2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எல்லாவற்றையும் தடை செய்வது தான் தீர்வா?

Gopikrishna Kanagalingam   / 2017 ஜூலை 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாறிவரும் காலநிலையால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக, சிறிய நாடுகளே காணப்படுகின்றன என்பது, விஞ்ஞானிகளால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படும் விடயமாக இருக்கிறது. இதில், இலங்கையும் விதிவிலக்கானதல்ல. 

குறிப்பிட்டுச் சொல்வதானால், இலங்கையின் தெற்குப் பகுதியில் வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்பட, வடக்குப் பகுதியில், வரட்சியால் கால்நடைகள் இறந்து போகும் நிலைமையையும் பயிர்கள் வாடி, அழிந்துபோகும் நிலைமையையும் காணக்கூடியதாக இருந்தது. 

இத்தனைக்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்பாக மேலைத்தேய நாடுகளால் வெளியிடப்படும் உலக வரைபடத்தில், இலங்கை இடம்பெறுவதே குறைவு. அந்தளவுக்குச் சிறிய நாடாக, இலங்கை காணப்படுகிறது. இந்தளவு சிறிய நாட்டுக்குள் இத்தனை வேறுபாடுகள் என்பதுதான், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தெளிவாகக் காட்டுவதாக அமைகின்றன.  

இவ்வாறான நிலைமைக்கு, இலங்கைதான் பொறுப்பென்று கூறிவிட முடியாது. அதிகளவு காபனீரொட்சைட்டை வெளியேற்றும் நாடுகளாக, சீனா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய நாடுகளே காணப்படுகின்றன. இவ்வாறான பெரிய நாடுகளின் காபனீரொட்சைட் வெளியேற்றத்தால், இலங்கை போன்ற சிறிய நாடுகள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, சூழலுக்கு நேசமான நாடாகவே, இலங்கை காணப்படுகிறது.  

ஆனால் அதற்காக, சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகளைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்றில்லை. அதற்கான தேவையும் கடப்பாடும், ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது.  

எனவேதான், பொலித்தீன் லஞ் சீட், றிஜிபோம், பொலித்தீன் பைகள் ஆகியவற்றைத் தடை செய்யும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அண்மைய அறிவிப்பு வெளியாகியபோது, பரவலான வரவேற்பு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இலங்கையை, பொலித்தீன் இல்லாத நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இது மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.  

ஆனால், இந்தத் தடை, உண்மையிலேயே பயன்தரக்கூடியதா அல்லது உண்மையிலேயே கடைப்பிடிக்கப்படக் கூடிய ஒன்று தானா என்ற கேள்வி எழுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தத்தடை, செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக, இம்மாதத்தின் 2ஆவது வாரத்தில் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலமே, அனைத்தையும் மாற்றுவதற்கான காலமாக வழங்கப்பட்டது.  

இந்தக் காலத்துக்குள்தான், பொலித்தீனுக்கு மாற்றான பொருட்களைத் தேடி, அவற்றைப் பாரியளவில் உற்பத்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது.  

இலங்கையில், சொப்பிங் பைகளின் பாவனை என்பது, அதிகமானது என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். சுப்பர் மார்க்கெட் என்று சொல்லப்படும் நவீன கடைகளுக்குச் சென்றால், 10 விதமான பொருட்கள் வாங்கினால், குறைந்தது 3 பொலித்தீன் பைகளாவது தருவர். அவற்றை வாங்கிக் கொண்டுவந்து வீட்டில் வைத்த பின்னர், பைகளைத் திரும்பப் பயன்படுத்துவதென்பது அரிது. எனவே, குப்பைகளுக்குள் அவை செல்லும். இது, முக்கியமானதொரு பிரச்சினை. ஆனால், அண்மைக்காலத்தில் சில சுப்பர் மார்க்கெட்கள், பொலித்தீன் அல்லாத பைகளை ஊக்குவிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  

என்றாலும் கூட, இந்தநிலை மாற வேண்டிய தேவை இருக்கிறது. சூழலுக்கு ஒவ்வாத பொலித்தீன் பாவனையைக் குறைக்க வேண்டிய தேவையுண்டு. ஆனால், ஒட்டுமொத்தமாக அதைத் தடை செய்வதுதான் முடிவா என்பது கேள்வியே. குறிப்பாக, ஈரமான பொருட்களை வாங்குவதற்கு, கடதாசியாலான பை, பொருத்தமற்றது. எனவே, மாற்று வழி குறித்து ஆராய வேண்டும்.  

