2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் விலைக்குள் அரசியல் மோதல்

Gopikrishna Kanagalingam   / 2018 மே 24 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், அரசியல் சண்டைகள் மாத்திரம் ஓயவில்லை. குறிப்பாக, எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து, பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.  

எரிபொருள் விலை அதிகரிப்பென்பது, சாதாரண மக்களைப் பலமாகப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. பஸ் கட்டணத்திலிருந்து சோற்றுப் பொதியின் விலையிலிருந்து, பல பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்திருக்கின்றன.   

எரிபொருளுக்கான வரியை நீக்கி, எரிபொருளின் விலை நீக்கப்படுமென தேர்தலில் வாக்குறுதி வழங்கி, வெற்றிபெற்ற பின்னர் சொன்னபடி விலையையும் குறைத்திருந்த அரசாங்கம், தற்போது விலைகளை மீண்டும் உயர்த்தியிருப்பது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் இரண்டுக்கும் கிடைத்த பின்னடைவுகள், பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அதைத் தொடர்ந்து உருவான அரசியல் குழப்பங்களுமென, பல்வேறான அழுத்தங்களை எதிர்கொண்டுவந்த அரசாங்கம், எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்த முடிவு, அரசியல் ரீதியாக எந்தளவுக்குப் பொருத்தமானது என்பது கேள்விக்குரியதே.  

ஆனால் மறுபக்கமாக, பொருளாதார ரீதியில் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுவந்த அரசாங்கம், மேலதிக உதவிகளைப் பெற வேண்டுமாயின், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது, ஓரளவுக்குக் கட்டாயமாகிவிடுகிறது.  

எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பாக, அரசாங்கத்தால் பிரதானமாக இரண்டு காரணங்கள்/வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன:  

1. சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை அதிகரித்திருக்கிறது. எனவே, குறைந்த விலையில் எரிபொருளை வழங்குவதால், அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.  

2. முன்னைய அரசாங்கக் காலத்தில், இன்னமும் அதிகமான விலைக்குத் தான் எரிபொருள் விற்கப்பட்டது.  
இவ்விரண்டு காரணங்களுமே, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாகக் காணப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான், அண்மைய சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.  

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமது விமர்சனத்தை வெளிப்படுத்திய ஒன்றிணைந்த எதிரணி, தாங்கள் ஆட்சியில் இருந்த போது, எண்ணெய் பரல் ஒன்றின் விலை, 120 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருந்ததெனவும், இப்போது 70 ஐ.அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது, தாம் வழங்கிய விலைக்கு அண்மையான விலையிலேயே அரசாங்கம் எரிபொருளை வழங்குகிறது எனவும் தெரிவிக்கிறது.  
எரிபொருள் விலை அதிகரிப்பை நியாயப்படுத்தும் அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், எண்ணெய் பரல் ஒன்றின் விலை, 60 ஐ.அமெரிக்க டொலர்களாக இருந்த போது, ஒரு லீற்றர் பெற்றோலுக்காக மக்கள் செலுத்திய பணத்தை விட, இப்போது 70 ஐ.அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக ஒரு பரல் இருக்கும் போது செலுத்தும் பணம் குறைவு என வாதிடுகிறது.  

இந்த வாதத்தைப் பயன்படுத்தி, பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரங்களைப் பிரசுரித்த நிதியமைச்சு, ஊடகச் சந்திப்புகளும் இதே கருத்தைத் தான் கூறிவருகிறது. அதேபோல், நிதியமைச்சர் மங்கள சமரவீரவும், இதே வாதத்தை, தன்னுடைய டுவிட்டர் கணக்கிலும் பகிர்ந்திருந்தார்.  

இதற்குப் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தங்களுடைய காலத்தில் 60 ஐ.அமெரிக்க டொலர்களாக எண்ணெய் இருந்தது என்று நிதியமைச்சுப் பொய் சொல்வதாகவும், 2014ஆம் ஆண்டில், பரல் ஒன்றின் சராசரி விலை, 104 ஐ.அமெரிக்க டொலர்களாக இருந்ததெனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தமது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் எண்ணெய் விலை குறைவடைந்ததையும் அவர் அங்கே ஏற்றிருக்கிறார்.  

இவ்வாறு, வெவ்வேறு விதமான அரசியல் மோதல்களும் கருத்துகளும் காணப்படுகின்றன. எரிபொருள் விலை தொடர்பாக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபக்கமிருக்க, இப்படியாக ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு விதமாகக் கருத்துத் தெரிவிப்பதும், மக்களைப் பாதிக்கும் ஒன்று தான்.  

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இம்மூன்று கருத்துகளும் ஒரு வகையில் உண்மையானவை தான். மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், எண்ணெய் விலை, மிக உயர்ந்தளவில் காணப்பட்டது என்பது உண்மை. அதேபோல், மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், பரல் ஒன்றின் விலை 60 ஐ.அமெரிக்க டொலர்களை எட்டியது என்பதும் உண்மை. ஆனால், அனைத்துத் தரப்புகளும், தங்களுக்குச் சாதகமான விடயங்களை மாத்திரம் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.  

குறிப்பாக, பரல் ஒன்றின் விலை, 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை, 100 ஐ.அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகவே காணப்பட்டது. அவ்வாண்டு டிசெம்பர் மாத நடுப்பகுதியில், பரல் ஒன்றின் விலை, 60 ஐ.அமெரிக்க டொலர்களை எட்டியது. அக்காலத்துக்குள், பாரிய வீழ்ச்சியொன்று ஏற்பட்டது. புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும், ஜனவரி 8ஆம் திகதி பதவியேற்ற நிலையில், அவர்களின் காலத்தில், எண்ணெய் விலை தொடர்ச்சியாகக் குறைவடைந்தது. இத்தருணத்தைப் பயன்படுத்தித் தான், எரிபொருளின் விலையை அரசாங்கம் குறைத்தது. அப்போது, உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததால், இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்கிறோம் என்று அரசாங்கம் கூறியிருக்கவில்லை. தங்களுடைய விலைக்குறைப்புக்கும் உலக சந்தையில் எண்ணெயின் விலை குறைந்தமைக்கும் தொடர்பு இருப்பதாகக் காட்டிக் கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை என்பது தான் உண்மை.  

அதேபோன்று, 2014ஆம் ஆண்டு டிசெம்பரில் (அதாவது, மஹிந்தவின் ஆட்சியில் கீழ் காணப்பட்ட இறுதி மாதம்) காணப்பட்ட விலையை, ஏதோ 2014ஆம் ஆண்டு முழுவதும் காணப்பட்ட விலை போன்று அரசாங்கம் காண்பிக்க முயல்வதும், மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சியேயாகும்.  

2014ஆம் ஆண்டு டிசெம்பரில் காணப்பட்ட பரல் விலையுடன் ஒப்பிடும் போது, தற்போதுள்ள விலை அதிகமென்றாலும், இலங்கையில் எரிபொருள் விலை குறைவானது என அரசாங்கம் கூறுமாயின், 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பரல் ஒன்றின் விலை 100 ஐ.அமெரிக்க டொலர்களை விட அதிகமாக இருக்கும் போது இலங்கையில் காணப்பட்ட எரிபொருள் விலைக்கு அண்மையாக, தற்போது உலகளவில் பரல் ஒன்றின் விலை 70 ஐ.அமெரிக்க டொலர்கள் இருக்கும் நிலையில், இலங்கையில் விலைகள் காணப்படுவது ஏன் என்பதையும், அரசாங்கம் விளக்க வேண்டியதாக இருக்கிறது.  

அதேபோல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பின்னடைவு காரணமாகத் தான் அல்லது அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதற்காகத் தான், எரிபொருள் விலையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்ற அரசாங்கத்தின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் கூட, எரிபொருள் விலையைக் கூட்டித் தான், பொருளாதார ரீதியில் அரசும் அரசாங்கமும் பலமடைய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இத்தனைக்கும், நாட்டில் காணப்படும் இத்துணையளவு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், அரசாங்கத் தரப்பினருக்கும் உயர்நிலை அதிகாரிகளுக்குமான சொகுசு வாகன இறக்குமதிக்கும் தீர்வை விலக்குக்கும் குறைவிருக்கவில்லை.  

தங்களுடைய சொகுசுச் சலுகைகளில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ளாமல், மக்கள் மாத்திரம் முழுப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டுமெனத் திணிப்பது, எந்தளவுக்கு நியாயமானது என்ற கேள்வியை, அரசாங்கத் தரப்பு, தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.  

மறுபக்கமாக, தங்களது காலத்தில், 100 ஐ.அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக பரல் ஒன்றின் விலை காணப்பட்டது என்பதைத் திரும்பத் திரும்பக் கூறிவரும் மஹிந்த அணி, 2014ஆம் ஆண்டின் செப்டெம்பருக்குப் பின்னர் உலகளவில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், இலங்கையில் பெருமளவுக்கு விலைக்குறைப்பை மேற்கொள்ளாமைக்கான காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.   

அதேபோன்று, “2014ஆம் ஆண்டில் சராசரி விலை 104 ஐ.அமெரிக்க டொலர்கள்” என்ற, பொதுமைப்படுத்தும் கருத்துகளை விட்டுவிட்டு, தமது ஆட்சியின் இறுதி மாதத்தில், பரல் ஒன்றின் விலை, 60 ஐ.அமெரிக்க டொலர்களாக மாறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

இவ்வாறு, மக்களைப் பெருமளவில் பாதித்திருக்கும் எரிபொருள் விலை அதிகரிப்பைப் பயன்படுத்தி, இரண்டு தரப்புகளும், தவறாக வழிநடத்தும் வாதங்களை முன்வைப்பதை விடுத்து, ஓரளவுக்கு நேர்மையைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. ஏனென்றால், இலங்கை அரசியலில், அடிப்படை நாகரிகம் தான் இல்லாமல் போயிருக்கிறது என்றால், அடிப்படையான நேர்மையும் இல்லாமல் போவது சரியானது கிடையாது. அதற்காக, அரசியல்வாதிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் விழிப்பாக இருப்பது அவசியமாகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X