2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை

Editorial   / 2020 ஜூன் 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எருமை மாடு ஏரோப்பிளேன்’ ஓடுவதற்கான சாத்தியங்கள் குறித்து, ஆழமாக யோசிக்க வைத்தது.   குறிப்பாக, மூன்று பதில்கள் இவ்வாறு யோசிக்க வைத்தன. 

“மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உண்டா” என்ற வினாவுக்கு அளிக்கப்பட்ட பதில் யாதெனில், “நல்லாட்சி அரசாங்கத்தை, நாங்கள் தான் ஆட்சியில் இருத்தினோம். தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர அவர்களும் முயன்றார்கள்; அவர்களால் முடியவில்லை. ஆனால், நாங்கள் ஏமாந்து விட்டோம் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ளவில்லை” என்பதாகும். இது, பூவைப் பூ என்றும் சொல்லலாம்; புஸ்பம் என்றும் சொல்லலாம் போன்ற வகையறாப் பதிலாகும்.  

“அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தீர்கள். ஆனால், தேர்தலில் போட்டியிடுகிறீர்களே” என்ற வினாவுக்கு, “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பங்களிக்கவே போட்டியிடுகிறேன்” என்றார். 

தமிழ்த் தேசிய அரசியலில், அறம் குறித்த பேச்சே நகைச்சுவையானது. சொல்லும் செயலும் ஒருங்கே, ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அதில், நிச்சயமாகத் தமிழ் நாடாளுமன்ற அரசியல்வாதிகள் யாருக்கும் அமையவில்லை. சம்பந்தனும் அதற்கு விலக்கல்ல.   

அவரது மூன்றாவது பதில் யாதெனில், சர்வதேச சமூகமே, தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதாகும். இது, பல கேள்விகளை எழுப்புகின்றன. 

சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தருமாயின், இவர்கள் எல்லோரும் ஏன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். மந்திரத்தால் மாங்காய் விழுமாயின், தட்டி விழுத்துவதற்குத் தடி எதற்கு?  
உலகில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச சமூகம் எங்கே தீர்வைப் பெற்றுத்தந்துள்ளது என்ற வினாவை, இங்கு கேட்டாக வேண்டும். பாலஸ்தீனியர்கள், குர்திஷ்கள், காஷ்மிரிகள் எல்லோரும், மிக நீண்டகாலமாகப் போராடுகிறார்கள். இவர் சொல்கிற சர்வதேச சமூகம், என்ன செய்து கொண்டிருக்கிறது.   

தமிழர், ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற உண்மை, இன்னமும் நமக்கு உறைக்கவில்லை. இன்னமும் ஆண்ட பரம்பரைக் கனவுக்குள், திரும்பத் திரும்ப அமிழ்த்தப்படுகிறோம். 
விடுதலைக்கான போராட்டத்தைச் சர்வதேச சமூகத்தின் தோள்களில் போட்டுவிட்டு, சொகுசாய் இருப்பது வசதியாகி விட்டது.   

1950களில், குறிப்பாக 1961 சத்தியாக்கிரகத்தின் தோல்வியை அடுத்து ஏற்பட்ட திகைப்பின் தொடர்ச்சியாக, நமக்கு முன்னுதாரணமான ஒரு நாடாக இஸ்‌ரேல் காட்டப்பட்டது. இஸ்‌ரேல் செய்துவந்த கொடுமைகள் பற்றியோ, இஸ்‌ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்பது பற்றியோ, நமக்குச் சொல்லப்பட்டதில்லை. நமது நிலை, பலஸ்தீனர்களைப் போன்றது என்பதையும் அந்த ஒற்றுமை பல வகைகளிலும் பொருந்தி வருகிறது என்பதையும் நாம் உணர மறுக்கிறோம். 

தமிழ்த் தேசிய அரசியல், பங்களாதேஷின் (முன்னர் கிழக்கு வங்கம், கிழக்குப் பாகிஸ்தான்) விடுதலையை வென்று தந்த இந்தியாவே, தமிழீழ விடுதலையை வென்று தரும் என்ற கனவு, ஆரம்ப காலங்களில் ஊட்டி வளர்க்கப்பட்டது. 

பங்களாதேஷில் இந்தியப் படைகளும் அவர்களது உள்ளூர்க் கூட்டாளிகளும் அங்கே ஒரு வலிய போராட்டச் சக்தியாக இருந்தது, கொம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியது பற்றி அறியும் அக்கறை நமக்கு இருக்கவில்லை. இந்தியாவின் கைப்பாவையாக இருந்தவர்களே, மிச்சமாக விட்டுவைக்கப்பட்டார்கள் என்பது, எமது கவனிப்புக்கு உரியதல்ல.   

இந்தியாவின் பொம்மையாகச் செயற்பட்ட முஜிபுர் ரஹ்மான், மக்களின் ஆதரவை இழந்து இராணுவச் சதியில் உயிரிழந்த நாள் வரை, முஜிபுர், தமிழருக்கு முன்னுதாரணமாகக் காட்டப்பட்டு வந்தார். 

நமக்கான முன் மாதிரிகளுக்கான ஒரே தகுதி, தோற்றப்பாடான வெற்றி மட்டுமாகவே இருந்து வருகிறது. இவ்வாறான வெற்றிகளுக்கான விலை என்னவென்றோ, அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவென்றோ நாம் யோசிப்பதில்லை. அவற்றை ஆதாரமாகக் கொண்டு, பின்தொடரக் கூடாதவர்களுக்குப் பின்னால் போகுமாறு தூண்டப்படுகிறோம். 
அது தான் மிகவும் கெடுதலானது. தூண்டுவோரின் நோக்கங்களை ஆராயாமல் விடுவது, இன்னும் ஆபத்தானது.  

இதன் தொடர்ச்சியே, சர்வதேச சமூகத்திடம் தீர்வைக் கோரி நிற்கும் மனநிலை. இதையெல்லாம், தமிழர்கள் இன்னமும் நம்புகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்; அவர்களைத் தமிழர்கள் நம்புகிறார்கள். 

தமிழ் மக்களுக்கான விமோசனம் நீண்ட தொலைவில் இருக்கிறது. இது தேர்தல் காலம். இன்னமும் எத்தனை எருமை  மாட்டுக் கதைகளைக் கேட்க வேண்டியிருக்குமோ என்று நினைக்கையில் நெஞ்சு பதறுகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X