மறுபக்கமாக, லஞ்ச் சீட்களுக்குப் பதிலாக, வாழையிலைகளைப் பயன்படுத்த முடியும், வாழையிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தன என்றெல்லாம் விளக்கம் வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், யாழ்ப்பாணம் போன்ற, வாழை மரங்கள் அதிகமாகக் காணப்படும் பிரதேசங்களிலும் கூட, விழாக்கள் அல்லது நிகழ்வுகளுக்காக வாழையிலைகளை வாங்குவதென்பது, கடினமானதொன்றாக மாறியிருக்கிறது. ஒரு வகையான தட்டுப்பாடு காணப்படுகிறது. இலங்கையில் தினமும், சுமார் 2 மில்லியன் லஞ்ச் சீட்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாதத்துக்கு 60 மில்லியன் வாழையிலைகளை உருவாக்குவதற்கு, எமக்கான வழி உள்ளதா?  

அதைவிட, லஞ்ச் சீட் ஒன்றின் விலை, மிக மிகக் குறைவானது. கொழும்பில், ஒருவர் உண்ணக்கூடிய வாழையிலை, ஏற்கெனவே 5 ரூபாய்க்கு மேல் (குறைந்த மதிப்பீடு) காணப்படுகிறது. தற்போதைய நிலையிலேயே 5 ரூபாய் என்றால், வாழையிலைக்கான தேவை அதிகரித்து, அதற்குத் தட்டுப்பாடு என்ற நிலை உருவானால், வாழையிலையின் விலை அதிகரிக்குமல்லவா? இதற்கான தீர்வுதான் என்ன?  

அடுத்ததாக, பொதியிடும் உணவுகளில், கறிகளைப் பொதியிடுவது எவ்வாறு? வாழையிலையில், நீர்ப்பதமுள்ள உணவுகளைப் பொதியிட முடியாது. இவ்வளவு நாளும், இலகுவாக, சிறிய பொலித்தீன் பைகளில் பொதியிட்டனர். இனிமேல் என்ன செய்வது?  

இது, குழப்பமானதொரு விடயம்தான். அதனால்தான், திட்டமிடுதல் என்பது அவசியமாகிறது. திடீரென முடிவுகளை எடுத்துவிட்டு, அதன் பின்னர் என்ன செய்யலாம் என்பதை ஆராய்வது பொருத்தமற்றது. மாறாக, ஓரளவு விரைவாக மீள்சுழற்சி செய்யக்கூடிய அல்லது உக்கக்கூடிய லஞ்ச் சீட்களை உ ற்பத்தி செய்வதை, முதலில் ஊக்குவிக்க வேண்டும். அதற்கான வரி விலக்குகளை வழங்க முடியும். உக்காத லஞ்ச் சீட்களுக்கான உற்பத்திக்கு, காலப்போக்கில் வரியை அதிகரிக்க வேண்டும். இரண்டும் சமாந்தரமாகச் செல்லும்போது, ஒரு கட்டத்தில், உக்கக்கூடிய அல்லது இலகுவாக மீள்சுழற்சி செய்யக்கூடிய லஞ்ச் சீட்களையும் பைகளையும் உருவாக்குவதுதான் சிறந்தது என்ற நிலைக்கு, உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவர். சில ஆண்டுகளின் பின்னர், பொலித்தீனை முற்றாகத் தடை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஏனென்றால், பொலித்தீனுக்கான மாற்றாக, எம்மிடம் உற்பத்திப் பொருட்கள் வந்து சேர்ந்திருக்கும்.  
இந்தத் தடை இவ்வாறு என்றால், நேற்று முன்தினம் வெளியான இன்னொரு செய்தி, இன்னும் அதிர்ச்சியைத் தந்தது.  

புகையிலை, பாக்கு ஆகியவற்றுடன் வெற்றிலை மெல்லுதல் தடை செய்யப்படுவதாகவும், புகையில்லாத புகையிலையை உற்பத்தி செய்தல், விற்றல், அதை வைத்திருத்தல், இறக்குமதி செய்தல் ஆகியன தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பாபூல், பீடா முதலியனவும், தடை செய்யப்படுகின்றன. இந்தத் தடை, நேற்று முதலே அமுலுக்கு வந்துள்ளது. பொலித்தீன் உற்பத்திகளுக்கு, ஒன்றரை மாதமாவது வழங்கப்பட்டது, இவற்றுக்கு ஒரு நாள் கூட வழங்கப்படவில்லை.  

பொலித்தீன் தடையைப் போன்றே, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நோக்கத்தைக் குறைகூற முடியாது. வெற்றிலையுடன் பாக்கையும் புகையிலையையும் மெல்லுவது, உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கானது. இது, தனிநபர் உரிமை என்பதையும் தாண்டி, நோய் ஏற்படுவதன் காரணமாக, அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் காரணமாக அரசுக்கு ஏற்படும் செலவு என்பதுவும் அதிகமானது.   

ஏற்கெனவே, 2020ஆம் ஆண்டுடன், புகையிலை உற்பத்தியை நிறுத்துவதற்கான உத்தரவை, அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய தடை, அரசாங்கத்தின் பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது.  

ஆனால், திடீரென வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றை மெல்லுவதைத் தடை செய்வதாக அறிவித்தால், இவற்றின் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விற்பனை ஆகியவற்றை நம்பி வாழும் பல்லாயிரம் குடும்பங்களின் நிலைமை என்னாவது? அவர்களுக்கான மாற்று வழிதான் என்ன?  

இதில், புகையிலைதான் இலக்கு வைக்கப்பட்டது என்று பார்த்தால், பாக்கும் கூட இலக்குவைக்கப்பட்டுள்ளது. எனவே, வெற்றிலையையும் பாக்கையும் விற்பவர்களும் பாதிக்கப்படுவர். கிராமப் பகுதிகளில், சிறியளவிலான வியாபாரமாக, இவை காணப்படுகின்றன. திடீரென அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதென்பது, எந்தளவுக்கு நியாயமானது?   

அவர்களுக்கான மாற்று வழி என்ன? சில கிராமங்களில், பரம்பரை பரம்பரையாக, வெற்றிலைப் பயிர்ச்செய்கை மேற்கொள்பவர்கள் இருக்கிறார்கள். திடீரென்று, வேறு ஒன்றைப் பயிரிடுமாறு கூறினால், அதற்கான பயிற்சிகளை யார் வழங்குவது? முதலீட்டை யார் வழங்குவது?  

இந்தத் தடை தொடர்பான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த, வாய்ப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் டபிள்யூ.எம். திலகரட்ண, வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக, பாக்குப் பாவனையை, உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்து, இந்தத் தடையை நியாயப்படுத்தினார். ஆனால், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில், புகையிலைப் பாவனை தான், பிரதான காரணமெனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாக்கால் வாய்ப் புற்றுநோய் ஏற்படாது என்பது வாதமல்ல, மாறாக, எதற்காக உண்மையற்ற வாதங்களை முன்வைக்க வேண்டுமென்பது தான் இருக்கின்ற கேள்வி.
சிகரெட்களால் ஏற்படும் புற்றுநோய் உட்பட ஏனைய நோய்கள், உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுமே, சிகரெட் புகைப்பதை எதிர்க்கின்றன.  

அப்படியாயின், பாக்கு மெல்லுவதை ஒரே நாளில் தடை செய்வதைப் போல, சிகரெட் உற்பத்தி, பிடிப்பது, விற்பது, வைத்திருப்பது ஆகியவற்றைத் தடைசெய்வதாக, முதல் நாள் அறிவித்து, மறுநாள் தடை செய்யுங்கள் பார்க்கலாம்? அதற்கு முடியாது. சிகரெட் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விற்பனை ஆகியவற்றின் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கத்தின் மீது பிடியை வைத்திருக்கின்றன. அவ்வாறான பாரிய நிறுவனங்களைப் பகைப்பதற்கு, அரசாங்கம் முயலாது. சிறிய விவசாயிகள், விற்பனையாளர்கள்?

அவர்களை இலகுவாகப் பகைக்கலாம். ஏனென்றால், கொழும்பில் காணப்படுகின்ற நவீன லிபரல்கள், சிறிய விற்பனையாளர்கள் பற்றிக் குரலெழுப்புவதில்லை. அந்த மக்களுக்கான குரலென, எதுவுமே கிடையாது.  

ஆகவே, பொலித்தீன் தடை போலவே, இந்தத் தடை அமுலுக்கு வருவதற்கு முன்னர், மாற்று வழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கப்பட வேண்டும். அதன் பின்னரே, தடை பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் எடுத்தவுடனேயே தடை செய்வதென்பது, பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையாது, மாறாக, புதிய பிரச்சினைகளை உருவாக்குவதாகவே அமையும் என்பது யதார்த்தம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .