2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எதிர்பாராத சாட்டையடி

மொஹமட் பாதுஷா   / 2019 ஜூன் 07 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌதம புத்தரின் போதனைகள் எல்லாவற்றையும் மறந்து செயற்பட்ட ஒரு சில துறவிகளுக்கும் கடும்போக்குச் சக்திகளுக்கும் முஸ்லிம் சமூகம், சிலவற்றைப் போதித்திருக்கின்றது.   

சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் மீது, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வன்முறையைப் பிரயோகித்து, அடக்கி ஒடுக்க நினைக்கும் நிகழ்ச்சி நிரல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவும் அதன்பின்னரான மகாசங்கத்தினரின் அறிக்கையும் அரசியல் அதிர்வுகளும் அதனை ஓரளவுக்கு வெளிக்காட்டுகின்றன.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதல்ல. அதனுடன் தொடர்புபட்ட எல்லோரும் தயவு தாட்சண்யமின்றித் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் இனை உருவாக்கியது, முஸ்லிம்கள் அல்லர் என்பது போலவே, இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களும் ‘உண்மையான இஸ்லாமியர்கள்’ அல்லர். எனவே, அந்த நாசகாரக் கும்பலுக்காக, முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.   

ஆனால், ஏப்ரல் 21 இற்குப் பிறகு, இலங்கையில் எல்லா வகையிலும் அவ்வாறான மறைமுகப் பழிவாங்கலே நடந்து கொண்டிருக்கின்றன. உலகில், ஐ.எஸ் நுழைகின்ற நாடுகளில் எல்லாம், அதிகம் அழிவைச் சந்தித்தது முஸ்லிம் சமூகம்தான் என்ற அடிப்படையில் நோக்கினால், இலங்கையிலும் இவ்வாறு முஸ்லிம்களை இன, மத ரீதியாக ஒடுக்கி, சம்ஹாரம் செய்வதற்காகவே, இந்தப் பயங்கரவாதத்தை யாரோ நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றார்களா என்ற பலத்த சந்தேகம், முஸ்லிம்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்றது.   

படையினர் பிரசன்னமாகியிருக்க, வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களின் வீடுகளும் பள்ளிவாசல்களும் தீக்கிரையாக்கப்பட்டமை, முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பதவி விலக்க வேண்டும். கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, அவசரகால ஒழுங்குவிதிகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான அத்துமீறிய கைதுகள், உலகப் படம் வைத்திருந்த மற்றும் கப்பலின் சுக்கான் பொறித்த ஆடையுடுத்த முஸ்லிம்கள், அப்பாவிகள் கைதாகிப் பலநாள் சிறையிருக்க, வடமேல் மாகாணத்தில் தாண்டவமாடிய இனவாதக் காடையர்கள் விடுதலை செய்யப்பட்டமை, முஸ்லிம் பெண்களின் ஆடையுரிமை மறுக்கப்படுகின்றமை, முஸ்லிம் வைத்தியர் ஒருவர் மீதான அபாண்டங்கள் எல்லாம், முஸ்லிம்கள் மனதில் ஏற்பட்ட சந்தேகத்தை வலுப்படுத்தாமல், வேறு என்ன செய்யும்?  

இன்னும் சொல்லப் போனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், படையினர் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு நடவடிக்கை எடுத்தபோதும், பெருந்தேசியமும் ஆட்சியாளர்களும் கடும்போக்குச் சக்திகளும் முஸ்லிம்களை ஒடுக்குவதிலேயே குறியாய் இருப்பதாகச் சொல்ல முடியும்.  

 நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர், கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நடத்திய உண்ணாவிரதமும் அதற்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரன் எம்.பி போன்றோர் மேற்கொண்ட உண்ணாநோன்பு நடவடிக்கைகளும் இதன் உச்சக் கட்டமாகும். நேரெதிராகத் தாம் இலக்கு வைக்கப்படுகின்றோம் என்று, முஸ்லிம்கள் இதன்மூலம் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொண்டனர்.   

நீதிமன்ற வளாகத்தில் வைத்து, காணாமல் போன ஊடகவியலாளரின் மனைவியான சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதற்காக சிறைவைக்கப்பட்ட ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கினார். சிறைமீண்ட தேரர், மௌனப் போராட்டம் நடத்தப் போவதாகச் சொன்ன போதே, அதற்குப் பின்னால் இருந்த பயங்கரம் புரிந்தது.   

சமகாலத்தில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது, 10 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கூட்டு எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருந்தது. பொலிஸில், புலன்விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்து, நீதிமன்றில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் தேவை.   

அப்படிப் பார்த்தால், ஒப்பீட்டளவில் அவநம்பிக்கைப் பிரேரணை இலகுவானது எனக் கருதியே, இந்த நகர்வை எதிரணி செய்திருக்கலாம். சமகாலத்தில் ரிஷாட்டும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி இருவரும், பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்தச் சந்தர்ப்பத்திலேயே ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்தார்.   

இவ்விடத்தில், பல விடயங்களைக் கவனிக்க வேண்டும்.   

ஞானசார தேரருக்குப் பின்னால், சிங்களச் சமூகம் திரளவில்லை. அவர் ஓர் ‘இனவாதப் பிக்கு’ என, முத்திரை பொறிக்கப்பட்டு விட்ட நிலையில், பௌத்த உயர்பீடங்களாலும் பகிரங்கமாக ஆதரவளிக்க முடியாது. இவ்வாறான, சூழ்நிலையிலேயே ரத்ன தேரர் களமிறங்குகின்றார் அல்லது களமிறக்கப்படுகின்றார்.   

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும், இவ்வாறான ஒரு பௌத்த கோஷத்தைத் தூக்கிப் பிடித்து, கதிரையைக் கைப்பற்றுபவர் என்று சொல்லப்படுகின்ற ரத்ன தேரர், இம்முறை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்திய உண்ணாவிரதமும், அதற்குச் சிங்கள கடுந்தேசியம், ஆட்சியாளர்கள் காட்டிய பச்சைக்கொடியும் மிகவும் அபத்தமானதும் பிற்போக்குத்தனமானதும் என்று சொல்லலாம்.   

ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலியுடன், ரிஷாட்டும் பதவி விலக வேண்டும் என்று, அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதத்தை நடத்தினார். இதற்கு ஞானசார தேரரும் ஆதரவளித்தார். இத்தனைக்கும், வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசாரரை விடுதலை செய்யச் சொல்லி, ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்தை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

அரசாங்கம், அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தை கிட்டத்தட்ட புதினம் பார்த்தது. நாட்டில் நடந்து கொண்டிருப்பது ஒருசில அரசியல்வாதிகளுக்கு மட்டும் எதிரான பரப்புரைகள் அல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரான அடக்குமுறையின் ஆரம்ப வடிவங்களே என்பதை நன்கு அறிந்திருந்தும், ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர, ஆட்சியாளர்கள் யாரும் முஸ்லிம்களுக்காக வாயைத் திறக்க வில்லை.   
முஸ்லிம்கள் எப்போதும் ஆட்சியில் பங்காளியாக இருந்தது மட்டுமன்றி, இன்றைய பயங்கரவாதத்துக்கு எதிராகவே செயற்படுகின்றனர். முஸ்லிம்கள் என்ற வகுதிக்குள், சஹ்ரான் கும்பலை உள்ளடக்க முடியாது. அத்துடன், 2015ஆம் ஆண்டு தேர்தலில், ரணில் - மைத்திரி அரசாங்கத்தை வெல்ல வைக்க முன்னின்றவர்கள், இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள்தான். அதுமட்டுமன்றி, 52 நாள் நெருக்கடியில் இருந்து, ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றியதும் முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் என்பதை, அவர்கள் மறந்து செயற்படுவதைக் காண முடிகின்றது.   

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றும் புனிதர்கள் அல்லர்; அவர்கள் சமூகத் தியாகிகளும் இல்லை; அரசியல் போராளிகளும் இல்லை. ஆயினும், சரி பிழைகளுக்கு அப்பால், முஸ்லிம் மக்களின் ஆதரவை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அதற்காகவே அவர்களுக்கு அமைச்சு, ஆளுநர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.   

இந்நிலையில் ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், எவ்வழியிலேனும் நிரூபிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சூழலிலும் அவர்கள் பதவியை இராஜினாமாச் செய்யாமல், கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கருதுவோம். அவ்வேளையில் பௌத்த துறவியோ, ஒரு செயற்பாட்டாளரோ சத்தியாக்கிரகத்தை நடத்தி, பதவி விலகுமாறு கோருவதில் ஒரு நியாயமிருக்கின்றது.   

ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படும் முன்னரே, வெறும் விமர்சனங்களை வைத்துக் கொண்டு, பதவி விலகச் சொல்லி உண்ணாவிரதம் இருப்பதில், என்ன அடிப்படை இருக்கின்றது எனத் தெரியவில்லை.   

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்குத் துணைபுரியும் அரசியல்வாதிகள் உள்ளனர். போதைப் பொருள் கடத்தலுக்கு பாதுகாப்பளிப்போரும், ஆட்கடத்தல்களை மேற்கொண்ட அரசியல் புள்ளிகளும் உள்ளனர். நேரடியாகவே இனவாதத்தைக் கக்குகின்ற பெரும்பான்மை அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்டவர்களை எல்லாம் பதவி விலகச் சொல்லி, ஏன் பௌத்த துறவிகள் போராடவில்லை?   

இவர்களைப் பதவி விலகுமாறு இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மத குருமார் உண்ணாவிரதம் இருந்தால், அப்போது அரசாங்கம் இவ்விதமாகச் செயற்படுமா என்ற கேள்வி எழுகின்றது. அதேபோன்று, ஜனாதிபதியை, பிரதமரை, அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதமிருந்தால், அதற்கு ஆட்சியாளர்கள் அடிபணிவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்கள் விடயத்தில் மாத்திரம் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பாங்கு?  

அத்துரலிய ரத்ன தேரர் உண்ணவிரமிருக்கின்றார். மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட போது, அந்தப் பக்கம் தாவிய வியாழேந்திரன் எம்.பி, தமிழ் வாக்குகளைக் கொஞ்சமேனும் பெற்றுக் கொள்ளும் நோக்கில், தேரருக்கு ஆதரவாகக் களத்தில் குதிக்கின்றார். ஞானசாரர் போன்ற கடும்போக்காளர்களின் மறைமுக ஆதரவு கிடைக்கின்றது. முன்னொருபோதும் இல்லாத அக்கறையைக் காட்டி, பௌத்த பீடம் ஒன்று ‘ரத்ன தேரரின் கோரிக்கையைக் கவனத்தில் எடுக்குமாறு’ ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுகின்றது. இது எல்லாவற்றையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.   

இதுவே, ஒரு முஸ்லிம் மதகுருவோ கிறிஸ்தவ, இந்து துறவிகளோ போராட்டம் நடத்தியிருந்தால், ‘இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டினார்கள்’ என்ற தோரணையில், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருப்பார்கள். ஆனால், ரத்ன தேரரின் விடயத்திலோ, கண்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தொடர்பிலோ சட்டம் அவ்வாறு செயற்படவில்லை.   

இந்த அடிப்படையில், நாட்டின் ஜனநாயகம், இனத்துவ உரிமைகள், தார்மீகம் எல்லாவற்றையும் மீறி, பௌத்த கடும்போக்குவாதமே ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கின்றது என்பதை, இச்சம்பவங்கள் பட்டவர்த்தனமாகப் புலப்படுத்தியது.   

இந்தக் கட்டத்தில்தான், முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவி விலகினார்கள். உண்மையில், இந்தப் பதவி விலகலை எப்பொழுதோ செய்திருக்க வேண்டும். இப்படியான சூழல் வருவதற்கு முன்னரே, அதாவது திகண, அளுத்கம, அம்பாறை, வடமேல் மாகாண கலவர காலத்தில் அதைச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.   

எவ்வாறிருப்பினும், இந்தக் கட்டத்திலாவது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து, பதவிகளை இராஜினாமாச் செய்தமையானது, பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியதாகும். இந்த ஒற்றுமை என்றும் தொடர வேண்டும்.  

இந்த இராஜினாமா முடிவு, ஆட்சியாளர்களோ கடும்போக்கு சக்திகளோ எதிர்பாராத சாட்டையடி ஆகும். இது அவர்களுக்குச் சில விடயங்களைப் போதித்திருப்பதுடன், பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனாலேயே, குற்றச்சாட்டுகள் அற்ற எம்.பிக்கள் தமது பதவிகளை மீளப் பொறுப்பேற்க வேண்டும் என்று மகாசங்கத்தினர் அறிவித்துள்ளனர்.   

முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பைத் தராத அரசாங்கத்தில், ஒன்றுக்கும் உதவாத இப்பதவிகள் தேவையில்லை என்றபடியால், மீண்டும் அதைப் பொறுப்பேற்கத் தேவையில்லை என்பதுடன், முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் கோரிக்கைகள், குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் நிறைவேறாவிடின் முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் எந்தத் தரப்புக்கும் சார்பற்ற நடுநிலை அணியாக இயங்க முன்வர வேண்டும்.     

மகாசங்கத்தின் கோரிக்கையும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்

முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த முடிவு, நினைத்துப் பார்த்திராத அழுத்தங்களை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.   

அதுமட்டுமன்றி, இலங்கையில் பௌத்த கடும்போக்குவாதம் எந்தளவுக்கு பலம்பொருந்தியதாக வியாபித்துள்ளது என்ற செய்தியையும் உலகுக்குச் சொல்லியுள்ளது. இது, பௌத்த தர்மத்தின் மீதான நல்லெண்ணத்தை, ஏதோ ஒருவகையில் உலகளவில் குறைக்க வழிசெய்யலாம்.   

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டோ என்னவோ, மகாநாயக்க தேரர்கள் இணைந்து ஒரு கோரிக்கையை, முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் முன்வைத்துள்ளனர். பதவி விலகிய அமைச்சர்கள், தங்களது பொறுப்புகளை மீள ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.   

கண்டி அஸ்கிரிய மகா விகாரையில் கலந்துரையாடலில் ஈடுபட்ட பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களே இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்கள்.  

இது தொடர்பாக அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,  

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற பலம்பொருந்திய தகவலை, உறுதிப்படுத்தவே எதிர்பார்க்கின்றோம். அதுவே, எமது கோரிக்கையாகும். முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமை இடம்பெற்றிருக்கவே கூடாத விடயமாகும். அதனால்த் தமது பொறுப்புகளை மீள ஏற்குமாறு, குறித்த தலைவர்களிடம் கோருகின்றோம். அவர்களுடன் கலந்து பேசுவதற்கான தீர்மானத்தையும் எடுத்திருக்கின்றோம்.   

அத்துடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், பிரமுகர்கள் தாம் சுற்றவாளிகள் என்பதை, அரசாங்கத்துக்கும் பாதுகாப்புத் தரப்புக்கும் நிரூபியுங்கள் என்று மகா சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

உண்மையில், பௌத்த மகாசங்கத்தினர் கோரிக்கை விடுக்குமளவுக்கு, முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா நடவடிக்கை அமைந்திருக்கின்றது என்பதற்கப்பால், அவர்கள் இந்தளவுக்கு இறங்கி வந்தமை, ஆரோக்கியமானதே. எனவே, இந்தக் கோரிக்கையை மிக கௌரவமாகக் கையாள வேண்டும்.   

இருப்பினும், முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, இவ்வாறான கூட்டறிக்கை ஒன்றை, மகா சங்கத்தினர் வெளியிடவில்லை. ரத்ன தேரர் உண்ணாவிரதம் நடத்திய போது, கண்டியில் பேரணி நடந்த போது மத்தியஸ்தம் செய்யவில்லை என்பதை வைத்துப் பார்க்கின்ற போது, மேற்படி இராஜினாமாவின் வீச்சை உணர்ந்து கொள்ள முடிகின்றது.   

மகா சங்கத்தினரின் கோரிக்கையை முஸ்லிம் சமூகம் மதிக்கின்றது. ஆனால், முஸ்லிம்களை அவர்களது உரிமைகள், ஜனநாயகத்தைக் கணக்கெடுக்காத ஆட்சியில், மீளப் பதவிகளைப் பொறுப்பெடுக்கத் தேவையில்லை என்பதே முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு என்பதை சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .