2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

எத்தனை ஹர்த்தால்கள் அதிகமானவை?

Gopikrishna Kanagalingam   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கில் - முக்கியமாக வடக்கின் யாழ்ப்பாணத்தில் - வாழ்ந்தவர்களுக்கு, ஹர்த்தால் என்ற இச்சொல், பெருமளவுக்குப் பழக்கமான ஒரு சொல்லாக இருந்து வந்திருக்கிறது. அவர்கள் எக்காலத்தில் இருந்தாலும், இதனுடைய தாக்கத்தை, உணர வேண்டிய நிலை காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், வடக்கில் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால், இது தொடர்பான எங்கள் பார்வையை மீளச்செலுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது.

ஹர்த்தாலின் அதிகபட்சத் தாக்கத்தை, இறுதிக்கட்ட யுத்தத்தின் முனைப்புகள் தென்பட்ட 2005, 2006ஆம் ஆண்டுகளில், யாழ்ப்பாணம் அனுபவித்திருந்தது. படையினரின் வாகனங்கள் மோதி, பொதுமக்கள் பலியாகும் சந்தர்ப்பங்களில், அடிக்கடி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. தவிர, வேறு அரசியல் காரணங்களுக்காகவும், தொடர்ச்சியாக ஹர்த்தால்கள் அனுஷ்டிக்கப்பட்டிருந்தன. அண்மைய காலங்களில், இந்நிலை மாறிவந்தாலும், மீண்டும் 2005, 2006 காலப்பகுதி போன்ற நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதில் ஒரு விடயம் முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையால் அறிவிக்கப்படும் ஹர்த்தால்களுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. பெரும்பாலான மக்கள், உண்மையான விருப்பத்துக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, எதிர்ப்புகளின்றியே, இவற்றை அனுஷ்டிக்கின்றனர். ஆகவே, முன்னைய காலங்களைப் போல், துப்பாக்கிகளுக்குப் பயந்து, வீடுகளுக்குள் மக்கள் முடங்கும் நிலை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இதற்கு உதாரணமாக, வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்தீர்ப்பு, புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மக்களிடத்தில் கோபம் காணப்பட்டது. அதைப் பயன்படுத்தி, “குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் குற்றவாளிகளே” எனத் தெரிவித்து, இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணி தமிழ்மாறனும் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரி, “தீவக மக்களும் யாழ். பெண்கள் அமைப்புகளும்”, சனிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்திருந்த கோரிக்கைக்கு, மக்களிடத்தில் பெருமளவுக்கு ஆதரவு கிடைத்திருக்கவில்லை. யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே, மக்களின் ஆதரவு என்பது, ஏனைய ஹர்த்தால்களுக்கு இருப்பதால் தான், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆனால் சிலவேளைகளில், தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்திக்கொண்டு, அதன்மூலம் அவர்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டு, இவ்வாறான ஹர்த்தால்கள் நடத்தப்படுகின்றனவோ என்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டிய தேவையுள்ளது அல்லவா?

உதாரணமாக, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், வவுனியாவிலிருந்து அநுராதபுரத்துக்கு வழக்கு மாற்றப்பட்டோரின் வழக்குகள், வவுனியாவுக்கு மீண்டும் மாற்றப்பட வேண்டுமென்றும் நடத்தப்பட்டது. ஆனால், ஹர்த்தாலால் தான் இதைச் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, மிகவும் சிக்கலான பிரச்சினையாகவே, இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. அரசாங்கத் தரப்பிலுள்ள ஒரு பிரிவினர், இந்த அரசியல் கைதிகளை விடுவிப்பதற்குத் தயாராக இருக்கின்ற போதிலும், மறுதரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. உதாரணமாக, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, அரசியல் கைதிகள் விடயத்தில் மென்போக்குக் கொண்டவராகக் கருதப்படுகிறார். மறுபக்கமாக நீதியமைச்சர் தலா அத்துகோரல, “அரசியல் கைதிகளே இல்லை” என்று சொல்கின்ற ஒருவராக இருக்கிறார்.

இவ்வாறு, அரசியல் கைதிகளை விடுவிக்க நினைக்கும் தரப்பினர் கூட, மறுதரப்பினரின் அழுத்தங்களால் அமைதியாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அதேபோல், பெரும்பான்மையின மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர், அரசியல் கைதிகளை, “பயங்கரவாதிகள்” என்றே எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் தற்கொலையொன்றை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் முயலாது என்பது ஓரளவு தெளிவானது.

ஆனால், இவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதென்பது, அவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது. எனவே, இப்பிரச்சினை பற்றிய போராட்டங்கள் அவசியமானவை. அதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஹர்த்தால் தான் முடிவா என்பது தான் பிரச்சினையாக இருக்கிறது.

அரசாங்கத்துக்கு, இவ்விடயத்தில் அழுத்தம் வழங்கப்பட வேண்டும் என்பது தான், நோக்கமாக இருக்கிறது. ஆனால், வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தால் மூலமாக, எந்தளவுக்கு அழுத்தம் வழங்கப்படும் என்பது, கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

அரசாங்கமும் ஏனைய தரப்புகளும், என்னதான் ஒற்றையாட்சி, ஒரே நாடு என்ற கோஷங்களை முன்வைத்தாலும், வடக்கு, கிழக்கு மக்கள், தனித்த தேசம் போன்று தான் செயற்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது. தேசிய ரீதியிலான விடயங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் - அதிலும் குறிப்பாக வடக்கில் - பெரிதளவுக்குக் கவனம் பெறுவதில்லை. அதற்கான முக்கியமான காரணமாக, அங்குள்ள மக்களை அரவணைத்துச் செல்வதற்கு, மத்திய அரசாங்கங்கள் முயலவில்லை என்பது தான் காணப்படுகிறது.

இந்நிலையில், வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தாலால், அரசாங்கத்துக்கு எந்தளவில் அழுத்தம் ஏற்படும் என்பது, இதுவரை தெரியாததாகவே இருக்கிறது.

ஹர்த்தாலையும் எதிர்ப்புப் போராட்டங்களையும் தொடர்ந்து, அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்திப்பதற்கு, ஜனாதிபதி சம்மதிப்பார் என்கிற நிலைமை உருவாகியிருக்கிறது என, சிலர் கூறலாம். ஆனால், ஹர்த்தாலால் தான் அந்நிலைமை உருவாகியது என்பதற்கு, எந்த ஆதாரமும் கிடையாது. வேண்டுமானால், அவரது யாழ்ப்பாண விஜயத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் புறக்கணித்தமை, அதில் முக்கிய பங்கு ஆற்றியிருக்கலாம். தவிர, ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றபோது, அவரது விஜயத்துக்கு எதிராக, கடுமையான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவரைச் சூழ்ந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியிருந்தனர். 

இவை, நிச்சயமாகவே அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கியிருக்கும். “சிறுபான்மையினரின் ஆதரவுபெற்ற அரசாங்கம்” என்று காட்டிக்கொள்ள விரும்பும் அரசாங்கம், இவ்வாறான ஒரு விம்பத்தை, நிச்சயமாகவே விரும்பாது. இப்படியான போராட்டங்கள், அரசாங்கத்தை நிச்சயமாகவே சிந்திக்க வைக்கும்.

மறுபக்கமாக, அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்த சபை ஒத்திவைப்புப் பிரேரணையில் குறிப்பிட்டதைப் போன்று, அரசியல் பிரச்சினையாகும். மக்களின் அரசியல் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும், மக்கள் தொடர்ச்சியாகப் போராட முடியாது என்பதால் தான், அவர்களின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். அத்தனை பேரும், நாடாளுமன்றத்தில் தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமை அல்லது அவர்களை மக்கள் நம்பாது, போராட்டத்தில் ஈடுபடுவதென்பது, அவர்களின் வினைத்திறன் பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. அரசியல்வாதிகளின் பொறுப்பை, அவர்கள் சரிவர நிறைவேற்றவில்லை என்பதையே காட்டுகிறது.

இப்பிரச்சினையை அவர்கள் தீர்ப்பதாக இருந்தால், ஒன்றிணைந்த எதிரணியினர், சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் நாடாளுமன்றத்தைக் குழப்புவது போல, இப்பாரிய பிரச்சினைக்காக, அதன் நடவடிக்கைகளை, தமிழ்த் தலைமைகளால் ஏன் குழப்ப முடியாது? நாடாளுமன்ற அமர்வை, தமிழ்த் தலைமைகள் அனைத்தும் புறக்கணித்து, அரசாங்கத்துக்கான செய்தியொன்றை ஏன் அனுப்ப முடியாது?

மேற்கூறப்பட்டவை எல்லாம், “அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்டு வருகின்ற பேச்சுவார்த்தைகளைக் குழப்பிவிடும். பிரச்சினையைத் தீவிரமாக்கிவிடும்” என்று தமிழ்த் தலைமைகள் கூறுவார்களாயின், தங்களது பேச்சுவார்த்தைகள் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறாமை, அவர்களின் தவறு தானே? தவிர, மக்களின் போராட்டங்கள் அதிகரித்த பின்னரே, இப்பிரச்சினைகள் பற்றி அரசியல்வாதிகள் கதைத்தமை அதிகரித்ததே தவிர, மறுபக்கமாக அல்ல. எனவே, இவ்விடயத்தில், தங்களது கடமையை நிறைவேற்ற, அவர்கள் தவறிவிட்டார்கள் என்ற முடிவை, ஓரளவு உறுதியாக எடுக்க முடியும்.

இவ்வாறு ஹர்த்தால்களை நடத்துவது, எவ்வளவுக்குப் பொருத்தமானது என்ற கேள்வி காணப்படும் நிலையில், இவ்வாறான ஹர்த்தால்கள் மூலம், வடக்கு முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்பதென்பது, பொருளாதார ரீதியாக எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில், 4 சதவீதத்துக்கும் குறைவான பங்களிப்பை வழங்கிவரும் வட மாகாணம், பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்கிறது. 2015ஆம் ஆண்டில், வட மாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்தியாக, 390 பில்லியன் ரூபாய் காணப்பட்டது. அவ்வாறு பார்க்கும் போது, நாளொன்றுக்கு 1 பில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட (வேலை நாட்களில் இது அதிகமாக இருக்கும் என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் கூட) உற்பத்திகளும் சேவைகளும் விற்பனைகளும், வட மாகாணத்தில் காணப்படுகின்றன. இதைப் பார்க்கும் போது, ஹர்த்தாலின் பாதிப்புகளை அறிய முடியும்.

சரி, ஒட்டுமொத்தப் பொருளாதாரம் எல்லாம் ஒருபக்கமாக இருக்கட்டும் என்று கூறினால், தினசரி கூலித் தொழிலில் ஈடுபடுவோரின் நிலைமையைப் பற்றியாவது சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா? வடக்கில் தான் பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது, தினசரி உழைத்து உண்ண வேண்டிய மக்கள் அதிகமாக உள்ளார்கள் என்றெல்லாம், தொடர்ச்சியாகக் கேள்விப்பட்டு வருகிறோம். அவ்வாறான மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதென்பது, எந்தளவுக்கு நீதியானது? இவை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய பொறுப்பு, எங்களுக்கு இருக்கிறது. ஹர்த்தால் என்பதே கூடாது என்பது, இதன் அர்த்தம் கிடையாது. ஆனால், அரசாங்கத்தின் மீது போதியளவு அழுத்தங்களை வழங்க முடியாத சூழலில், இவ்வாறான ஹர்த்தால்கள் எந்தளவுக்குப் பொருத்தமானவை என்பதைச் சிந்திப்பது தான் அவசியமானது.

வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தால்களை விட, கொழும்பில் பணியாற்றும் அனைத்துத் தமிழர்களும், கொழும்பில் பணிப்புறக்கணிப்பு ஒன்றை நடத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்பென்பது, அரசாங்கத்தால் அதிகமாகவே உணரப்படும். அவ்வாறான போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது கடினமாக இருக்குமென்பது ஒருபக்கமாக இருந்தாலும், அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கும் போராட்டங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அது, தற்போதைய நிலையில், அவசரமானதும் அவசியமானதுமான சவாலாகவும் மாறியுள்ளது என்பது தான் உண்மையானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X