கூற, அவரது பக்தர்களோ, அடுத்தவன் காணியை அடாத்தாகப் பறித்து, புத்தபெருமானுக்கு கோவில் கட்ட அடிபடுகின்றார்கள். பல இனம், பல மொழி, பல மதங்கள் எனப் பன்மைத்துவ நாடு இலங்கையாகும். இந்த இனக் குழுமங்களும் சமூகங்களும் காலங்காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.   

ஆனால் இவ்வாறாகத் தொடரும் தமிழ் மக்களது மனதை கசக்கிப் பிழியும் சம்பவங்கள் இலங்கைத் தீவில் இனங்களுக்கு இடையில் உண்மையான இணக்கத்தை எவ்வாறு கொண்டு வரும்?  இது இவ்வாறு நிற்க, பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை, ஒற்றையாட்சி தொடரும், வடக்கு-கிழக்கு இணைப்பில்லை, சமஷ்டி  இல்லை என்ற நான்கு விடயங்களைத் தாங்கியே, புதிய அரசமைப்பு வரப்போகின்றது.   

இவ்வாறாக வரப்போகின்ற அரசமைப்பை, எதற்காக எதிர்க்கின்றீர்கள் என வினா எழுப்புகின்றார் பிரதமர். பௌத்த, சிங்கள மக்களுக்கு கடுகளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எவ்வித அம்சமும் வரப்போகின்ற அரசமைப்புக்குள் இருக்கப் போவதில்லை எனக் கணிசமானோர் நன்கு அறிவர். 

அவர்கள் அஞ்சுவதற்கு என, அங்கு எந்த வில்லங்கமும் அறவே இல்லை.  ஆனாலும், ஐ.தே.க கொண்டு வரும் தீர்வை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பதும் ஸ்ரீ ல.சு.க கொண்டு வரும் தீர்வை, ஐ.தே.க எதிர்ப்பதுமே கடந்த எழுபது ஆண்டு கால வரலாறு.   

அந்தவகையில், தற்போது மஹிந்த, களம் இறங்கி உள்ளார். “புதிய அரசமைப்பைக் கை விடுங்கள். இல்லையேல், நாட்டை முடக்குவோம்” என மஹிந்த எச்சரிக்கை செய்துள்ளார். அவர் தனது அடுத்த கட்ட அரசியலை, கனகச்சிதமாகச்  செய்து வருகின்றார். இதுகூடத் தமிழ் மக்களுக்கு, புதிதாக அதிர்ச்சி அளிக்கக் கூடிய விடயமல்ல. ஆனாலும், இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற ஏழ்மை நிலையில் உள்ள தமிழ் மக்களுடன், அரசியல் தொடர்ந்தும் விணாக விளையாடுகின்றது என்பதே, துன்பத்திலும் துன்பம்.   

இந்நிலையில், புதிய அரசமைப்பு எதிர்ப்புக் கோஷங்கள், தெற்கில் உரத்து ஒலிக்கத் தொடங்கி விட்டன. மஹிந்த ஆதரவு அணி, விரைவாக விரிவடைந்து வருகின்றது. மகாநாயக்கர்களும் தற்போது அரசமைப்பு மாற்றங்கள் தேவையில்லை எனக் கூறியுள்ளார்கள். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், கண்டிக்குச் சென்று விளக்கங்கள் கூறி வருகின்றனர். வரைபு கூட முன் வைக்கப்படாத அரசமைப்புக்கு, ஏன் அவசரப்படுகின்றீர்கள் என ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில் 1978ஆம் ஆண்டு புதிய (தற்போதை) அரசமைப்பை நிறைவேற்றி, 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 1983ஆம் ஆண்டு, பெரும் இனக்கலவரத்தை அடுத்து, “தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி, நாம் அக்கறை கொள்ளவில்லை” என ஜே. ஆர். ஜெயவர்தன வெளிப்படையாகக் கூறியிருந்தார்.    

தற்போது, அதே ஐக்கிய தேசியக் கட்சியினர், இதே வசனத்தைத் தமது உள் மனங்களுக்குள் சொல்லி விட்டுத் தங்கள் தங்கள் காரியங்களில் இறங்கி விடுவார்கள். ஏனெனில், தமிழ் மக்களது இருப்பு என்பதைக் காட்டிலும், பெரும்பான்மையின பௌத்த மக்களது வாழ்வும் வாக்குமே சிங்களக் கட்சிகளுக்கு எப்போதும் பிரதானமானது. அரசியல் முதலீடு அதுவாகும்.    

ஆகவே, இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, மஹிந்த அணி அரசியல் ஆதாயமும் ஆதரவும் தேடுவதை, ஐ.தே.க ஒருபோதும் அனுமதிக்காது; அமைதி காக்காது. இதற்கிடையில், இல்லாத ஒன்றையே தனது அரசியல் முதலீடாகத் தமிழ் மக்களுக்கு காண்பித்து வந்த, கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன ஆகும்?   

“புதிய அரசமைப்பின் ஊடாக, தமிழ் மக்களுக்குத் தனி இராட்சியம் வழங்கப்படுகின்றது” எனப் பிரசாரம் செய்யும் மஹிந்த அணியினர், பிரதமர் ரணிலுடன் சம்பந்தனையும் சுமந்திரனையும் சாதாரன சிங்கள மக்களுக்கு எதிராகத் திசை திருப்ப முற்படுகின்றனர்; வெற்றியும் கண்டுள்ளனர். அரசியலின் அத்திவாரத்தையும் ஆழ அகலத்தையும் அறியாத அப்பாவிச் சிங்கள மக்கள், இத்தகைய பொய்ப் பிரசாரங்களை முழுமையாக நம்புகின்றனர்.  

மேலும், “சம்பந்தனின் சிறைக்குள், ரணில் இருக்கிறார்” என வியாக்கியானம் கூறுகின்றனர். உண்மையில், ரணிலின் சிறைக்குள்ளேயே, சம்பந்தன் மட்டுமல்ல சுமந்திரனும் உள்ளார். 

கூட்டமைப்பு, தங்களின் பேராதரவிலேயே அரசாங்கம் இயங்கு தளத்தில் உள்ளதென்றும் இல்லையேல் தள்ளாடும் என்றும் கூறலாம்; அது உண்மையானதும் கூட. ஆனால் அதற்கான சன்மானமாக, அரசமைப்பை அரசாங்கம் முன்வைக்காது விட்டால், எதிர்க்க முடியாது. எதிர்த்தும் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே யாரின் சிறைக்குள் யார் உள்ளனர்?  

இந்நிலையில், ‘கருத்துகளால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த அரசியல் கருத்தரங்கு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. “சர்வதேச அரங்கில், தமிழர்களுக்கு என்றுமில்லாத ஆதரவு தற்போது உள்ளது” என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அங்கு தெரிவித்துள்ளார்.    

அத்துடன், “இந்தச் சரியான சந்தர்ப்பத்தை நாம் நன்கு பயன்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்து உள்ளார். இவ்வாறாக, சுமந்திரன் கூறுவது போல, சர்வதேச சக்திகள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உள்ளனர் எனின், மீண்டும் அவர்களது முன்னிலையில், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க, அவர்களை நாம் கோர வேண்டும். பேச்சு மேடைகள் சர்வதேச அரங்குகளில் திறக்கப்பட வேண்டும். 

இதனூடாக, மீண்டும் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளும் அவை எழுபது ஆண்டுகளாக ஏய்க்காட்டப்பட்டு வருவதும் பேசு பொருளாக்க வேண்டும். அதனூடாக, அறம் தோற்றதால், அதற்கு அடுத்த நிலை என்ன என்பதும் அதன் தேவையும் நியாயப்படுத்தப்பட வேண்டும்.   

ஆட்சிபீடம் ஏற ரணிலை ஆதரிக்கக்குமாறு மேற்குலகம், இந்தியா கூட்டமைப்பிடம் கோரினால், அதற்குப் பதிலீடாக நாங்கள் ஒன்றையும் அவர்களிடம் கோர முடியாதா?  இவ்வாறாகச் சர்வதேச சக்திகளுடன் வலுவான ஆதரவுப் போக்கை பேணுவோமாயின், சர்வதேசம் தமிழ் மக்களுக்குப் பின்னால் உள்ளது என்ற விம்பம், தெற்கில் தெரித்தால் அரசமைப்பைப் பற்றி, நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களைக் கெஞ்ச வேண்டிய தேவை இல்லை; அவர்களே வழங்குவார்கள்.   

ஒரு துறையில், புதிய திசையில் முதல் அடி எடுத்து வைப்பது தனி நபராகத்தான் இருக்க முடியும். பிற்பாடு அந்த யோசனையை செம்மைப்படுத்துவதில் ஒரு பெரிய குழுவினர் உதவக் கூடும். ஆனால், அந்த முன்னோடிச் சிந்தனையை முன்வைப்பது தனிநபர் தான் என்ற அலெக்சாண்டர் பிளெமிங்கின் கருத்தப் படி, அந்தச் செயற்பாட்டாளரைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் ஈழத் தமிழ் மக்கள், கடந்த பத்து ஆண்டுகளாக...  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .